சிறுகதை : அனாதையர்

பிப்ரவரி 1-15,2022

கு.கண்ணன்

நேரம் காலை எட்டு மணியை நெருங்கும்போது அனாதையர் காப்பகத்துக்குள் சிற்றுண்டி, தேநீருடன் தயாளன் நுழைந்தான். எதிர்பார்த்துக் காத்திருந்த கட்டழகுக் கன்னி கலைவாணி, “வணக்கம். வாருங்கள்! வாருங்கள்!!’’ என்ற நகைமுகத்தோடு வரவேற்றாள். காப்பகத்துள்ளோரெல்லாம் கைகூப்பி வணங்கி களிப்புடன் வரவேற்றனர். காப்பகத்திலுள்ளோர் அனைவரும் சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு மாதமும் அய்ந்தாம் தேதியன்று காப்பகத்திலுள்ளோர் அனைவர்க்கும் மூன்று வேளையும் உணவு வழங்குவதை கடமையெனக் கொண்டிருந்தான் தயாளன். நண்பகல் உணவு வழங்குவதற்காக 12:15 மணிக்கு காப்பகத்திற்கு வந்து காத்திருந்தான். மங்கை கலைவாணி மன மகிழ்வோடு தயாளனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மூன்று சக்கர ஊர்தியில் உணவு வந்தது. காப்பகத்திலுள்ளோர் அனைவரும் வரிசையில் அமர்ந்தனர். இனிப்புடன், ஒரு கரண்டி அளவில் சாம்பார் சாதம், பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், வடை, வாழைப்பழம் வழங்கப்பட்டன. கலைவாணி, அவளின் அன்னை ஆகியோ-ரோடு தயாளனும் அமர்ந்தான். அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

பூவரச மரத்தடியில் தயாளனும் கலைவாணியும் பேசிக் கொண்டிருந்தனர். கலைவாணி கலகலப்பாக தயாளனுடன் பேசி மகிழ்வதை அதிகம் விரும்புகிறாள் என்பதை உணர்ந்ததால் தானும் உள்ளூர மகிழ்ந்தான். எந்தப் பெண்ணிடமும் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை முடித்துக் கொள்பவனுக்குக் கலைவாணியிடம் நெடுநேரம் பேசுவதில் வெறுப்பேற்படவில்லை. மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுவதாக உணர்ந்தான். நீண்ட நேரம் பேசியதில் தயாளனின் நெஞ்சில் நிறைந்துள்ள நேர்மை, தூய்மை, அன்பு, பண்பு, ஈகை ஆகிய நற்பண்புகளை அறிந்தும், பகட்டின்றி எளிமையாயிருத்தல் கண்டும் உள்ளூர மகிழ்ந்தாள்.

“உங்கள் வீட்டை நான் பார்க்க விரும்புகிறேன். என்னை அழைத்துப் போவீர்களா?’’ திடீரென கலைவாணி, தயாளனிடம் கேட்டாள்.

“மறுக்க மாட்டேன்’’ தயாளன் ஒப்பினான்.

“அப்படியானால் இப்போதே நாம் போகலாம்’’

“சரி. புறப்படு’’ என்றவன் தனது விசைஈருருளியில் (விஷீtஷீக்ஷீ ஙிவீளீமீ) கலைவாணியை ஏற்றிக் கொண்டு தன் இல்லம் வந்தான்.

“வீடு பூட்டியிருக்கிறதே!’’ அதிசயப்பட்டாள் கலைவாணி.

பூட்டைத் திறந்து வீட்டிற்குள் நுழையும்-போது, “உங்களின் பெற்றோரை…’’ என்று கலைவாணி வினவியதற்கு, “உள்ளே இருக்கிறார்கள் வா…’’ என்று அழைத்துச் சென்றான். கூடத்தை அடுத்த அறையில் சுவரையொட்டியவாறு மய்யப் பகுதியில் மேசை மீது மாலையுடனான தம்பதியர் படத்தைக் கண்டு வியப்பும் வேதனையும் வெளிப்பட “இவர்கள்…’’ என கவலையோடு கேட்டாள் கலைவாணி.

“இவர்கள்தான் எனது பெற்றோர்’’ என்ற தயாளனின் குரலில் சோகம் இருந்தது.

“உங்கள் பெற்றோரைக் காண்பதற்காகத்தான் நான் வந்தேன்’’ என்றாள் கலைவாணி.

சோகத்தோடு தயாளன் கூறியது, “பண்பும் அன்பும் நிறைந்தவர்கள். ஒரே அலுவலகத்தில் இருவரும் பணியிலிருந்ததால் இணைபிரியா திருந்தவர்கள். சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் தூய்மையானவர்கள். பாசம் மிகுந்த பெற்றோர். இரண்டாண்டுகளுக்கு முன் நவம்பர் மாதம் 5ஆம் தேதி காலை ஏழு மணி. தாயார் வீழ்ந்த சத்தம் கேட்டு நானும் என் அப்பாவும் ஓடிவந்து அம்மாவை தூக்கிச் சென்று படுக்க வைத்தோம். மூடிய கண்களை அம்மா திறக்கவேயில்லை.

“அம்மா! அம்மா!’’ வென நானும் அப்பாவும் அழைத்தோம். அம்மாவின் உடலை உலுக்கி உலுக்கிப் பார்த்தோம். அம்மா அசையவில்லை. அதன் பின்புதான் அம்மா இறந்துவிட்டார் என்பதை உணர்ந்தோம். பெருங்குரலில் நானும் அப்பாவும் கதறினோம். அப்பா பெருங்குரலில் அழுதார். “எங்கும் எப்போதும் என்னை அழைத்துக் கொண்டுதானே போவாய். இப்போது எப்படி என்னை விட்டுவிட்டுப் போனாய்? இரு இதோ நானும் வருகிறேன்’’ என்றவாறு அம்மா மீது அப்பா வீழ்ந்தார். வீழ்ந்தவர் எழவே இல்லை. பத்து நிமிடத்திற்குள் அம்மாவைப் பின்தொடர்ந்து அப்பாவும் மரணமடைந்தார். பதினைந்து நிமிடங்களுக்குள் பெற்றோரை இழந்து அனாதையானேன் நான்’’ என கண்ணீர் மல்க குரல் தழுதழுக்கக் கூறினான்.

கலைவாணியும் கவலையுற்றாள். கண்ணீர் வடித்தாள். அமைதி நிலவியது சிறிது நேரம்.

“உங்களைப் பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’’ என்றாள் கலைவாணி.

“சுற்றமேதும் இல்லா தனியன் நான்’’

“பெற்றோர் வழி சொந்த பந்தங்கள் இருக்குமே!’’

“இல்லவே இல்லை!’’

“ஏன் இல்லை?’’

என் தந்தை மாசிலாமணி, முதலியார் இனத்தவர். தாயார் ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடராவார். பெற்றோராலேயே என் தந்தை இழிவுபடுத்தப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்டார். தாயாரின் பெற்றோர் மனிதநேயங்கொண்ட மாசற்றோர்.

உழைத்து உண்டு உயிர் வாழ்ந்த உத்தமர்கள். அன்பால், அறிவால், நற்பண்பால் நல்லொழுக்கத்தால் உயர்ந்தவர்கள். மகளை வெறுக்காமல், அவர் விரும்பியவரையே மருமகனாக ஏற்றுக்கொண்டு இருவர்க்கும் தங்களின் இறுதி மூச்சு வரை ஆதரவு அளித்து வந்தனர். அவர்களின் மறைவால் உறவும் மறைந்துவிட்டது. தற்போது உறவேதுமில்லாத ஒருவனான நான் ஓர் அனாதை’’ என்றான் தயாளன்.

“அனாதையில்லை நீங்கள். காப்பகத்திலுள்ள அனைவரும் உங்களின் சொந்தங்களே! சரி, உங்களைப் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும்!’’

“என்னைப் பற்றி என்ன தெரிய வேண்டும்?’’

“நீங்கள் யாரையாவது காதலித்ததுண்டா?’’

“இல்லை, இல்லவே இல்லை! எந்தப் பெண்ணையும் நெருங்க விட மாட்டேன்’’

“காதல் தோல்வியில் பெண்கள் மீது வெறுப்பா?’’

“காதல் வயப்பட்டதில்லை நான்!’’

“ஏன்?’’

“நான் ஒருத்தியைக் காதலிக்க, என் பெற்றோர் வேறொருத்தியை மணக்கும்படி தீர்மானித்து விட்டால் இக்கட்டான நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் நான் காதலில் ஈடுபடவில்லை.’’

“இப்போது யாரையாவது நீங்கள் காதலிக்கலாமே!’’

“எனக்கான வாழ்வென்றால் காதலிக்கலாம். ஆனால், நான் அனாதையர்க்காக வாழ விரும்புகிறேன்.’’

“அனாதையரில் ஒரு பெண்ணை மணப்பீரா?’’

“என்னை நன்கு புரிந்துகொண்டு என் கொள்கைக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவளை மணந்துகொள்ள விரும்புவேன்.’’

“இந்தத் தகுதி எனக்கிருக்கிறது என்றால் என்னை ஏற்றுக்கொள்வீரா?’’

“என்ன சொல்லுகிறாய்?’’

“உங்களை நான் விரும்புகிறேன், காதலிக்கிறேன்!’’

“உண்மையாகவா?’’

