70ஆம் அகவையில் இனம் காக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

2023 கட்டுரைகள் மார்ச் 1-15,2023

மஞ்சை வசந்தன்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது பெயர் அல்ல, வரலாறு. மிகப் பிற்படுத்தப்பட்ட ஆன்மிகக் குடும்பத்தில் பிறந்த முத்துவேல் அவர்கள் எளிய குடும்பத் தலைவர். அவருடைய மகன் கருணாநிதி என்று பின்னால் அறியப்பட்ட தட்சணாமூர்த்தி, பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவு சிந்தனையும், தமிழ் உணர்வும், இன உணர்வும் ஒரு சேரப் பெற்றவர். அதன் விளைவால்தான் தட்சணாமூர்த்தி கருணாநிதியானார். எந்த ஜாதியினர் படிக்கக்கூடாது, குலத்தொழிலையே செய்யவேண்டும் என்று ஆதிக்க ஜாதியினரால் கட்டாயப்படுத்தப்பட்டனரோ, அச்சமுதாயத்தில் பிறந்தாலும், தன் பிடிவாத குணத்தால் பள்ளியில் சேர்ந்து படித்தார்.

படிக்கும்போதே மொழி உணர்வுடன் முழக்கமிட்டார், கையெழுத்து ஏடு நடத்தினார். ஆசிரியர் வீரமணி அவர்கள் பள்ளி மாணவராக இருந்தபோது அவரை அழைத்து திருவாரூரில் பொதுக்கூட்டம் நடத்தி சிறப்புரையாற்றச் செய்தார்.
பள்ளி இறுதி வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு, அரசியலில், சமுதாயத் தொண்டில் தமிழைக் காக்கத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து உயிரைப் பணயம் வைத்தார்.
எழுத்தாற்றலில், பேச்சாற்றலில் தலை மகனாக உயர்ந்து நின்றார்.திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி சமுதாயப் புரட்சிக்கும், இன எழுச்சிக்கும் பாடுபட்டார்.

அண்ணாவின் தலைமையில் தி.மு.க-. ஆட்சியில் அமர அமைச்சரானார். அண்ணா மறைவிற்குப்பின் முதல் அமைச்சரானார்.
அய்ந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்து அவர் ஆற்றிய பணிகள் தமிழ்நாட்டை மறுகட்டமைப்புச் செய்து, தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது.
அவர் பெற்ற பிள்ளை ஸ்டாலின். அவரைப் போலவே, அவர் அடியொற்றி வாழ்ந்தார்; வளர்ந்தார். அரசியலை தன் முழு நேரப் பணியாக ஏற்றார்.

இளைஞர் அணிக்குத் தலைமையேற்று தி.மு.க.விற்கு எழுச்சியூட்டினார். மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டு, கொடுந்தாக்குதலை எதிர்கொண்டு மீண்டார்.
சென்னை மாநகர மேயராகத் தேர்ந்-தெடுக்கப்பட்டு, சிறப்பாகப் பணியாற்றிச் சாதனை புரிந்தார்.
அமைச்சராய்ப் பொறுப்பேற்று தமது ஆளுமைகளை வெளிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவராய் திறம்பட, துணிவுடன் செயல்பட்டு, கலைஞருக்குப் பின் வெற்றிடம் என்று கற்பனையைப் பரப்பிய கயவர்களின் கனவைத் தகர்த்தார்.

கலைஞர் இல்லாத நிலையில், நடந்த தேர்தல்களில், தி.மு.க. கழகத்தின் பெரும் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 39 தொகுதிகளை வென்று நாடே தன்னைப் பார்க்கும்படி செய்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஒன்றிய அரசின் சதிகள் அனைத்தையும் முறியடித்து, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு இடங்களை மிகத் திறமையாக பிரித்துக்கொடுத்து, மாபெரும் வெற்றியை ஈட்டி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

கொரோனோ கோரத்தாண்டவம் ஆடி, மக்களையும் அரசு செயல்பாட்டையும் முடக்கிப்போட்டு, மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாய் இருந்தநிலையில் ஆட்சிப் பொறுப்பேற்று, பெருந்தொற்றை மிகத் திறமையாகக் கையாண்டு, தமிழ்நாட்டையும் மக்களையும் பாதுகாத்தார். அச்சாதனையை உலகமே வியந்து பாராட்டியது.
கஜானாவைக் காலி செய்துவிட்டுச் சென்ற அ.தி.மு.க. ஆட்சிக்குப்பின், கடுமையான நிதிப் பற்றாக் குறையில் ஆட்சிப் பொறுப்பேற்றவர், தனது நிருவாகத் திறத்தால் பற்றாக்குறை நிதிநிலையிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை முதலிடத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் 80% மேல் நிறைவேற்றி, மகளிர், மாணவர்கள், ஏழைகள், விவசாயிகள் என்று எல்லா தரப்பு மக்களுக்கும் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, மக்கள் போற்றிப் பாராட்டும் மாபெரும் தலைவராய், மனிதம் மிக்க தலைவராய், மாட்சிமை மிக்க தலைவராய் உயர்ந்து நிற்கிறார்.

அனைத்துத் துறைகளையும் தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து, மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கிறார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறார். தமிழ்நாடு முழுக்க பயணம் மேற்கொண்டு மக்கள் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்துகிறார். முதல்வர்களின் முதல்வராய் உயர்ந்து நிற்கிறார்.
70 வயதில் 20 வயது இளைஞரைப் போல் சுறுசுறுப்பாய், சோர்வின்றி உழைப்பதை உலகமே வியந்து பாராட்டுகிறது.
‘திராவிட மாடல்’ ஆட்சியென்று அறிவித்து தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், கர்மவீரர் காமராசர் ஆகியோரின் வழிகளைப் பின்பற்றி, ஜாதி, மத பேதமற்ற, சமூக நீதி காக்கும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க, ஒவ்வொரு நாளும் ஓயாது உழைத்து வருகிறார்.

சனாதன சக்திகளுக்கும், சங்பரிவாரங்களுக்கும் ஆதிக்கவாதிகளுக்கும் எதிராய் துணிவுடன் நின்று, சமூக நீதி, மனித உரிமை, மத இணக்கம், மக்கள் நலம் காத்து கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, சிறு, குறு தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கு வழிவகுத்து, திட்டங்களைச் செயல்படுத்தி வளர்ச்சிமிக்க மாநிலமாகத் தமிழ்நாட்டைக் கட்டமைத்து வருகிறார்.
இவரது ஆளுமையால் தமிழ், தமிழர், தமிழ்நாடு முதன்மை இடத்திற்கு உயரும். அதற்கு அவர் நலத்துடன் நூறாண்டுகளுக்கு மேலும் வாழ வேண்டும் என்று உளம் மகிழ வாழ்த்துகிறோம்!
வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!