கட்டுரை : ஆண்டது தமிழர் – ஆட்சிமுறை ஆரியம்!

2022 அக்டோபர் 16-30 2022 கட்டுரைகள்

அறிஞர் அண்ணா


ஓடம் பெரிது, ஓட்டை சிறிது, என்றாலும், சிறியதோர் துளையிலே ஆற்றுநீர் புகுந்து, பின்னர் ஓடத்தையே அமிழ்த்திவிடுமன்றோ! அதுபோல், செல்வமும் செல்வாக்கும் சிறக்க வாழ்ந்த தமிழ் மன்னர்கள், சிறுசிறு தானங்கள் தந்தார்களே ஆரியருக்கு, அதன் விளைவு, மண்டலங்களை மண்மேடாக்கிவிட்டது. இதனைத் தெரிந்துகொண்டால், இன்று, “இது என்ன, பெரிய பிரச்சினையா?” என்று அன்பர் சிலர் பேசவும் மாட்டார்கள்.
தமிழகத்தின் தாழ்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிகோலியதே, பிராமணருக்குத் தானம் தருவது, அவர்களுக்குச் சலுகை காட்டுவது, அவர்களுக்கு வசதிகள் செய்து தருவது, என்ற போக்கை மனனர்களும், பூமான்களும் கொண்ட நிலைதான். இந்த நம் வாதத்திற்கு, ஆதாரம் ஏராளம்.
இதோ கேளீர் _ தமிழர், பூதேவருக்குத் தானமளித்த வரலாற்றினை! பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்களும்? விஜயநகர வேந்தரும், கிராமங்கள் பலவற்றை விலைக்கு வாங்கி பிராமணர்களுக்குத் தானமாகத் தந்தனர்.

இருப்பிடம் என்பதைக் குறிக்க, இத்தகைய தானப் பிரதேசங்கட்குச் சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடப்பட்டது. அக்ரகாரம், பிரம்மதேசம், பிரம்ம மங்கலம் என்ற வேறு பல பெயர்களும் மேற்படி கிராமங்களுக்கு உண்டு.
தஞ்சைக் கோயில் தெற்குப் பிரகாரச் சுவரிலே காணப்படும் சாசனம்.
சுங்கந்தவிர்த்த சோழநல்லூர், 108 பிரிவுகளாக்கப்பட்டது, 106 பிரிவுகள், பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்டது. இந்தத் தானம், சமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்திலுள்ள பிராமணர்களுக்குத் தரப்பட்டது.
2 பாகங்கள், கிராமக் கோவிலுக்கு மான்யமாக்கப்பட்டது.

ராஜசிகாமணிநல்லூர் எனும் கிராமத்திலே 117 3/4 வேலி நிலம் வாங்கப்பட்டு அந்த 108 பிராமண குடும்ப சம்ராட்சணார்த்தத்துக்காகத் தானமாகத் தரப்பட்டது -_என்ற தகவல் கூறும் மற்றோர் சாசனம் ஆராய்ச்சியாளரால் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
இது திருவாலங்காடு சிலாசாசனத் தொகுப்பிலுள்ளது.
இந்த சதுர்வேதி மங்கலம் எனப்படும் அக்கிரகாரத்தில் சுயாட்சியுடன் பிராமணர்கள் இருக்க அனுமதிக்கப்பட்டது. இக்கிராமங்களில், நிலத்துக்குப் பார்ப்பனர் மிராசுபாத்யதை யுடையோராகவும் “சூத்ரர்’’ வேலை செய்து ஜீவிப்போராகவும் இருந்தனர். ஊர்ப் பரிபாலனம், பிராமணரிடம் இருந்தது. ஆக, தமிழரின் சொத்து, மன்னர்களின் பக்தி எனும் பித்தத்தின் விளைவாகப் பார்ப்பனரிடம் போய்ச் சேர்ந்ததுடன், நாடாண்ட தமிழர்கள் நாய்போல் கிடக்கவும், இடந்தேடித் திரிந்த இனம் ஏடா! வாடா! போடா! எனவும்,
மனையை இழந்ததுடன், மானத்தையும் மறத்தமிழர் இழக்கும்படி நேரிட்டது.

மன்னர்களின் பக்தியின் விளைவு இது!
கடாக் (Gadag) என்ற ஜில்லாவை, ஹரிஹரா என்ற ஆட்சியாளன் 66 கிராமங்களாக வகுத்தது,
இந்தத் தகவல் தாம்பல் சாசனத் தொகுதியில் காணப்படுகிறது. ஆண்டவனையும், ஆரியனையும், ஒரே நிலையாக்கின அரசனின் அறிவே நம்மவரை இக்கதிக்குக் கொண்டுவந்து விட்டது.
இந்தப் போக்கு வந்த காரணம் என்ன? பார்ப்பனர் மெள்ள மெள்ளத் தமது கற்பனையை, புராண இதிகாசம். ஸ்மிருதி சாஸ்திரம் என்ற பல்வேறு பெயர்களால் புகுத்தியதுதான். அதை கர்ணாமிருதமாக இருக்கிறதென்று கேட்ட ‘கலாசிகர்கள்’ காட்டிய வழியே இன்று நாட்டினரை இந்நிலைக்குச் சேர்ந்திருக்கிறது. அக்கிரகாரம் அமைத்துத் தருவது புண்யகாரியமென்றும், மன்னர்கள் அதனைச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும், மீதாக்ஷரம் எனும் வடமொழிச் சட்டம் கூறுகிறது.

அந்த மன்னர்கள் மாண்டார்கள், ஆனால் அவர்கள் காலத்திலே ஏற்பட்ட அநீதி இன்னும் மாளவில்லை.
அவர்களுக்குத் தமிழகம்தாய் நாடல்ல-வாகையால், எங்கும் போய்த் தங்க மனம் இடங்கொடுத்தது என்பதையும், அவர்கள் ஒரு நாடோடி இனம் என்பதையும் காட்டுகிறது.
பெல்லாரி ஜில்லாவில் திருகுண்டா என்ற கிராமத்தில் முந்நூறு பிராமணக் குடும்பங்கட்குப் பூதானம் தரப்பட்டது. குண்டூரில் 60 பிராமணக் குடும்பங்கள் பூதானம் பெற்றன என்ற செய்தி பொறிக்கப்பட்ட செம்புப்பட்டயம், ஆராய்ச்சி நிலையத்திலே காணப்படுகிறது.
குடும்பத்தை நடத்த முடியாமல், கோயில் பணத்திலிருந்து 110 காசு கடனைப் பெற்றுக்கொண்டு, அக்கடனுக்காக, தன்னையும் தனது இரு பெண்களையும் கோயிலுக்கு ஒரு வேளாளன் விற்று விட்டான்! இதற்கும் சாசனம் இருக்கிறது.
பிராமண குடும்பத்துக்குச் சென்ற இடமெங்கும் தானம்! தமிழ்க்குடும்பம், அடிமையாதல்! இது தமிழ் ஆட்சியிலே. காரணம் என்ன? ஆண்டது தமிழர்; ஆட்சிமுறை ஆரியம்!!

யாக்ஞவல்கியரின் சட்டம் கூறுகிறது:
பார்ப்பன னிடம் மற்ற வகுப்பாரிடம் வாங்கும் வட்டி வாங்கக்கூடாது. அவர்களிடம் குறைந்த விகித வட்டியே கேட்கவேண்டும். தாழ்ந்த வகுப்பு 5% வட்டி மட்டுமே பெற வேண்டுமென்ற மீதாக்ஷரம் கட்டளையிடுகிறது. பலரிடம் கடன்பட்டவன், கடனைத் திருப்பித் தருகையிலே முதலில் பிராமணனிடம் பட்ட கடனையே திருப்பித்தரவேண்டும்; மற்றவர்கன் கடனைத் திருப்பித்தர முடியாவிட்டால் அவர்களுக்கு ஊழியம் செய்து கடனைத் தீர்க்க வேண்டுமென்பதுன் மீதாக்ஷர திட்டம். அன்று நிறுவப்பட்ட சதுர்வேதி மங்கலங்களில், ஆரியர் ஊட்டி வளர்க்கப்பட்டதன் விளைவு என்னவெனில், இன்று தமிழகமே சதுர்வேதி மங்கலமானது தான்! சர்வமான்ய உரிமையுடன் ஆரியர் இன்று ஆட்சி செய்கின்றனர். எனவேதான், நாம் இப்பிரச்சினையை முக்கியமானதென்று கூறி, இந்நிலை போகக் கிளர்ச்சி செய்கிறோம். இது தவறா?
(‘திராவிட நாடு’ இதழ் – தலையங்கம்
– 04.07.1943)