ஆசிரியர் பதில்கள் : படுமோசமான தீர்ப்பு!

2022 ஆசிரியர் பதில்கள் செப்டம்பர் 1-15-2022

கே: கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் ஆள்களை மட்டுமே கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியுள்ள செயல் மிகப் பெரிய ஆபத்தின் அடையாளம் அல்லவா?
– அ.மன்னார்சாமி, தாம்பரம்
ப: மிக ஆபத்துதான்; துணிந்துதான், இப்படி அதிகார துஷ்பிரயோகத்தை ஆர்.எஸ்.எஸ். ஆட்சி செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களிடம்தான் இறுதியில் இறையாண்மை உள்ளது. நிச்சயம் முடிவு கட்டுவார்கள். அதுவரை ‘நுனிக்கொம்பேறிமூக்கன்’களாகவே செயல்பட்டு உச்சகட்டத்திற்குச் செல்லத்தான் செய்வர்!

கே: எளிய மக்களுக்கு இலவசம் கொடுப்பது கேடானது என்று கூறும் பா.ஜ.க., கார்ப்பரேட்டுகளுக்கு கோடிகோடியாய்க் கொட்டிக் கொடுப்பது சரியா?
– த.அறிவழகன், திருத்தணி
ப: மிலியன் டாலர் கேள்வி; மேற்சொன்ன பதிலே இதற்கும்!

கே: கல்வியின் எதிரி பா.ஜ.க. அரசு என்று பொருளியல் அறிஞர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியுள்ளது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– வெ.கோவிந்தன், திண்டிவனம்
ப: வழிமொழிவதைத் தவிர வேறு என்ன? உண்மை அதுதானே!

கே: பெண்கள் அணியும் ஆடை பாலுணர்வைத் தூண்டுவதாக இருந்தால், அவர்கள் மீதான சீண்டல் குற்றமாகாது என்ற நீதிபதியின் தீர்ப்பு எப்படிப்பட்டது?
– ம.செம்பருத்தி, திருச்சி
ப: படுமோசமான, பிற்போக்குத்தனமான தீர்ப்பு! அதைவிட “பெண்கள் வெளியே நடமாடுவதால்தான் இப்படி; எனவே, நடமாடவே கூடாது!’’ என்றுகூட இந்தச் சட்ட மேதாவிலாசங்கள் கூறுவார்கள் போலும்!

கே: ‘ஆரியர்’, ‘திராவிடர்’ என்பவை இனப் பெயர்கள் அல்ல என்று 24.8.2022 ‘துக்ளக்’ இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரை பற்றித் தங்கள் கருத்து என்ன?
– தி.வெங்கடாஜலபதி, அரியலூர்
ப: வாதத்திற்காக இதை ஏற்றுக்கொண்டால், இந்த இரண்டு சொற்களில், ‘குறிப்பாக ‘திராவிடர்’ என்பதைக் கண்டு ‘துக்ளக்’ ஆசிரியக் கூட்டம் மிரள்வது ஏன்? முரண் இல்லையா?

கே: உள்ளாட்சி அமைப்புகளில், ஒடுக்கப்பட்ட பிரிவினர் உயர் பதவியில் இருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் இடையூறு செய்யும் போக்கு – மனநிலை – மற்ற ஜாதியினரிடம் இருப்பதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
– க.காளியப்பன், திண்டுக்கல்
ப: சட்டத்தைக் கடுமையாக்குவதோடு, தண்டனைகளை உடனே வழங்கி, அத்தகைய ஜாதி வெறியர்களுக்குப் பாடம் புகட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே: ‘அனைவரும் நாடுவது அகண்ட பாரதம்’ என்று விஜயபாரதம் தலையங்கம் எழுதியுள்ளதே! அவாள் விருப்பம் அனைவரின் விருப்பமாகுமா?
– தே.பெரியகருப்பன், புதுக்கோட்டை
ப: ‘அகண்ட பாரதம்’ என்றால், பிரிந்து-சென்ற நாடுகளை ஒருங்கிணைத்து ‘ஹிந்து சாம்ராஜ்யம்’ உருவாக்குதல் என்றால் எப்படி? படையெடுப்பு நடத்துவார்களா? இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் மட்டுமா? பழைய கணக்கில் அவை பல நாடுகள். பர்மா போன்ற-வற்றை வெள்ளைக்காரர்கள் ஒன்றாக்கிப் பிரித்த எல்லாவற்றையும் எப்படி இணைக்கத் திட்டம் என்பதை விளக்குவார்களா? அது எவ்வளவு பெரிய விபரீதமாகும் என்பது, தானே விளங்கும்!

கே: பி.ஜே.பி. வீடுதோறும் தேசியக் கொடியைப் பறக்கவிடச் சொன்னதன் உள்நோக்கம் என்ன?
– மா.விசுவநாதன், மதுரை
ப: ஆர்.எஸ்.எஸ். தேசியக் கொடியை அங்கீகரித்திருக்கிறதா? அதன் கொடி ஹிட்லரின் சுவஸ்திக் கொடிதானே? அவர்கள் கொடி வடிவத்தை தேசியக் கொடிக்கு முன்பே துவக்கினார்கள். பழைய கறையைத் துடைக்க இந்த வித்தை! அவ்வளவுதான்! ‘விடுதலைப் போராட்டம்’ என்பதில் இவர்களின் பங்களிப்பு பற்றி யாரும் தெரிந்து-கொள்ளாமல் இருப்பதற்காகவே காங்கிரஸ் தியாகத்திற்கு இவர்கள் லேபிள் ஒட்டிக் கொண்டாடி ஏமாற்ற முயலுகிறார்கள்.