“ஆமாம். உங்களை நான் விரும்புகிறேன், உளமார காதலிக்கிறேன்.’’

“முதல் நாளே, முதல் பார்வையிலேயே என் உள்ளம் புகுந்தவள் நீ! என் காதலை வெளிப்படுத்த உன் பிராமணியம் தடுத்தது, அடங்கிவிட்டேன்.’’

“நானும் அப்படித்தான். சொல்ல முடியாமல் தவித்தேன். இன்று துணிந்துவிட்டேன். என் காதலைச் சொல்லிவிட்டேன்.’’

“முதலில் நான் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.’’

“சொல்கிறேன். நாங்கள் அய்யர் பிரிவைச் சார்ந்த பிராமணர்கள். என் தந்தை சுப்ரமணி அய்யராவார். அவர் ஒரு தனியார் குழுமத்தில் நாலாந்தர சிப்பந்தியாக பணியில் இருந்தார். உண்மையாளராக இருப்பார். நண்பர்கள் குறைவு. தீய பழக்கமேதும் இல்லாதவர். நெருக்கமானவர் நண்பர்கள் குறைவு. அன்பானவர், கண்டிப்பானவர். திடீரென ஒரு நாள் செவ்வாய் தினம் அவர் நெஞ்சை அழுத்திக்கொண்டு அம்மாவென்று கதறினார். அம்மாவும் நானும் ஓடிவந்தோம். நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அல்லல்படுவதைக் கண்டு நாங்கள் அலறினோம். அப்பாவை நாங்கள் தாங்கிக் கொண்டோம். ஆயினும் அப்பா நழுவி வீழ்ந்துவிட்டார். அப்பா இறந்துவிட்டார் என்பதை அறிந்து நானும் அம்மாவும் கண்ணீர் வடித்துக் கதறினோம். ஆதரவற்ற அனாதை-களானோம் அம்மாவும் நானும். உற்றார் உறவினர் ஒதுங்கிப் போயினர். வாழ்ந்த  வீட்டை விற்றுவிட்டோம். வறியரானோம்.

போகுமிடம் தெரியாமல் கால்போகும் போக்கில் வரும்போது அனாதையர் காப்பகம் அம்மாவின் கண்ணில் பட்டது. வாயிலை உற்று நோக்கியவாறு நின்றிருந்த என் தாயார், “வா உள்ளே போவோம்’’ என்றதால் இந்தக் காப்பகத்துக்குள் நுழைந்தோம். உள்ளே அனைவரும் உணவு உட்கொண்டிருந்தார்கள். உட்காரும்படி கூறியவர்கள் எங்களுக்கும் உணவு வழங்கினர். உண்டு முடித்ததும், “இனி இதுதான் நமக்கு வாழ்விடம்’’ என்றார்.

என் அன்னையின் முடிவின்படி இந்தக் காப்பகம் எங்களுக்கும் வாழ்விடமானது’’ என்று முடித்தாள் கலைவாணி.

“உறவுகளை இழந்தனர் என் பெற்றோர். அவர்களை இழந்துவிட்ட நான் அனாதையானேன். அப்பாவெனும் ஒப்பில்லா உயரிய சொந்தத்தை இழந்துவிட்ட நீங்களும் அனாதைகளானீர். என்னைக் காதலிக்கும் உன்னை நானும் காதலிக்கிறேன். என்றாலும் உன் அன்னையின் அனுமதி கிடைத்தால்தான் நம் காதல் வாழும்.’’

“ஆமாம் அம்மாவின் அனுமதி அவசியம். வாருங்கள் என் அன்னையிடம் போவோம்’’ என்று கலைவாணி அழைத்ததும் இருவரும் காப்பகம் வந்தனர்.

“அம்மா’’ என்றழைத்தவாறு காப்பகத்தில் அம்மாவின் அறைக்குள் நுழைந்தனர்.

“வாம்மா. தயாளன் தம்பியின் வீட்டாரைப் பார்த்தாயா?’’ என்று கலைவாணியின் தாயார் கேட்டார்.

“தாயும் தந்தையும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் இறந்து விட்டார்களாம். உற்றார் உறவினர் யாருமில்லை! தயாளன் தனி மனிதர்… அனாதை.’’

“அருமையான பிள்ளை! தயாளன் அனாதையா?’’

“அம்மா! நான் சொல்வதைக் கேட்டு கோபப்படக் கூடாது.’’

“கலை! என்றைக்கு நான் கோபப்பட்டிருக்கிறேன் தயங்காமல் சொல்ல வந்ததை சொல்லம்மா.’’

“அம்மா!… அம்மா!’’

“ஏன் தயக்கம். சொல்ல வந்ததைச் சொல்லி விடு! கோபிக்க மாட்டேன்!’’

“அம்மா! நான் ஒருவரை… விரும்புகிறேன்’’

“யாரை விரும்புகிறாய்? தயாளனையா?’’

“ஆமாம் அம்மா! நீங்கள் சம்மதிக்க-வில்லையென்றால்…’’

“தயாளன் உன்னை விரும்புகிறானா?’’

“அம்மா. நீங்கள் சம்மதித்தால்தான் அவர் என்னை விரும்புவார்.’’

“அவன் பிராமணாள் இல்லையே’’

“பிராமணனைவிட பன்மடங்கு உயர்ந்தவர். உதாரணகுணமுள்ளவர். உள்ளத்திலும், நடத்தையிலும் தூயவர். உதவும் உள்ளத்தவர்.’’

“நல்லவனை, நம்பிக்கைக்குரியவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்’’

கண் கலங்கவிடாமல் உன்னைக் காப்பாற்றுவான்! நீங்கள் இருவரும் ‘கணவன் _ மனைவி’ என ஒன்றுபட்டு வாழ நான் சம்மதிக்கிறேன்.’’

“நான் அவரைக் கூப்பிடுகிறேன்’’ என்றவள் தயாளனை அழைத்து வந்து தன் அன்னையின் முன் நிறுத்தினாள்.

“தம்பி என் மகள் கலைவாணியை விரும்புகிறாயா?’’ கலைவாணியின் தாயார் கேட்டார்.

“அம்மா! நீங்கள் என்னை நம்பினால் -_ சம்மதித்தால் கலைவாணியை நான் மணந்துகொள்வேன்’’ தயாளன் பணிவுடன் கூறினான்.

தம்பி! உன்னைப் பெரிதும் நம்புகிறேன். என் மகளை நீ மணந்துகொள்ள நான் சம்மதிக்கிறேன்.

கலைவாணியின் தாயார் ஒப்புதல் அளித்த அதே வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று அனாதையர் காப்பகம் திருமண விழாக்கோலம் பூண்டிருந்தது. திருமண விழாவின் தலைவரான காப்பகத்தின் உரிமையாளர் பேசும்போது, மணமகன் மணமகளுக்குச் சூட்டப்போகிற திருமாங்கல்யம் வித்தியாசமானது. மாங்கல்யம் இலைவடிவில். இணைந்த இதயங்களை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டு ஒரு பக்கத்தில் ‘திருமணம்’ என்றும் அதன் கீழே மாசிலாமணி தயாளன் என்பதைக் குறிப்பதற்காக “மா.த.’’ என்றும் அடுத்து ஒரு ‘+’ இணைப்புக் குறி. அதன் பக்கத்தில் மணமகளின் பெயரான “சுப்ரமணி அய்யர் மகள் கலைவாணி’’ என்பதைக் குறிப்பதற்காக “சு.க.’’ என்று எழுத்துகளும், அவற்றின் கீழே திருமண நாளின் தேதியையும் பதிவு செய்திருக்கிறார்கள். மறு பக்கத்தில் “குடும்ப விளக்கு’’ என்று எழுதப்பட்டு அதன் கீழே “ஓர் அகல் விளக்கு’’ எரிவது போல் வரையப்பட்டுமுள்ளது. இது அர்த்தமுள்ள புதுவிதமான மாங்கல்யம். இந்த மாங்கல்யத்தை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார்’’ என்று வழங்கியதும், தயாளன் வாங்கி கலைவாணிக்கு அணிவித்தார். பின்பு ஒரு பேச்சாளர் பேசும்போது “இங்கு நடைபெற்ற இத்திருமணமானது திருந்திய சீர்திருத்தத் திருமணமாகும். எப்படியென்றால் மணமகன் ஜாதி மறுப்புத் திருமணத்தால், முதலியார் குமாரன். மணமகள் அய்யர் இனமான பார்ப்பன மங்கை. இதுபோன்ற ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிக அளவில் நம் சமுதாயத்தில் நடைபெறுமானால் உயர்வு தாழ்வு, தீண்டாமை ஒழிந்து, சகோதர உணர்வும் தமிழரெனும் ஒற்றுமையும் ஓங்கும். வாழ்க மணமக்கள்!’’ இவ்வாறு அவர்கள் திருமணம் முடிந்தது.

பிற்பகலில் தயாளனும் கலைவாணியும் தங்கள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர். மாலையில் தயாளன் தனது மனைவியையும் மாமியாரையும் அழைத்துக் கொண்டு தனது இல்லம் வந்தான். மணமக்களான தயாளனும் கலைவாணியும் மாமனார் மாமியார் இருவருமுள்ள படத்தின் முன்பு மண்டியிட்டு வணங்கினர்.

நேற்று வரைதான் நாம் அனாதையராக இருந்தோம்! இன்று அப்படியல்ல என்று கூறியவாறு மகிழ்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *