இந்தியைத் திணித்தால்… பா.ஜ.க.விற்கு சித்தராமையா எச்சரிக்கை!

2022 அக்டோபர் 01-15 2022 மற்றவர்கள்

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி எனவும், ஒன்றிய அரசின் கோப்புகளில் 70% மேல் இந்தி மொழி கொண்டுவர உள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் முதல் ஆளாக கண்டனத்துடன் டுவிட்டரில் விமர்சனம் செய்த நிலையில், கருநாடக முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, “இந்தியைத் திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முயன்றால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என பாஜகவிற்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சித்தராமையா டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல. இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியல் லாபத்துக்காக, தனது தாய் மொழியான குஜராத்தியைப் புறக்கணித்து இந்தியை ஆதரித்து சொந்த மாநிலத்துக்கு அமித்ஷா துரோகம் செய்கிறார். காந்தி பிறந்த மாநிலத்தைச் சேர்ந்த அமித்ஷா, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியைப் பயன்படுத்தி உதவி செய்த சாவர்க்கர் போல் நடந்து கொள்கிறார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெற்றது இல்லை. இந்தியைத் திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க பாஜக முயன்றால் கடும் எதிர்விளைவுகள் ஏற்படும்” என டுவிட்டரில் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.