மூடநம்பிக்கை : கடவுள் பக்தியால் தீ மிதிக்கிறார்களா?

2022 ஜூன் 1-15 2022

ஒளிமதி

கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் கணக்கில்லா மூடச் செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம். தமிழர்களிடையே யுள்ள சில மூடச் செயல்களை இங்கு ஆய்வோம்.
தீச்சட்டி ஏந்துதல்:
தீச்சட்டி ஏந்துகின்ற பக்தர் ஒருவர் ஒரு சட்டியில்தான் நெருப்பைப் போட்டு ஏந்துகிறாரே தவிர, வெறுங்கையில் (உள்ளங்கையில்) நெருப்பை ஏந்துவதில்லை.
அருளால் அல்லது மருளால் நெருப்புச் சுடாது என்றால், வெறுங்கையில் ஏன் நெருப்பை ஏந்துவதில்லை? குறுக்கே ஒரு மண்சட்டி ஏன்? இங்குதான் சிந்திக்க வேண்டும்.
வெறுங்காலால் நெருப்பின் மீது நடப்பதாகக் கூறுகின்றவர்கள் வெறுங்கையில் நெருப்பை ஏந்த முடிவதில்லையே ஏன்?
வெறுங்கையில் நெருப்பை ஏந்தினால் நெருப்பு ஒரே இடத்தில் (உள்ளங்கையில்) நிலைத்து நிற்கிறது. அதனால், நெருப்பு கையைச் சுட்டுப் புண்ணாக்கும். ஆகையால்தான் நெருப்பை வெறுங்கையில் ஏந்த யாரும் முன் வருவதில்லை. ஆனால் தீ மிதிப்பது அப்படி அல்ல.
தீ மிதி தத்துவம்:
நெருப்புக் குழியில் இறங்கும்போது நெருப்பில் எந்த இடத்திலும் கால்கள் நிலைத்து நிற்பதில்லை. இடம் மாறிக் கொண்டே-யிருக்கிறது. விரைந்து மாறிக்கொண்டே-யிருக்கிறது. ஆகையால் கால் சூடு ஏறுவதற்கோ, கால் புண்ணாவதற்கோ வாய்ப்பில்லை. தீ மிதிக்கும்போது, அதிக அளவில் பரப்பப்-பட்டுள்ள நெருப்பில்தான் நடப்பார்கள். நெருப்பு அதிக அளவில் பரப்பப்பட்டிருப்-பதோடு, சமமாகப் பரப்பப்படுதல் என்பது சுடாமல் இருப்பதற்கு உதவும்.
ஆணிச் செருப்பு:
காவடி எடுக்கும்போது சிலர் ஆணிச் செருப்பில் ஏறி நடப்பார்கள். ஆணிச் செருப்பு என்பது மரத்தால் செய்யப்பட்ட செருப்பில், ஆணிகள் நெருக்கமாகப் பொருத்தப் பட்டிருக்கும். ஆணிகளின் மேல் முனை கூராக இருக்கும். அதாவது கால் வைக்கும் பரப்பு, கூரிய ஆணிகளை நெருக்கமாகக் கொண்டதாக இருக்கும்.
மேலும், கூர்முனைகள் அனைத்தும் ஒரே மட்டமாக உயரம், குட்டை என இல்லாமல் இருக்கும்; நெருக்கமாகவும் இருக்கும். அந்த ஆணிச் செருப்பைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும்போது காலில் ஆணி குத்துவதில்லை. காரணம், ஆணிகள் கூர்மையாக இருந்தாலும் கூர்முனைகள் சமதளத்திலும் நெருக்கமாகவும் அதிக அளவிலும் இருப்பதுதான். தனியாக ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டிருந்தால் அது காலில் ஏறிவிடும்.
காரணம், ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டு இருந்தால் நமது எடை முழுக்க ஒரே ஆணியில் அமுக்கப் பெற்று காலினுள் ஆணி ஏறிவிடும். சம உயரத்தில் நிறைய ஆணிகள் இருக்கும்போது நமது எடை எல்லா ஆணிகளிலும் சமமாகப் பகிர்ந்து போகிறது. எந்த ஓர் ஆணியிலும் கால் ஆழப் பதிவதில்லை. ஏதாவது ஓர் ஆணி நீட்டி நின்றாலும் காலில் ஏறிவிடும். ஆணிகள் சமதளப் பரப்பில் இருப்பதால் காலில் குத்துவதில்லை. மற்றபடி ஆணி குத்தாததற்குக் கடவுள் அருள் ஏதும் காரணம் இல்லை.
தீ மிதிக்கும் இத்தத்துவமும் இதற்குப் பொருந்தும். ஒரு தனி நெருப்புத் துண்டு தரையில் கிடக்கும்போது அதை மிதித்தால் காலைச் சுட்டுவிடும்; புண்ணாகி விடும். ஆனால் அதிகப் பரப்பில் நெருப்புத் துண்டுகள் பரப்பப்படும்போது கால் எந்த ஒரு நெருப்புத் துண்டிலும் ஆழப் பதிவதில்லை. அதனால் சுடுவதில்லை. ஒரே இடத்தில் கால் நிலைத்து நின்றால் அதிக நெருப்புப் பரப்பப் பட்டிருந்தாலும் சுட்டுவிடும். எனவே, விரைந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
அடுப்படியில் பெண்கள் நெருப்புத் துண்டை விரலால் எடுத்துப் போடும்போது தணலாக இருக்கும் நெருப்பைத்தான் எடுத்துப் போடுவார்களே தவிர, நீறுபூத்த நெருப்பை (மேலே சாம்பல் படிந்த நெருப்புத் துண்டை) விரலால் எடுக்க மாட்டார்கள். காரணம் என்ன?
நீறு பூத்த நெருப்பின் மீது உள்ள வெண்ணிற மென்மையான சாம்பல் நெருப்பைவிட அதிகச் சூட்டுடன் இருக்கும். அதைத் தொட்டால் கையில் ஒட்டிக்கொண்டு விரலைச் சுட்டு கொப்பளிக்கச் செய்து விடும். நீறுபூத்த நெருப்பை விரைவாக விரலால் எடுத்துப் போட்டாலும் சுட்டு விடும். எனவே, நீறுபூத்த நெருப்புத் துண்டை விரலால் எடுக்க முடியாது. நீறுபடியாத தணலான நெருப்புத்துண்டை விரலால் எடுக்க முடியும்.
தீ மிதிப்பதும் இந்த அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. தீ மிதிப்பதற்கு முன்பு தீக்குழியில் சில ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். சமமாக வெட்டப்பட்ட ஒரு குழியில் (குழியின் ஆழம், குறைவாகக் கூட இருக்கலாம்) விறகுக் கட்டைகளைப் போட்டு எரிப்பர். கட்டைகள் நன்றாக எரிந்து தணலாக மாறிய பிறகு, அவற்றை அடித்து நொறுக்கிச் சமப்படுத்துவார்கள். அதாவது நெருப்பின் மேல்மட்டம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுத்தப்படும். பிறகு முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள்.
சாம்பல் அகற்றப்பட்டு, நெருப்புத் தணலாகச் சமபரப்பில் இருக்கும் நிலையில், பக்தர்கள் அதன்மீது விரைந்து வேகமாக நடந்து செல்வார்கள். இதனால் காலில் அதிகச்சூடு ஏறுவதில்லை.
ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து நடக்க வேண்டியது கட்டாயமாகும். ஒரு நெருப்புத் துண்டை உள்ளங்கையில் போட்டு, இந்தக் கைக்கும் அந்தக் கைக்கும் விரைவாய் மாற்றினால் நெருப்புச் சுடாது. அது ஒரே கையில் நிலையாக இருந்தால் சுட்டுவிடும். எனவே, நெருப்பில் விரைந்து நடக்க வேண்டும். விரைவாய் நடந்தால் சுடாது.
மென்மையான சாம்பலை நீக்காமலும் நெருப்பைச் சமமாகப் பரப்பாமலும், மெதுவாக நெருப்பில் நடந்தும் யாரும் தீ மிதிக்க முடியாது.
புலவர் மணி கூறுவதுபோல, மருள் நிலையில் இருந்தால்கூட, மேற்கண்ட நிலையில் அதாவது நீறுபூத்த மேடு பள்ளமான நெருப்பில் சற்று நேரம் நின்றோ மெதுவாக நடந்தோ யாராலும் தீ மிதிக்க முடியாது.
எனவே, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் தீயில் இறங்கி நடக்கிறார்களே தவிர, அருள், மருள் போன்ற காரணங்களால் அல்ல.
உளவியல் அடிப்படையில் நோக்கின் ஒரு காரணத்தை மட்டும் கூறலாம். அதாவது ஆழ்ந்த நம்பிக்கையுடன் அல்லது மன உறுதியுடன் நெருப்பின் மீது செல்லும்போது நெருப்பின் சூடு அவர்களுக்கு அதிகம் தெரிவதில்லை. அதுவும், மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தீயில் நடக்கும்போது மட்டுந்தான்.
புலி துரத்தும்போது ஓடுகிறவன் காலில் முள் குத்தினாலும், கல் கிழித்தாலும் வலி தெரிவதில்லை. காரணம், அவன் கவனம் முழுக்கப் புலியிடமிருந்து தப்பிப்பதில் மட்டுமே இருக்கிறது. அதேபோல் பக்தியில் தன்னை மறந்து நிற்கின்ற பக்தர்களுக்குச் சூடும் வலியும் தெரிவதில்லை. அதனால்தான் அலகு குத்தும்போது வலி தெரிவதில்லை. ஆனால் காயமும், வடுவும் இருந்தே தீரும்.
ஆக, மேடுபள்ளமுள்ள நீறு பூத்த நெருப்பில் நிலையாக ஒரே இடத்தில் நின்று மன திடத்துடனோ ஆழ்ந்த தன்னம்பிக்கையுடனோ, பக்தியின் உச்சத்திலோ யாராலும் தீ மிதிக்கவே முடியாது..
அதேபோல் உள்ளங்கையில் ஒரு கரண்டி நெருப்பை அள்ளி வைத்தால் எந்தப் பக்தனாலும் வைத்திருக்க முடியாது.
நெருப்பைச் சட்டியில் வைத்து, அடியில் சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகைச் சாற்றைத் தடவி, கையில் வேப்பிலைக் கொத்தை வைத்துக் கொண்டு தீச்சட்டி எடுக்கிறார்கள்.
பக்தியால் நெருப்புச் சுடுவதில்லையென்றால் வெறுங்கையில் நெருப்பு ஏந்தவும், பழுக்கக் காய்ச்சிய தகட்டில் நடக்கவும் எந்தப் பக்தனாவது தயாரா? முடியுமா? நிச்சயமாக முடியாது.
(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *