அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 16-31 2022

எம்.ஆர்.ராதா மன்றம்
அடிக்கல் நாட்டு விழா
கி.வீரமணி


டிசம்பர் 5ஆம் நாள் அன்று புதுடில்லியில் நான் தங்கியிருந்த இந்தியா இண்டர்நேஷனல் சென்டரின் இணைப்பகத்தின் 78ஆம் அறையில், இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சந்திரஜித், பெரியார் மய்யத்தின் கவுரவ இயக்குநரான முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி.யாதவ், புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.எம்.கே.ஷைனி, புதுடில்லி பிரபல கட்டடக்கலை நிபுணர் (Architect) திரு.ராவ் மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனம் நடத்தும் கஜேந்திர சிங் ராவ், பேராசிரியர் இராமச்சந்திரன், திரு.விஜய்லோச்சோவ் ஆகியவர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.
பிற்பகல் 3:00 மணியிலிருந்து 5:00 மணிவரை நடந்த அந்தக் கூட்டத்தில், கட்டடம் கட்டுவது சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, மின்சார இணைப்பு, தொலைபேசி இணைப்பு முதலியவற்றிற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மறுநாள் காலை 10:00 மணிக்கு, அகில இந்திய இசுலாமியர் சட்ட வாரியம் _ பாபர் மசூதிக் கூட்டமைப்பு, அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பாக புதுடில்லியில் இந்திய இஸ்லாமியக் கலாச்சாரம் பற்றி “பாபர் மசூதி இடிப்பும், வருங்கால நடவடிக்கைகளும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நான் உரையாற்றினேன்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடத்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பு என்பது ஏதோ ஒரு மசூதிக் கட்டட இடிப்பு என்று தெளிவுள்ள எவரும் கருதிட முடியாது. இந்தியாவின் மதச்சார்பின்மையின் அடித் தளத்தையே இடித்ததாகும். ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி நொறுக்கியதாகும். நனி நாகரிகம், மனித நேயம் ஆகியவைகளின் கட்டுமானத்தையே தகர்த்ததாகும்.

மதச்சார்பின்மை (Secular) யில் நம்பிக்கை உள்ள எங்களைப் போன்றவர்கள் அக்கிரமங்-களைக் கண்டிக்க, தகுந்த பரிகாரம் தேடிட உங்களுடன் உள்ளோம்’’ என்று எனது உரையில் குறிப்பிட்டேன். அடுத்து, டில்லியில் பெரியார் மய்யம் அமையவுள்ள இடத்திற்கு (பாம்னோலி) திரு.சீதாராம் கேசரி அவர்களுடன் நேரில் சென்று பார்வை யிட்டேன். உடன் பேராசிரியர் நல்.இராமச்சந்திரனும் வந்திருந்தார்.
7.12.1998 அன்று டில்லியிலிருந்து புறப்பட்டு இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். மறுநாள் டில்லி பெரியார் மய்யத்திற்கு தோழர்களும் பொதுமக்களும் முடிந்த அளவு பொருளுதவி செய்யும்படி கேட்டு வெளியிட்ட அறிக்கையில்,
“விக்கிரவாண்டி தோழர் ஆசிரியர் தண்டபாணியும் அவரது வாழ்விணையர் சரோஜா அவர்களும் தங்கள் ஓய்வு ஊதியத்தில் மாதம் 1000 ரூபாய் பெரியார் மய்யம் கட்டி முடிக்கும் வரை அளிக்கிறோம்’’ என்று கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டி, ‘பெரியார் நாடு’ என்று அழைக்கப்படும் தஞ்சை உரத்தநாடு 1000 மூட்டை சிமென்ட்டை வழங்கி, அடிக் கட்டுமானத்திற்கு முந்திக் கொண்டது. மற்றவர்கள் பின்தங்கிப் போகிறீர்களா?
