சிறுகதை – நோய் நாடி….

2023 ஏப்ரல் 16-30,2023 சிறுகதை

ஆறு. கலைச்செல்வன்

பேருந்து கிளம்பும் நேரம் வந்துவிட்டது.

சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்ற கலிவரதன் இன்னும் வரவில்லை. சன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த அவரது நண்பர் மணிவண்ணன் வெளியே எட்டிப் பார்த்து கலிவரதனைத் தேடினார். ஆனால் கலிவரதன் வந்தபாடில்லை.

நடத்துநர் விசிலடித்து பேருந்தைக் கிளப்பினார்.

‘‘சார், சார் கொஞ்சம் இருங்க சார். என்னோடு வந்தவர் சிறுநீர் கழிக்கப் போயிருக்கார். இப்ப வந்திடுவார். ஒரு நிமிஷம் பொறுங்க சார்’’ என்று கேட்டுக்கொண்டார் மணிவண்ணன்.

‘‘எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்க முடியும்? நாங்க டைமுக்கு வண்டியை எடுக்கவேண்டாமா? உங்க நண்பரோடு டாய்லெட்டுக்குப் போனவங்க எல்லோருமே திரும்பி வந்துட்டாங்க. ஆனா, இன்னமும் உங்க நண்பர் வரலை. இனிமேலும் தாமதிக்க முடியாது. வேணும்ன்னா நீங்களும் இறங்கிடுங்க. அடுத்த பஸ்ஸில் வாங்க’’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் நடத்துநர்.

வேறு வழியின்றி பேருந்திலிருந்து கீழே இறங்கிவிட்டார் மணிவண்ணன். அருகில் இருந்த கடையில் சென்று உட்கார்ந்தார். சற்று நேரத்தில் பதற்றத்துடன் ஓடி வந்தார் கலிவரதன். அவரைக் கண்ட மணிவண்ணனுக்கு சற்று கோபம் ஏற்பட்டது.

‘‘கலிவரதா! டாய்லெட்டுக்குப் போய் என்னதான் செஞ்சே… சிறுநீர் கழித்துவர இவ்வளவு நேரமா? பஸ் கிளம்பிப் போயிடுச்சு. இனி அடுத்த பஸ் வர ஒரு மணி நேரமாகுமே! நாம் எதுக்காகப் போறோம்னு உனக்குத் தெரியாதா? என் வியாபாரத்தில் நீயும் சேரணும்னு ஆசைப்பட்டே. நானும் சேர்த்துக்கிட்டேன். நம்ம தொழில் நாலு எடத்துக்குப் போய் பொருளை விக்கிற தொழில். ஆனா, நீ இப்படி காலதாமதம் செஞ்சா வியாபாரம் உருப்பட்டாப் போலத்தான்’’ என்று கோபத்துடனும் சற்று விரக்தியுடனும் கேட்டார் மணிவண்ணன்.

கலிவரதனுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. ‘‘கோவிச்சுக்காதே மணிவண்ணா! சிறுநீர் ரொம்பவும் சொட்டு சொட்டாப் போவுது. அதோட இல்லாம ரொம்ப வலிக்கவும் செய்யுது. அதனால்தான் ரொம்பவும் தாமதம் ஆவுது. நான் என்ன செய்யட்டும்’’ என்றார் கலிவரதன்.

‘‘உனக்கு ஏதோ ஒரு நோய் இருக்கு. டாக்டர்கிட்ட போய் காட்டணும். நம்ம தொழிலுக்கு இதெல்லாம் ஒரு தடையா இருக்கக்கூடாது’’ என்றார் மணிவண்ணன்.

‘‘உனக்குத் தெரியாதா மணிவண்ணா? நான் எப்பவுமே டாக்டர்கிட்ட போவதே கிடையாது. எந்த நோயாக இருந்தாலும் வைத்தியநாதசாமிகிட்ட போய் முறையிட்டு பூசை செய்வேன்.’’

‘‘கலிவரதா, நாம் செய்யறது ஒரே இடத்தில் உட்கார்ந்துக்கிட்டுச் செய்ற வேலை இல்லை. நாலு ஊருக்குப் போய் அலைஞ்சு திரிஞ்சி வாடிக்கையாளர்களைப் பிடிக்கிற வேலை. உடம்பு நல்லாயிருந்தாதான் அலையமுடியும். அதனால் டாக்டர்கிட்ட போறதுதான் நல்லது.’’

‘‘மணிவண்ணா, நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன் கேட்டுக்க… ஒரு புகழ்பெற்ற நடிகைக்கு அரிய வகை தோல் நோய் வந்துடுச்சி. வெளிநாடுகளுக்கெல்லாம் போய் வைத்தியம் பார்த்துகிட்டாங்களாம். கடைசியில் நம்ம வைத்தியநாதசாமிதான் நோயைத் தீர்த்து வைச்சாராம். சாமி சன்னதிக்கு வந்து அங்கப்பிரதட்சணம் செஞ்சவுடனே நோய் தீர்ந்திடுச்சாம்! இத்தனைக்கும் அவங்க வேற மதத்துக்கார நடிகையாம். வாட்ஸ்–_அப்பில் வந்த செய்தியை நீ பார்க்கவே இல்லையா?’’

‘‘வாட்ஸ்_அப்பில் வரும் செய்தியை எல்லாம் நம்பி உன் பிழைப்பைக் கெடுத்துக்காதே கலிவரதா! எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட உன்னை அழைச்சுக்கிட்டுப்போய் காட்டறேன்.’’
இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்த பேருந்து வந்தது. அதில் ஏறி இருவரும் பயணம் செய்தனர்.
இதேபோன்ற நிகழ்வு கலிவரதனுக்கு அடிக்கடி வந்தது. மணிவண்ணனுக்கு மிக-வும் சங்கடமாக இருந்தது. தொழிலில் இருந்து அவரைக் கழற்றிவிடலாமா என யோசித்தார். இருப்பினும் நண்பனாக இருந்ததால் கழற்றிவிட மனம் வரவில்லை. ஆனால், கலிவரதனோ மருத்துவரிடம் வர மறுத்துவிட்டார். இருப்பினும் அவரைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வர வற்புறுத்தி வந்தார்.

‘‘உனக்கு என்ன நோயின்னு எனக்கும் தெரியல. ஒருவேளை சர்க்கரை நோயாக இருக்கலாம். அவங்கதான் அடிக்கடி சிறுநீர் கழிப்பாங்களாம். ஆனாலும் சிறுநீர் கழிக்க ரொம்ப நேரம் எடுத்துக்கிறாயே!’’ என்றார் மணிவண்ணன்.

‘‘ஆமாம். எரிச்சலும் இருக்கு. அடிவயிற்றில் வலியும் இருக்கு’’ என்றார் கலிவரதன்.
‘‘வைத்தியம் பார்த்துக்காம அப்படியே விட்டுவிடலாம்ன்னு இருக்கியா கலிவரதா?’’

‘‘இல்ல…. இல்ல… சந்தர்ப்பம் கிடைக்கிற
போதெல்லாம் கோயிலுக்குப் போயிக்-கிட்டுத்தான் இருக்கேன். சீக்கிரம் சரியாயிடும்.’’

‘‘அறிவியல் முன்னேற்றம் எங்கேயோ போயிக்கிட்டு இருக்கு. நீ இன்னும் கோயில் குளம்ன்னு சுத்திக்கிட்டு இருக்கியே. இது உனக்கே நல்லாயிருக்கா?’’

‘‘மணிவண்ணா! நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? ஒவ்வொரு நோய்க்-கும் மருந்து கண்டுபிடிச்சிருக்காங்க. இப்ப நான் நெறைய புத்தகங்கள் படிச்சிக்கிட்டு வர்ரேன். நெறைய செய்திகளைத் தெரிஞ்சிக்கிட்டேன் தெரியுமா?’’

‘‘என்ன செய்தி தெரிஞ்சிக்கிட்ட? எனக்கும்தான் சொல்லேன்.’’

‘‘கண் ஆபரேஷனுக்கு அடிப்படை யார் தெரியுமா?’’

‘‘யாராம்?’’

‘‘கண்ணப்பநாயனார்தான். அவர் தன்னோட கண்ணைப் பிடுங்கி சிவபெருமான் கண்ணில் பொருத்தினார். இதிலிருந்து என்ன தெரியுது மணிவண்ணா?’’

‘‘என்ன தெரியுது? எனக்குத் தெரியல. நீதான் சொல்லேன்.’’

‘‘கண் ஆப்பரேஷன் பத்தின அறிவு அப்போதே இருந்தி’ருக்கு. அது உனக்கு விளங்கலையா மணிவண்ணா? அதோடு மட்டுமல்ல. மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையும் அப்போதே இருந்தது. நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.’’

‘‘கலிவரதா! நீ ரொம்ப பேசற, அறிவியல் முன்னேற்றம் இப்பத்தானே ஏற்பட்டிருக்கு.’’

‘‘அதுதான் இல்லைன்னு சொல்ல வர்ரேன். யானைத் தலையையே எடுத்து பிள்ளையாருக்குப் பொருத்தியிருக்காங்க. அதனால்தான் சொல்றேன், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை நம் நாட்டில் அப்போதே நடந்திருக்கு.’’

‘‘ம்.. அப்படியா! இன்னும் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கா கலிவரதா?’’

‘‘ஓ! நெறைய இருக்கு. நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. விமானத்தைக் கண்டுபிடித்ததே நம் நாட்டில்தான் மணிவண்ணா.’’

‘‘அப்படியா? விளக்கமா சொல்லேன்.’’

‘‘சொல்றேன். புஷ்பக விமானம் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா? இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு பறந்து சென்றானே! குபேரன்கிட்ட இந்த விமானம் இருந்ததாம். அதைச் செய்தவர் விஸ்வகர்மா ஆவார். இதையெல்லாம் மறைச்சிபுட்டு யாரோ ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிச்சதா கதை விட்டுக்கிட்டு இருக்காங்க.’’

‘‘இதையெல்லாம் நீ எப்படி தெரிஞ்சிகிட்ட கலிவரதா?’’

‘‘மேலே இருக்கிற அமைச்சர்களே பேசி இருக்காங்க. வாட்ஸ் அப்பிலும் அடிக்கடி வருதே! நீ படிக்கலையா? எல்லாம் நாம கண்டுபிடிச்சதுதான். ஆனாலும் உரிமை மட்டும் மத்தவங்க கொண்டாடுறாங்க.’’

‘‘ம். உனக்கு ரொம்பவும் முத்திடுச்சு கலிவரதா. முதல்ல இந்த வாட்ஸ் அப்பில் வந்த முட்டாள்தனமான செய்திகளை நம்பாதே. பக்தி மார்க்கம் வந்தப்புறம் நம் முன்னோர்கள் பலர் படுமுட்டாள்களாக மாறிட்டாங்க. சித்தர்கள் அவர்கள் காலத்தில் இருந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல அறிய வகை மூலிகைகளைக் கண்டுபிடிச்சிச் சொன்னாங்க. அவற்றை நாம் பயன்படுத்தணும். நல்லதுதான். ஆனாலும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவியல் வளர்ச்சியோடும் நாம் பயணம் செய்யவேண்டும்.’’

‘‘ஆன்மிகத்துக்குள்ளேதான் அறிவியல் அடங்கிக் கிடக்குது மணிவண்ணா. எனக்கு அடிக்கடி எரிச்சலோடு சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமா நிறைய தடவை போறது மூணு வருஷமாவே இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்பு இது சம்மந்தமா ஒரு சாமியார்கிட்ட சொன்னேன். அவர் எனக்கு நல்ல மருந்து சொல்லியிருக்கார்.’’

‘‘என்ன மருந்தாம் அது கலிவரதா?’’

‘‘முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்! அதுபோல சிறுநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு சிறுநீர்தான்.’’

‘‘நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலையே கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லேன். நானும் தெரிஞ்சிக்கிறேன்.’’

சொல்றேன் கேளு மணிவண்ணா. சிறுநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு சிறுநீர்தான். மாட்டு மூத்திரம்தான் தீர்வு. அதாவது கோமியம். காலையில் எழுந்தவுடன் பசுமாட்டைக் கட்டிப்பிடித்தபின் தொட்டுக் கும்பிட்டுவிட்டு அதன் கோமியத்தைப் பிடித்து இரண்டு டம்ளர் வீதம் ஒரு மண்டலம், அதாவது நாற்பத்தெட்டு நாள்கள் குடிச்சி வரணும். அப்புறம் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும். சாமியார் சொன்னார். அடுத்த வாரத்திலேயிருந்து அதை ஆரம்பிக்கப்போறேன்.’’
இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார் மணிவண்ணன். கோபத்துடன் கலிவரதனைப் பார்த்து,

‘‘எவனோ ஒரு முட்டாப்பயல் பேச்சைக் கேட்டுட்டு உளறிகிட்டு இருக்கியே! இது சரியா?’’ எனக் கேட்டார்.

‘‘சரிதான் மணிவண்ணா. கோமியத்துக்கு அவ்வளவு சக்தி இருக்கு. அதோடு மட்டுமல்ல. நான் இனிமேல் சைவச் சாப்பாட்டுக்கு மாறப்போறேன். கறி, மீன் எதுவுமே சாப்பிடமாட்டேன். சாமியார் சொல்லிட்டார். நீயும் சைவத்துக்கு மாறிடு மணிவண்ணா! சைவம்தான் நல்லது’’ என்று பதிலளித்தார் கலிவரதன்.

‘‘என் மேசையில் என்ன உணவு இருக்கவேண்டும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். எவனோ ஒரு சாமியார் சொல்றதையெல்லாம் நான் கேட்கமாட்டேன் கலிவரதா. அதோடு மாட்டு மூத்திரம் என்பது ஒரு கழிவுப் பொருள், மறந்துடாதே! சரி, சரி… நான் உன் வூட்டுக்கு ஒரு நாள் வர்ரேன். உன் மனைவி, பிள்ளைங்ககிட்ட நான் பேசிக்கிறேன். நீ போயிட்டு வா’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் மணிவண்ணன்.

அடுத்த சில நாள்களில் மணிவண்ணன் பேச்சைக் கேட்காமல் சாமியார் பேச்சைக் கேட்டு செயல்பட ஆரம்பித்தார். சைவ உணவிற்கு மாறினார். கோமியம் குடிக்கவும் ஆரம்பித்தார்.
ஒரு மாதம் சென்றது. கலிவரதன் தொழிலுக்கு வருவதை நிறுத்திவிட்டார். அவரை வியாபாரத்திலிருந்து கழற்றி விட்டுவிட்டார் மணிவண்ணன்.

இந்நிலையில் ஒருநாள் அவர் வயிற்றுவலியால் துடிக்கிறார் என செய்தி வந்தது. மிகவும் வருத்தப்பட்ட மணிவண்ணன், கலிவரதன் வீட்டை நோக்கி விரைந்தார்.
சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்-பட்டார் கலிவரதன். இனியும் தாமதிக்கலாகாது என்று நினைத்த மணிவண்ணன் அவரது குடும்பத்தினர் உதவியுடன் அவரை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்த கலிவரதன் மணிவண்ணனிடம் பேச்சுக் கொடுத்தார்.

‘‘டாக்டர் என்ன சொன்னார் மணிவண்ணன்.’’

‘‘நான் கூட சிறுநீரகக் கல் இருக்குமோ என நினைத்தேன். ஆனால், உனக்கு என்ன நோயின்னு டாக்டர் தெளிவா சொல்லிட்டார். நீ வலியோடு இருந்ததால் உனக்குத் தெரியாமல் போயிடுச்சி. உன்கிட்டேயும் விளக்கமாச் சொல்வார்.’’

‘‘என்ன தொந்தரவு எனக்கு? டாக்டர் சொன்னதைச் சொல்லேன்.’’

‘‘அதாவது நம்ம உடம்பில் புராஸ்டேட் சுரப்பின்னு ஒன்று இருக்கு. இது தசையால் ஆன ஓர் உறுப்பு. இது எங்கே இருக்குத் தெரியுமா? நம்ம சிறுநீர்ப் பையைச் சுற்றி பட்டைபோல் சூழ்ந்திருக்குமாம். இது ஆண்களுக்கு மட்டுமே உள்ள சுரப்பி. இதுக்கு விந்து சுரப்பின்னும் பெயர். அய்ம்பது வயதுக்கு மேலானவங்க சிலருக்கு இந்தச் சுரப்பியில் வீக்கம் ஏற்படலாம். அறுபது வயதில் வீக்கம் இன்னும் பெரிதாகலாம். இதுதான் உன்னோட பிரச்சினை.’’

“அதுக்கு என்ன செய்-
யணும்னு டாக்டர் சொன்னார்?’’

‘‘மாத்திரை கொடுப்
பாங்க. ஆனால், வீக்கத்தின் அளவு அதிகமா இருக்கிறதால ஆப்பரேஷன் தேவைப்படுமாம்.’’

‘‘அய்யய்யோ!’’ ஆப்பரேஷனா? வயித்தைக் கிழிப்பார்களா மணிவண்ணா?’’

‘‘அதெல்லாம் எதுவும் இருக்காதாம். காந்தி கத்தியின்றி ரத்தமின்றி விடுதலை வாங்கினதாச் சொல்வாங்க. நம்ம தமிழ்நாட்டில் நம்ம தலைவர்களும் கத்தியின்றி ரத்தமின்றிதான் சமூக நீதியை நிலைநாட்டினாங்க. அதுபோல இப்ப ஆப்பரேஷன் எல்லாம் கத்தியின்றி ரத்தமின்றியே நடக்கும் கலிவரதா. என்டோஸ்கோபி முறையில் செய்துவிடுவாங்க. இது சம்பந்தமா டாக்டர் உன்கிட்டே விவரமாச் சொல்வார் கேட்டுக்க.’’
மணிவண்ணன் கூறியதையெல்லாம் மிக-வும் கவனமாகக் கேட்டார் கலிவரதன்.
தான் தவறான இடத்தில் ஆலோசனை கேட்டு உடல் நலத்தைத் தானே கெடுத்துக்கொண்டதை உணர்ந்தார்.

‘‘மணிவண்ணா! நான் தப்பானவங்களோட ஆலோசனை கேட்டு உடம்பைக் கெடுத்துக்கிட்டேன். இப்ப நான் தெளிவா-யிட்டேன். இனிமே நான் நீ சொல்றதை மட்டும் கேட்பேன். உடம்பு சரியானதும் உன்னோடு வியாபாரத்திற்கு வருவேன். என்னை ஒதுக்கிவிடாதே!’’ என்று மணிவண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டார் கலிவரதன்.

‘‘என் பேச்சைக் கேட்கவேணாம் கலிவரதன். டாக்டர் பேச்சைக் கேளு. அவர் கொடுக்கும் சிகிச்சையை ஏற்றுக்க வேணும். என்ன நோய் என்று அறிந்துகொள்ள வேண்டும். நான் உனக்கு ஓர் உறுதி தர்ரேன். என்னோட வியாபாரத்தில்
உனக்கும் இடமுண்டு. மகிழ்ச்சிதானே கலிவரதா.’’

நன்றியுடன் புன்னகைத்தார் கலிவரதன்.