கட்டுரை – மத நம்பிக்கையால் அழிவுறும் இயற்கைச் சூழலும், சமநிலையும்!

2023 ஏப்ரல் 16-30,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

இளஞ்செழியன்

இயற்கை சார்ந்த நிகழ்வுகளுக்கு அறிவியல் ரீதியான காரணத்தை ஏற்பதைவிட, மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே காரணத்தை தேட முயற்சி அதிகம் நடைபெறுகிறது. அந்த மத நம்பிக்கையும்கூட உலகில் உள்ள மற்ற உயிர்களைவிட, மனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த உலகத்தில் உள்ள சுமார் 84 விழுக்காடு மக்கள் நாம் வாழும் இந்த பூமிப் பந்தினை தம் மதம் சார்ந்த கடவுள்களே படைத்ததாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நம்பிக்கைகளுக்கான அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால், மத நம்பிக்கைகளுக்கு சவால் விடும் சம்பவங்களும் இந்த உலகில் நடந்து
கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு கொரோனா வைரஸ் தொற்று உயிர் வாழ்க்கைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மட்டுமல்ல; உயிரற்ற உடல்களை எரிப்-பதற்கு சுடுகாடுகூட கிடைக்காத நிலை. இச்சம்பவங்களின்போது அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தளங்களை இழுத்து மூடவேண்டிய கட்டாயத்தை கொரோனா தொற்று எற்படுத்தியது. இதற்கு முன்பு வந்த ஆழிப்பேரலை(சுனாமி) ஏற்பட்டதற்கு மனித சமூகத்திற்கும் பங்குண்டு என்பதை நாம் உணரவிடாமல் நம்மைத் தடுப்பது மதம் சார்ந்த நம்பிக்கைகள்தாம்.
மீண்டும் ஆழிப்பேரலை நம்மைத் தாக்காது என்பதற்கு மத ரீதியான உத்திர-வாதம் ஏதும் இல்லை. இது தொடர்பான குறிப்புகள் மதம் ரீதியான அமைப்புகளில் இல்லை. ஆனால், கடலின் கரையோரங்களில் அலையாத்திக்காடுகளை வளர்த்தால், அதன் பாதிப்பைத் தடுக்கலாம் என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்த பூவுலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் அபாயங்களை ஏற்படுத்திவரும் காலநிலை மாற்றம் குறித்து அய்.நா. சபையும், பெரும்பாலான நாடுகளும் பல விதிமுறைகளை வகுத்து வரும் வேளையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான விவாதங்கள், உரையாடல்கள், கருத்தரங்குகள் போன்றவை மதம் சார்ந்த நிறுவனங்களால் உலக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஏற்புடைய கருத்தை அவற்றால் தர இயலவில்லை.

உலகில் பல இடங்களில் காலநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் இந்து மதத்தைப் பிரதிநித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் இந்து மதம் சார்ந்த பல அமைப்புகளுக்கும் இந்து மதத்தில் உள்ள சாமானிய மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் அந்த அமைப்புகள் மூலம் கொண்டுவரப்படும் எந்தத் தீர்மானமும் பயனற்றதாகி விடுகின்றது..

இந்து மதத்தில் பூமியானது தாயாக மதிக்கப்படுகிறது. ஆனால், அது சார்ந்த செயல்பாடுகள் இப்பூவுலகைச் சிதைக்கும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, வழிப்பாட்டுத் தளம் அமைப்பதற்காக இயற்கை வளங்களை அழிப்பதும், பெரும் மக்கள் கூட்டம் அவ்விடங்களில் திரள்வதும் இதனால் வண்டி வாகன மாசு ஏற்படுவதும், சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டு, காலநிலை மாற்றத்தை உருவாக்குகிறது..

தீபாவளிக்காக வெடிக்கப்படும் பட்டாசுகளும் கொளுத்தப்படும் மத்தாப்பூக்களும் காலநிலையை மட்டும் பாதிப்பது இல்லை. நம் சக உயிர்களான விலங்குகள், பறவைகள், மரம் செடி, கொடிகளையும்தான் பாதிக்கின்றன. இதனை என்றாவது நாமோ அல்லது காலநிலை மாற்றம் குறித்து கருத்துகள் தெரிவித்து வரும் இந்துமதத்தின் பிரதிநிதிகளோ அல்லது வேறு எந்த மதத்தினரோ சிந்தித்து இருக்கிறார்களா?

இந்து மதம் மட்டுமல்ல; எந்த ஒரு மதமும் இயற்கைச் சூழல் மாற்றத்தை மிகவேகமாகத் தூண்டும் வகையிலேயே தங்களது செயல்பாடுகளை அமைத்திருக்கின்றன.கும்பமேளா, சிவராத்திரி, நவராத்திரி, துர்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி, உள்ளிட்டவிழாக்கள் மற்றும் தென்இந்தியாவில் திருப்பதி, சபரிமலை ஆகிய இடங்களில் கூடும் லட்சக்கணக்கான மக்களால் சூழல் மாற்றம் வெகு விரைவாகப் பாதிக்கப்படும் வேலைகளே நடக்கின்றன.

இத்தகைய செயல்கள் இந்து மதத்தில் மட்டும் நடக்கவில்லை. கிறிஸ்து பிறப்பு, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு போன்ற நாள்களில், இயற்கையைச் சீர்கெடச்செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை நாம் சிந்திப்பதற்குத் தடையாக இருப்பதுகூட மத நம்பிக்கைகள் அடிப்படையில் இவற்றின் செயல்பாடுகள் அமைந்து இருப்பதுதான்.
இவற்றைக் கேள்வி கேட்டால், மதம் சார்ந்த நம்பிக்கைகளை அது மூடநம்பிக்கையாக இருந்தாலும் அதனைக் கடைபிடித்துதான் ஆகவேண்டும், எக்காலத்திலும் இப்பூமிப் பந்தில் வாழும் மக்களோ அவர்தம் சக உயிர்களோ மதச் செயற்பாட்டாளருக்கு முக்கியமல்ல. தம் மதம் சார்ந்த விழாக்களும் நம்பிக்கைகளும்தான் முன்னணியில் இருக்கவேண்டும் என்ற வெறி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்றுவதற்கு உண்டான காலச்சூழல் நமக்கு தற்போது ஏற்பட்டு உள்ளது. பண்டிகைகளுக்குக் கூறப்படும் கதைகளை நாம் மறு ஆய்வு செய்தால் மட்டுமே இயற்கைச் சூழலுக்கு எதிரான மதப்பண்டிகை
களைச் தடுக்கவோ, தவிர்க்கவோ இயலும். அதன்மூலமே சூழல் பாதிப்பைத் தடுக்கமுடியும்; இயற்கைச் சமநிலையை நிலைபெறச் செய்யமுடியும்!