பன்னாட்டுத் தமிழர்களே, திராவிடர்களே, மனித நேய மாண்புள்ள உங்கள் பங்களிப்பு என்ன’’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பேரணி எனது தலைமையில் 12.12.1998 அன்று மாலை வைக்கத்திலிருந்து துவங்கியது. இந்த வரலாற்று நிகழ்வினை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா கழகக் கொடியசைத்துப் பேரணியைத் துவக்கிவைத்தார். துவக்க விழாவில் கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் கிருட்டினன், வைக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் _ சி.பி.அய். வைக்கம் செயலாளர் சுசீலன், நாராயணன், பாரதிய சாமுக்ய நீதிவேதியின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களுக்கு கழகத்தின் சார்பில் நூல்களை வழங்கினேன். இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும் பயண நிகழ்ச்சிகள் தென் மாவட்டங்களில் _ ஜாதிக் கலவரங்கள் நடந்த பல சிற்றூர், பேரூர் நகரங்களில் சிறப்பான முறையிலும், கட்டுப்பாட்டுடனும் நடை-பெற்றன. செல்லும் ஊரெல்லாம் ஆண், பெண் (பொதுமக்கள்) திரளாகக் கூடிநின்று, கவனத்துடன் உரைகளைக் கேட்டனர். சில ஊர்களில் அடைமழையிலும் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. மக்களும் மழையில் நனைந்தபடியே கலந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களும் இருந்து ‘இப்படிப்பட்ட பிரச்சாரத்தை அடிக்கடி வந்து செய்யுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டனர். எங்கள் கிராமத்திற்கு வர மாட்டீர்களா? என்ற ஏக்கத்துடன் கேள்விகள் வந்தன.

இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா 19.12.1998 அன்று மதுரை மாநகரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் நிறைவுரையுடன் நிறைவடைந்தது. இந்தப் பயணம் 1313 கி.மீ. கடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டு உரையாற்றிய தலைவர்கள்: பழ.நெடுமாறன் (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கா.காளிமுத்து (துணைப் பொதுச்செயலாளர், அ.இ.அ.தி.மு.க.), பொன்.முத்துராமலிங்கம் (தென்மாவட்ட அமைப்புச் செயலாளர், தி.மு.க.), நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்), என்.வரதராசன் (நிருவாகக் குழு உறுப்பினர், சி.பி.எம்.), துரை.சக்ரவர்த்தி (உதவிப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க.), ஏ.ஜி.எஸ்.இராம்பாபு (முன்னாள் எம்.பி., த.மா.கா.), க.ஜான் மோசஸ் (செயலாளர், ஜனதா தளம்) மற்றும் திராவிடர் கழகத்தைச் சார்ந்த இரா.குணசேகரன், க.பார்வதி, இரா.செயக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் புத்தாடை போர்த்தி ‘கீதையின் மறுபக்கம்’ நூலை அளித்து, நினைவுப் பரிசும் வழங்கினோம். விழாவில் சிறப்புரை யாற்றுகையில்,
“திராவிடர் கழக அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட தலைவர்களுக்கெல்லாம் நன்றி! நன்றி! நம்மிடையே வேறுபட்ட அரசியல் இருந்தாலும் தந்தை பெரியாரால் ஒன்றுபடுவோம் என்று இம்மேடை உணர்த்துகிறது.
இந்தப் பயணத்தின்போது மக்களிடம் நல்ல மாறுதலைக் கண்டோம் -_ அதுதான் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஜாதிப் பிரச்சினை, வெறும் சட்டப் பிரச்சினை அல்ல; அது ஒரு சமூகப் பிரச்சினை. நாங்கள் முன்னால் செல்வோம் _ சட்டம் பின்னால் வரட்டும்!
தீண்டாமை ஒழிப்பு மாநாடு வேண்டாம் _ ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள். தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளது. அதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று மாற்றவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார் _ 1973 டிசம்பரில் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில். 50 ஆண்டுச் சுதந்திரத்திற்குப் பிறகு சுடுகாட்டிலும் ஜாதி இருப்பது வெட்கக் கேடானது.

ஜாதித் தீயினால் வெந்தது போதும் _ மக்கள் மாண்டது போதும்! ஜாதியை ஒழிப்போம் _ சமத்துவத்தை உருவாக்குவோம். தென்மாவட்டங்களில் இந்தப் பயணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அய்யமில்லை. இந்தக் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அரசு மற்ற மற்ற பணிகளைத் தொடரவேண்டும். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறி நிறைவு செய்தேன். மதுரை மாநகர மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மீ.அழகர்சாமி நன்றி கூறினார்.
சென்னை இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் திரு.இராமசாமி (உடையார்) அவர்களின் மறைவுச் செய்தியை 15.12.1998 அன்று கேட்டு அதிர்ச்சி-யடைந்தேன். அப்போது தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் இருந்ததால், மறைந்த இராமசாமி (உடையாரின்) குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தியை தந்தி மூலம் அனுப்பினேன். அதில், “திரு.இராமசாமி (உடையார்) அவர்களின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிறேன். மருத்துவக் கல்விக்கு ஆற்றிய பணி என்றும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எமது உளமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என குறிப்பிட்டிருந்தேன்.
கழகத்தின் சார்பில் சென்னை _ போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இராமசாமி உடையார் உடலுக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
அன்றே மற்றொரு இழப்பாக, நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றிய தி.க. தலைவரும், பெரியார் பெருந்தொண்டரும், ‘மாலை முரசு’ செய்தியாளருமான பி.எம்.ராஜு அவர்கள் 15.12.1998 அன்று இயற்கை எய்தினார் என்பதை அறிந்து பெரிதும் வருந்தினேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தி அனுப்பி ஆறுதல் கூறினேன்.
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் தேனி மாவட்ட துணைத் தலைவர் பெரியவர் உ.மு.சங்கர் 19.12.1998 அன்று இயற்கை எய்தினார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் என் மீதும், கழகத்தின் மீதும் பேரன்பு கொண்டவர். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
மதுரையில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்ததால், உடனடியாக உ.மு.சங்கர் அவர்களது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பி வருத்தத்தை தெரிவித்துக் கொண்டேன். திராவிடர் கழகத் தோழர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் அவரது இல்லம் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

எம்.ஆர்.ராதா மன்றம் அடிக்கல் நாட்டு விழா
எம்.ஆர்.இராதா மன்ற புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி 23.12.1998 அன்று இரவு டில்லியிலிருந்து விமானம் மூலம் இரவு 10:20 மணிக்கு சென்னைக்கு வந்தார். நானும் தங்கபாலு அவர்களும் சால்வை போர்த்தி வரவேற்றோம். அவரை திராவிடர் கழகத் தோழர்களும், காங்கிரஸ் தோழர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சென்னை பெரியார் திடலில் 24.12.1998 அன்று தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பெரியார் பிஞ்சு காரைக்குடி ச.பிரின்சஸ் பேராண்டாள் (கல்விச் சாதனை), ‘தலித் முரசு’ பொறுப்பாசிரியர் புனிதபாண்டியன் (பத்திரிகையாளர்), முனைவர் பேராசிரியர் சிங்கப்பூர் கா.இராமையா (நூலாசிரியர்), பெரியார் பெருந்தொண்டர் சிங்கப்பூர் முருகு.சீனிவாசன் பொதுநலச் சேவையாளர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலக இயக்குநர் டி.பத்மநாபன், தொழிலதிபர் செவாலியர் எம்.ஜி.முத்து ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டினோம். நிறைவுரை ஆற்றுகையில், தந்தை பெரியார் கருத்துகளை ஏற்காதவர்கள் எல்லாம் இன்று ஏற்கிறார்கள் என்பதனை விளக்கி உரையாற்றினேன்.
