அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (295)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜுலை 01-15 2022

தஞ்சை வருணாசிரம ஒழிப்பு மாநாடு

கி.வீரமணி


தஞ்சையில் கழக மாநில மாநாடு 23.4.1999, 24.4.1999 தேதிகளில் வெகு உற்சாகமாகத் தொடங்கியது. மாநாட்டிற்குக் குடும்பம் குடும்பமாகக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். காலை 10:00 மணிக்கு திலகர் திடலில் சிங்கப்பூர் நாகரெத்தினம் அரங்கில், தஞ்சை இராசகோபால் பந்தலில் திருவையாறு கோதண்டபாணி நுழைவு வாயிலில் வைக்கம் பவளவிழா வருணாசிரம ஒழிப்பு மாநாடு முதலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் மஞ்சை வசந்தன் வரவேற்றார். மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து வடசேரி இளங்கோவனும், வழிமொழிந்து சந்திரராசனும் உரையாற்றினர். பேராசிரியர் பு.இராசதுரை மாநாட்டுத் தலைமையுரை நிகழ்த்தினார்.
மாநாட்டில் மஞ்சை வசந்தன் எழுதிய, “தில்லுமுல்லுப் பேச்சா? தெய்வத்தின் குரலா?’’, ‘இவர்தான் பெரியார்’’ நூல்களை வெளியிட்டேன்.
முன்னதாக வருணாசிரம எதிர்ப்பினை முன்னிலைப்படுத்தி, அனைத்து ஊர்களிலும் அனைவருக்கும் பொதுவான ஒரே சுடுகாடு நவீன முறையில் அரசு ஏற்படுத்த வேண்டும். மனிதக் கழிவை மனிதர் அகற்றும் அவல நிலையை அடியோடு போக்க, அனைத்து ஊர்களிலும் நவீனக் கழிப்பிட முறையைக் கொண்டுவர வேண்டும். கிராமங்களில் தேநீர்க் கடைகளில் “இரு குவளை முறை’’ எங்கு உள்ளதோ அதனைக் கிராம நிருவாக அதிகாரி மூலமும், காவல்துறை மூலமும் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் சென்று பேசி அதனை நீக்க வேண்டும். இதில் சமூக சீர்திருத்தத் துறை பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாலையில் ‘பெண்கள் விடுதலை மாநாடு’ நடைபெற்றது. அதில், குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னால் போடப்படும் தலைப்பெழுத்தில் (மிஸீவீtவீணீறீ) இனிக் கண்டிப்பாய்த் தாயின் பெயரும் சட்டரீதியாகவே சேர்ந்து இடம்பெற வேண்டும் என்றும், சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடத்தை அளிக்கும் வகையில் மேலும் காலதாமதத்திற்கு இடமின்றி உடனடியாகச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்-களும், சத்திய சோதக் சமாஜத்தைச் சேர்ந்தவர்களுமான நூட்ரன் மாளவியா, டாக்டர் சீமா தாக்கரே, திரைப்பட இயக்குநர் ஜெயதேவி போன்றோரும் சிறப்புரை-யாற்றினார்கள். சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி அவர்களுக்குச் சிறப்பு செய்தோம்.
மாநாட்டு மேடையில் ரேணுகா_சிவக்குமார், ஜெயலட்சுமி_மணிவண்ணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நடத்தி வைத்தேன். பெண்கள் விடுதலை மாநாட்டின் போது கன மழை பொழிந்த போதிலும், மகளிரணியினரும் மகளிரும் கலைந்து செல்லாது மாநாட்டில் முழுமையாகப் பங்கேற்றனர். முதல் நாள் மாநாட்டில் சிறப்பான முறையில் கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் மகளிரணியின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மறுநாள், சமஸ்கிருத ஆண்டு எதிர்ப்பு மாநாடு காலையில் தொடங்கியது. மாநாட்டில் தமிழறிஞர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய அரசியல் சட்டம் அறிவித்துள்ள தேசிய மொழிகளில், பேச்சு வழக்கில் இல்லாத 50 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே தாய்மொழியாகவுள்ள சமஸ்கிருதம் என்ற ‘செத்த மொழி’யினைக் கொண்டாட 1999ஆம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழில் வழிபாடு என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு எல்லாக் கோயில்களிலும் ஏற்பாடு செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் கழகப் பொறுப்பாளர்களின், உரைக்குப் பின் நான் சிறப்புரையாற்றினேன். அந்த உரையில், “நாம் ஆட்சிக்குச் செல்பவர்கள் அல்லர். ஆட்சி நடத்துபவர்கள் பகுத்தறிவுப் பாதைக்குத்தான் வந்தாக வேண்டும். பெரியார் என்பது ஒரு தத்துவம். நாம் எல்லோரும் தலைவராக ஏற்றுக்கொண்டது யாரை என்று சொன்னால் 95 வயது வரை வாழ்ந்த இளைஞரைத்தான்! எங்களுக்குக் கொள்கைப் பார்வை உண்டே தவிர, அரசியல் பார்வை கிடையாது! இந்தத் தமிழ்நாடு ஒன்றுதான் மதவாதத்திற்கு இடம் தராத மண். இந்த மண்தான் மதவெறி சக்திக்கு உரம் போடாத மண். இதனை மதவெறிக்கு ஆட்படாத வகையில் என்றும் கழகம் நின்று காப்பாற்றும்’’ என பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினேன். திருச்சியில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர்.
வேதாரண்யம் மாவட்டம் ஆயக்காரன்-புலத்தில் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா 27.4.1999 அன்று சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் அனைத்துக் கட்சியைச் சார்ந்த பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக கழகக் கொடியினை ஏற்றி வைத்தேன். புதுரோடு என்று அழைக்கப்பட்ட சாலைக்கு, ‘தந்தை பெரியார் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மா.மீனாட்சிசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் மின்னணுப் பொத்தானை அழுத்தி அறிவாசான் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன். அவ்வுரையில், “இருபத்தி ஓராம் நூற்றாண்டில் நுழைய இருக்கின்ற நாம், அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்து முன்னேற வேண்டும்.

பகுத்தறிவோடு வாழ வேண்டும். பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்னும் புத்தகத்தில் சொன்ன கருத்துகள் இன்று வெற்றி பெற்று வருகின்றன’’ எனப் பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். டில்லியில் அமைந்து கொண்டிருக்கின்ற பெரியார் மய்ய கட்டட நன்கொடைக்காக ஏராளமானோர் நிதி உதவி அளித்தனர். சிலையினை சிறப்பான முறையில் அமைத்துக் கொடுத்த அரிமா என்.சிதம்பரம் _ தேன்மொழி ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தோம்.
தந்தை பெரியார்தம் ‘விடுதலை’ நாளேட்டின் துணையாசிரியர்களில் ஒருவரும், அறிஞர் அண்ணாவின் ‘திராவிடநாடு’ ஏட்டின் துணையாசிரியரும், ‘அறப்போர்’ என்ற ஏட்டின் ஆசிரியரும், திராவிட இயக்கத்தின் சீரிய எழுத்தாளர்களில் ஒருவருமான சகோதரர் இராம.அரங்கண்ணல் அவர்கள் 29.4.1999 அன்று இயற்கை எய்தினார் என்னும் துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வருந்தினோம்.
மாணவப் பருவம் முதல் சகோதரர் அரங்கண்ணல் அவர்கள் சுயமரியாதைக் கொள்கை உணர்வுடன் இருந்தவர். எல்லோரிடத்திலும் வாஞ்சையுடன் பழகுபவர்! தனது உழைப்பால் உயர்ந்த பெருமகன்!
இந்தியா முழுதும் சமூகநீதி பரவ வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். இறுதிவரை திராவிடர் கழகத்திடமும், நம்மிடமும் அவர் காட்டிய அன்பும், பாசமும் எப்போதும் மறக்க இயலாதவையாகும்!
அவரின் துணைவியார் திருமதி ஆண்டாள் அம்மையாருக்கும், அவருடைய அன்புச் செல்வங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைக் கூறினோம். அவரது இல்லத்திற்குக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினேன்.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவர் கே.சி.எழிலரசனின் மைத்துனரும், சேலம் அய்யன் திருமாளிகை ஆர்.எஸ்.ராமகிருட்டினன் _ ஆர்.காந்திமதி ஆகியோரின் செல்வனுமான எஸ்.ஆர்.குலசேகரனுக்கும், சங்ககிரி சுந்தரம் _ மணிமேகலை ஆகியோரின் செல்வி சு.ரேகா ஆகியோரின் மணவிழாவை 29.4.1999 அன்று தலைமையேற்று நடத்திவைத்தேன். “ஆத்திகக் குடும்பத்தில் சுயமரியாதைத் திருமணம் நடப்பது சிலருக்கு வியப்பாக இருக்கும். இது நம் குடும்பம். பெரியார் தொண்டர்களுக்குக் குறுகிய மனப்பான்மை கிடையாது. உலகத்தில் ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் நடந்த சாதனை சுயமரியாதைத் திருமண முறையாகும். இப்புரட்சியைச் செய்தவர் தந்தை பெரியார்’’ என விளக்கி உரையாற்றினேன்.
திருக்கோயிலூர் மாவட்டம் சென்னகுணம் மு.இராமானுஜம்_கமலம் ஆகியோரின் மகன் இரா.அன்பரசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பொ.மோகன்_மல்லிகா ஆகியோரின் மகள் மோ.பிரேமாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை 2.5.1999 அன்று நடத்தி வைத்தேன். “அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே புரட்சிக்கவிஞருடன் சேர்ந்து மாணவரணி பிரச்சாரத்தில் இந்த சுற்று வட்டாரத்தில் பல நாள்கள் பேசியிருக்கிறேன். தந்தை பெரியாரின் உழைப்பின் பயன்தான் இந்தச் சுயமரியாதைத் திருமணம்’’ எனப் பல்வேறு கருத்துகளை அங்கு எடுத்துக் கூறினேன்.

நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் சத்தியசீலன் _ பாக்கியம் ஆகியோரின் செல்வன் ச.அறிவழகன் _ அரக்கோணம் நாகவேடு ந.கோ.சண்முகம் _ குப்பம்மாள் ஆகியோரின் செல்வி ச.சுமதி ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை 6.5.1999 அன்று தலைமையேற்று நடத்தி வைத்து உரையாற்றினேன். “இந்தக் குடும்பமே கொள்கை ரீதியான குடும்பம். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்றால் கொள்கைப் பாசத்தோடு இருக்கும் குடும்பம். மணமகனின் தந்தை ஜாதி ஒழிப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அதை செயலில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். பெரியாருக்குப் பின்பு இந்த இயக்கம் இருக்குமா எனக் கேட்டார்கள். அதன் வெற்றியைத்தான் இப்போது பார்க்கின்றீர்கள்’’ என்று அவ்வுரையில் குறிப்பிட்டேன். மாலை திருச்சியில் பா.ராசபாண்டியன் _ சி.இளமதி ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து உரையாற்றினேன்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொடும்பாவி எரிப்பு வழக்கிலிருந்து 11.5.1999 அன்று 174 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம். இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் பி.பி.ஜீவன்ரெட்டி, பரிபூரண அய்யங்கார் ஆகியோரின் உருவப் பொம்மைகளைக் கொளுத்தும் போராட்டத்தை 23.8.1996 அன்று தலைமையேற்று நடத்தினேன். அப்போது இ.பி.கோ.143, 148, 149, 188, 225 மற்றும் 74 சி.பி.ஆக்ட், 7(1) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலையில் ‘சி’ வகுப்பில் வைக்கப்பட்டோம். மூன்றாண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கில் அனைத்துத் தோழர்களும் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

நீதிமன்றத்திற்கு வெளியே தோழர்கள் வரவேற்று வாழ்த்தினார்கள். எனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை இவ்வழக்கில் சிறப்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் கோ.சாமிதுரைக்கு மகிழ்ச்சியோடு அணிவித்துப் பாராட்டினேன்.
மேனாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து 12.5.1999 அன்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அதில், “ராஜீவ்காந்தி படுகொலையில் ஷிமிஜி என்ற சி.பி.அய்.யினால் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் உயிருடன் அகப்பட்டவர்களும், பிடிபட்டவர்களுமான 26 பேர்களுக்கும், சென்னை பூவிருந்தவல்லி ‘தடா’ நீதிமன்ற நீதிபதி தூக்குத் தண்டனை கொடுத்ததைவிடக் கொடுமையான, அநியாயமான தீர்ப்பு அண்மைக் காலத்தில் வேறு கிடையாது என்பதை _ நாம் அத்தீர்ப்பு வெளிவந்தவுடனேயே தெரிவித்தோம். ‘ரோடு ரோலர் தீர்ப்பு’ என்றும் அதை விமர்சித்தோம்.
இப்பொழுது 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளது, பொதுவாக மனித உரிமைப் பற்றாளர்களால் வரவேற்கப்பட வேண்டியுள்ளது! நான்கு பேர்களில் குறிப்பாக நளினி, பேரறிவாளன் போன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது மறு ஆய்வுக்குரியதாகும். இதில்கூட நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மூன்றில் ஒருவர், மூன்றில் இருவர் என்று பிரித்துள்ளதே கூட சந்தேகத்திற்கு அப்பால் அவர்கள் குற்றவாளிகளாக இல்லை என்பதை திட்டவட்டமாக உணர்த்துவதாகிறது!
26 பேருக்கும் தூக்குத் தண்டனை என்ற கொடுமை களையப்பட்டு நான்கு பேருக்கு மட்டும் தூக்கு என்ற ஆக்கப்பட்டு இருப்பது _ பார்ப்பதற்கு ஒரு ‘துணிச்சலான’ தீர்ப்பாகக் காணப்பட்டாலும், இதுவும் மறு ஆய்வுக்கு உட்பட்டதே’’ என அறிக்கையில் சுட்டிக்-காட்டியிருந்தேன்.
-குமரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் _ முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆ.சண்முகையா அவர்கள் 30.5.1999 அன்று நாகர்கோவிலில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்தினோம்.

 

குளத்தூரைச் சேர்ந்தவர், இளமைக் காலந் தொட்டே தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்; உழைப்பால் உயர்ந்தவர்.
நாகர்கோவில் முக்கியப் பகுதியில் தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பக உருவாக்கம் _ இவற்றுக்காக அரும்பாடுபட்டவர் _ நிதி உதவி செய்தவர். அவரது மறைவு குமரி மாவட்டத்தில கழகத்திற்குப் பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் துயருற்ற அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டேன்.
அருப்புக்கோட்டை நகர தி.க. துணைத் தலைவர் அ.தங்கசாமி _ மகளிரணி அமைப்பாளர் த.இராசம் ஆகியோரின் மகன் சந்திரகுமாருக்கும், சிவகாசி மா.தங்கராசன், வள்ளியம்மாள் ஆகியோரின் மகள் இந்திராவிற்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை 3.6.1999 அன்று தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். இந்த மணவிழாவில் அ.தங்கசாமியின் இளைய மகன் செல்வகுமார் மத்திய அரசால் இளம் விஞ்ஞானி எனப் பாராட்டப்பட்டு சான்றிதழ் பெற்றிருந்தார். அவரைப் பாராட்டிப் பேசி, கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து பெருமைப்படுத்தினோம்.

மேனாள் பிரதமர் திரு.தேவேகவுடா அவர்கள் 13.6.1999 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வந்தார். அவரை கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றேன். தமிழ்நாடு ஜனதா தள தலைவர் ஜி.ஏ.வடிவேலு உடனிருந்தார். நேராக தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று, அய்யா நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அய்யா அருங்-காட்சியகத்திற்கு வந்து, அய்யாவுக்குப் பொதுமக்கள் வழங்கிய பரிசுப் பொருள்களைப் பார்வையிட்டார். அவருடன் உரையாடுகையில், “தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், போராட்டங்கள்’’ பற்றி எடுத்துக் கூறினேன். தந்தை பெரியார் நூல்களை அன்பளிப்பாக வழங்கினேன்.
பின்னர், அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பிஜேபி ஆட்சியின்போதுதானே நடந்துள்ளன. அந்தத் துணிவை பிஜேபி ஆட்சிதான் கொடுத்துள்ளது. இப்போது உள்ள சூழலில் மதவாதக் கட்சியான பிஜேபி தான் முதல் எதிரி. கடந்த 50 ஆண்டுகளில் மத்தியில் எத்தனையோ கட்சிகள் மாறிமாறி வந்துள்ளன. ஆனால், பிஜேபி ஆட்சி நடந்த 13 மாதங்களில் சிறுபான்மையினர் அதிகளவில் தாக்கப்-பட்டுள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்’’ என அன்றைய அரசியல் சூழ்நிலையை எடுத்துக் கூறினார். இந்தச் சந்திப்பின்போது கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.மாணிக்கம் அவர்கள் மிகப் பெரிய பொதுநலத் தொண்டர்; தியாகப் பிழம்பு, உயரிய பண்பாளர், சீரிய லட்சியவாதி!
23.6.1999 அன்று அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் இழப்பு தமிழ்நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பாகும். அவரது தோழமை, பழகும் பாங்கு, எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் மய்யப் பொறுப்பிலிருந்து செயல்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு செயலாளராக 1992 வரை பொறுப்பிலிருந்தார். தமிழ்நாடு மேலவை உறுப்பினராகவும், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பொறுப்பி-லிருந்தார்.
என்.சி.பி.எச். (New Century Book House)புத்தக நிறுவனத்தின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
திராவிடர் கழகத்திடம், குறிப்பாக நம்மிடம் அவர் காட்டிய அன்பு என்றும் மறக்க இயலாதது. அவருக்கு திராவிடர் கழகம் வீர வணக்கத்தினைச் செலுத்தி பெருமைப்-படுத்தியது.
திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத் தோழர்கள் ஆகியோர் அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா 23.6.1999 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று தோழர்களின் எழுச்சி முழக்கத்தோடு, தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினேன்.
தந்தை பெரியார் சிலை அமைய பெரிதும் ஒத்துழைப்பு நல்கிய ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கணபதி மற்றும் சிலை அமைப்புக் குழுவினருக்கு சால்வைகள் அணிவித்து சிறப்பு செய்தோம். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெரியாருக்குப் பெருமை சேர்த்தனர்.
(நினைவுகள் நீளும்…)