ஆசிரியர் பதில்கள் : தமிழ்நாடு அரசால் வெற்றி பெற முடியும்!

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

கே: இடஒதுக்கீட்டை மாற்றி அமைக்க 7.6.2022 ‘தினமணி’ கட்டுரையில் சுப. உதயகுமார் கூறும் எட்டு அடிப்படைகள் சரியா?
– மகிழ், சைதை
ப: தற்போது சட்டப்படி நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடே நடைமுறையில் சரிவர செயல்படுத்தப்-படாமல் இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட கருத்துகள் இன்றைய சூழலில் சாத்தியப்படாது என்பதே யதார்த்தம். அவர் நல்லெண்ணத்துடன் கூறியுள்ளார். என்றாலும் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம்.
கே: முகமது நபியை, பி.ஜே.பி. தலைவர்கள் கேவலமாகப் பேசியதால் இஸ்லாம் நாடுகளின் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
– அரிகிருஷ்ணன், செஞ்சி

ப: இதுபற்றி 8.6.2022 ‘விடுதலை’யில் விரிவான எனது அறிக்கை வெளிவந்-துள்ளதை, அருள்கூர்ந்து படியுங்கள்!
கே: எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற இறுமாப்பு தொனிக்க ‘இந்தியா அளவில் எதிர்க்கட்சி வலுவாக இல்லாதது கவலை தருகிறது’ – என்ற மோடியின் ஆணவத்தை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?
– கமலக் கண்ணன், சென்னை.
ப: ஒரே இலக்கு _ பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். மீண்டும் 2024இல் அரியணை ஏறாமல் தடுப்பது என்ற பொது நோக்கோடு அனைவரும் ஒரு குறைந்தபட்ச வேலைத் திட்டத்தோடு அனைத்துக் கட்சிகளும் _- தலைவர்களும் ஒரே அணியில் நின்று தேர்தல் களம் காண உழைக்க வேண்டும்.

கே: எழும்பூர் இரயில் நிலையத்தில் “பூந்தமல்லி நெடுஞ்சாலை” செல்லும் வழி என்று எழுதி, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை என்ற உண்மையை மறைத்துள்ளனர், நடவடிக்கை எடுப்பீர்களா?
– சங்கரன், சேலம்
ப: இதை சென்னை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். உடனடி மாற்றம் வருவது உறுதி!
கே: காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப் படுவது பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்கு என்ற கருத்து சரியா?
– முத்துமணி, விழுப்புரம்
ப: எல்லா உயிரும் மதிக்கத்தகுந்தது. இதற்குக் காரணம், பா.ஜ.க. அரசு ஜனநாயக முறைப்படி அங்கே மாற்றத்தைக் கொண்டு வராது திணித்ததின் எதிர் விளைவே இது! விஷ வித்து விதைத்ததால் விளைந்த நியாயப்-படுத்த முடியாத இந்த வேதனைதான் மிச்சம்!
கே: அரசுப் பள்ளிகளில் மழலையர் ஆங்கில வழி வகுப்புகள் (L.K.G., U.K.G.) நீக்கப் பட்டிருப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– தமிழ்ச்செல்வன், ஆவடி
ப: இது மறுக்கப்பட்டுள்ளது _ தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால்!
கே: சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் தடுப்பதை சட்டப்படி அரசு எப்படி எதிர் கொள்ள வேண்டும்? மக்களின் கோயிலை உரிமை கொண்டாடும் அவர்களிடமிருந்து மீட்க என்ன செய்ய வேண்டும்?
– அருள், மதுரை

ப: முன்பு கலைஞர் அரசு சட்டப்படி ஆதாரங்களோடு, சிதம்பரம் கோயிலை அறநிலையக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்து, உயர்நீதிமன்ற தனி நீதிபதி, மேல்முறையீடு எல்லாம் அதை ஏற்றது.
அதன்பிறகு சு.சாமி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அதை ஜெயலலிதா அரசு சரியாக நடத்தாத-தால் – தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு எதிராக வந்தது. இதை மீண்டும் சரியான ஆதாரங்களுடன் ஊழல் பட்டியல் இணைத்து வழக்குப் போட்டு கையகப்-படுத்தினால் நிச்சயம் தமிழ்நாடு அரசால் வெற்றி பெற முடியும். அதுதான் ஒரே வழி. சிதம்பரத்தில் ஒரு பெருங்குழு உருவாக்கப்பட்டு மக்கள் கருத்தைப்-பரப்பி எழுச்சியும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
கே: சென்னை அய்.அய்.டி.யில் இடஒதுக்கீட்டு அடிப்படையில் தகுதியான ஆள்கள் கிடைக்கவில்லையென்று பாதிக்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பாமல், பொதுப் போட்டிக்குக் கொண்டு செல்லும் சதியை முறியடிப்பீர்களா?
– செந்தில்குமார், தாம்பரம்
ப: எல்லாப் பணிகளும் நாம்தான் செய்ய வேண்டுமா? சமூகநீதிக்குக் குரல் கொடுக்கும் மற்ற கட்சிகள் ஏன் இதனை எடுக்கக் கூடாது? என்றாலும் நாம் இதனைச் செய்யத் தவற மாட்டோம். இது நிச்சயம்!