கட்டுரை : பெயருக்கு வைப்பதல்ல பெயர்!

2022 கட்டுரைகள் நவம்பர் 1-15 2022

வி.சி.வில்வம்

“உன் நண்பர் யாரென்று சொல்; நீ யாரென்று கூறுகிறேன்!” என்கிறது ஒரு பொன்மொழி!
அதுபோலவே ஒரு மனிதரின் பெயரை வைத்தே அவர்தம் பெற்றோரின் சுயமரியாதை உணர்ச்சியை, பகுத்தறிவுச் சிந்தனையை அறியமுடியும்!
நல்ல பெயரை, நம் மொழியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திராவிடர் இயக்கம் பெரும் முயற்சி கொண்டு, வெற்றியும் கண்டது!
நாம் விரும்பிய பெயரை நாம் வைத்துக் கொள்ள முடியாதா? இதற்கும் திராவிடர் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பார்கள்?
பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றார், அவருக்கும் மொழிக்கும் என்ன தொடர்பு என்றும் கேட்பார்கள்.

தமிழர்கள் அழகான பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கும் மனுதர்மத்தில் ஒரு “ஸ்லோகம்” இருக்கிறது! எப்படி “சூத்திரன்” எனும் “ஸ்லோகம்” தமிழர்களை இழிவு செய்கிறதோ அப்படி!
இந்த ஆரிய தர்மத்தை எதிர்த்து தான் திராவிடர் இயக்கம் போராடிக் கொண்டே வருகிறது! பெரியார் என்ன செய்தார்? திராவிடர் இயக்கம் என்ன செய்தது? எனக் கேட்கும் வாய்கள், உண்மையிலேயே மனுதர்மத்தில் இப்படி இருக்கிறதா எனத் தேடிப் படிக்க மாட்டார்கள்!
ஆரிய சூழ்ச்சியால் தமிழர்களிடம் ஜாதியப் படிநிலை வந்தது. அந்தவாறே பெயர்களிலும் ஏற்றத் தாழ்வுகளும் இருந்தன.
முத்தன், காளி, நொண்டி, குப்பன், கருப்பன், பாவாடை, மண்ணாங்கட்டி என்பவை கீழ் படியாகவும், வேலுச்சாமி, முத்தையா, சுப்பிரமணி என்பவை இடைநிலைப் படியாகவும், இராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, அனந்த கிருஷ்ணன் போன்றவை முதல் படியாகவும் கட்டமைக்கப்பட்டன.

இந்நிலையில் தான்? பெயர் வைப்பதையே ஒரு பிரச்சார முறையாக மாற்றியமைத்தது திராவிடர் இயக்கம்!
குழந்தைகளுக்குப் பெயர் வைக்க பெரியாரிடம் கேட்ட போது தமிழ்நாட்டின் நலன்களுக்காகவே வாழ்ந்த சவுந்தரபாண்டியன், பன்னீர்செல்வம், காமராசர் போன்ற தலைவர்களின் பெயர்களைச் சூட்டினார்.
அதேநேரம் புகழ்பெற்ற (?) கடவுள்கள் வாழும் திருப்பதி, திருவண்ணாமலை, சிதம்பரம், பழனி போன்ற “ஊர்களின்” பெயர்களைத் தம் குழந்தைகளுக்கு வைப்பதைத் தமிழ்நாடு தம் வழக்கமாக வைத்திருந்தது!
இந்நிலையில் தான் மாஸ்கோ, லண்டன், ரஷ்யா எனச் சுயமரியாதையும், சமதர்மமும் கொண்ட நாடுகளின் பெயர்களைப் பிள்ளை-களுக்குச் சூட்டினார் பெரியார்! இதன் தொடர்ச்சியாகத் திராவிடர் கழகத் தோழர்-களின் இரண்டு வீடுகளில் “கியூபா” எனும் பெயரும் வந்துள்ளது!
இரண்டு தினங்களுக்கு முன் சந்தித்த ஒரு நண்பரின் பெயரைக் கேட்டதும் வியந்து போனேன்.

ஆம்! அவர் பெயர் “துணிவு”
எத்தனை எத்தனை பெயர்களைத் திராவிடர் இயக்கம் உருவாக்கி இருக்கிறது? என்பதற்கு இதுவும் ஒரு சான்று! வரலாறு படிப்பவர்கள் இந்த மாற்றங்களை உணர்வர்!
இந்தப் புரட்சிகள் அனைத்தையும் செய்தது திராவிடர் இயக்கம் தான்! வேறெந்த தமிழ்த் தேசியவாதிகளும் கிள்ளிப் போடவில்லை. தமிழ்த் தேசியம் என்பதற்கு முன் “போலி” என்பதை இணைத்துக் கொள்ளவும். ஏனெனில் எப்போதுமே தமிழ்த் தேசியம் இரண்டு வைக்கப்படும். ஒன்று திராவிடத் தமிழ்த் தேசியம்! மற்றொன்று அக்கிரஹார அல்லது ஆரியத் தமிழ்த் தேசியம்.
சில ஆண்டுகளுக்கு முன் முனைவர் திருமாவளவன் அவர்கள் கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களின் பெயர்-களைத் தமிழ்ப்படுத்தி பெரும் மாற்றத்தை உருவாக்கினார்.

இப்படியான சூழலில்தான் அன்றைக்கு நான் சந்தித்த அந்த நண்பரின் பெயர் “துணிவு.”
“அன்பு’’, “கருணை’’ என்ற பெயர்களைப் போல “துணிவு’’ என்ற பெயர் என்னைப் பெரிதும் ஈர்த்தது. இன்று நமக்கு கட்டாயத் தேவை துணிவு.
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” எனக் கூறிக் கொண்டே அக்கிரகார வாசலில் நிற்பது சிறுமை!
தமிழன் என்று தலைநிமிர்ந்து துணிவுடன் நிற்க வேண்டும். பெயர்கள் நல்ல தமிழில், நம் இலக்கு, கொள்கைக்கு ஏற்ப இருப்பது மிக்க சிறப்பு. திராவிடர் கழகச் சார்பில் “தமிழில் பெயரிடுவோம்’’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. மலேசிய தோழர் நாரண திருவிடச்செல்வன் அவர்களால் எழுதப்பட்டது. அந்த நூலைப் பின்பற்றியும் பெயர் வைக்கலாம்!
அதை எதிர்த்து நிற்பதே தமிழ்ப் பெருமை!ஸீ