கவிதை – பொறுத்துக் கொள்வோம்!

2023 கவிதைகள்

முனைவர் கடவூர் மணிமாறன்

இடக்கினைச் செய்வோர் நாட்டின்
ஏற்றமோ நாடார்! இந்நாள்
வடக்கரோ இந்தீ தன்னை
வலிந்துமே திணிக்கும் நோக்கில்
முடக்கிடும் கல்விக் கொள்கை
முனைப்புடன் கொணர உள்ளார்;
நடப்பினை அறியார் கொல்லும்
நஞ்செனத் திரிகின் றாரே!

நாடுமே ஒன்றாம்; நாவில்
நவின்றிடும் மொழியும் ஒன்றாம்
பீடுற வாழ எண்ணார்
பேதைமை வயப்பட் டோரோ
மாடென அலைய லானார்
மாண்பினை உதறித் தள்ளிக்
கேடெலாம் இழைப்பர்; இந்தக்
கீழ்மையைப் பொறுத்துக் கொள்ளோம்!

சமத்துவம் விரும்பார்; மூடச்
சழக்கினைத் துணிந்து செய்வார்;
தமரென நடிப்பார்; பொல்லாத்
தவறுகள் பலவும் செய்தே
நமக்குள உரிமை தன்னை
நாளுமே பறிப்பார்; நாடும்
குமுறிடச் செய்வார்; நாளும்
குற்றமும் தெரிந்தே செய்வார்!

வருணமும் நான்கே என்பார்:
வள்ளுவர் குறளை« ஏற்கார்
மிருகமாய் வதைப்பார்; நாட்டின்
மேன்மையைச் சிதைப்பார்; இந்த
அறிவியல் உலகில் வீணர்
அறிவிலிக் கூட்டம் ஆனார்!
நெறிமுறை பிறழு வோரை
நீதிமுன் நிறுத்தும் காலம்!

« குறளை – “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”