சமூகநீதி : தமிழ்நாடு தந்தை

பிப்ரவரி 1-15,2022

பெரியார் மண்!

தமிழ்நாடு எப்போதும் பெரியார் மண் என நாம் கூறுவதை, சிலர் வீம்புக்காக எதிர்த்தாலும், உண்மை என்பது நிலையானது. அந்த வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட மாநிலங்களின் வறுமை ஒழிப்புப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்காக பல பொருளாதார ஆய்வாளர்கள் கூறும் காரணங்கள் _ தொடர்ந்து தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறை, திராவிட ஆட்சியின் திட்டங்கள் சார்ந்த நடைமுறை எல்லாவற்றையும்விட தந்தை பெரியாரால் கொண்டுவரப்பட்ட ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் சமூகநீதியே தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

2015இல் மத்திய திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை ஏற்படுத்தியது மத்திய பா.ஜ.க. அரசு. நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட பிறகு, முதன்முதலாக வறுமை குறித்த விரிவான ஆய்வறிக்கை இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை உணவு, உடை, குடிநீர், தங்குமிடம், கல்வி, வேலை, சுகாதாரம் எனப் பல அம்சங்களைக் கணக்கில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமான ஏழைகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியவை பிடித்திருக்கின்றன. குறைவான ஏழைகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன. வறுமை குறைவாக இருக்கும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. பல பரிமாண வறுமைக் குறியீட்டில் பிகார் 51.91%, உத்தரப்பிரதேசம் 37.79% ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாடு வெறும் 4.89%, கேரளா 0.71% ஆக இருக்கின்றன.

இந்தியாவில் 11.71 சதவிகிதத்துடன் அதிக வறுமையான மாவட்டமாக வாரணாசி இருக்கிறது. இந்தியாவில் ஏழைகளே இல்லாத மாவட்டமாக, கேரளாவின் கோட்டயம் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வளர்ந்த மாநிலம்’ என்ற பா.ஜ.க.வினர் சொல்லிக்கொள்ளும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 18 சதவிகித மக்கள் ஏழைகள் என்கிறது ஆய்வறிக்கை. தென் மாநிலங்களில் வறுமை குறைவாகவும், வடமா-நிலங்களில் வறுமை அதிகமாகவும் இருப்பதற்கான காரணங்கள் பற்றிய விவாதத்தை இந்த ஆய்வறிக்கை உருவாக்கியிருக்கிறது. “தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் கல்வியறிவும், தொழில் வளர்ச்சியும் அதிகம். இங்கு ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது கிடையாது. இவையெல்லாம் இங்கு வறுமை குறைந்ததற்கான முக்கியக் காரணங்கள்.’’ மேலும்,

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறு, சிறு தொழில்களும் அதிகம். அரசு உதவிபெறும் பள்ளி என்கிற முறை தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. 1980களிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு வளர்ந்துவிட்டது. இங்கு பெண் கல்வி அதிகரித்ததால், நிறைய பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். பொது விநியோகத் திட்டம் சிறப்பாக இருப்பதால், உணவுப் பிரச்சினை இல்லை. ஆட்சிகள் மாறினாலும் மாநில நலன் சார்ந்த கொள்கைகளை யாரும் மாற்றுவதில்லை. வறுமை ஒழிப்புக்கு இங்குள்ள இடஒதுக்கீடு முறை முக்கியப் பங்காற்றுகின்றது என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் ராஜலட்சுமியும் கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறுகிறார்… “தென் மாநிலங்கள்போல வடமாநிலங்களில் சமூகநலத் திட்டங்கள் இல்லை. 100 நாள் வேலைத் திட்டம்கூட அங்கு சரியாகச் செயல்படுத்தப்படுவதில்லை. இடஒதுக்கீட்டால் தமிழ்நாட்டில் வறுமை பெருமளவு ஒழிக்கப்-பட்டிருக்கிறது. பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கிய சமூக சீர்திருத்த இயக்கங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகியிருக்கின்றன என்கின்றார்.

ஏன்? இங்கு அனைத்துத் தரப்பு மக்களாலும் தந்தை பெரியார் போற்றப்படுகிறார் என்பதும், அவரின் சிலைக்குச் சேதம் வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் திரள்வது எதனால் என்பதை இனியாவது மதவாதிகள் புரிந்துகொள்ளட்டும்.

– மகிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *