உலகப் பகுத்தறிவாளர்கள்

ஏப்ரல் 01-15

கோபராஜு ராமச்சந்திர ராவ் எனும் கோரா

– சு.அறிவுக்கரசு

இந்திய விடுதலைக்கு 17 ஆண்டுகளுக்கு முன் 1930ஆம் ஆண்டு காந்தியாரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கடிதம் எழுதி முயற்சிகள் மேற்கொண்டவர் கோரா என்ற பிரசித்தி பெற்ற ஆந்திர நாத்திகரான கோபராஜு ராமச்சந்திர ராவ். ஆனால், அவரைச் சந்திக்க காந்தியார் மறுத்துவிட்டார். சொல்லப்பட்ட காரணம் -கோரா ஒரு நாத்திகர்.

தேசியப் பற்று, அரிசன முன்னேற்றம் போன்ற காந்தியாரின் கொள்கைகளில் பிடிப்பு மிகக் கொண்டவரான கோரா, காங்கிரசு நடத்திய உப்புச்சத்தியாகிரகத்தில் பங்கு எடுத்துக் கொண்டவர். அப்போராட்டத்தின் நினைவாக அக்காலகட்டத்தில் பிறந்த, தம் மகனுக்கு லவனம் (உப்பு) எனப் பெயர் வைத்தவர். எத்தனை காங்கிரசு ஆத்திகர்கள் அப்படிப் பெயர் வைத்தனர்? ஆனாலும் காந்தியார் பேட்டி தரவில்லை.

சோர்வு அடையாத கோரா, மீண்டும் முயன்றார். 1941இல் காந்தியாருக்குக் கடிதம் எழுதிப் பேட்டிக்கு நேரம் கேட்டார். அரிசன முன்னேற்றத்திற்குத் தாம் செய்துவரும் ஆக்கப் பூர்வமான செயல்களைப் பட்டியல் இட்டுக் காட்டியிருந்தார். அதைப் படித்தபிறகும் காந்தியார், தமக்கு நேரம் இல்லை என மழுப்பலாகப் பதில் எழுதிவிட்டார்.

விடாப்பிடியாக கோரா மீண்டும் மீண்டும் எழுதினார். முயற்சிகளில் ஈடுபட்டார். சிறையிலிருந்து 1944இல் விடுதலை அடைந்த காந்தியாரிடம் அவருக்கும் கோராவுக்கும் பொதுவான கூட்டு உழைப்பாளி எனத்தக்க நண்பர் ஒருவரான டி.ராமசாமி என்பவர் முயற்சி செய்து சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் கோராவைக் காந்தி சந்தித்தார்.

சந்தித்தபோது கேட்ட முதல் கேள்வியே, நாத்திகத்திற்கும் கடவுள் இல்லை என்பதற்குமான வேறுபாடு உண்டா, என்ன? என்பதுதான். கடவுள் இல்லை எனச் சொல்வது எதிர்மறை, அது கடவுளை மறுக்கிறது. நாத்திகம் என்பது உடன்முறைக் கொள்கை. கடவுளை மறுத்ததன் மூலம் வாழ்வின் வெற்றிகளை உறுதிப்படுத்தும் உயர் கொள்கை என கோரா பதில் அளித்தார்.  தசரதராமன் வேறு, என் ராமன் வேறு. உண்மையே கடவுள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த காந்தியார், என்ன விளங்கிக் கொண்டாரோ, இந்தப் பதில் அவரை ஈர்த்தது. இரண்டே மாதங்களில் காந்தியாரின் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட ஆதாரக் கல்வி மாநாட்டை ஒட்டி அங்கு தங்கிப் பணியாற்ற வருமாறு காந்தி, கோராவை அழைத்தார். கோராவும் தங்கிப் பணியாற்றினார். 30-_03_1945இல் நாத்திகம் பற்றி அவருடன் விவாதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஏன் நாத்திகத்தை விரும்புகிறீர்கள்? என்று காந்தியார் கேட்டார். மிக விரிவாக கோரா பதில் கூறினார். 1943இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் கல்கத்தா நகரத் தெருக்களின் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தார்கள். அது அவர்களின் தலைவிதி, தலை எழுத்து என்றுதான் எல்லாரும் சொன்னார்கள். கடவுள் இப்படிப் படைத்து விட்டார் என்று நொந்து கொண்டார்கள். இந்த மாதிரியான காரணங்களே, அவர்களின் வாழ்க்கைத் தத்துவமாகி விட்டது. இதே தத்துவம்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உயர் ஜாதி மக்களுக்கும இடையே! கறுப்பு நிற மக்களுக்கும் வெள்ளை நிற மக்களுக்கும் இடையேயும் இதே தத்துவம்தான்! முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட, தலைவிதித் தத்துவம், மனிதர்களின் நிலையை விலங்குகளைவிடக் கேவலமாக ஆக்கிவிட்டது. சமூகத்தில் சமன்பாடான நிலையை மனிதனால் ஏற்படுத்திட இயலாது என்கிற நிலை. மனிதகுல மாண்புகளும உயர் கொள்கைகளின் வளர்ச்சியும் நடைபெறுவது கடவுளின் மேலும் விதியின் மீதும் மனிதனுக்கிருக்கும் நம்பிக்கை போக்கப்பட்டால்தான் நடக்கும் என்று விரிவாகக் கூறினார்.

உங்கள் கருத்தில் லட்சிய நோக்கு இருக்கிறது. என்னுடைய ஆத்திகம்தான் நல்லது என்றோ, உங்களது நாத்திகம் தீயது என்றோ என்னால் கூறமுடியவில்லை. நான் உங்கள் வழிக்கு வரலாம். அல்லது நீங்கள் என் வழிக்கு வரலாம். அல்லது இருவருமே மூன்றாவதாக ஒரு வழியில் செல்லலாம் எனக் கூறிவிட்டார். யார் வென்றது? நாத்திகத்தின் காரணமாக வெறுத்த காந்தி, தம் கருத்தை மாற்றிக் கொள்ள வைத்தது கோராவின் விளக்கம். இருவரும் இணைந்து பாடுபட்டார்கள் என்பது வரலாறு. காந்தியார் தம் மகனைப் பார்ப்பன அய்யங்கார் வீட்டு மருமகனாக்கினார். ஆனால், கோரா, தம் மகள் மனோரமாவை தாழ்த்தப்பட்ட குடும்பத்து மருமகளாக்க முடிவு செய்தார். இதனை அறிந்த காந்தியார் மகிழ்ச்சி அடைந்து மணவிழாவினை நடத்தி வைக்க இசைந்தார். கடவுளின் பேரால் உறுதி செய்யாமல், உண்மையின் பெயரால் உறுதிமொழி கூறச் செய்வேன் என்றும் ஒத்துக் கொண்டார். அரிசனனைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம், கோராவின் நாத்திகம் ஆத்திகத் தன்மை பெறுகிறது என நினைத்துக் கொண்டார்.

எப்படியோ, இத்திருமணம் நடைபெறும் முன்பே காந்தியார் ஜாதி, மத வெறி பிடித்த மராத்தி சித்பவன் பார்ப்பனான நாதுராம் விநாயக் கோட்சே என்பவனால் 30_1_1948இல் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். வேறொரு நாளில் தக்கர் பாபா எனும் காந்தியின் அணுக்கத் தொண்டரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இத்தகைய உறுதிமிக்க நாத்திகர், கோரா 15_11_1902இல் தற்போது ஒரிசா மாநிலத்தில் இருக்கும் சத்ரப்பூர் எனும் சிறு நகரத்தில் ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தார். காட்டு இலாகாவில் எழுத்தராகப் பணியாற்றிய வெங்கட்ட சுப்பாராவ் என்பாரின் மகன். சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட மாநிலத்தின் ஒரு பகுதியான ஆந்திராவில் ஆங்கிலப் படிப்பின் காரணமாகவும் நம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியோசாபிகல் சங்கம் போன்றவற்றின் பரப்புரைகளாலும் படித்த வர்க்கத்தினரிடையே ஜாதிப் பாகுபாடுகள் பற்றிய மறு சிந்தனை வளர்ந்து வந்த காலம் அது. கோராவின் தந்தையும் ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர். ராமன், கிருஷ்ணன், சிவன் போன்ற இந்துக் கடவுள்களை பற்றி மட்டும் அல்லாது அல்லா, ஏசு, பற்றியும் பாடல்கள் எழுதிப் பாடியவர்.

தமது 19ஆம் வயதுவரை இந்துப் பார்ப்பன ஆச்சார அனுஷ்டானங்களை அப்படியே பின்பற்றிச் செய்துவந்தவர்தான் கோராவும். தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் சாம்பல் (விபூதி) பொட்டலத்தின் சக்தியால்தான், தாம் எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெறுவதாக நம்பிக் கிடந்தவர் கோரா. தாம் எழுதும் தேர்வில் தேர்ச்சியடைந்ததும் அதனாலேயே என்று இருந்தவர் கோரா.

ஆனாலும், அவரது குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோகச் சம்பவத்தால், அவரது கடவுள் நம்பிக்கை ஆட்டங்கண்டது. அவருக்கு 18 வயதிருக்கும்போது அவரின் அக்காவின் தலைமகன் அம்மை நோயால் இறந்து போனான். அக்காவும் அவள் கணவரும் வேண்டாத கடவுள் இல்லை. தொழாத தெய்வம் இல்லை. கடவுளை நம்பியும் கைவிடப்பட்டார். முதல் மகன் இறந்தான். பின் இரண்டாமவனும் அதே நோயால் இறந்தான். மூன்றாமவனும் அப்படியே போய்ச் சேர்ந்தான். இதைக்கண்ட கோராவின் மனதில் இருந்த நம்பிக்கை நடுங்கத் தொடங்கியது.

இறுதியாக எம்.ஏ. தேர்வு. அப்போது அவருக்கு வயது 25. திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் முடிந்தநிலையில் தேர்வு எழுதுகிறார். முடிவுகள் வரும்போது, தேர்வு எழுதிய 5 பேர்களில் கடைசி நபராக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தார். பட்டம் கிடைத்து விட்டாலும், நல்ல மதிப்பெண் இல்லாததால் ஆசிரியர் வேலைக்குப் போக முடியாத நிலை அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. தம் பாக்கெட்டில் வைத்திருந்த விபூதியினால் எந்தப் பயனும் ஏற்படாது என்ற தெளிவு ஏற்பட்டது. 25 வயதுவரை வைத்துக்கிடந்த சாம்பல் பொட்டலத்தைத் தூக்கி எறிந்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. வீடு கிடைப்பதுதான் கடினமாக இருந்தது. கடைசியில் ஒரு வீட்டைப் பிடித்தார். நீண்ட காலமாக யாரும் குடியில்லாமல் பூட்டிக்கிடந்த வீடு. பேய் குடியிருந்த வீடு எனக் கருதப்பட்டதால் யாரும் குடிவராததால் பூட்டிக் கிடந்தது. குறைந்த வாடகைக்குக் கிடைத்தது. கோரா குடிவந்தார். கல்வி கற்பிக்கும் அவரது ஆற்றலைக் கண்ட கல்லூரி முதல்வர் கோராவை மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்தார். கோராவிடம் அதைச் சொன்னபோது மிகவும் மகிழ்ந்தார். ஆனால் ஒரு நிபந்தனையை முதல்வர் கூறியபோது குழப்பம் அடைந்தார், முதலில்! கிறித்துவராக மதம் மாறினால் அமெரிக்கா போய்ப் படிக்கலாம் என்றபோது ஒரு மதத்தைவிட இன்னொரு மதம் நல்லது எனக்கூற வாய்ப்பே கிடையாது; எல்லா மதங்களுமே மோசம்தான் என்கிற முடிவுக்கு வந்தார். அமெரிக்கா போகத் தமக்கு விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டார். அமெரிக்கன் கல்லூரி வேலையையும் விட்டு விலகிவிட்டார்.

அப்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கைத் தீவு இருந்தபோது, அங்கே ஆனந்தா கல்லூரி எனும் பெயரில் புத்தபிக்குகள் நடத்திய கல்லூரியில் வேலை கிடைத்தது. விலங்கியல் விரிவுரையாளர் பணி. அங்கும் இவருக்குச் சிக்கல்தான். விலங்கியல் ஆய்வுச் சாலையில் தவளைகளை வெட்டி, மாணவர்களுக்கு அதன் உள்ளுறுப்புகளைப் பற்றிப் பாடம் நடத்த வேண்டும். ஆனால், ஆனந்தா கல்லூரியில் அதற்குத் தடை. அகிம்சை என்பது புத்தமதக் கொள்கையாம். என்றாலும் இதற்காக அவர் ஒன்றும் கல்லூரி நிருவாகத்தோடு மோதவில்லை. மாறாக, மதங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு தான்தான் உயர்வு எனக் கூறிக் கொள்வதை நேரடியாகவே அனுபவிக்கும் வாய்ப்பு பெற்றார்.

அப்போது, மூடநம்பிக்கைகளின் முதுகு எலும்புகளை முறிக்கும் வாய்ப்பு தானாகவே வந்தது. கோராவின் துணைவியார் சரசுவதி அவரது காரியம் யாவினும் கைகொடுக்கும் துணைவியாக அமைந்திருந்தார். அவர் அப்போது தன்முதல் குழந்தையைக் கருவில் சுமந்து இருந்தார். நான்கு மாத கர்ப்பிணி. அப்போது சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்துமதத்தவரின் நம்பிக்கைப்படி, கருவுற்ற பெண்கள் கிரகணத்தின்போது வெளியில் வரக்கூடாது. காய்கறிகள் நறுக்கக்கூடாது. துணிகளை வெட்டவும் கூடாது. தைக்கவும் கூடாது. இட்டிலியைப் பிட்டுத் தின்னக்கூடாது. செய்தால், பிறக்கும் குழந்தை ஊனமாகப் பிறக்குமாம். குறிப்பாகப் பிளவுபட்ட உதட்டுடன் பிறக்குமாம். புத்த மதம், கிறித்துவ, இசுலாமியப் பெண்கள் தாராளமாகத் தெருக்களில் நடமாடியதை கோராவும் அவர் மனைவியும் கண்டனர்.
மூடநம்பிக்கையை முறியடிக்க முடிவு செய்தனர். இந்துமதம் விலக்கிய அனைத்தையும் செய்தனர். குழந்தை முழுமையாகப் பிறந்தது. ஊனம் ஏதும் இல்லாமல் பிறந்தது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்து இந்துப் பெண்கள் தெளிவு பெற்றனர்.

1928ஆம் ஆண்டில் ஆவணி அவிட்டம் வந்தது. பார்ப்பனர்கள் பூணூல் புதுப்பிக்கும் சடங்கு. இதனைச் செய்து புதுப்பூணூல் அணிய கோரா மறுத்துவிட்டார். தன் தந்தை உத்தரவிடும் குரலில் கண்டிப்புடன் கூறியும்  மறுத்துவிட்டார். கோபம் கொண்ட தந்தை வீட்டை விட்டு வெளியே போகும்படி கோராவிடம் கூறிவிட்டார். இவரும் வெளியேறி விட்டார், மனைவி, மகளுடன்!

காக்கிநாடாவில் இருந்தபோது, 1932ஆம் ஆண்டில் ஒருவாதம். கடவுளுக்கு உறுதியான உருவம் உண்டா, இல்லையா என்பது தலைப்பு. கோரா பேசும்போது, கடவுளே ஒரு கற்பனை. அந்த நிலையில் அதன் உரு எத்தன்மையது எனப் பேசுவது, கானல் நீரின் ஆழம் எவ்வளவு என்பதை அளப்பது போன்ற மடத்தனமானது எனப் பேசினார். உண்மை தானே! கானல் நீர் என்பது கடும்வெயிலில் தெரியும் மாயத்தோற்றம். அதைப் போன்ற கற்பனை தானே கடவுள் என்பது? யார் பார்த்தனர், யார் அறிந்தனர், யார் உணர்ந்தனர்? கண்டவர் சொன்னதில்லை; சொன்னவர் கண்டதில்லை என்று நம்பிக்கைக்காரர்களே கூறுவதுதானே!

அறிவார்ந்த முறையில் பேசினால் ஆத்திகர்கள் ஒப்புவரோ? நாத்திகரான விரிவுரையாளர் பேசுவதை ஆத்திகரான கல்லூரி முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லை. கோராவை டிஸ்மிஸ் செய்துவிட்டார். செய்தி ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்குப் போனது.

மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார், ஓராண்டுக்குப்பின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *