கட்டுரை : சனாதன எதிர்ப்பில் சமரசமில்லாப் போராளி!

2022 கட்டுரைகள் நவம்பர் 1-15 2022

மல்லிகார்ஜீன கார்கே!
வை.கலையரசன்

ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் காலியாகவே இருந்த தலைவர் பதவிக்கு அண்மையில் மல்லிகார்ஜுன கார்கே தேர்த்தெடுக்கப்பட்டுள்ளார்.
சனாதன எதிர்ப்பில் சமரசமில்லாப் போராளி இவர்!
இந்தியாவின் கருநாடகா -ஹைதராபாத் பகுதியில் இருந்த வரவட்டி கிராமத்தில் ஜூலை 21, 1942ஆ-ம் ஆண்டு மல்லிகார்ஜுன கார்கே பிறந்தார்.
1940களின் இறுதியில் அப்போதைய கருநாடகா ஹைதராபாத் பகுதியில் உள்ள பிதார் மாவட்டத்தில் உள்ள வரவட்டி சுற்றுவட்டாரத்தில் மதக்கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் தனது தாயை இழந்த 7 வயது சிறுவனாக இருந்த கார்கே அங்கிருந்து தனது குடும்பத்துடன் சேர்ந்து அருகில் உள்ள தற்போதைய கல்புர்கி பகுதிக்குப் புலம்பெயர்ந்தார்.
தாயைத் தட்டிப்பறித்த அந்த மதக்கலவரம், கார்கே அவர்களின் உள்ளத்தில் ஆழமான காயங்களை உருவாக்கியது. அதன் பிறகு மதவாதம் குறித்த அவரது சிந்தனை முழுக்க மாறிப்போனது. எதிர்காலத்தில் இந்து சனாதனத்தைத் துறந்து புத்த மதத்தை தழுவி அம்பேத்கரின் தீவிர ஆதரவாளராக மாறிப்போனார்.

படிக்கும் காலத்திலிருந்தே கார்கேவுக்கு அரசியலின் மீது ஒரு அதீத ஆர்வம் இருந்தது. இதனால் தனது கல்லூரிப் பருவத்தின்போது கல்புர்கி அரசுக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டார்.
பின்னர் சங்கர்லால் லஹோதி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை மேற்கொண்ட கார்கே, குடும்பச் சுமையைச் சமாளிக்க திரையரங்கில் பணியாற்றினார். அதன்பின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்த சிவராஜ் பட்டீலின் ஜூனியராக இணைந்தார் கார்கே. இந்த சிவராஜ் பட்டீல்தான் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி வரை உயர்ந்தவர்.
இவர் கடந்த 1972 முதல் 2008 வரை கருநாடகத்தில் நடந்த 9 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டி-யிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009 நாடாளு-மன்றத் தேர்தலில் கல்புர்கியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.
10 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதற்குப் பலனாக அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்-துறை மற்றும் ரயில்வே துறைகளில் ஒன்றிய அமைச்சராகச் செயல்பட்டார். அதன்பிறகு 2014இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2019இல் நடந்த தேர்தலில் கல்புர்கி நாடாளுமன்றத் தொகுதியில் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி-யடைந்தார்.

இருப்பினும் அவரது அரசியல் அனுபவத்துக்காக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்-பட்டது. தற்போது கருநாடகத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்-தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே தற்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இதுதவிர மல்லிகார்ஜுன கார்கே கருநாடகத்தில் அமைச்சராகவும், கருநாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் கடந்த 11 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்ந்து பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தீவிர காங்கிரஸ் தொண்டராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருக்காக நடந்த தேர்தலில் வெற்றிபெற்று தலைவராகப் பதவி ஏற்கவுள்ளார்.

