வரலாற்றுச் சுவடுகள்

2022 டிசம்பர் 16-31 2022 வரலாற்றுச் சுவடுகள்

“இப்படை தோற்கின்.
எப்படை ஜெயிக்கும்?” .

ச பக்திக்கும் பிராமண பக்திக்கும் வித்தியாசம்கூட இல்லாதிருந்த காலம் அது. அந்த நாட்களிலே, வெள்ளையர் ஆட்சியை எதிர்க்க, நாட்டிலே ஒரு முயற்சி துவக்கப்பட்டபோது, ஒவ்வொரு ஊரிலேயும் பிரமுகர்கள், வியாபாரிகள், செல்வாக்குள்ளவர்கள், வக்கீல்கள் ஆகியோரை, வலைவீசிப் பிடிக்கும் காரியத்தை வெற்றிகரமாகக் காங்கிரஸ் செய்து வந்தது. அதிலே, இரு பெரு வெற்றிகள் என்று அந்த நாட்களிலே கருதப்பட்டவை-. ஒன்று, சேலம் பிரபல வக்கீல் ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசுக்கு வந்தது. இரண்டாவது, ஈரோடு சேர்மனும் பிரபல வியாபாரியுமான ஈ.வெ. இராமசாமி, காங்கிரசில் சேர்ந்ததுமாகும். ஆச்சாரியாருக்கு, கனமான சட்டப் புத்தகங்கள் மட்டுமே உடனிருந்தன. ஈரோடு சேர்மனுக்கோ, அழகான மாளிகை, வளமான வயல், பலரக வீடுகள், கொடுக்கல் வாங்கல், இக்யபாதி அமோகம்.
எனவே, சரியான புள்ளி சிக்கிவிட்டார், இனித் தேசபக்தியின் சாக்கு வைத்து, பிராமண ஆதிக்கத்துக்கு அவரைக் கொண்டு பல சாதித்துக் கொள்ளலாம், என்று பிராமணத் தலைவர்கள் பேசிப் பூரித்தனர்.

அவர்கள் பூரித்ததுதான் மிச்சம்- _ காரியம் பலிக்கவில்லை. நாட்டுக்குப் பணியாற்றக் கிளம்பியவர், நாட்டுக்கு உடையவர் யார், அதை உருக்குலைப்பவர் யார் என்று ஆராயத் தொடங்கினார். தென்றல் புயலாயிற்று! அவர் போர் புரிவது வெள்ளையருடன் மட்டுமல்ல, இந்நாட்டுக் கொள்ளைக்காரருடனும் போர்புரிகிறார் என்று, கண்டுபிடிக்க, காங்கிரஸ் தலைவர்களுக்கும் சில காலம் பிடித்தது. இதை அறிந்து அவர்கள் அவரை நீக்க முஸ்தீபுகள் செய்தவண்ணம் இருந்தனர். காஞ்சிபுரத்திலே, கூடிய காங்கிரஸ் மாநாட்டிலே, பெரியார், போர் முரசு கொட்டிவிட்டு வெளிக் கிளம்பினார். அன்று துவக்கிய பயணம், இன்றும் ஓய்வின்றி நடைபெற்றவண்ணம் இருக்கிறது_ இப்போது அவருக்கு வயது 69!
இதற்கிடையே, அவர் சுயமரியாதை இயக்கம் கண்டார், சமதர்மப்பிரச்சாரம் செய்தார். ஜஸ்டிஸ் கட்சிக்குப் புதுவாழ்வு தந்தார். திராவிடர் கழகமாக்கி, இன அரசு பெற வேண்டும் எனும் இலட்சியத்தை உருவாக்கி, அதனை நாட்டினருக்கு எடுத்துக் கூறிவரும், பல
வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.

