மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (107)

2022 ஆகஸ்ட் 16-31 2022 மருத்துவம்

மகப்பேறு
(PREGNANCY)
மரு.இரா.கவுதமன்


இரண்டாம் நிலை:(Stage2) குழந்தை பிறப்பு :
இந்த நிலை சில பெண்களுக்கு சில நிமிடங்களில் கூட நிகழலாம். சில பெண்களுக்கு சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம். முதல் குழந்தைக்கு பெரும்பாலும், கொஞ்ச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையுண்டாகும். கருப்பை சுருங்கும் பொழுது, முக்க வேண்டும். கருப்பை சுருங்கும் பொழுது வலி உண்டாகும். அந்த நேரத்தில்தான் முக்க வேண்டும். வலியில்லாத பொழுது முக்கக் கூடாது. அதைப் போன்று செய்தால் விரைவில் களைப்பு ஏற்பட்டு விடும். அதனால் முக்குவது கடினமாகிவிடும். செவிலிய உதவியாளர் முக்கச் சொல்லும்பொழுது முக்கி, அழுத்தம் கொடுத்தால் குழந்தை மெள்ள, மெள்ளக் கீழே இறங்கும். சில நேரங்களில் பெண்களுக்கே, கருப்பை சுருங்கும் பொழுது, வலியும், முக்க வேண்டும் என்கிற உணர்வும், இயல்பாகவே உண்டாகும். குழந்தை வெளியேறும் நிலையில், சிலருக்கு படுத்திருக்கும் நிலையோ, சிலருக்கு கால்களை மடக்கி வைத்தோ, சிலருக்கு சாய்வாக அமர்ந்திருக்கும் நிலையோ வசதியாக இருந்தால் அப்படியே செய்யலாம்.

செவிலியரோ, செவிலிய உதவியாளரோ பெண்களுக்கு உதவியும், அறிவுரையும் வழங்குவர். அதுபோல் செய்தால் பெண்களுக்குக் குழந்தை பிறப்பு எளிதாக இருக்கும். சில நேரங்களில் லேசாகவும், சில நேரங்களில் முக்க வேண்டிய நிலையும் உண்டாகலாம். மெதுவாக முக்கி குழந்தை வெளியேறும் பொழுது பிறப்புறுப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வேகமாக முக்கும் பொழுது, சில நேரங்களில் பிறப்புறுப்பு கிழிந்து குழந்தை வெளியேறலாம். சில நேரங்களில் மருத்துவரோ, செவிலியரோ, லேசாகக் கீறி, பிறப்புறுப்பில் வழியை அதிகமாக்கி குழந்தை வெளியேற உதவுவர். குழந்தை வெளியேறிய பின் கீறிவிட்ட பகுதியை மீண்டும் இணைத்து விடுவர்.

குழந்தை கால்களுக்கிடையே வெளியேறும் உணர்வை இந்த நிலையில் தாயால் நன்கு உணர முடியும். பொதுவாக முதலில் தலைப்பகுதிதான் (Head Presentation) வெளியேறும். தலை வெளியேறிய உடன் , உடல் பகுதி எளிதாக வெளியே வந்து விடும். குழந்தை வெளியேறியவுடன் குழந்தை கத்தும் (Cry). தாய்க்கு எல்லையற்ற மகிழ்ச்சியும், பெருமையும், கர்வத்தையும் உண்டாக்கும் தருணம் அது. தாய்க்கு வலி முழுமையாக நின்றுவிடும். குழந்தை சில நேரங்களில் அழாது. பனிக்குட நீர் குழந்தையின் வாயில், தொண்டடையில் அடைத்துக் கொண்டு இருக்கலாம்.


அது சில நேரங்களில் மூச்சுவிடுவதில் தடையுண்டாக்கி, குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகலாம். செவிலியர்களோ, செவிலிய உதவியாளரோ குழந்தையின் தொண்டை யிலிருக்கும் நீரை, உறிஞ்சி வெளியேற்றி விடுவர். குழந்தை அழத் தொடங்கும். எந்தச் சிக்கலும் இல்லாத குழந்தை பிறப்பில் செவிலியர் சில நிமிடங்கள் பொறுத்து “தொப்புள் கொடி”யை (Umbilical Cord) கட்டி, வெட்டி விடுவார். தாயும், சேயும் தனித்தனியாகி விடுவர்.
சில நிமிடங்களில் கழித்து, தொப்புள் கொடியை வெட்டி விடுவது, குழந்தைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். பேறு காலத்திற்குப் பின் இரத்த சோகை, குழந்தைக்கு ஏற்படாமல் தவிர்க்க உதவும். சில நேரங்களில் வயிற்றில் குழந்தை தலை மாறிய நிலையில் கூட இருக்கலாம். அந்த நிலையில் (Breech position) செவிலியரோ, மருத்துவரோ குழந்தை பிறப்பிற்கு முழுமையாக உதவுவார். குழந்தை வயிற்றில் வேறு நிலையில் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை. மருத்துவர், செவிலியர் அறிவுரைப்படி நடந்தால் குழந்தைப் பிறப்பு இயல்பாக நடந்துவிடும்.

மூன்றாம் நிலை (Stage 3) : நஞ்சுக்கொடி வெளியேற்றம் (Delivery of placenta):
குழந்தை வெளியேறிய உடன் தாய்க்கு மிகுந்தளவு நிம்மதி ஏற்படும். ஆனால் கருப்பையில் இன்னும் நஞ்சுக்கொடி இருக்கும். அதுவும் வெளியேறினால்தான் பிறப்பு முழுமை பெறும். நஞ்சுக்கொடி கருப்பைச் சுவரிலிருந்து குழந்தை வெளியேறியவுடன் பிரியத் துவங்கும். இதற்கு சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகலாம். இந்த நேரத்தில் கருப்பை சுருங்கி விரியும். ஆனால் குழந்தையை வெளியே தள்ளும் பொழுது ஏற்பட்ட சுருங்குதல் போல் கடுமையாக இது இருக்காது. லேசாகத்தான் இருக்கும். அதனால் வலியும் லேசாக இருக்கும். இதுபோல் சுருங்குவதால் நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரியும். செவிலியர்கள் அதை வெளியேற்ற உதவுவார்கள். நஞ்சுக்கொடி வெளியே வரும் நிலையில் சற்று தாய் முக்க வேண்டியிருக்கும். நஞ்சுக்கொடி வெளியேறிதும், கருப்பை மெள்ள, மெள்ள சுருங்கத் தொடங்கும். நஞ்சுக்கொடி எளிதாகப் பிரிவதற்கும், பிரிந்த பின் இரத்தப் போக்கு அதிகம் ஏற்படாமல் இருக்கவும் மருத்துவர் ஊசி மருந்துகள் தாய்க்குச் செலுத்துவர். நஞ்சுக்கொடி முழுமையாக வெளியேறிவிட்டதை செவிலியர் உறுதிப்படுத்திக் கொள்வார். ஏதேனும் நஞ்சுக் கொடித் துண்டுகள் கருப்பையில் நின்றுவிட்டால் இரத்தப் போக்கு ஏற்படும். மருத்துவர் அவற்றை சுத்தம் செய்வார். இரத்தப் போக்கு நின்று விடும். இரத்தப் போக்கு முழுமையாக நின்றுவிட்டால் நஞ்சுக்கொடி முழுமையாக வெளியேறியபின் கருப்பை முழுதுமாகச் சுருங்கி இயல்பு நிலையை அடையும்.

சில நேரங்களில் நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும். அப்படி ஏற்பட்டால் குழந்தை கருப்பையிலிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும்.

சில நேரங்களில் இயல்பான குழந்தை பிறப்பு ஏற்படாத நிலை கூட உண்டாகலாம். குழந்தையின் இதயத்துடிப்புக் குறையும் நிலை, குழந்தை வளர்ச்சியில் குறை, இரண்டும் அதற்கு மேற்பட்டு குழந்தைகள் கருப்பையில் வளர்தல் போன்ற நிகழ்வுகள் உண்டானால் அறுவை மருத்துவம் (cesarean) செய்து குழந்தையை / குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டி-யிருக்கும். இன்றைய மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் அறுவை மருத்துவம் செய்து குழந்தையை எடுப்பது என்பது பயப்பட வேண்டிய ஒரு நிகழ்வல்ல. மருத்துவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினால், அஞ்சாமல் அந்த மருத்துவத்தைச் செய்து கொள்ள வேண்டும்.

அக்காலத்தில் பெற்றோர்கள், பாட்டிகள் எல்லாம் பல குழந்தைகள் (பத்துக் குழந்தைகள் கூடப்) பெற்றார்கள். அவர்கள் காலத்தில் குனிந்து, நிமிர்ந்து வீட்டு வேலைகளைச் செய்து வந்தனர். அதனால் வயிற்றுப் பகுதித் தசைகள் எல்லாம் கடினப்பட்டு, இருந்ததால் பேறுகாலம் எளிதாக இருந்தது. அறுவை மருத்துவத் தேவை குறைவாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் வீட்டு வேலைக்கும், சமையலறைக்கும் பல பொறியியல் சாதனங்கள் வந்துவிட்டதால், வயிற்றுப் பகுதித் தசைகளுக்கு அதிக வேலை இல்லை. அதனால் தசைப் பகுதி மென்மையாகிவிடுகிறது. பேறு காலத்தில், முக்கிக் குழந்தையை பெற போதுமான சக்தி இல்லாது போகிறது. அதனால் பல பெண்களுக்கு அறுவை மருத்துவம் மூலமே குழந்தையை வெளியே எடுக்க நேரிடுகிறது.