மறுநாள் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் “சமூக நீதிக்கான வீரமணி விருது’’ (1998) வழங்கும் விழா _ பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்திற்கான புதிய கட்டடத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி அடிக்கல் நாட்டினார். அடுத்து நான் தலைமை உரையாற்றினேன். தொடர்ந்து பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் அதன் பொறுப்பாளர் முனைவர் இலக்குவன் தமிழ், “சமூகநீதிக்கான வீரமணி விருதை’’ (1998) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம்கேசரி அவர்களுக்கு வழங்கி, பட்டாடை அணிவித்து, ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையையும் பொதுமக்களின் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.

பெரியார் பன்னாட்டு மய்யப் பொறுப்பாளர் முனைவர் இலக்குவன் தமிழ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வி.நாராயணசாமி, அமெரிக்காவைச் சார்ந்த தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் ஏ.எம்.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
பெரியார் பன்னாட்டு மய்யம் சீதாராம் கேசரி அவர்களுக்கு வழங்கிய ரூபாய் ஒரு லட்சத்தை அப்படியே புதுடில்லி பெரியார் மய்யத்திற்கு வழங்குவதாக சீதாராம் கேசரி அறிவித்தார்.
இறுதியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சீதாராம் கேசரி உரையில், “சூத்திரர்கள் என்று சொல்லும் கடவுளை அழியுங்கள் என்று சொன்னவர் பெரியார். புதிய வடிவத்தில் உயர் ஜாதிக்காரர்களின் ஆதிக்கம் உருவாகியுள்ளது. பெரியாரின் சமூகநீதி என்பது சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது. பெரியாரின் மிகச் சிறந்த சீடர் வீரமணியின் பெயரால் அளிக்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன்! வேறு எப்பொழுதையும் விடப் பெரியார் இப்பொழுது மிகவும் தேவைப்படுகிறார்! “தந்தை பெரியார் உலகில் தனித்தன்மையான முதல் சிந்தனையாளர். தந்தை பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்’’ என்று அவர் உரையில் அழுத்தமாகக் கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் கழக உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி கூறினார்.
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராயிருந்து தொண்டாற்றி மறைந்த பெரியார் பெருந்தொண்டர் தூத்துக்குடி சிவனணைந்த பெருமாள் இல்ல மணவிழா 27.12.1998 அன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிவனணைந்த பெருமாள் _ இராசம்மாள் ஆகியோரின் செல்வன் சி.மகேந்திரனுக்கும், மதுரை அய்.செயராமன் _ செ.சுதந்திரவல்லி ஆகியோரின் செல்வி செ.வெண்ணிலாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் மணவிழாவினை நடத்தி வைத்து உரையாற்றினேன். விழாவில் அ.தி.மு.க. பொருளாளர் சேடப்பட்டி இரா.முத்தையா கலந்துகொண்டார்.
பெரியார் திடலில் 30.12.1998 அன்று தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற மூன்றாம் ஆண்டு இயல் _ இசை விழா நடைபெற்றது. இதில் நாதசுர சக்ரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களின் படத்தினை செம்பொனார்கோவில் எஸ்.ஆர்.டி.வைத்திய நாதன் திறந்து வைத்தார்.
மேடையில் பழம்பெரும் பாடினி ஏ.பி.கோமளா அவர்களுக்கும், முனைவர் புரட்சிதாசன் அவர்களுக்கும், ‘தந்தை பெரியார் விருது’ அளித்துப் பாராட்டினோம். விழாவில், உரையாற்றுகையில், சங்கீதத் துறையிலும் சுயமரியாதை பெறவேண்டிய அவசியத்தையும், தந்தை பெரியார் வலியுறுத்திய தமிழர் இசையின் நோக்கத்தையும் எடுத்துக் கூறி உரையாற்றினேன். விழாவிற்குப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ் இசைக் கலைஞர்களும், படைப்பாளிகளும் கலந்துகொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்வில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் படத்தினை இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் திறந்து வைத்து உரையாற்றினார். விழாவில், நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், வீதி நாடக வித்தகர் சித்தார்த்தன், செல்வி மோவாஸ்ரீ (வயலின்) ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டினோம். இவ்விழாவையொட்டி மன்றத்தில் இசை நிகழ்ச்சியும், நாடகமும் நிகழ்த்தப்பட்டன. கழகப் பொறுப்பாளர்களும், பொது மக்களும் ஏராளமான அளவில் கலந்துகொண்டனர்.
பீகார் மாநிலத் தொழில்துறை அமைச்சர் பாண்டேவும் அவருடைய துணைவியார் கிரிஜா அவர்களும் 11.1.1999 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வந்திருந்தனர். அவர்களை சால்வை அணிவித்து கழகத்தின் சார்பில் வரவேற்றேன். தந்தை பெரியாரின் நூல்களை அமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிய பின், தந்தை பெரியார் சிலை முன்பு நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளச் செயலாளர் சிவஞானசம்பந்தம், கே.நம்பியார், ஜெகவீரபாண்டியன் மற்றும் ஜனதா தள அமைப்பின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

வடமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணமாக 3.1.1999 அன்று டில்லியிலிருந்து விமானம் மூலம் பாட்னா சென்றடைந்தேன். பீகார் தொழில்-துறை அமைச்சர் திரு.பாண்டே அவர்களும், முன்னாள் எம்.பி.யும், பாண்டேயின் துணைவியாருமாகிய கிரிஜாதேவி அவர்களும், ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள முக்கியப் பிரமுகர்களும் விமான நிலையத்திற்கே வந்து மாலை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பிறகு, தொழில்துறை அமைச்சர் இல்லத்தில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதன் பிறகு சிறிதுநேர ஓய்வுக்குப் பின், பீகார் முதலமைச்சர் திருமதி ராப்ரிதேவி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
முதல்வர் திருமதி ராப்ரிதேவி, சால்வைகளை போர்த்தி தமது மரியாதையை _ அன்பை வெளிப்படுத்தியதோடு, சிறப்பான வகையில் தேநீர் விருந்தும் அளித்து, அவசியம் தமிழ்நாடு வருவதாக உறுதி அளித்தார்.
அதற்கடுத்து, பீகார் சமூகநீதிப் போராளித் தலைவரான காலஞ்சென்ற கர்ப்பூரி தாகூர் அவர்கள் நினைவு இல்லம் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விமானத்தில் உடனே புறப்பட்டு இரவு டில்லி திரும்பினேன்.
4.1.1999 அன்று புதுடில்லியில் உள்ள ஆர்ச் பிஷப் ஆலன் லாஸ்டிரிக் அவர்களையும் கத்தோலிக்க பிஷப் மாநாட்டின் தலைவர் மற்றும் டாக்டர் டான்னிக் எமானுவேல் ஆகியோரையும் சந்தித்து, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங் களினால் குஜராத்தில் கிறித்துவ மக்கள் தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, இது மதப் பிரச்சினை அல்ல; மனித நேயப் பிரச்சினை என்பதால் உங்கள் துன்பத்தில் பங்கு கொள்கிறோம். அந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று கூறினோம்.
அதற்கு ஆர்ச் பிஷப் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இரவு 7:00 மணிக்கு புதுடில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர்.நாராயணன் அவர்களை இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் (யாதவ்) அவர்களுடன் சென்று சந்தித்தேன்.
குஜராத் மாநிலத்தில் கிறித்துவ சிறுபான்மையினர் மீது மதவெறிச் சக்திகள் தொடர்ந்து இடையறாத தாக்குதலைச் செய்து கொண்டிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, அவை மீண்டும் நிகழாவண்ணம் தடுப்பதுடன் தக்க நடவடிக்கைக்கும், ஏற்கெனவே இழைக்கப்பட்ட அநீதி சம்பந்தமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் மத்திய அரசினை வற்புறுத்துவது, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது போன்றவற்றை குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்திக் கூறினோம்.
தி.மு.க.வின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான தோழர் நெல்லை புகாரி 7.1.1998 அன்று காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தந்தி அனுப்பி ஆறுதல் கூறினேன்.
(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *