தலையங்கம்: நியாயப்படுத்தக் கூடியவையா இராமன் நடத்தைகள்?

2022 தலையங்கம் நவம்பர் 1-15 2022

அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில், தனி டிரஸ்ட் அமைத்து அதற்காகவே வசூலித்து, பிரதமர் மோடி அதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை சென்ற ஆண்டு நடத்தினார்; அரசாங்கத்தின் அத்தனை தலைமைகளும் கலந்துகொண்டு, அரசியல் சட்டத்தின் மீது எடுத்த பிரமாண உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டனர்!
பலவிதமான ஹிந்து மத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மதச் சார்பின்மை என்ற கொள்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆக்கிவிட்டனர்! இது ஒரு புறம் இருக்க, இராமர் கோயில் நிகழ்ச்சியில் 17 லட்சம் விளக்குகள் கொளுத்தும் நிகழ்ச்சி என்ற ஒன்றுக்குப் பிரதமர் மோடி சென்றதோடு, இராமர் எல்லா வகையிலும் வழிகாட்டியாக, லட்சண புருஷராக இருப்பார் என்றும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்பதுபோலவும் பேசியுள்ளார்.

இராமனை ‘புருஷ உத்தமன்’ என்ற துளசிதாஸ் இராமாயணம் மூலம் புகழுரைகளைக் குவித்தார்கள்.
இப்படி ஒரு தொடர் பிரச்சாரம் பல ஆண்டு காலமாய் நடத்தப்பட்டு வருகிறது.
மூல நூலான வால்மீகி இராமாயணப்படி, இராமன் ஒரு மனிதனாகத்தான் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளான்.
பின்னால் அவன் அவதார புருஷனாக்கப்பட்டான். மரியாதை இராமனாக்கப்பட்டான்.

இராம ராஜ்யம் நடத்தினால் அது உத்தம ராஜ்யம் என்றும் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டாலும், இராமாயணக் கதையின் பல காண்டங்களில் இறுதிக் காண்டமான உத்தர காண்டத்தை கம்பர் அறவே மறைத்து, கைவிட்டார் -_ அதன் பலவீனத்தை அறிந்த காரணத்தால்!
இராமனை ஆரியப் பார்ப்பனர்கள் இவ்வளவு சிலாகிப்-பதற்கு முக்கியக் காரணம்,
மனுதர்ம நெறிப்படி, இராமன் பிராமணர்களையே வணங்கச் செய்தான். சிவன், விஷ்ணு, பிரம்மா முதலியவர்கள்கூட பிராமணர்களைத்தான் வணங்கினர்; என்று துளசிதாஸ் இராமாயணம், கம்ப இராமாயணம் முதலியவற்றில் துவக்கத்திலேயே கூறி, ஆரியப் பார்ப்பனர்-களைப் பெருமைப்படுத்தியதே முக்கிய மூல காரணம்.

இரண்டாவது, ‘இராம ராஜ்யத்தில்’ கடவுளை நேரில் காண விரும்பி, ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தவம் செய்த சம்பூகன் என்ற சூத்திரனின் தவத்தினால் தர்மம் கெட்டு-விட்டது; அதனால்தான் என் மகன் செத்தான் என்று ஒரு ‘பிராமணன்’ ராமனிடத்தில் முறையிட, அதைக் கேட்ட இராமன் நேரே, எவ்வித விசாரணையும் நடத்தாமல் அவன் தலையை, உடலை தனது வாளால் வெட்டினான் என்றும் கூறியுள்ளது.

1. ஞானியானாலும், மூடனானாலும், சூத்திரன் ஒருபோதும் கடவுளை நேரடியாக வணங்கக் கூடாது. பிராமணனே அவனுக்கு மேலான தெய்வம்’ என்ற மனு தர்மர்த்திற்கு விரோதம் என்பதால் இப்படி ஒரு கொடுமை நடந்தது.இது நடந்ததா _ இல்லையா _ கற்பனையா என்பதைவிட, இதன் தத்துவம் சூத்திரன் கீழ்ஜாதியைச் சேர்ந்தவன்; கடவுளை நேரடியாகக் கும்பிட்டால் அவன் மனு தர்மத்தின் விரோதி. ஆகவே, கொல்லவும் செய்யலாம் என்பதுதானே! மறுக்க முடியுமா?

2. இராமன் தன் மனைவியை மீட்ட பிறகு எப்படி நடந்து கொண்டதாகக் கதை கூறுகிறது?
இராமன் சீதைக்கு ‘அக்னி பரிட்சை’ வைத்தான் என்பதைத்தானே கூறுகிறது! இராவணனுடன் அசோகவனத்தில் இருந்த சீதையின் மீது கடவுள் அவதாரமான இராமனுக்குச் சந்தேகம் ஏற்படலாமா?
இன்றைக்கு இப்படி தீக்குளித்தால் சட்டமும் சமுதாயமும், மகளிர் உலகம் ஏற்குமா? அனுமதிக்குமா?
அது மட்டுமா? நிறைமாத கர்ப்பிணி சீதையைக் காட்டிற்கு அனுப்பிய இராமனின் செய்கை, (இந்திய குற்றவியல் தண்டனைப்படி குற்றம் என்பது ஒருபுறமிருக்கட்டும்) மனிதாபிமானம் மிக்கதா?

3. வாலியை மரத்திற்குப் பின்னால் மறைந்து இருந்து அம்பு விட்டுக் கொன்றான் இராமன் என்பதுதான் அவனது வீரத்திற்குச் சான்றா?
ஆச்சாரியார் அவர்கள் எழுதிய ‘சக்ரவர்த்தித் திருமகன்’ இராமாயணக் கதையில்கூட அவர் அந்த சம்பவத்தை நியாயப்-படுத்த முடியாமல் விட்டு, “பகவான் என்னை மன்னிப்பாராக!’’ என்று எழுதியுள்ளதற்கு இராமாயண பக்தர்களின் பதில் என்ன?
இப்படி எத்தனையோ கூற முடியும். இந்த அம்சங்கள் மனிதர்கள் பின்பற்றத்தக்க அம்சங்களா? குணங்களா? பண்புகளா?
நாட்டில் இத்தகைய குணங்கள் பரவினால் சமூக வாழ்வு மேம்படுமா?
விருப்பு வெறுப்பின்றிச் சிந்தித்துப் பாருங்கள்!
– கி.வீரமணி
ஆசிரியர்