இது பாராட்டத்தக்கதாகும். சமூக நீதியில் அக்கறை உள்ள அனைவரின் வாழ்த்துகளும் அவருக்கு உறுதியாக உண்டு.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன், வலதுசாரிகள் இந்தியாவில் பணம் கொடுத்து ஆசைகாட்டி ஹிந்துகள் மதமாற்றம் செய்யப்பட்டனர். எனவே, அவர்கள் தாய்மதம் திரும்ப வேண்டும் என்றனர். அப்போது மைசூரில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கார்கே, “இந்து மதத்தில் 2000க்கு மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. அவர்களை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்?’’ என்றார்.
இன்னும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாடாளுமன்ற விவாதத்தில் மல்லிகார்ஜுன கார்கே ஆற்றிய ஓர் உரை போதுமானது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான், இந்தியாவில் அதிகரித்து வரும் மத மோதல்-களுக்கு கவலை தெரிவித்து மனைவியுடன் வேறு நாட்டில் குடியேற நினைப்பதாக ஒரு பதிவைப் போட்டார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “எவ்வளவு ஒடுக்குமுறையைச் சந்தித்தாலும் டாக்டர் அம்பேத்கர் இந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கவில்லை’’ என்றார். அப்போது மல்லிகார்ஜுன கார்கே கொடுத்த பதிலடியிது. “நீங்கள், ஆரியர்கள்; வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள். நாங்கள், 5,000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும், தொடர்ந்து இங்கு தான் வசிக்கிறோம்; இனியும் இங்கு தான் வசிப்போம்?’’ என்று கர்ச்சனை செய்தார் (27.11.2015).
அவரை இனவெறி பிடித்தவர் என்று வலதுசாரிகள் கூறினாலும் அது பற்றிக் கவலைப்படாதவர்.
அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்தச் சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை அம்பேத்கரின், 125ஆம் பிறந்த நாள் போன்றவற்றைக் கொண்டாடும் விதமாக, மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள்களும் விவாதம் நடத்த, ஒன்றிய அரசு திட்டமிட்டு இருந்தது.

மக்களவையில் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் அம்பேத்கர் குறித்த சிறப்பு விவாதம் துவங்கியது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு பின், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: “அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்ட நேரத்தில், ‘சமதர்மம், மதச்சார்பின்மை’ என்ற வார்த்தைகளே கிடையாது. ஆனால், 42ஆவது திருத்தமாக, அவை சேர்க்கப்பட்டன. அம்பேத்கருக்கே தோன்றாத இந்த வார்த்தை-கள், அரசியல் காரணங்களுக்காகப் புகுத்தப்-பட்டன. “மதச்சார்பின்மை என்ற வார்த்தையே ஒழிக்கப்பட வேண்டும்; அம்பேத்கரின் சிந்தையில் உதித்ததுதான், கூட்டாட்சி தத்துவம்; அதை முழுமையாகப் பின்பற்றுகிறது மோடி அரசு.’’

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்-தான் மக்களவைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்ச்சனை செய்தார். “சமதர்மம், மதச்சார்பின்மை’ என்ற வார்த்தைகளைச் அம்பேத்கர் சேர்க்க நினைத்தார். ஆனால், அதை ஏற்கவில்லை, கடுமையாக எதிர்த்தார்கள். பாடத் திட்டம் மாற்றப்பட்டது குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதும் குறிப்பிடத்தக்கது.
“ஹெட்கேவாரின் 1921 உரையைக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று பிஜேபியினர் விரும்புகிறார்கள். நாட்டின் விடுதலைப் போரில் ஹெட்கேவாரின் பங்களிப்பு என்ன? பாடங்களில் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தைச் சேர்த்து பகத்சிங், நேரு மற்றும் காந்தி ஆகியோரை ஒவ்வொன்றாக அகற்ற முயல்-கிறார்கள். இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்” என்று சாட்டையடி கொடுத்தார் (3.6.2022).
இந்தியாவின் சமூக நச்சு அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பற்றிய புரிதல் உள்ள தலைவர் சரியான ஒரு நேரத்தில் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பொருத்தமானதேயாகும். ஸீ