ஆசிரியர் பதில்கள் : காவி ஒட்டுண்ணிகள்!

நவம்பர் 1-15,2021

கே1:     ஆர்.எஸ்.எஸ். அஜண்டாக்களை ஒவ்வொன்றாக ஆதரிக்கும் தமிழ்த்தேசியர்கள், தாய்மதம் திரும்பவும் அழைப்பு விடுத்துள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?

               – அருணாசலம், வேலூர்

ப1:        நாம் இவர்களது முகமூடியைக் கிழித்துக் காட்டி, இவர்கள் யாருடைய ஊது-குழலாக, விலைபோன சரக்குகளாக இருக்கிறார்கள் என்று அவர்களை நம்பும் அப்பாவி இளைஞர்களுக்கும் ஏனையோருக்கும் ‘புலம்’ பெயர்ந்த புரியாதவர்களுக்கும் புரிய வைக்க வேண்டிய பணியை மிக எளிதாக்கி, தங்களது வேடத்தைத் தாங்களே நன்கு கலைத்துக் காட்டி வருகிறார்கள்! ‘திராவிடர் இயக்க எதிர்ப்பு’ _ யாருடைய தூண்டுதலால் நடைபெறுகிறது என்பது புரிந்துவிட்டது; பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இவர்களிடம் எது இல்லையோ அதுவே பெயராக இருப்பது-தான் மிச்சசொச்சம்! காவி ஒட்டுண்ணிகள் இவர்கள் _ புரிகிறது நன்றாக!

கே2:     உள்ளாட்சித் தேர்தலில் எந்த முறைகேடும் நடக்காத நிலையில், ஆளுநரிடம் புகார்அளித்த அ.தி.மு.க. தலைவர்களின் உள்நோக்கம் என்ன?

               – ஸ்டீபன், சைதை

ப2:        தோல்வியை ஏற்று, ‘நோய் நாடி நோய் முதல் நாடும் பக்குவம்’ _ ஜனநாயகப் பயிற்சி இல்லை என்பதற்கு அதுவே நல்ல சான்றாகும்! ‘ஆடத் தெரியாதவர் கூடம் கோணல்’ என்று சொன்ன கதை போல்!

கே3:     ஆளுநர் தலைமைச் செயலர் மூலம் துறைகள்சார் அறிக்கை கேட்பது மரபு மீறலா? வரம்பு மீறலா? அல்லது சரியானதா?

               – உமாபதி, சேலம்

ப3:        கவர்னர் ஆட்சி நடைபெறவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் முதல் அமைச்சர் தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெறும் நிலையில் அத்துமீறிய அரசியல் கூடாது; ஏற்கத்தக்கதல்ல. நடைபெறுவது ‘இரட்டை ஆட்சி’யும் அல்ல!

கே4:     முற்பட்ட ஜாதியினர்க்கு பொருளாதார அடிப்படையில்10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா-?

               – சிவசந்திரன், ஈரோடு

ப4:        வழக்கு நிலுவையில் உள்ளது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கே5:     காந்தியார் சொல்லித்தான் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பது உண்மையா?

               – சோமசுந்தரம், தாம்பரம்

ப5:        பொய்! அப்பட்டமான பொய் _ ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பலரும் இந்த பொய்த் திரையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்துவிட்டனர்!

கே6:     உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற சட்டப்படி முடியாதா?

               – ராமதாஸ், குன்றத்தூர்

ப6:        அதற்காகவே வருங்காலத்தில் மக்களின் பெரிய அறப்போராட்டம் தேவை! தேவை!

கே7:     திட்டமிட்டு, பயிற்சியளித்து அதிக அளவு ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அய்.ஏ.எஸ்.ஆக ஆக்குகிறார்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது தீவிர கவனத்திற்கும், எதிர் முயற்சிக்கும் உரியதல்லவா?

               – அருள்முருகன், பொன்னேரி

ப7:        எல்லா எதிர்க்கட்சியினரும் இதுபற்றி அறிந்துள்ளார்கள். இது திட்டமிட்டு நடத்தப்படும் ஆதிக்க ஆக்கிரமிப்பு.

கே8:     ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்தால் மீண்டும் தீர்மானம் இயற்றினால் ‘நீட்’ நீக்கப்படுமா?

               – பெரியார் சித்தன், திருச்சி

ப8:        பிறகு அனைவரும் கூடி அடுத்த கட்டம் பற்றி யோசிப்போம்; அரசும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கும். இது நீண்ட போராட்டமாகும். நுழைவுத் தேர்வுப் போராட்டம் 24 ஆண்டுகள் நடந்தது என்பது நினைவூட்டப்பட வேண்டிய தந்தை பெரியாரின் சமூகநீதிப் போர் போன்ற ஒரு தொடர் யுத்தமாகும்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *