சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : மொழி உரிமை

2022 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் நவம்பர் 1-15 2022

நூல்: மொழி உரிமை
ஆசிரியர்:
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்,
எம்.ஏ., பி.எல்., எம்.பில்.
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல்,
84/1 (50), ஈ.வெ.கி.
சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
(044-26618163)
பெரியார் மாளிகை,
புத்தூர்,
திருச்சி-620 017 (0431-2771815)
info@periyar.org
www.dravidianbookhouse.com

[பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் சிறந்த தமிழறிஞர், ஆதாரங்களைத் திரட்டித் தரும் ஆய்வறிஞர். அவரது படைப்புகளில் ஒன்றுதான் இந்நூல். இது இந்தித் திணிப்பு – தமிழ்மொழி உரிமை என்பதைக் கடந்து, உலகில் பல மொழிகள் பேசும் அனைத்துக் கூட்டாட்சி நாடுகளுக்குமான மொழி உரிமைச் சாசனமாகும். இந்நூலிலிருந்து சில பக்கங்களை அளிக்கிறோம்.]

குறிக்கோள்
மொழி உரிமை விழைவோரின் குறிக்கோள் மிக எளிமையானது, தெளிவானது. குறிப்பிட்ட ஓர் இந்திய மொழிக்கு மட்டுமே தனித்த சலுகை நல்குவதன் மூலம் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும்; அதனால் ஒருவர் மீது மற்றவர் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பிற்கு இடம் ஏற்பட்டு விடும். அந்தச் சூழலில் போட்டியும், பொறாமையும், பகையும், சந்தேகமும் வளரும். அந்த நிலையில் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து நேரும்.
மேதமைக்கும் பொறுப்புணர்விற்கும் பெயர் பெற்ற பேராசிரியர் இரேன் முகர்ஜி, ஆட்சி மொழி பற்றிய சட்டத் திருத்தத்தின் பொழுது நியாயம் கோரி இந்தி மொழியல்லாதவர் கிளர்ந்தெழுந்ததைக் கண்டு வருந்தினார். பாராளுமன்றத்தில் அவர் பேசிய பொழுது இந்தியாவின் ஒருமைப்பாட்டை மொழி ஆர்வத்தின் பேரில் குலைத்துவிட வேண்டாம் எனக் கூறி, இந்திய ஒருமைப்பாடு பண்டைக் காலந்தொட்டு உள்ளது என்பதை நிரூபிக்க விஷ்ணு புராணப் பாடல் ஒன்றைப் படித்துக் காட்டினார். ஆனால் ஒன்றை மறந்து விட்டார். ஏட்டிலே இருக்கின்ற காரணத்தால் மட்டுமே எதுவும் நாட்டிலே நடப்பாக அமைந்து விடுவதில்லை. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது சங்க காலப் பாடல். அப்படி எழுதப்பட்டுள்ளதென்பதற்காக உலகம் ஒன்றுபட்டு விடவில்லையே! பாடப்பட்டிருப்பது பாடியவனின் குறிக்கோள்தான்.
அந்தக் குறிக்கோளை அடைவதற்கான காரியத்தை நாம் செம்மையாகச் செய்து முடித்தால் தான் அது நடைமுறைச் சாத்தியமாகும். இல்லையேல் அது கனவு நிலையில் தான் நிற்கும். திரு. இரேன் முகர்ஜிக்கு இது தெரிந்திருக்க வேண்டும். அவர் மேற்கோள் காட்டிய பாடலில் அமைந்துள்ள இந்தியாவில் சிந்துநதி பாய்கிறது; ஆனால் இப்பொழுது அந்நதி பாகிஸ்தானில் அன்றோ பாய்கிறது! ஏன் இந்த நிலை?
