எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (109): வேத காலத்தில் ஜாதியம் இருந்ததா?

2022 அக்டோபர் 16-30 2022 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை

நேயன்


வேத கால வர்ண அமைப்பு எத்தகையதாக இருந்தது? இவற்றை முழுமையாக அறிந்து-கொள்ள வேத சமுதாயத்தை மட்டும் தனியாகப் பார்க்காமல், பொதுவாக மானுடச் சமுதாயங்களில் சமூகப் படிநிலைகள் எப்படி உருவாகின்றன என்று கவனிக்க வேண்டும். அத்துடன் அத்தகைய படிநிலைகளில் பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அவற்றை மதநூல்கள் அங்கீகரிக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்’’ என்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.

வேதத்தில் வருணம் இருந்ததா? ஜாதி இருந்ததா? என்றால், வேதத்தை முழுமையாகப் படித்து ஆய்வு செய்து, இருந்தால் இருக்கிறது என்றும்; இல்லையென்றால் இல்லை என்றும் கூறவேண்டும். அதுதான் அறிவு நாணயத்திற்கும், ஆய்விற்கும் அழகு. ஆனால், அப்படி நேரடியாகப் பதில் கூறாமல், மேலை நாடுகளைப் பாருங்கள்; அங்கு இந்த வேறுபாடு இருந்ததா-? என்று சுற்றி வளைத்துக் கருத்துக் கூற முற்படுகிறார்.
மேற்கத்திய நாடுகளில், பிறப்பு அடிப்படையிலான சமூக அமைப்பு இருந்தது. அதற்கு, மதப் பீடங்களின் ஆதரவும் இருந்தது. இந்தியாவில், தீண்டாமை ஏற்படுவதற்கு முன்னரேகூட, மேற்கத்திய சமுதாயத்தில் அது பரவலாக இருந்தது என நம்ப இடமிருக்கிறது. வரலாற்றாசிரியர் கேட்டி ஸ்டூவர்ட் என்பவர் சொல்கிறார்.’

‘புனித ரோமானியப் பேரரசு முழுவதும், ‘கீழான தொழில்’ செய்தோரை ‘மேலான தொழில்’ செய்தோர் பல்வேறு விதமான சமூகப் பொருளாதார, சட்டபூர்வமான அரசியல் ரீதியான பாரபட்சங்களுக்கு ஆளாக்கினார்கள். இந்தப் பாரபட்சங்களில் (கீழ் நோக்கிச் செல்லச் செல்ல), அவமானப்படுத்துதலும் இருந்தது. இந்தத் தொழில் செய்யும் Guild எனப்படுபவை, 19-ஆம் நூற்றாண்டு வரைக்கும் அய்ரேப்பாவில் பிறப்பு அடிப்படையிலானவை என்பதை நாம் இங்குக் கவனிக்க வேண்டும்.

இந்திய வர்ணம், நான்கு பிரிவுகளைக் கொண்டது. ஆனால், மேற்கத்திய சமூகப் பார்வை, ஏழு பிரிவுகளைக் கொண்டது. இந்த ஏழு பிரிவுகளையும், சமுதாயத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக ஆண்டவர் உருவாக்கினார் என்றும், அவை ஏழு உலகங்களை ஒன்றன்கீழ் ஒன்றாக உருவாக்கியதை ஒத்த ஒரு மாறாத அமைப்பு என்றும், மேற்கத்திய மத்திய கால இறையியலில் நம்பப்பட்டது. மேலும், மேற்கத்திய சமூக அமைப்பு, இன்றைக்கும் ஒரு ‘பிரமிடு’ பார்வை கொண்டது. பிரமிடின் அடி மேடை அகன்று பெரிதாக இருக்கும். உச்சிக் கூம்பு சிறிதாக இருக்கும். மேற்கத்திய சமுதாயத்தின் மேல் உச்சியில், எப்போதும் சிறுபான்மையினரே இருப்பார்கள். பெரும்பான்மை மக்கள், அதிகாரமும் வளமும் இல்லாமல், எப்போதும் அடிப்பாகங்களிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த வரலாற்றுப் பாடப் புத்தகத்திலும் காட்டப்படும் ஒரு சித்திரம் இது. இதுதான், அய்ரோப்பியா கண்ட ஆதர்ச சமுதாயப் பார்வை.

ஆனால், இந்திய சமுதாயப் பார்வை வேறுவிதமானது. நான்கு வர்ணங்களும் பிரமிடுகள் அல்ல. மாறாக, சமுதாயம் எனும் அதிஉயிரியின் உடல் பாகங்கள். இது, பெரிய அளவில் அடுக்குமுறைப் பார்வையை அழித்துவிடுகிறது. புருஷ சூக்தம் குறித்து அத்தியாயத்தில் இதை விளக்கமாகக் காணலாம். மற்றொரு பார்வையாக, இந்தியப் பாரம்பரியம் முன்வைப்பது, பேராழி வட்டங்கள் எனப்படும் Oceanic Circles இப்பார்வையை, பாரதப் பாரம்பரியத்தில் இருந்து எடுத்து, மேற்கத்திய சமூகப் பார்வைக்கு மாற்றாக முன்வைத்தவர், மகாத்மா காந்தியே ஆவார். அவரது வார்த்தைகளில்,
இந்த அமைப்பில், எண்ணற்ற கிராமங்கள் உண்டு. அக்கிராமங்களின் சமூக அமைப்பு என்றென்றும் விரியும். ஆனால் எப்போதும் உயராத வட்டங்களினால் (ever-widening, never acending circles) ஆனதாகும். வாழ்க்கை என்பது பிரமிடாக, அதன் சிறிய உச்சி, அதன் அடிப்பாகத்தால் தூக்கி நிறுத்தப்படும் தன்மை கொண்டதாக அமையாது. மாறாக, அது ஓர் ஆழிவட்டமாக அமையும். அதன் மய்யத்தில், தனிமனிதன் இருப்பான். அவனைச் சுற்றி, கிராமம். கிராமத்துக்காகத் தன்னைக் கொடுக்கும் தனிமனிதன். கிராமங்களால் உருவான ஆரத்துக்காகத் தன்னைக் கொடுக்கும் கிராமம். இறுதியில், இவை அனைத்துமாக ஓருயிராக இயங்கும். அந்த இயக்கம், கர்வமோ தீவிரமோ கொண்டதல்ல. பணிவாக, பேராழி வட்டங்களின் ஒருங்கிணைந்த உறுப்புகள் எனும் மகோன்னதத்துடன் அவை இயங்கும். (ஹரிஜன், 28.7.1946)
மகாத்மா காந்தி முன்வைக்கும் இந்த ஆதர்ச பார்வை, வேத சமுதாயச் சிந்தனையில் இருந்தே உருவானது. இதை எப்படித் தெரிந்துகொள்வது? வேதங்களின் பெயரால் பின்னர் எழுந்த ஸ்மிருதிகளாலும், சமுதாயத் தேக்க நிலையாலும் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு மனிதர், இந்தியச் சமூக வரலாற்றின் மிகச்சிறந்த மேதை என்றே கருதப்படத்தக்கவர், சமூக நீதிக்காகப் போராடியவர், இந்து சமுதாயத்தின் மீதும், ஜாதியக் கோட்பாடுகளின் மீதும் மிகக்கடுமையான விமரிசனங்களை வைத்தவர், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரதம சிற்பி, பாபாசாஹேப் அம்பேத்கரின் எழுத்துகளில் இருந்து அதை நாம் ஆரம்பிக்கலாம்’’ என்று எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். எனவே, அம்பேத்கர் இதுபற்றி என்ன கூறுகிறார் என்று முதலில் பார்ப்போம்.

சூத்திரர்களின் மரபு மூலம் குறித்து மேலைய எழுத்தாளர்கள் ஒரு திட்டவட்டமான கோட்பாட்டைக் கொண்டுள்ளனர். இந்தக் கோட்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர்கள் அனைவரும் உடன்பாடான கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும் சில விஷயங்களில் அவர்களிடம் ஓரளவு ஒற்றுமை காணப்படுகிறது. அத்தகைய விஷயங்கள் வருமாறு:
1) வேத இலக்கியத்தை, வேத நூல்களைத் தோற்றுவித்த மக்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.
2) ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்து இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள்.
3) இந்தியாவின் பூர்வீக மக்கள் தாசர்கள் மற்றும் தசியுக்கள் எனப்படுபவர்கள்; இவர்கள் இனவழியில் ஆரியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.
4) ஆரியர்கள் வெள்ளை இனத்தினர். தாசர்களும் தசியுக்களும் கறுப்பு இனத்தினர்.
5) ஆரியர்கள் தாசர்களையும் தசியுக்களையும் வெற்றி கண்டனர்.
6) தாசர்களும் தசியுக்களும் ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு, அடிமைகளாக்கப் பட்ட பிறகு சூத்திரர்கள் என அழைக்கப்-பட்டனர்.
7) ஆரியர்கள் நிறப் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்தனர்; எனவே சதுர்வருண அமைப்புமுறையை உருவாக்கினர்; இதன்மூலம் வெள்ளை இனத்தினரைத் தாசர்கள், தசியுக்கள் போன்ற கருப்பு இனத்தினரிடமிருந்து பிரித்தனர்.
இவைதாம் இந்தோ-ஆரிய சமுதாயத்தில் சூத்திரர்களின் மரபுமூலத்தையும் நிலையையும் குறித்து மேலைய கோட்பாட்டில் அடங்கியுள்ள பிரதான அம்சங்களாகும்.

பிராமணியக் கோட்பாடுகளைப் பொறுத்த-வரையில் மதிகேடான ஒரு மனத்திலிருந்து உதித்த பொருளற்ற, விவேகமற்ற உணர்ச்சி கொந்தளிப்புகள் என்று கூறுவதைத் தவிர, அவை குறித்து வேறு எதுவும் சொல்வ-திற்கில்லை. இந்தக் கோட்பாடுகள் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகின்றன. நவீன கோட்பாட்டைப் பொறுத்தவரையில், தவறிப்-போன வழியைக் கண்டுபிடிக்கவாவது குறைந்த-பட்சம் அது உதவுகிறது.
இந்தக் கோட்பாட்டின் தகைமையைச் சோதிப்பதற்கு அதனைப் பகுதி பகுதியாகப் பரிசீலிப்பதும், ஒவ்வொரு பகுதியும் எந்த அளவுக்குச் சான்றை ஆதாராமாகக் கொண்டிருக்கிறது என்பதைக் காண்பதுமே மிகச் சிறந்த வழியாகும்’’ என்கிறார் அம்பேத்கர்.
(டாக்டர் அம்பேத்கர்,
நூல் தொகுப்பு -13, பக்கம் 95, 96)