இவ்வளவு நீண்டகாலம், பொது வாழ்வில் இருக்கும் வாய்ப்பு, ஒரு சிலருக்கே கிடைத்திருக்கிறது; ஆச்சாரியார் ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், அவருடைய பொதுவாழ்விலே, ரோஜா அதிகம்; முள் குறைவு. பெரியாருக்கோ கள்ளி, காளான் நிறைந்த பாதையிலே கடந்து சென்று புதுக்கழனி தேடுவது போன்ற பொது வேலை. இதிலே, அவர், இவ்வளவு நீண்டகாலம் ஈடுபட்டிருப்பது, ஆச்சாரியார் இருப்பதைவிட, விசேஷமான சம்பவம் என்பதில் அய்யமில்லை. ஆச்சாரியாருக்கு பொதுவாழ்விலே இருந்த அபிலாஷைகள் ஏறக்குறைய வெற்றியாகிவிட்டன-_ காங்கிரஸ் நாடு ஆள்கிறது_ அவர் வங்கத்தை ஆள்கிறார்.
பெரியாரின் ‘அபிலாஷை’ வெற்றி பெறும், சூழ்நிலை ஏற்படுவதும், மீண்டும் மாறுபடுவதுமாக இருந்துவருகிறது. காரணம் என்ன? குறிக்கோள், நிரந்தரமானதாகக் கொண்டு, காங்கிரசார் போரிட்டனர்; வென்றனர். பெரியாரின் குறிக்கோள் அவருடைய தொண்டு வளர வளர, விரிவாகிக் கொண்டே போன காரணத்தால், வெற்றிகரமான முடிவு இன்னும் ஏற்படவில்லை. ஆனால் உடனடியாக வெற்றி முக்கியமா அல்லது, குறிக்கோளின் தரம் உயர்ந்து கொண்டு போகும்படி அதற்கு வளர்ச்சி தரும் காரியத்திலே கருத்தைச் செலுத்துவது முக்கியமா என்று கேட்டால், நிச்சயமாகக் குறிக்கோளின் தரத்தை உயர்த்தும் காரியமே முக்கியமானது என்போம். அந்தக் காரியம், சேலம் மாநாட்டிலே குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றது. அதுவரை பெரியார் ஆற்றிய தொண்டு, குறிக்கோளைக் கண்டறிதல், என்னும் கட்டம் _ அதற்குப்பிறகு_ -கண்டறிந்த குறிக்கோளை அடைவதற்கான அரும்பணி, இந்த அரும்பணியினைத் திறமையுடன் ஆற்றும் உறுதிபடைத்த பெரும்படையும் இன்று அவர் வசம் இருக்கிறது. கருவிகளும் குவிந்து கிடக்கின்றன.

இவ்வளவு நீண்ட காலப் பொதுவாழ்வு, எப்படிப்பட்ட தலைவருக்கும், தனிவாழ்வைச் சிதைத்துவிடும். இதனினும் குறைந்த அளவுள்ள காலம் பொது வாழ்வில் இருந்தவர்களின் சொத்து சூறையாடப்பட்டு, வாரிசுகள், தந்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தியாகராயரின் செல்வம்_ பொதுவாழ்வு எனும் பலிபீடத்துக்குக் ‘காவு’ கொடுக்கப்பட்டது. பானகலும், நாயரும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்திலே பாடுபட்ட வேறு பல தலைவர்களும், சொத்திழந்து, குடும்பச் செவ்வாக்கிழந்து, தேய்ந்தனர். குமாரராஜாவின் தயவிலே, திராவிட வீரன் ஜி.க்ஷி. சுப்ரமணியத்தின் உடலம் சுடலை சென்றது. பொதுவாழ்வு, ஈவு இரக்கமற்ற, பலிபீடம். அதிலும், தம்மை மறந்த திராவிட இனத்துக்குத் தொண்டாற்றும் பொது வாழ்வு, தமிழகத்திலே, பல தலைவர்களின் ‘சொத்துக்களை’ காவு வாங்கிவிட்டது. தியாகராயரின் பொதுவாழ்வின் விளைவு, அவருடைய குடும்பத்திலே பிறகு, விளங்கிற்று-_ வேதனையின் உருவில். இன்று அவர் பெயரால் ஒரு உயர்தரக் கல்லூரி நடத்தும் காரியம், ‘தாங்கமுடியாத பாரமாக’ இருக்கிறது. நாயரின் குடும்பம்- எங்கே? டாக்டர் நடேசனாரின் கடைசி நாட்கள் எங்ஙனமிருந்தன? பொது வாழ்வு எனும் பயங்கரப் பலிபீடத்திலே, தமது ‘வாழ்வை’ பலி கொடுத்தவர்கள் பலர்_ சா. சண்முகம், சா. இராமசாமி, _சர். உஸ்மான் போன்ற ஒரு சில, ‘வளைவு நெளிவு’ தெரிந்த காரியவாதிகள் தவிர.

பெரியாரின் பொதுவாழ்வு, தனிவழி.
இவ்வளவு அதிக காலம் பொதுவாழ்வில் இருந்தும் அவர், பலிபீடத்திலே தமது
செல்வத்தைக் காவு கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, பொதுவாழ்வின் முக்கியத்துவத்தை, மக்கள்_ அதிலும், தெளிவற்றிருந்த நமது மக்களும் உணருமாறு செய்தார். அவரால் மட்டுமே முடிந்தது-_ வாலிபர்களின் படைதிரட்ட! அவருக்கு முன்பு இருந்தோர், வாலிபர் படை திரட்டுவர் -_ பணம் கொடுத்து. அந்தச் செலவு அவர்தம் சொத்தைக் கொத்தும் கழுகாகிவிடும். பெரியார் நிலை அவ்விதமில்லை. படை கேட்டால் படை! பணம் கேட்டால் பணம்! வாலிபர்கள் தமது உழைப்பை மட்டுமல்ல, வறுமையாளர்களும்கூட, பணம் தமது சக்திக்கேற்ற அளவு தந்து, எமது விடுதலைப்போர் நடத்துக! என்று வேண்டிக்கொள்ளும் நிலை பெரியாருக்கு மட்டுமே ஏற்பட்டது.

காங்கிரசில் புகலிடம் தேடி, அதன் பலத்தைக் கொண்டு, திராவிட எழுச்சியை அடக்கிவிட முடியும் என்று ஆரியத் தலைவர்கள் நம்பிக்கை கொண்டதற்குக் காரணம், தூங்கும் திராவிடத்தை எழுப்பி, வீறுகொள்ளச் செய்யும் பெரும்பணியாற்றப் பெருஞ் செல்வம் தேவை. இதனை இழக்க எந்தத் தலைவருக்கு மனம் வரும்! வரினும், எத்தனை தியாகராயர்கள் கிளம்ப முடியும்-_ சொத்தை இழந்து, வாழ்வு தேய்ந்து போகவும் சம்மதிக்க. எனவே, வேறு பலர் கிளம்ப மாட்டார்கள்_ அந்தப் பயங்கரப் பலிபீடத்துக்கு. மேலும் மேலும் காவு கிடைக்காது. எனவே ஜெயமுண்டு பயமில்லை மனமே என்று எண்ணினர்-_ ஏமாந்தனர். பெரியார் பெரும் படை திரட்டிக் காட்டினார், பணச்செலவின்றி, பல ஆண்டுகள் பொதுவாழ்வை நடத்தமுடியும், தியாகர் போல் செல்வத்தை இழக்காமல் தூங்கும் திராவிடத்தைத் தக்க முறையில் தட்டி எழுப்பினால், அது படை தரும், படைக்குப் பலம் தேடப் பணம் தரும் என்று, செயலில் செய்து காட்டினார்.

திராவிடத்திலே இதுவரை பணிபுரிந்த தலைவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள மகத்தான வித்யாசங்களில் இஃதொன்றாகும். இந்தத் திறனறிந்து பணிபுரியும் பெரியாரை, ஆரியம், தியாகரைத் தீர்த்துக்கட்டியதுபோலச் செய்ய முடியாது. போர் நிற்காது. கருவிக்கும் பஞ்சமில்லை.
துவக்க நாட்களிலே, ஒரே ஒரு இதழ், “படி அரசு’’. அதைப் படிக்கவே பயப்படுவர், படித்தோர் பதறுவர். அது நாட்டிலே பரவவொட்டாதபடி பல சதிச் செயல்கள் நடைபெற்றன. இந்த ஒரு இதழ், என்ன செய்யமுடியும் என்று பேசி இறுமாந்தனர். எண்ணற்ற பல பத்திரிகைகள் தங்கள் பக்கபலமாக உள்ளன என்ற தைரியத்திலே அவர்கள் கண் திறந்து பார்க்கட்டும்_ இந்த வாரம், பெரியாரின் பெருந்தொண்டின் சிறப்பினை விளக்குவது, ஒரு “குடி அரசு’’ மட்டுமா! அல்ல! அல்ல! ஆரியம் எதிர்பார்த்திருக்கவே முடியாது_ நாமேகூடச் சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்திருக்க முடியாது_ அவ்வளவு இதழ்கள்_ அழகான வடிவு_ ஆர்வமிக்க இளைஞர்களின் எழுத்தோவியங்கள். அவ்வளவு இதழ்களும் இன்று திராவிட இன முரசு!

எனவே இவ்வாண்டு, பெரியார் வாரம், நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் தருவதாக அமைகிறது.
சென்ற ஆண்டு, பெரியாரின் சிறப்பினை விளக்கியபோது எடுத்துக்காட்டியது போன்றே, இதுபோதும் கூறுகிறோம், பெரியார் பெற்றுள்ள வெற்றி பெரும் அளவினது. குறிக்கோளற்றுக் கிடந்த திராவிடத்துக்குத் தகுந்ததோர் குறிக்கோளைக் காட்டும், அரிய காரியத்தை அவர் செய்து முடித்துவிட்டார், நமது வணக்கம் அவருக்கு. சுரங்கத்திலிருந்து தங்கப் பாளங்களை வெளியே கொண்டு வந்தாகிவிட்டது.
ஆம்! இனி, அணி பணி செய்யும் காரியம் இருக்கிறது. அதனைச் செய்யும்படி, வழிவகுத்துத் தரும் வேலைதான் பெரியாருக்கு. பெரியாருக்குக் கிடைத்திருப்பது போன்ற ஆர்வமிக்க இளைஞர்கள், திராவிடத் தலைவர்களிலே வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. “இப்படை தோற்கின், எப்படை ஜெயிக்கும்?’’ என்று, மனோன்மணிய ஆசிரியர் கூறியதுபோல, பெரியார், நம்பிக்கையுடன் கூறலாம்-_- கூறவேண்டும். தமது பெரும் படையினை, இங்கு செல்! இதைச் செய்! என்றுகூறி, அப்படை பெரும் வெற்றி கண்டு மகிழ வேண்டும். வயது 69! வாலிப வீரர்கள் பலப்பல ஆயிரம் அவரைச் சுற்றி! அவருக்கு இனியும், ஓயாத உழைப்பா! அவருடைய பெரும் படைக்கு, அவர், பொறுப்பும் ஆசியும் அளித்து, அனுப்பவேண்டும்_ இன்னின்ன செயலைப் புரி என்று.
திராவிட நாட்டின் விடுதலைக்காகச் செய்யப்பட வேண்டியது இன்னின்ன வகை என்று கூறி, யாருக்கும் இதுநாள்வரை கிடைத்திராத, தன்னலமற்ற திராவிடப் படையினருக்கு, வேலைகளைப் பெரியார், பகிர்ந்தளித்துவிட்டு, “பாரீர், என் படை புரியும் செயலை!’’ என்று பெருமிதத்துடன் கூறலாம்.
இதுவரை, வெற்றி பல கண்ட, வீரத் தலைவருக்கு, வாழ்க பெரியார்- என்று வணக்கம் கூறி, இதை முடிக்கிறோம்.
– ‘‘திராவிட நாடு’’ இதழ் 28.9.1947