திரு. முகர்ஜியின் மாநிலமாகிய வங்கத்தில் பிறந்தவர்தான் பெருமகன் திரு. சித்தரஞ்சன்தாஸ் என்பவர். இந்து முசுலிம் ஒற்றுமையை மிக வலியுறுத்திய விடுதலை வீரர். அவர் தம் பரந்த உள்ளம் முசுலிம்களின் அச்சத்தை அகற்றத்தக்கதாய் அமைந்திருந்தது; அவர்-களுடைய நம்பிக்கையைப் பெறத்தக்க நெறியில் இந்துக்கள் நடந்துகொள்ள வேண்டுமென ஓயாது கூறி வந்தவரும் அவரே. அவரைப் போன்ற உயர்ந்த உள்ளங் கொண்டோர் அரிதாயினர். இந்தியா இரண்டாயிற்று.
மேற்குப் பாகிஸ்தானின் உருதுமொழி ஆதிக்கத்தால், கிழக்குப் பாகிஸ்தான் வங்காள-தேசம் என 1971இல் விடுதலை பெற்றது.
பழம் பாடல்களை ஒப்புவிப்பதன் மூலம் இந்திய ஒற்றுமையை நிலைநாட்ட முடியாது; அல்லது சிலர் நினைப்பது போல் சட்டங்களை இயற்றி இராணுவத்தைத் துணைக்கொண்டு ஒற்றுமையை நிலைநாட்ட முயல்வதும் வீண் முயற்சியே. பரந்த உள்ளம்; நியாய உணர்வு, அறிவியல் நோக்கு ஆகிய சக்திகளால் மட்டுமே மெய்யான; நிலையான ஒற்றுமையை இந்தியத் தேசிய இனங்களுக்கிடையில் ஏற்படுத்த முடியும்.
இந்தியத் தேசிய மொழிகள் பலவற்றுள் ஒன்றான இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க முயல்வது பரந்த உள்ளத்தையா காட்டுகிறது?
பல தேசிய இனங்கள் சேர்ந்த கூட்டாக இந்தியா இருக்கும்பொழுது, அதில் ஒரு தேசிய இனத்திற்கு மட்டுமே நிரந்தரமான ஏற்றம் தரக்கூடிய ஆட்சிமொழித் திட்டம் எவ்வாறு நியாய உணர்வின்பாற் பட்டதாகும்?
உலக மொழிகளில் ஒன்றான ஆங்கிலத்தை அந்நிய மொழியாக ஒதுக்கி வெறுப்பதும், அதே நேரத்தில் இந்தி மொழியினர் அல்லாதாருக்கு உண்மையிலேயே மிக அந்நிய மொழியாக இருக்கும் இந்தியை அவர்கள் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பதும், அப்படி ஏற்றுக் கொண்டால்தான் அவர்கள் தேசப்-பற்று உடையவர்கள் ஆவார்கள் என்பதும் எப்படி அறிவியல் கண்ணோட்டம் அல்லது நடுநிலை நோக்கு ஆகும்?
இந்தியாவை மதத்தின் அடிப்படையில் “ஹிந்துயா’’வாக ஆக்க முயன்றோரும், முயல்வோரும், அதையே மொழியின் அடிப்படையில் “ஹிந்தியா’’வாக ஆக்க முயல்வோரும் ஒற்றுமையின் பகைவர்கள் என உணரவேண்டும். மொழி உரிமை விழைவோரின் குறிக்கோளான “அனைத்து இந்தியத் தேசிய மொழிகளுக்கும் சமத்துவம்’’ என்ற உண்மையை உள்ளபடி உணர்ந்து செயல்படுத்துவதன் மூலமே இந்திய மக்களிடையே நெருங்கிய பிணைப்பினை ஏற்படுத்த முடியும். இந்திய ஒற்றுமையை வலியுறுத்துகின்ற பொறுப்புள்ள தலைவர்கள் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறும் விருப்பங்களை உணர்ச்சி ததும்ப வெளிக்காட்டிக் கொள்வதால் காரியம் கைகூடுவதில்லை; குறையை நிவர்த்திக்க முயலவேண்டும்; துணிவுடன், குற்றம் கண்ட இடத்தில் அதைக் கண்டிக்க வேண்டும். அதை விடுத்து குற்றம் புரிபவனையும், அதனால் பாதிக்கப்படுபவனையும் ஒரே நிறையில் வைத்து, உபதேசம் புரிவதென்பது பயனற்றதோர் எளிய செயல்.

தீர்வு
குறிக்கோள் என்னவென்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்; இந்தியத் தேசிய மொழிகள் அனைத்திற்கும் சமத்துவம் வேண்டும். இதை அடைவதெப்படி? இதற்கோர் இலட்சியத் தீர்வு (Ideal solution) வேண்டுமென்றால் இந்திய மொழிகள் அனைத்தும் இணைப்பு மொழிகளாகவும், மத்திய அரசின் ஆட்சி-மொழிகளாகவும் ஆகவேண்டும். ஆனால், இத்தகைய இலட்சியத் தீர்வு இன்றைக்கு நடைமுறைச் சாத்தியமானதாக இல்லை. எதை எதையோ சாதிக்கும் அறிவியல் உலகு இதையும் ஒருவேளை சாத்தியமாக்கினால் பெருமகிழ் வெய்தலாம். எந்த மொழியில் பேசப்பட்டாலும் அதை நாம் விரும்பும் மொழியில் சொல்லும் கருவியையும், எந்த மொழிக் கடிதத்தையும் நமக்குத் தெரியும் மொழியில் சரியாக உடன் மொழிபெயர்க்கும் எந்திரத்தையும் கண்டுபிடித்தால் மேற்கூறிய இலட்சியத் தீர்வு நடைமுறைச் சாத்தியமாகும்.
இன்றுள்ள ஏந்துகளைக் கொண்டு நம் சமத்துவக் குறிக்கோளை நிறைவு செய்யக் கூடியதும், இலட்சியத் தீர்வினை எட்டக்கூடியதுமான அடுத்த நல்ல ஒரு (The second best) தீர்வினை நாம் காண வேண்டும்.

ஆங்கிலம் ஒழிந்த இந்தி மட்டுமே என்ற தீர்வும், இந்தியோடு ஆங்கிலமும் இணைமொழி என்ற தீர்வும் முறைகேடு பயப்பன என்பதை ஏற்கனவே கண்டோம். அநீதி எனக் கண்ட பின்பும் சிலர் இப்படிச் சொல்வார்கள்; ‘தென்னிந்தியர்கள் கெட்டிக்காரர்கள், அறிவாளிகள்; அவர்கள் இந்தியை எளிதில் கற்று இந்திக்காரர்களையே வென்று விடுவார்கள்? மேற்கண்டபடி இந்தி-மொழியினர் சொன்னால், அது ‘ஏமாந்தவன் தலையில் பச்சை மிளகாய் அரைக்கும்’ கெட்டிக்காரனின் வார்த்தை என்பதை அறிய வேண்டும். அதையே தென்னிந்தியன் சொன்னால் அதைச் சுத்த ஏமாளியின் வார்த்தையாக எண்ணவேண்டும். மனிதரில் அனைவருமே சமமான திறமை உள்ளவர்கள்தான். இந்தியாவின் ஒரு பகுதியில் உள்ளோர் அத்தன்மையர் அல்ல என்று சொல்வதை ‘வெட்டிப்பேச்சு’ என்றுதான் கூறவேண்டும்.

சிலர் இன்னொரு யோசனையைக் கூற முற்பட்டுள்ளனர். ‘இந்தியத் தேசிய மொழிகள் அனைத்தும் சம உரிமையை அடைவது தான் முறை; ஆனால் ஆங்கிலம் அந்நிய மொழியாகையால் அது இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆகமுடியாது; இந்திய மொழிகளில் ஒன்று அந்த இடத்தை நிரப்ப வேண்டும்; ஆனால் சட்டத்தின் மூலம் ஒரு மொழி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம்; அந்த இடத்தை நிரப்புவது எந்த மொழி என்பது காலப்போக்கில் தானாக நிர்ணயமாக வேண்டும்’. இப்படிச் சொல்வது பிரச்சினையைத் தள்ளிப்போட முயல்வது மட்டுமல்ல, அதைத் தீர்ப்பதற்கு பதிலாகத் தவிர்க்க முயல்வதுமாகும். செய்ய வேண்டியதைக் கிடப்பில் போடுவதோ செய்யாமல் விடுவதோ ஊறுவிளைவிப்பதாகும்; அதுமட்டுமல்ல, இவர்கள் யோசனைப்படி இந்திய மொழி-களில் ஒன்று எதிர்காலத்தில் மத்திய அரசின் ஆட்சி மொழியாகும். அச்சமயத்தில் அந்த ஒருமொழி தவிர்த்த மற்ற மொழியினரைக் குறை மட்டத்தில் வைப்பதாகத் தானே பொருள்? எந்தக் காரணத்திற்காக இன்றைய ஆட்சி மொழிக் கொள்கையை எதிர்க்கிறோமோ அதே காரணத்திற்காக, சமவாய்ப்பு புறக்கணிக்கப்படும் என்பதற்காக, இந்தப் புதிய யோசனையையும் எதிர்க்கிறோம்.

நடுவண் அரசின் ஆட்சி மொழியாக இந்தியை முழு அளவில் விரைவாகக் கொண்டுவர விரும்பிய திரு. சேத்கோவிந்ததாஸ் மற்றுமொரு யோசனையைச் சொன்னார். சுவிட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ளது போல் ஒன்றுக்கு மேற்பட்ட அலுவல் மொழிகளை வைத்துக் கொள்வோம். இந்தியோடு மற்றுமொரு தென்னிந்திய மொழியோ அல்லது வங்காளியோ ஆட்சிமொழியாக ஆகலாம். இந்த யோசனை, பிரச்சினையைக் குழப்புவதற்கு உதவும். தீர்க்க உதவாது. மேலும் இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்க்க உருவாகி வரும் இந்தி மொழியினர் அல்லாதோரின் ஒன்று திரளும் அணியை உடைக்க முயலும் சூழ்ச்சியே இது. இந்தியோடு எந்த மொழி கூட்டுச் சேருவது என்ற போட்டியில் தமிழரும், வங்காளியரும் பகைத்துக் கொண்டால், அது இந்தி ஏகாதிபத்தியத்திற்குத் தானே இலாபம். ஏகாதிபத்திய வாதிகள் எப்பொழுதும் கையாள முயலும் பிரித்தாளும் (Divide and rule) தந்திரத்தை திரு. சேத்கோவிந்த தாஸ் கூறிப் போந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சரி, அவர் சொல்லியது போன்றே இந்தியும், தமிழும் ஆட்சி மொழிகள் ஆகின்றன என வைத்துக் கொள்வோம். அதனால், இந்திக்காரர்களுக்கும், தமிழருக்கும் தானே இலாபம். மற்றவருக்கு என்ன பயன்? மற்றவர் இரண்டாந்தரக் குடிமக்களாகத் தானே போய் விடுவர்? காலம் சென்ற திரு. சேத்கோவிந்ததாஸ் அவர்களைப் பின்பற்றுவோர் ஒன்றை நன்கு புரிந்து கொள்வது நலம்; நம்முடைய இந்தி எதிர்ப்பு, அந்த மொழியின் பால் வெறுப்புக் கொண்டிருப்பதால் ஏற்பட்டதல்ல; இன்றைய ஆட்சி மொழிக் கொள்கையின் காரணமாக இந்தி மொழியினர் அல்லாதார் மொழி ஆதிக்கத்திற்கு ஆட்பட நேரும் என்ற உண்மையான அச்சத்தின் காரணமாக எழுந்த ஒன்றே.
இந்நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாகிய இந்திக்கு அளிக்கப்படும் இடமும் நிலையும் நம் மொழிக்கும் வேண்டுகிறோம். அதேபோல், நடுவண் அரசு மட்டத்தில் நமது மொழிக்கு நாம் கோரும் உரிமையை மற்ற எல்லா மொழிகளுக்கும் அளிக்கப்படுவதை வரவேற்கிறோம். இதுவே மொழிச் சிக்கலைத் தீர்ப்பதற்கான கொள்கை அடிப்படை.

ஆங்கிலம்: ஆங்கிலத்தை மட்டுமே இணைப்பு மொழியாக, நடுவண் அரசின் ஆட்சி மொழியாக வைத்துக் கொண்டால் என்ன? ஆங்கிலம் அந்நிய மொழி எனலாம். ஆனால் இந்தியாவில் ஒரு மொழிப் பிரிவினருக்கு மற்ற மொழிகள் ஆங்கிலத்தை விட அந்நிய மொழிகள் என்பதை ஏற்கனவே கண்டோம். ஆகையால் ஆங்கிலம் வேற்றுமொழி என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வது தெளிவற்ற உணர்வு நிலை (sentimental) நோக்கே அன்றி அறிவின் நோக்கு (objective out look) அன்று.

மேலும், மொழி இரண்டு கூறுகளைக் கொண்டது; ஒன்று, தாய்மொழி என்ற தகுதியால் இயற்கையாக மன மகிழ்வையும், உள அமைதியையும் ஆன்ம வளர்ச்சியையும் கொடுக்கக் கூடிய நிலை. நம்மைப் பொறுத்த-வரை தமிழ் மட்டுமே அத்தகைய பயனைக் கொடுக்க முடியும். மற்ற மொழியினருக்கு அவரவர் மொழி அவ்வண்ணமே இரண்டாவதாக ஒரு கருவி என்ற நிலையில் எண்ணங்களின் பரிமாற்றத்திற்கும், அறிவின் வளர்ச்சிக்கும் மொழியைப் பயன்-படுத்தலாம். இப்படிப்பட்ட பயனுக்குக் கூடத் தாய்மொழியே சாலச் சிறந்தது. அதன் காரணமாகத்தான் உயர்கல்வி வரை தாய்மொழியிலேயே கற்கவேண்டிய நிலை விரைவில் வரவேண்டுமென்று ஏற்கனவே கண்டோம். ஆனால், தேவைப்படும் பொழுதும், வேறு வழியில்லை என்ற நிலையிலும் ஒரு கருவி என்ற அளவிற்கு அந்நிய மொழியைப் பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை; இழுக்கும் அல்ல, மற்ற நாட்டுக் கருவிகளை நாம் பயன்படுத்துவதில்லையா?

இந்திய மொழிகளில் ஒன்றோ அல்லது இரண்டோ பொது மொழியாவதன் மூலம் மற்ற மொழி பேசுவோர் அநீதிக்கு ஆட்படுகின்றனர்; இந்த நிலையில் வேறு வழியின்றி ஆங்கிலத்தை நாம் ஒரு நடுநிலை மொழியாக (Neutral language) ஏற்கவேண்டிய அவசியத்தில் உள்ளோம். அது பொது மொழியாவதன் மூலம் பாரபட்சம் காட்டப்படுவதில்லை; ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதில்லை.
மேலும், அதையேன் முற்றிலும் அந்நிய மொழியெனல் வேண்டும்? நம் நாட்டு மக்களில் ஆங்கிலோ இந்தியர் உண்டு அவர்களின் தாய்மொழி ஆங்கிலம் தானே? இந்திய மொழிகளைக் கூறும் எட்டாவது பட்டியலில் அதையும் தாராளமாகச் சேர்க்கலாம். ஆங்கிலோ இந்தியர் நம்மீது குதிரை ஏறிக்கொள்ள மாட்டார்களா எனலாம். நிச்சயம் முடியாது. அவர்கள் மிகச்சிறிய தொகையினர்; சிதறுண்டு வாழ்வோர், அரசியல், நிருவாகப் பொருளாதாரத் துறைகளில் மொழியின் மூலம், சிதறுண்ட அச்சிறு தொகையினர் ஆதிக்கம் பெற்று விடுவார்கள் என வாதிட்டால் அது சிறுபிள்ளைத்தனமாகும்.

ஆங்கிலத்தை எதிர்ப்பதற்கு இன்னுமொரு காரணத்தைக் கூறுகிறார்கள். அஃது இந்தியாவில் மிகச் சொற்ப மக்களால் மட்டுமே அறியப்பட்ட மொழி; குடியாட்சி அமைப்பில் மக்கள் மொழியாக அதை ஏற்க முடியாது. இந்தி அப்படியல்ல; அது பொதுமக்கள் மொழி; ஆகையால் அதுதான் வேண்டும். யாருக்கு இந்தி “மக்கள்” மொழி? உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப்-பிரதேசம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலத்தாருக்குத் தானே? ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அஃது எந்த மாநிலத்தாருக்கும் “மக்கள்’’ மொழி அல்லவாயினும், எல்லா மாநிலத்தாருக்கும் “கற்றோர்’’ மொழி. ஆகையால் மாநில ஆட்சிக்குத் தாய்மொழியே சிறந்தது; மத்திய ஆட்சிக்கும், இணைப்பிற்கும் ஆங்கிலமே உகந்தது. கல்வி பரவும் பொழுது ஆங்கிலம் அறிந்தோர், அறியாதோர் ஆகியோரிடை வேறுபாடு மறையும். ஆங்கில அறிவு பெறுவதைப் பொறுத்தமட்டில் அனைவருக்கும் சமமான சுமைதான்; ஆனால், இந்திமொழி ஒருவருக்குச் சுமை; மற்றவருக்குச் சலுகை.

