வரலாறு : அயோத்திதாச பண்டிதரின் ஆய்வு நுட்பமும் அறிவு நுட்பமும்

2022 மற்றவர்கள் மே 16-31 2022

திருக்குறளில் உள்ள கருத்துகளை எடுத்து அர்த்தசாஸ்திரத்திலும் சுக்கிர நீதியிலும் எழுதியுள்ளனர்.
அர்த்த சாஸ்திரம் கி.பி.நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று மேலைநாட்டு ஆய்வாளர்களின் கூற்று உறுதி செய்கிறது. மேலும் அர்த்த சாஸ்திரம் ஒரு தொகுப்பு நூல் மட்டுமே. இதற்கு முன்னிருந்தோர் கூறிய கருத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இது என்பதும் ஆய்வின் மூலம் புலப்படுகிறது. இதன்படியும் மேற்கண்ட கருத்து உண்மையாகிறது.
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
என்ற வள்ளுவர்தம் குறளின் அடிப்படையில் தான் அர்த்த சாஸ்திரத்தில் உழவின் சிறப்பு கூறப்பட்டது.
அர்த்த சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்திலும் பத்தாம் அத்தியாயத்திலும் அரசன் ஆராய்ந்து அறிவது பற்றி கூறப்படும் கருத்து,
“அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்”
என்னும் குறளிலிருந்து பெறப்பட்டது.
அமைச்சர் இயல்பு பற்றி அர்த்த சாஸ்திரத்தில் கூறப்படும் கருத்து,
“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்”
என்னும் குறளிலிருந்து பெறப்பட்டது.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”
என்னும் குறளின் கருத்தையே,
“பொருளை அடைதலும், பெற்றன காத்தலும், காத்தவற்றை வளர்த்தலும், அவற்றை நல்வழியில் பயன்படுத்தலும்..’’ என்ற அர்த்த சாஸ்திரப் பகுதி ஏற்றுக் கூறுகிறது.
“கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்”
என்று வள்ளுவர் கூறியதையே,
“கொடுந்தண்டம் மக்களை நடுக்கமுறச் செய்யும்; குறைந்த தண்டம் அவமதிக்கப்படும்; தகுதியான தண்டம் நன்கு மதிக்கப்படும்’’ என்று அர்த்த சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்”
என்ற வள்ளுவர் கருத்தே,
மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியல்லாதாரை மகிழ்விக்கும் பொருட்டு, பொருட் கொடையாலும், இன்சொற்களாலும் சிறப்பிக்க வேண்டும் என்று அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
“பொருள்கருவி மூலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்”
என்று குறள் கூறுவதை,
“காரியத்தைத் தொடங்குவதற்குரிய உபாயம், வினை செய்வாரும் பொருளும் நிரம்ப உடைமை, ஏற்ற காலம், இடங்களை அறிதல், இடையூறு களைதல், காரியத்தின் பயன் என்னும் அய்ந்தும் சூழ்ச்சிக்கு உறுப்புகளாகும்..’’ என்று அர்த்தசாஸ்திரம் ஏற்றுக் கூறுகிறது.
அமைச்சர்க்குரிய குணங்கள் நிறைந்த தொழில் தலைவர் எல்லோரும் அவரவர் ஆற்றலுக்கேற்ப காரியங்களில் நியமிக்கத் தக்கவராவர்.. என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. இக்கருத்து,
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.
அது மட்டுமல்ல, மனு, பிருகஸ்பதி, சுக்கிரன், துரோணாச்சாரியார், பராசரர், நாரதர், வீட்டுமர், உத்தமர், இந்திரன் போன்றவர்களின் கருத்துகளை தாம் எடுத்துக் கூறியதாகக் கூறும் (ஒத்துக் கொள்ளும்) கவுடில்யர், வள்ளுவரிட-மிருந்து எடுத்ததாகக் கூறவில்லை. தமிழன் அறிவைப் பயன்படுத்துவதைத் திட்டமிட்டு மறைத்திருக்கிறார் என்பது விளங்கும். திருவள்ளுவர்தான் எழுதினார் என்பது தெரியாமல் போயிருப்பினும், திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதை ஒப்பியிருக்க வேண்டுமல்லவா?
அர்த்த சாஸ்திரம் போலவே சுக்கிர நீதியும் ஒரு தொகுப்பு நூல். மேலும் ஏராளமான இடைச் செருகல்களையும் உடைய நூல். சுக்கிர நீதியும் திருக்குறள் கருத்துகளைப் பல இடங்களில் எடுத்தாள்கிறது.
சுக்கிர நீதியும் உழவுத் தொழிலைக் குறள்வழி நின்று ஏற்றிப் போற்றுகிறது.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்னும் குறளின் கருத்தும்,
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”
என்னும் குறளின் கருத்தும் சுக்கிர நீதியின் முதல் அத்தியாயத்திலும், மூன்றாம் அத்தியாயத்திலும் எடுத்தாளப்படுகிறது.
திருக்குறள் எழுதப்பட்டு பல நூற்றாண்டு-கள் கழித்தே சுக்கிர நீதி எழுதப்பட்டது என்பதை கா.சுப்பிரமணியம் பிள்ளை தனது ஆய்வின் மூலம் கூறுகிறார். சுக்கிர நீதியின் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு என்கிறார் அயோத்திதாசர். இந்த ஆய்வுகள் அவரின் ஆய்வு நுட்பத்தைக் காட்டுகிறது.
* * *
அயோத்திதாசரின் அறிவுநுட்பம்
சுரேந்திரநாத் பானர்ஜி என்ற வங்க அறிஞர் ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேசக் கூடியவர். அவர் இந்தியாவிலுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு ஆறு காரணங்களைச் சுட்டிக் காட்டி எழுதினார். அதை மறுத்து உண்மைக் காரணங்களை அயோத்திதாசர் எழுதினார். அவரது அறிவு நுட்பத்தை அறிவிப்பதாய் அது அமைந்தது.
பானர்ஜி : இந்தியக் குடிகளை அரசாங்கம் அடியோடு அவமதித்ததே அமைதியற்ற நிலைக்குக் காரணம்.
அயோத்திதாசர் : இந்தியாவில் வாழும் அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்களை ஆடு, மாடு, கழுதை, நாய் இவற்றினும் கீழாய் அவமதித்து நடத்துவதுடன், மிக இழிவாகவும் கூறி கேவலப்படுத்தி வருகிறார்களே, – இதை பானர்ஜி அறியார் போலும்!
பானர்ஜி : சில ஜாதியாரை அரசு பாரபட்சமாக நடத்துவதே அமைதியின்-மைக்குக் காரணம்.
அயோத்திதாசர் : ஓர் அய்ரோப்பியர் கலெக்டராக வருவாராயினும் மற்ற தலைமை எழுத்தர், தாசில்தார் போன்ற வேலைகளுக்கு அய்ரோப்பியர்கள் வருவதில்லையே!
ஆனால், இந்த நாட்டில் பிராமணர் என்று சொல்லிக் கொள்வோர்களில் ஒருவர் தாசில்தாராக அல்லது உயர் அதிகாரியாக வருவாரேயானால் அந்த அலுவலகம் முழுவதும் பிராமணர் என்று சொல்லிக் கொள்வோர் நிரம்பி விடுகிறார்களே, இதில் ஆங்கிலேயர் பாரபட்சமுடையவர்களா? இந்தியர்களான ஆரியர்கள் பாரபட்சமுள்ளவர்களா?
பானர்ஜி : ராணியார் இந்துக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அரசாங்க நிருவாகத்தில் ஒதுக்கி வைப்பதே அமைதியின்மைக்குக் காரணம்.
அயோத்திதாசர் : தற்போது கிடைத்துள்ள சுதந்திரங்களை, அனைத்து ஜாதியினரும் அநுபவிக்கும்படியாக (ஆரியர்கள்) வழிகளைத் திறக்கிறார்களா? அல்லது அடைத்து வைத்திருக்கிறார்களா? என்பதை பானர்ஜி அறியார் போலும்!
பானர்ஜி : அய்ரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணம்.
அயோத்திதாசர் : இந்நாட்டிலுள்ள மக்களில் ஆறு பேருக்கு ஒருவராக இருந்து, உடலை வருத்திச் சம்பாதிக்கக் கூடியவர்களும், ஜாதி பேதமில்லாத விவேகிகளும் ஆனவர்களை பறையர்கள் என்றும், தீயர்கள் என்றும், சண்டாளர் என்றும் இழித்துக் கூறி வருவதும், மற்ற ஜாதிக்காரர்கள் இந்நாட்டில் பெறும் சுதந்திரங்களை இவர்கள் அடையவிடாமல் இழிவுபடுத்தித் தாழ்த்தி வருவதும் யார் என்பது நமது பானர்ஜிக்குத் தெரியாது போலும்!
பானர்ஜி : ஆங்கிலோ _ இந்திய பத்திரிகைகள் இந்தியர்களின் நியாயமான விருப்பங்களை நிந்தித்துப் பேசி வர, அப்பத்திரிகைகளை அரசு மதித்து நடத்துவதே அமைதி இன்மைக்குக் காரணம்.
அயோத்திதாசர் : இந்த நாட்டிலுள்ள பூர்வீகக் குடிகளும், அனைத்து ஜாதிகளிலும் பெருந் தொகையினராகவும் உள்ள பறையர்களை, தாழ்ந்த ஜாதிகள் என்று வகுத்து, பொய்க் கதைகளை ஏற்படுத்தி, புத்தகங்களில் அச்சிட்டு, கூத்து மேடைகளில் அக்கதைகளைச் சொல்லி அவமானப்படுத்தி வரும் செயல்களை, நமது பானர்ஜி அறியார் போலும்!
பானர்ஜி : வங்காளத்தை இரண்டாகப் பிரித்ததே அமைதியின்மைக்குக் காரணம்:
அயோத்திதாசர் : இந்த நாட்டில் மக்களை, ஜாதியுள்ளவர்களாகவும் (நான்கு வர்ணத்தார்) ஜாதியில்லாதவர்களாகவும் (பஞ்சமர்) பிரித்து, ஜாதியுள்ளவர்கள் சகலமானவற்றையும் கற்றுக் கொள்ளவும், பஞ்சமர்களான தாழ்த்தப் பட்டவர்கள் எதையும் கற்கக்கூடாது என்றும், ஆரியப் பார்ப்பனர்கள் வாழும் இடங்கள், நாடார் வாழும் இடங்கள் என்று உயர்ஜாதியாருக்கென்று வசதியான இடங்களை எடுத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்டவர்களைத் தனியே பிரித்து அவர்கள் வாழும் இடங்களைச் சேரி என்று பெயர் எழுதி வைத்துப் பிரித்து இழிவு செய்கிறார்களே, இந்த அநீதியான பிரிவினையை பானர்ஜி அறியார் போலும்!
அந்தோ! நமது மகா கனம் பொருந்திய பானர்ஜியார், இந்தியாவிலுள்ள இப்படிப்பட்ட ஒற்றுமைக் கேடுகளை உணராது, அமைதி கெட்டதற்காக அவர் கூறும் ஆறு வகைக் காரணங்களும் வீணேயாகும்! என்று மண்டையில் அடித்தாற் போன்று, மறுப்பு எழுதினார் அயோத்திதாச பண்டிதர் அவர்கள்.
பார்ப்பனர் அல்லாதார் சங்கம் தொடங்கி நடத்தியபோது, இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஜாதிப் பாசத்தைத் தங்களுக்குள் வைத்துக் கொண்டு சங்கம் அமைத்துச் செயல்படுவதால் என்ன பயன் ஏற்படும்? என்று அறிவு நுட்பத்தோடு அயோத்திதாசர் கேட்டார்.ஸீ
(ம(றை)க்கப்பட்ட மாமனிதர்கள் நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *