தென்னாட்டின் தியாகத் தீ  சிதம்பரனார்!

2023 கவிதைகள் நவம்பர் 16-30, 2023
…  முனைவர் கடவூர் மணிமாறன் … 
விடுதலைப்போ ராட்டத்தில் நாட்டம் கொண்டே
வெகுண்டெழுந்த சிதம்பரனார் வாழ்நாள் எல்லாம்
நடுங்காத மறவன்போல் களத்தில் நின்றார்!
நாட்டாண்மை செய்திட்ட ஆங்கி லேயர்
ஒடுங்கிடவும் ஓடிடவும் துணிந்து, கப்பல்
ஓரிரண்டை அந்நாளில் வாங்கிக் கொண்டார்!
மிடுக்குறவே சொற்பொழிவால் மக்கள் நெஞ்சில்
மேன்மைமிகு நாட்டுணர்வை விதைக்க லானார்!
வந்தேறிக் கூட்டத்தார் சிறையில் தள்ளி
வன்மமுடன் செக்கிழுக்கச் செய்தார்! உள்ளம்
நொந்திடவே கல்லுடைக்கச் செய்த போதும்
நுவலரிய விடுதலையை மூச்சாய்க் கொண்டே
வெந்தணலை நெஞ்சுள்ளே தேக்கி நாளும்
வெளிப்படுத்தி வெள்ளையர்தம் வெறுப்பைப் பெற்றார்!
அந்நாள்தென் ஆப்ரிக்க நாட்டில் காந்தி
அண்ணலுமே இவர்க்கான நிதியைப் பெற்றார்!
தென்னாட்டார் பேரீகச் சுடராய் நின்றார்!
திருநாட்டை நாட்டுப்பற் றாளர் தம்மை
நன்முறையில் காப்பதற்கே தொலைநோக் கோடு
நயத்தக்க வழக்குரைஞர் பட்டம் பெற்றார்!
பன்முகத்தர் சேம்சுஆலன் நூல்கள் நான்கைப்
பாங்குறவே பைந்தமிழில் மொழிபெ யர்த்தார்!
தென்னாட்டில் கொழுந்துவிட்டே எரிந்த தீயாய்த்
திகழ்ந்திட்ட வ.உ.சி.
«ஈகச் செம்மல்!
வெஞ்சிறையில் ‘பல்லாண்டு வதைப்பட் டாலும்
வியக்கின்ற பெருமையெலாம் தமிழ்க்குச் சேர்த்தார்!
அஞ்சாத தமிழறிஞர்; இலக்கி யங்கள்
ஆய்ந்துணர்ந்த பெரும்புலமை யாளர் தம்மை
நெஞ்சுரமும் நிலைபிறழா உணர்வும் கொண்ட
நேயரெனத் திரு.வி.க. புகழ்ந்து சொன்னார்!
கெஞ்சாத வ.உ.சி. மறைந்த பின்னும்
கீழ்வானக் கதிரோன்போல் திகழ்கின் றாரே! ♦
«ஈகம் – தியாகம்