‘பார்த்தீர்களா! ஆங்கிலம் சுமை என்பதை நீங்களே ஒத்துக் கொண்டீர்கள் அல்லவா?’ என்பீர். ஆமாம்! சுமை தான். அந்தச் சுமை இந்திய ஒற்றுமைக்கு நாம் கொடுக்க வேண்டிய விலை. ஒற்றுமை வேண்டுவோர் அவ்விலையைக் கொடுத்தே தீர வேண்டும்.

இந்தக் கட்டத்தில் ஒன்றை நினைவு கூர வேண்டும். ஆங்கிலம் ஏன் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்ற அடிப்படைக் காரணத்தைக் கண்டோம். எல்லா மொழி பேசுவோரையும் சமநிலையில் வைக்கும் “நடுநிலை’’ மொழி ஆங்கிலம் என்பது தான் அந்தக் காரணம். அந்த வகையில் நாம் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதால் நமக்கு மற்ற பயன்களும் உள. ஆங்கில வெறுப்புக் கொண்டவர்கள் கூட அகில உலகத் தொடர்பிற்கு அம்மொழி வேண்டும் என்கின்றனர். அஃது ஓர் உலக மொழி. ஆதலால் அஃது உள்நாட்டு இணைப்பு மொழியாகவும், அயல்நாட்டுத் தொடர்பு மொழியாகவும் பயன்படும். ஒரே கல்லில் இரண்டு கனிகள்.

இன்னொரு நன்மையும் உண்டு. இந்திய மொழிகளில் எவையும் இன்றைய நிலையில் ஆங்கிலம் போல் வளர்ந்த மொழிகள் அல்ல. அவை வளர்வதற்குத் துணை தேவை. அந்தத் துணை ஆங்கிலமாகவோ, ஜெர்மனியாகவோ, ஃபிரான்சாகவோ, உருசியனாகவோ இருக்கலாம். ஆனால், இந்தியருக்கு எது இலாபம்? ஆங்கிலம் தானே? வேகமாக முன்னேறி வரும் உலகில் மிக வளர்ந்துள்ள மொழியின் துணையை ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை. சமுதாயத்தின் வளர்ச்சியிலும், நலத்திலும் அக்கறை கொண்டோர் இந்த உண்மையை எளிதில் உணர்வர்.
உள்நாட்டு இணைப்பு மொழியாகவும், அயல்நாட்டுத் தொடர்பு மொழியாகவும், தாய்மொழி வளர்ச்சிக்கும், அறிவுப் பெருக்கத்திற்கும் துணைமொழியாகவும் அமைந்து பெரும்பயன் அளிக்கவல்ல ஆங்கிலத்தின் மேல் சிலருக்கு வெறுப்பும் இன்னும் சிலருக்கு அச்சமும் ஏன்?
கல்வி, நிருவாகம், அரசியல், தொழில், வணிகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை இதுவரை ஆங்கிலம் ஆதிக்கம் பெற்றிருந்த காரணத்தால் – அளவிற்கு மீறிச் செல்வாக்குப் பெற்றிருந்ததால் -அதன் மீது பொதுமக்கள் வெறுப்புக் கொண்டதியற்கை. தாய்மொழி கூட நன்கு கற்றறியாத பாமரற்கு ஆங்கிலத்தின் “பிடி” பெரும் தடையாக அமைந்து விட்டது. இந்த நிலை மாற வேண்டுமென்ற போக்கு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
உயர்மட்டம் வரையில் தாய்மொழியில் அனைத்துப் பாடங்களும் கற்பதற்கான ஏற்பாடு விரைவில் அமைய வேண்டும்.
நிருவாகத் துறையில் மிக உயர்ந்த உத்தியோகங்கள் கூடத் தாய்மொழி மூலம் தேர்வெழுதுவதால் கிட்டக் கூடியனவாக ஏற்பட வேண்டும். அரசியலில் பெரும் பதவிகள் அடையத் தாய்மொழியே போதுமானதாக அமைய வேண்டும். சட்டசபையில் மட்டுமின்றி பாராளுமன்றத்திலும் தாய்மொழியில் பேசச் சிறு தடையும் கூடாது. தொழில் வணிகத்துறைகளிலும் தாய்மொழிக்கே முதலிடம் தரப்படல் வேண்டும். கீழ் மட்டத்திலிருந்து உயர்நீதி மன்றம்வரை நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் குடியரசுக் கோட்பாட்டிற்கு உகந்த வண்ணம் தாய்மொழி மூலம் பொதுமக்களின் சமூகத் தேவைகள் நிறைவு செய்யப்படுமெனின், இணைப்பு மொழியாகவும், அறிவின் வளர்ச்சிக்குத் துணை மொழியாகவும் மட்டுமே உதவ வந்த ஆங்கிலத்தை ஒதுக்கித் தள்ள வேண்டுமென்ற எண்ணம் தோன்றாது.

வசதியுள்ள சிலருக்காக நடத்தப்படும் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளையும்(English Medium Schools) தாய்மொழிப் பள்ளிகளாக மாற்றி, ஆங்கில அறிவுபெறும் வாய்ப்பினை அனைவருக்கும் சமமானதாக்க வேண்டும். பிறமாநிலத்தாருக்கு மட்டும் முக்கிய நகர்களில் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகள் அனுமதிக்கப்படலாம். இதுநாள் வரை, அளவில் மீறிய வகையில் பயன்-படுத்தப்பட்டு ஆதிக்கக் கருவியாக இருந்த அளவில் ஆங்கிலம் வெறுக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்தியாவை ஒன்றாக இணைக்கப் பயன்பட்ட, இந்திய தேசிய இனங்களிடையே மறுமலர்ச்சி ஏற்பட உதவிய ஆங்கிலத்தின் மீது காழ்ப்புக் கொண்டு ஒதுக்குவது தவறான செயலாகும். இனிமேலும் இணைப்பு மொழியாகவும், அறிவின் வளர்ச்சிக்கு துணை மொழியாகவும் பயன்படக் கூடிய ஆங்கிலத்தைப் புறக்கணிக்க முயல்வது மடமை.

இரு மொழியா? – மும்மொழியா?
தமிழகப் பள்ளிகளில் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிகளே போதுமென்ற விழுமிய முடிவை அறிஞர் அண்ணாவின் அமைச்சு 1968இல் எடுத்தது. ஆனால் மய்ய அரசுப் பாடத் திட்டப்படி பள்ளிகளைத் தொடங்கியும் 1976இல் நடந்த நெருக்கடி நிலை ஆட்சியில் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கல்வித் துறையை மாற்றியும், 1986இல் புதிய கல்வித் திட்டத்தை நுழைத்தும், மும்மொழித் திட்டத்தின் பெயரால் பள்ளிகளில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் நஞ்சனைய வஞ்சக நடப்பை டெல்லி அரசு மேற்கொள்வது மக்கள் நலனை மதியாத அதன் ஏகாதிபத்தியப் போக்கையே காட்டுகிறது.
ஊராட்சி மன்றத்திலிருந்து பாராளுமன்றம் வரை ஒரு மொழியே போதும் என்பது இந்திக்காரருக்குச் சட்டம்; ஆனால் மற்றவருக்கு மும்மொழித்திட்டம். நியாயம், குடியரசு என்பவை டெல்லி ஆதிக்கத்தில் மிதிபட்டு நசுங்குகின்றன!
மாநில மொழி, ஆங்கிலம் என இரண்டைக் கொண்டு ஊரோடும் உலகோடும் உறவாட முடியும். மேற்கொண்டு இன்னொரு மொழியைக் கல்விக் கூடங்களில் நுழைப்பது பாமர மக்களையும் படிக்கும் சிறார்களையும் வாட்டியெடுக்கும் கொடுமையே!