கட்டுரை – அறுவை சிகிச்சையும் வெற்றி ! ஆளும் பிழைத்தார் ! – வி.சி.வில்வம்

2023 கட்டுரைகள் செப்டம்பர் 16-30, 2023 மற்றவர்கள்

வி.சி.வில்வம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் நோக்கில் 1969ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். “போராட்டத்தைத்
தள்ளி வையுங்கள். அதற்கென தனிச் சட்டம் இயற்றுகிறேன்”, என்றார் கலைஞர். சொன்னவாறே 1972இல் சட்டமும் இயற்றினார். இதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர்.

இவ்வழக்கை கலைஞர் அரசு திறம்பட நடத்தியது. இதன் நியாயத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது! ஆனால், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகமங்களைப் படித்துத் தகுதி பெற வேண்டும்”, என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

அந்த நேரத்தில் வேளாங்கண்ணியில் நடைபெற்ற பயிற்சி முகாம் ஒன்றில் இருந்தார் பெரியார். எல். முத்தையா அவர்கள் ஏற்பாட்டில் ஒரு வார காலம் அந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இராணுவத்தில் பணிபுரிந்த எல். முத்தையா, சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் மாமா ஆவார்.

“அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தொடர்பான தீர்ப்பில் மாறுபட்ட கருத்துகள் கிடைத்ததால், இமயவரம்பன் அவர்களை அழைத்து, ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தொலைப்பேசி மூலம் உண்மை நிலையை அறியச் சொன்னார் பெரியார்.

தீர்ப்புக் குறித்து விவரமாக எடுத்துக் கூறிய ஆசிரியர், “ஆபரேசன் வெற்றி; ஆனால் நோயாளி இறந்துவிட்டார்”, என உதாரணம் கூறியுள்ளார். 1972ஆம் ஆண்டு ‘விடுதலை’ நாளிதழில் இதே தலைப்பிட்டு செய்தியும் வந்தது!

இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் நோக்கில், 2006ஆம் ஆண்டு கலைஞர் அரசால் ஆகமப் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 205 மாணவர்கள் படித்து முடித்தனர். கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கும் பல தடைகள் உருவாகின. அதையும் சரிசெய்து 2021 ஆகஸ்ட் 14ஆம் நாள் சிலருக்குப் பணி நியமன ஆணையை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்!

இந்த வரலாற்றைக் கொண்டாடும் வகையில் தான், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “சமூக நீதிக்கான சரித்திர நாயகர்” என முதல்வரைப் பெருமையோடு அழைத்தார்!

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் என்பது 50 ஆண்டு காலத் தொடர் போராட்டங்களைக் கொண்டது! அதில் பெரும் வெற்றியைத் திராவிடர் இயக்கங்கள் பெற்றுள்ளன!
1972ஆம் ஆண்டு எந்த விரல்கள், விடுதலையில் “ஆபரேசன் வெற்றி; நோயாளி இறந்தார்,” என எழுதியதோ, அதே விரல்கள், அதே விடுதலையில் 2023 ஆம் ஆண்டு “ஆபரேசன் வெற்றி; நோயாளியும் பிழைத்துக் கொண்டார்”, என்று எழுதக் கூடிய மாபெரும் வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது!

அந்தப் புரட்சி விரல்களுக்குச் சொந்தமானவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்!
அவர் ‘விடுதலை‘ இழில் எழுதிய அவ்வறிக்கையில்,

205 பேர் தகுதி பெற்றனர்

1972 தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய பல வழிகளைக் கவனத்தில் கொண்டே 2006இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் நிறைவேற் றப்பட்ட புதிய சட்டப்படி தனித்தனியே வைணவக் கோயில், சிவன் கோயில்களுக்கு ஏற்ப அர்ச்சகர் பயிற்சிக்கென 69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு (அதில் சில பார்ப்பன மாணவர்களும் கூட உண்டு) 205 பேர் தகுதி பெற்றனர்!
ஆனால், உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில்- _ -இரு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், வெங்கட ரமணா ஆகியோரும் 16.12.2015 அன்று, சேஷம்மாள் வழக்கில் வந்த தீர்ப்புப்படி, “ஆகமத் தகுதியின்படி எந்த ஜாதியினரானாலும் அர்ச்சகராக நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு” என்று தீர்ப்புக் கூறிவிட்டு, இறுதிப் பாராவில், “தனிப்பட்ட முறையில் யாராவது பாதிக்கப்பட்டவர்களானால் அவர்கள் தனியே நீதிமன்றங்கள் மூலம் பரிகாரம் தேடிடலாம்” என்றும் கூறி ஒரு “சிறு சந்து” விட்டிருந்த நிலையைப் போன்ற வரிகள் அத்தீர்ப்பில் காணப்பட்டன.

சரித்திர நாயகருக்கு மக்கள் தந்த பெருமை!

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு 2021  -ஆகஸ்ட் 14ஆம் தேதி, ஒப்பற்ற முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது ஆட்சி தந்தை பெரியார் நெஞ்சில்
தைத்த முள்ளை அகற்றிடும் வகையில், ஆகமப் பயிற்சி பெற்று 10 ஆண்டுகளாகக் காத்திருந்தோரில் சிலரை முதற்கட்டமாக நியமனம் செய்தது. அந்த வரலாறு காணாத சரித்திரச் சாதனையினை நிகழ்த்தியவர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் என்று மகிழ்ச்சிப் பேருவகையுடன் மக்கள் தந்த பெருமையைப் பெற்றார்!
ஆதிக்கச் சுவையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அனுபவித்த ஆரியம் பொறுக்குமா? மீண்டும் ஆங்காங்குள்ள சில ஆரிய நச்சரவங்களின் மறைமுக உதவியோடு மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்குப் படையெடுத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நியமனம் பற்றி புது வழக்கு _ -“ஆகமப் பயிற்சி பெற்றவர் ஜாதிக் கண்ணோட்டமின்றி, அர்ச்சகர் நியமனத் தகுதி உடையவரே” என்று தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் அவ்வழக்கினை அனுமதிக்காமலேயே அத்தீர்ப்பு சரியானதே என்று அதைத் தள்ளுபடி செய்து ஒரு முழு வட்டப் பயணத்தை உச்சநீதிமன்றம் – இதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது.

திருப்புமுனைத் தீர்ப்பு!
இதன்மூலம் இப்போது

“ஆபரேஷனும் வெற்றி,
நோயாளியும் பிழைத்தார்!

எழுந்தார்! மகிழ்ந்தார்!”

நமது முதலமைச்சரும், அவரது அரசும், இதற்கு முக்கிய காரணமாக அமைந்து 53 ஆண்டுகால சமூகப் போராட்டமான ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டக் களத்தில் பெரு வெற்றி வாகை சூடியது வரலாற்றின் வைர வரிகளாகும். நியாயத் தராசினைச் சரியாகப் பிடித்த நீதிபதிகளும் மக்களின் பாராட்டுக்கு உரியவர்கள். – இது ஒரு திருப்புமுனைத் தீர்ப்பு! என்று எழுதினார். ♦