சிந்தனை : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைப் பேச்சும், விளைவுகளும்!

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்-களில் ஒருவரான நுபுர் சர்மா, 5.6.2022 அன்று ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.
அப்போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார். இதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, 6.6.2022 அன்று அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது.
அதேபோல், டெல்லி பாஜக செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜக நீக்கி உள்ளது.
இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிருவாகிகளின் விமர்சனத்தைக் கண்டித்த வளைகுடா நாடுகள், இந்தியப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் அவதூறுப் பேச்சுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபையின் பொதுச் செயலாளர் நயீஃப் பலாஹ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், ‘பாஜக செய்தித் தொடர்பாளரின் இந்தக் கருத்து தவறானது. அதை நிராகரிக்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றி அவதூறாகப் பேசியதைக் கண்டிக்கிறேன்.
அதேபோல், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளருக்கு தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாம் மதத்தையும், முஸ்லிம்கள் உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று ஆப்கன் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
சவுதி அரேபியா பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்தை ‘இன்சுலேடிங்’ என்று விவரித்தது, மற்றும் “நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகள் கண்டனம்!
கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக் கிழமையன்று கண்டனம் தெரிவித்தன. 6.6.2022 அன்று ஈரான், ஈராக், பஹ்ரைன், பாகிஸ்தான், தாலிபான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, அய்க்கிய அரபு அமீரகம், ஜோர்டான், லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரை மொத்தம் 15 இஸ்லாமிய நாடுகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்!
“நமது அன்புக்குரிய நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி இந்தியாவின் பாஜக தலைவரின் புண்படுத்தும் கருத்துகளை நான் வலுவான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்’’ என்றார்.
“உலக நாடுகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்; மற்றும் இந்தியாவை கடுமையாகக் கண்டிக்க வேண்டும்” என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம் (தலையங்கத்தில் காண்க)
திமுக கண்டனம்
”அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறுக் கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிக்க கூடியவை.”
“அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக் கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம்’’ என்று தி.மு.க. தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ராகுல்காந்தி கண்டனம்
“உள்நாட்டில் பிளவுபடுத்தப்பட்ட இந்தியா உலகளவில் பலவீனமாகி வருகின்றது. பாஜகவின் வெட்கக்கேடான மதவெறியானது நம்மை மட்டும் தனிமைப்படுத்தவில்லை. உலக அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் சேதப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பினராயி விஜயன் கருத்து
“சங்க பரிவாரம் மீண்டும் நம் நாட்டினை அவமதித்துள்ளது. உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம், பாஜக செய்தித் தொடர்பாளரின் அவமதிப்புப் பேச்சால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது.”
“ஆர்எஸ்எஸ் தேசத்தை தர்மசங்கடமான சூழலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. வெறுப்புப் பிரச்சாரங்களைச் செய்வோர் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
“ஜிசிசி நாடுகளான குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், யுஏஇ.,யுடன் இந்தியா கடந்த 2020_-21 காலகட்டத்தில் 90 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. ஜிசிசி நாடுகளில் லட்சக்-கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர்; வசிக்கின்றனர். பிரதமரமாகப் பதவியேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் மோடி இந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நபிகள் நாயகத்தைப் பற்றிய சர்ச்சைக் கருத்துகளால் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது’’ என்று பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலையும் உடனடியாகக் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்’’ என்ற வலியுறுத்தல் தீவிரமாகி வருகிறது.
நபிகள் நாயகம் குறித்த பாஜக செய்தித் தொடர்பாளர்களின் அவதூறுப் பேச்சு, பன்னாட்டுச் சிக்கலாக மாறியுள்ளது.
முகமது நபிக்கு எதிரான பாஜக தலை வர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர் பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், இந்தியத் தூதர்களை அழைத்து அதி காரப்பூர்வமாக சம்மன் அளித்து எதிர்ப்பு தெரி வித்து இருப்பதுடன் இந்திய அரசு பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு தங்களின் ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளன.
இந்தியத் தயாரிப்பு பொருள்களைப் புறக்கணிப்போம் (Boycott India) என்று அரபு நாடுகளில் பிரச்சாரம் முன்னெழுந்துள்ளது.
சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற நாடுகளின் வர்த்தக நிறுவனங்களில் இந்திய தயாரிப்புப் பொருள்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சில நிறுவனங்களில் இந்தியப் பொருள்களைத் “தடை செய்யப்பட்ட பொருள்கள்’’ என்றும் ஸ்டிக்கர் ஒட்டி மூடி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ‘இந்தியத் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கும் அங்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ‘டிரெண்ட்’ செய்யப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் பரப்பப்படும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்தியர் ஒருவரை, கத்தார் ஷேக் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பதால், அரபு நாடுகளில் பணியாற்றிவரும் 35 லட்சம் இந்தியர்களின் வேலை மற்றும் பாதுகாப்புக்கும் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்றிருக்கும் நிலையில், அவருக்கு அளிக்கப்படவிருந்த இரவு உணவு ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்.
ஆனால், அதிமுக.விடமிருந்து இது தொடர்பாக எந்தக் கருத்தும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.