சிந்தனைக் களம் : பார்ப்பனர்களுக்கு 1971ம் – 2021ம்

உங்களுக்குத் தெரியுமா? நவம்பர் 1-15,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

கேள்வி: தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று கூறிய ஈ.வெ.ரா. பெண் விடுதலை பற்றிய தனது எழுத்தில் அதைவிட மோசமாக எழுதியது எந்த சித்தாந்தத்தின்படி?

பதில்: ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள் _ இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருக்கும் பா.ஜ.க. _ அனைவரும் போற்றும் பெரியாரிஸச் சிந்தாந்தப்படி.

(‘துக்ளக்’ 27.10.2021, பக்கம் 10)

‘அய்யோ பாவம் குரூமூர்த்தி அய்யர்வாள்! பெரியாரைப் பாராட்டுவோர் பட்டியலில் பா.ஜ.க.வையும் சேர்த்துவிட்டார். நம்பியிருந்த ஓராளும் நட்டாற்றில் விட்டு விட்டாரே என்று ஒப்பாரி வைக்கிறார்!

பெரியாரை ஈ.வெ.ரா. என்று சொல்லாதீர்கள் _ சிறுமைப்படுத்தாதீர்கள் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருந்த திரு.எல்.முருகன் சொன்ன மாத்திரத்திலேயே ‘துக்ளக்’ குருமூர்த்திக்கு மூக்கு மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்பியது; பூணூலே துடிதுடித்து, குருதிக் கொதிப்பு ஏறி தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது.

சோவின் சீடர், ‘எச்சரிக்கை’ என்று தலையங்கத்தின் பக்கத்திலேயே அப்படியே பொரிந்து தள்ளினார் துக்ளக்கில் _ குருமூர்த்தி அய்யர்வாள்.

கேள்வி: திடீரென்று தமிழக பா.ஜ.க., பெரியாரைக் கொண்டாட ஆரம்பித்திருக்-கிறதே?

பதில்: ஈ.வெ.ரா.வை ஏற்றுக்கொண்டால், கழகங்களின் வாக்குகள் பெருமளவு தங்களுக்கு மாறி, 60 இடங்களைப் பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. நினைப்பது போலிருக்கிறது. காங்கிரஸுக்கு 1967, 1971 தேர்தல்களில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி அறிய, அன்றைய தமிழக அரசியல் சரித்திரம் தெரிந்தவர்களை இன்றைய பா.ஜ.க. தலைவர்கள் அணுகுவது நல்லது. அந்நாள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அதிபர் கோயங்கா 1967இ-ல் தனக்கும், காமராஜுக்கும் நடந்த உரையாடலை என்னிடம் கூறினார். ‘ஈ.வெ.ரா.விடம் நெருங்குவது காங்கிரஸின் தேசிய அடையாளத்தைக் குழப்பிவிடும், வேண்டாம்’ என்று காமராஜிடம் கோயங்கா கூறினாராம். அதற்கு, ‘ராமசாமி நாயக்கரே வலுக்கட்டாயமாக காங்கிரஸை ஆதரிக்கிறார்’ என்று காமராஜ் பதில் கூற, ‘அவர் ஆதரவு வேண்டாம் என்று கூறவேண்டும். அப்போதுதான் நம் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்’ என்று கோயங்கா சொன்னாராம். இறுதியில் ஈ.வெ.ரா. ஆதரிக்கும் காங்கிரஸை விட, ராஜாஜி ஆதரிக்கும் தி.மு.க. பரவாயில்லை என்று தேசியவாதிகள் பலர் நினைத்ததால்தான், 1967இல் காங்கிரஸுக்குப் பின்னடைவு வந்தது. 1969இ-ல் காங்கிரஸ் உடைந்து, 1971இ-ல் இந்திரா பிரிவு தி.மு.க.வுடன் அணி சேர, அதன் பலம் குன்றி, இன்று வரை தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளுக்கும், கழகங்களுக்கும் இடையே எல்லை வரைய முடியாத அளவுக்குக் குழப்பம் இருந்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு தேசியமே தனித் தன்மை. அதில் ஈ.வெ.ரா.வைக் கலந்து குழப்பி, குளறுபடி செய்யாமல் இருப்பது பா.ஜ.க.வுக்கும் நல்லது, தேசியத்துக்கும் நல்லது.”

(‘துக்ளக்’ 7.10.2020)

“பா.ஜ.க.வுக்குத் தேசியமே தனித்தன்மை; அதில் ஈ.வெ.ரா.வைக் கலந்து குழப்பி குளறுபடி செய்யாமல் இருப்பது பா.ஜ.க.வுக்கு நல்லது, தேசியத்துக்கும் நல்லது’’ என்று அறிவுரை கூறினார் திருவாளர் குருமூர்த்தி.

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் குறித்தும் வானதி சீனிவாசன் சிலாகித்ததும் உண்டு.

ஆக, பா.ஜ.கவுக்குள்ளேயே பார்ப்பனர் _ பார்ப்பனர் அல்லாதார் உள்கட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது.

தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தலைவராக ஒரு பார்ப்பனர் வர முடியாமைக்கு என்ன காரணம்? தமிழ் மண் _ திராவிட மண் _ தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்பதுதான் இதற்குக் காரணம்!

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெயர் சொல்லுவதற்கு _ மருந்துக்குக்கூட ஒரே ஒரு பார்ப்பனர்கூட இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்த கட்சியிலும் சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்பாளராகக் கூடப் பார்ப்பனரை நிறுத்த முன்வரவில்லையே  என்ன காரணம்?

பார்ப்பனர்கள் தங்களின் அகந்தையாலும், ஆணவத் திமிரினாலும் எல்லா இடங்களிலும் தங்கள் ஆதிக்கம் மட்டுமே கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற கொக்கரிப்புப் புத்தியாலும்தான் அவர்களை நிராகரிக்குமாறு தமிழ்நாட்டு மக்களை நிர்ப்பந்தித்து விட்டது.

இந்தக் கருத்தை தந்தை பெரியார் சொன்னால் வேறு நோக்கத்தை வேதியப் புரத்தார் கற்பிக்கக் கூடும். ஆனால் காந்தியார், அய்யங்காரான ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) சம்பந்தியாயிற்றே! அத்தகு காந்தியாரே என்ன சொல்லுகிறார்?

“பிராமணர்கள் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமை காரணமாக, தங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேற்றுமை கொடூரமானது. (‘தி இந்து’ 23.8.1920)

அதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அடுத்த கட்டத்துக்குச் செல்லுகிறார் காந்தியார்.

“பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் இந்துக்களானால், அவர்கள் சிறுபான்மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டிஷார் வெளியேறி இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டிய பின், இருக்கும் இடம் தெரியாமல் அவர்கள் அழிந்து போக வேண்டியதுதான்.’’

_நவகாளியில் காந்தியார் ஆற்றிய உரையிலிருந்து.. (‘திராவிட நாடு’ 12.2.1947)

எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும் காந்தியாருக்கே இந்தப் பார்ப்பனர்-களில் ஆதிக்கத்தின் மீது கோபக்கனல் வெடிக்கிறது என்றால், இதைவிடப் பார்ப்பனத்தன்மையைத் தெரிந்து கொள்ள வேறு சாட்சியம் தேவைப்படுமா?

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்று ஏதோ பெரிய குற்றச்சாட்டை வைப்பது போல திரும்பத் திரும்ப கீறல் விழுந்த கிராமபோன் தட்டைப் போல ஒப்புவித்துக் கொண்டுள்ளனர்.

எந்தப் பொருளிலே அவ்வாறு சொன்னார் என்பதுதான் முக்கியம். அதுகுறித்து தந்தை பெரியாரே விளக்கம் அளித்ததுண்டு.

“தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

ஆங்கிலம் வளர்ந்த மொழி _ விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும்.

இதை நான் சொல்லுவதற்கான முக்கிய நோக்கம், தமிழ்மொழி ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு இல்லை.’’ (‘விடுதலை’ 1.12.1970)

என்று இவ்வளவுத் தெளிவாக, காரணா காரியத்தோடு கணீர் கணீர் என்று கருத்துரைத்த  பிறகு பார்ப்பனக் கூட்டம் பழிவாரித் தூற்றுகிறது என்றால், இது அவர்களின் பண்பாடற்ற உள்நோக்கம் கொண்ட கீழ்ப் புத்தியைத்தான் காட்டுகிறது.

அதே நேரத்தில் தமிழைப் பற்றி, குருமூர்த்தி கூட்டத்தின் குருநாதரான சங்கராச்சாரியாரின் கருத்து யாது என்று கூறுவார்களா?

தமிழ் நீஷப் பாஷை என்பதுதானே சங்கராச்சாரியாரின் கருத்து! பூஜை வேளையில் அவர் ஏன் தமிழில் பேசுவது இல்லை? பதில் சொல்லட்டுமே, பார்க்கலாம்.

“பூஜைக்குக் கொஞ்ச நேர முன்னதாகவே -ஸ்ரீ பெரியவா சமஸ்கிருதத்திலே பேச ஆரம்பிச்சிடுவார். தமிழில் பேசமாட்டார். காரணம், தமிழ் பேசினா தீட்டாயிடுமே! இதைப் பெரியவாளே சொல்லியிருக்கா.’’

இதனை வெளிப்படுத்தியிருப்பவர்கள் ‘விடுதலை’ அலுவலகத்தில வேலை பார்க்கும் விந்தனோ, நந்தனோ அல்ல.

மாறாக, டாக்டர் வேதமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்தாம்.

எங்கே சொன்னார்கள்? சென்னையில்தான்! எந்த நிகழ்ச்சியில் திருவாய் மலர்ந்தார்கள்?

அனுசாம் பூஜை மற்றும் அவஹந்த் ஹோமத்தின்போது. (சென்னை 26.11.2013)

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அணுக்கமான ஆலோசகர் என்றால் சாதாரணமானவர் அல்லர். அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்புத் தொடர்பாக சரத்து சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்டக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கரைச் சந்திப்பதற்காக சங்கராச்சாரியாரால் தூதராக அனுப்பப்பட்டவர்தான் காஞ்சிபுரம் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (நூறு ஆண்டு கடந்து வாழ்ந்தவர்) அவரையே சாட்சிக் கூண்டில் ஏற்றுவோம் _ ஏற்றுகிறோம்.

கும்பகோண மடம்… சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாளுக்கான மாலைநேரப் பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’ அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்… குளித்து முடித்து விட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய்ப் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்… நாட்டுக்கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்… மகா பெரியவரைப் பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்… ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகா பெரியவரைப் பார்க்க முடியாது. நாளை வாயேன்…’ என்றேன்.

‘இல்லை சாமி இப்பவே அவரைப் பார்க்கணும்’- என்றார் பக்தர்.

எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்… விஷயத்தை மகா பெரியவரிடம் சொல்ல, அவர் என்னை உள்ளே அழைத்தார்.

போனேன். கேட்டார். சொன்னேன். ‘இதோ பாரும் தாத்தாச்சாரி… அவரைப் பார்க்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை… பார்த்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேச வேண்டிவரும். நோக்குத்தான் தெரியுமே… தமிழ் பேசினால் எனக்குத் தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ… அதனால நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ…’’

என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். ‘நான் சொன்னதுதானப்பா… சுவாமிகள் மௌனத்தில இருக்கார். நாளைக்கு வாயேன்…’ என்றேன்.

‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி… நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’ _ என தாய்மொழியாம் ‘தமிழில்’ மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்-பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

(‘இந்து மதம் எங்கே போகிறது?’ – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் – பக்கம் 101-102)

இவர்களின் மனுதர்மம்கூட தமிழை மிலேச்ச பாஷை என்றும், சமஸ்கிருதத்தை உயர்ந்த பாஷை என்றும் கூறுகிறது. (‘மனுதர்மம் – அத்தியாயம் 10 – சுலோகம் 44)

இந்த நிலையில் உள்ளவர்கள்தான் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவரை _ தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழில் நடைபெற வேண்டும் என்று கூறி, அதனைச் செயல்படுத்திக் காட்டிய தலைவரை _ தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டியவரான தந்தை பெரியாரை _ ஏதோ தமிழுக்குத் துரோகம் செய்து விட்டதுபோல கம்பங் கூத்து ஆடி வேடிக்கை காட்டுவதை என்ன சொல்ல!

இரண்டாவது குற்றச்சாட்டு என்ன தெரியுமா? பெண்கள் ‘விடுதலை’ பற்றி மோசமான கருத்துடையவர் ஈ.வெ.ரா. என்று இந்த இஞ்சி தின்ற ஆசாமிகள் எழுதுகிறார்கள்.

தந்தை பெரியார் படைத்த ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூல் பல மொழிகளிலும் உலகெங்கும் உலா வந்து கொண்டிருக்கிறது.

‘நன் செய்’ என்ற ஓர் அமைப்பு இவ்வாண்டு மட்டும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ஒரு லட்சத்துக்கு மேலாக பொது மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறது.

பெண்களுக்குப் பெரியார் பெரும் பாடுபட்டதால்தான் பெண்களே மாநாடு கூட்டி (13.11.1938) ‘பெரியார்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள் என்ற உண்மையாவது தெரியுமா?

பெண்கள் பற்றி தந்தை பெரியாரின் கருத்துகள்தான் என்ன?

“ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?’’ (‘விடுதலை’ 28.6.1973)

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம், பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டிருக்கிறது.’’

(‘குடிஅரசு’ 16.6.1935)

“இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களா-யிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்குக் கல்வியும் சொத்துகளும் இருக்க இடமில்லையே, ஏன்?’’

(‘குடிஅரசு’ 3.11.1929)

“பெண் பெருமை, வருணனை ஆகியவை-களில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவற்றைப் பற்றி அய்ம்பது வரியிருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமை பற்றி ஒரு அய்ந்து வரிகூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்-திருக்கிறார் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.’’

(நூல்: ‘வாழ்க்கைத் துணை நலம்’ பக்கம் 29)

“பெண் உரிமை என்கிறபோது, உங்கள் மனைவியை நினைத்துச் சிந்திக்காதீர். உங்கள் மகளை நினைத்துக் கொள்ளுங்கள்.’’

(நூல்: ‘வாழ்க்கைத் துணை நலம்’)

“கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்-காகவும், ‘கற்பு’ ஒரு காலமும் கூடாது _ கூடவே கூடாது. வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காகவும், இருவரையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு மாத்திரம் அடிமைப்-படுத்துவதில் _ ஆசை முக்கியத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும், பொறுப்பும் இல்லவே இல்லை.’’

(நூல்: ‘வாழ்க்கைத் துணை நலம்’)

திருமணம் என்பது வயது வந்த ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமே தவிர, மற்ற யாருக்கும் _ வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல!

(‘விடுதலை’ 22.6.1940)

விபசாரத் தனம் என்பதை எவ்வளவோ கண்டிக்கிறோம். ஆனால், ஆண் விபசாரத்தைப் பற்றிப் பேசுவோரே கிடையாது. அப்படி-யிருந்தாலும் அதற்கு-ப் பலக்குறைவு (கீமீணீளீஸீமீss) என்று சொல்லியிருக்கிறோம். பெண் விபசாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத்தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது என்-றெல்லாம் சொல்கிறோம். ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் விபசாரமே தவிர, பெண்ணும் பெண்ணும் சேர்ந்து விபசாரம் செய்துவிட முடியாது. (‘குடிஅரசு’ 16.6.1935)

தந்தை பெரியார் வெறும் பேச்சிலும், எழுத்திலும் மட்டுமே பெண்ணுரிமை பற்றி கூறிடவில்லை.

தன் சொந்த தங்கை மகள் சிறு வயதிலேயே கணவனை இழந்த நிலையில் வீட்டாரின் எதிர்ப்புகளையும் மீறி மறுமணம் செய்து வைத்தவர் என்பது நினைவில் இருக்கட்டும்!

பொதுத் தொண்டை தொண்டறமாக்கிய தூய ஆசான் அவர். தான் மட்டுமல்ல _ தன் குடும்பப் பெண்களையே பொது வாழ்க்கையில் ஈடுபடச் செய்தவர் _ போராட்டங்களிலும் குதிக்கச் செய்தவர் _ அதற்காக அவர்கள் சிறைவாசமும் கண்டதுண்டு.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல _ வைக்கம் போராட்டம் வரை அவரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மையாரும் ஈடுபட்டதை வரலாறு காலமெல்லாம் கனிவாகக் கூறிக் கொண்டே இருக்கும்.

“மதுவிலக்குப் போராட்டத்தைத் தொடர்வதா, கைவிடுவதா என்பது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் இருக்கும் இரு பெண்களின் கைகளில் இருக்கிறது’’ என்று காந்தியாரே கூறும் அளவுக்குப் பெருமைமிகு பெண்மணிகள் தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

சேலத்தில் 1971இல் திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் பெண்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் திரித்துக் கூறி, அதற்காக நீதிமன்றத்தில மன்னிப்புக் கோரியது ‘இந்து’ ஏடு என்பது நினைவில் இருக்கட்டும்!

தந்தை பெரியாரின் அப்பழுக்கற்ற பெண்ணுரிமையைக் கொச்சைப்படுத்தும் ‘துக்ளக்’ அக்ரகாரக் கும்பலின் பெண்கள் பற்றிய சிந்தனை என்ன?

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே, ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாகவெண்ணி அவர்களைப் புணருகிறார்கள்.’’

(‘மனு’ – அத்தியாயம் 9 – சுலோகம் 14)

“மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும் இயற்கையாக உடையவராதலால், கணவனால் காக்கப்-பட்டிருப்பினும், அவர்களை விரோதிக்கிறார்கள்.’’

(‘மனு’ – அத்தியாயம் 9 – சுலோகம் 15)

“மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்தபோதே யுண்டான தென்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.’’

(‘மனு’ – அத்தியாயம் 9 – சுலோகம் 16)

“படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.’’

(‘மனு’ – அத்தியாயம் 9 – சுலோகம் 17)

இந்த மனுதர்மப்படி இன்றளவும் விழுந்து விழுந்து பக்கம் பக்கமாகப் பாராட்டி எழுதும் கும்பல்தான் தந்தை பெரியாரின் பெண்ணுரிமை உயர் சிந்தனைகளைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.

ஏதோ எந்தக் காலத்திலோ மனு எழுதியதை இப்பொழுது எடுத்துக் காட்டலாமா என்று கேட்க முடியாது. ஏன்? அந்த மனுவினை இன்றளவும் இந்த மனுவாதிகள் மார்போடு அணைத்து மஞ்சத்தில் வைத்துக் குலாவுகிறார்கள்.

சரி, அதையே விவாதத்துக்காக ஒத்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது மட்டும் என்ன வாழுது? இதுதானே  முக்கியம்?

மகான் என்று மண்டைக்குமேல் தூக்கி வைத்துத் தாலாட்டப்படும் சங்கராச்-சாரியார்களின் புத்தி எங்கே மேயப் போகிறது? பெண்கள் பற்றிய அவர்களின் சிந்தனை என்ன?

கணவன் இறந்தால் அவன் உடலோடு அவன் மனைவியை வலுக்கட்டாயமாக அந்தச் சிதையில் வைத்து எரிக்கும் காட்டு விலங்காண்டித்தனத்தை,

“தர்ம சாஸ்திரங்களில் “சதி’’யைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், நமது சமூகங்கள் சிலவற்றில் இப்படிப்பட்ட பழக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இந்தப் பழக்கத்திற்குக் கண்டனம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அதுகுறித்து மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.’’

– ஜெயேந்திர சரஸ்வதி – காஞ்சி சங்கராச்சாரியார்¢ –

(‘தி வீக்’, அக்டோபர் 11-17-1987)

இந்த ஜெகத் குருக்கள்தான் எத்துணை குரூரக்காரர்கள் என்பது விளங்கவில்லையா?

இதே காஞ்சி சங்கராச்சாரியார் விதவைப் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுச் (‘தினமணி’ தீபாவளி மலர் -_ 1997) சொன்னவர்தானே! அதனைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் அணி காஞ்சி மடத்துக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டே! (9.3.1998)

அதோடு நின்றாரா? உத்தியோகத்திற்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று சொல்லப் போய் நன்கு வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

“பிராமணப் பெண்கள் வரதட்சணை தர முடியாமல் அதற்காக இன்னொரு ஜாதிக்காரனைத் திருமணம் செய்துகொள்வது சரியல்ல.

பெற்றோர் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழை மரத்துக்கு அந்தப் பெண்களைத் திருமணம் செய்து வைத்து விடுங்கள். அப்பொழுது அந்தப் பெண் விதவையாகி விட்டாள் என்று விதவைக் கோலம் கொடுத்து விடுங்கள். அந்த நோன்பை வாழ்நாள் முழுமையும் இருந்து கன்னியாகவே அவள் நம் மதத் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று சொன்னவர்தான் இவாளின் மகா பெரியவாளான காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

மனதில் ஈரம் சிறிதுமற்ற மரத்தனமான மடமைத்தனத்தை மண்டையில் ஏற்றிக் கொள்பவர்கள்தான் பார்ப்பனர்களுக்கு மகா பெரியவாள்.

இந்த மனித வதையைச் சட்டிக் காட்டினால் பெரியார் பெண்ணுரிமை என்ற பெயரில் மோசமான கருத்துகளைக் கூறுகிறார் என்று கூறுகெட்டதனமாக _ பொய்யென்று தெரிந்திருந்தும் _ நாவாரப் பேசுகிறார்கள்; கையார எழுதுகிறார்கள்.

மனுதர்மத்தைக் கூட்டித் தள்ளுவோம் _ சங்கராச்சாரியார்களையும் தூக்கிக் கடாசுவோம்!

இந்த யோக்கிய சிகாமணிகள் பெண்கள் பற்றி எப்படி எல்லாம் பேசுகிறார்கள்.

30 சதவிகிதப் பெண்கள்தான் பெண்மை உள்ளவர்கள் என்று சொன்ன குல்லூகப்பட்டரின் குட்டித் தம்பிதானே இந்தக் குருமூர்த்தி.

சரி, குருமூர்த்தியையும் கூட்டித் தள்ளி விடுவோம். இவரின் குருநாதரான சோ.ராமசாமியின் தரம் என்ன?

கேள்வி: ஆனானப்பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்கு மனம் இரங்கும்போது, உங்கள் மனம் மட்டும் அவர்கள் மீது இரக்கம் கொள்ள மறுப்பது ஏன்?

பதில்: பெண்களைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா?

(‘துக்ளக்’ 14.9.2005)

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களுக்கு உண்மையான அபிப்பிராயம்தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள்.

(‘துக்ளக்’ 18.3.2009)

இப்படி எல்லாம் மனு காலத்திலிருந்து குருமூர்த்திகள் வரை பார்ப்பனர்கள் பெண்களை இப்படி எல்லாம் இழிவு-படுத்துகிறார்களே… இவர்கள் ஒரு தாய்க்குப் பிறக்கவில்லையா? இவர்களுக்குப் பெண்டு பிள்ளைகள்தான் இல்லையா?

தாயைப் பழிக்கும் இந்தத் தறுதலைகளை _ தலைப்பிரட்டைகளை என்ன சொல்ல!

இந்த நிலையில் உள்ள இந்த மனித உருவங்கள், ஆண் தாயாயிருந்து _ மக்கள் தொகையில் சரி பகுதி உள்ள பெண்கள்பால் கழிவிரக்கம் கொண்டு, தம் முக்கியக் கொள்கையாக ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பதை இரு விழிகளாகக் கொண்டு கடைசி இமை சிமிட்டும் வரை உழைத்த ஒரு மாபெரும் சகாப்தத் தலைவர் குறித்து தரக்குறைவாக எழுதுகிறார்கள் என்றால், அது அவர்களின் தரத்தைத்தான் காட்டும்.

மறைந்து 48 ஆண்டுகள் ஆகியும் இந்த மனிதன் இவ்வளவுப் பாடுபடுத்துகிறாரே என்ற ஆத்திரத்தால், பார்ப்பனக் கூட்டம் _ பார்ப்பன ஊடகங்கள் ஒரு திட்டத்தோடுதான் செயல்படுகின்றன. போதும் போதாததற்கு அனுமார்களும் கிடைத்திருக்கிறார்கள்.

பெரியார் என்னும் பெரும் ஆளுமையைக் காயப்படுத்தினால், வீழ்த்தினால் மட்டுமே, தங்களின் ஆதிக்கத்தைத் தொடர முடியும் என்பதைத் துல்லியமாகவே உணர்ந்த காரணத்தால் காய்த்த மரத்தில் கல்லெறிவது போல, பொய்யையும் புனைசுருட்டையும் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடுகிறார்கள். கொச்சைப்படுத்தும் குள்ள மனத்தோடு கூடிக் கூடிச் செயல்படுகிறார்கள்.

கோழி முட்டியா குன்று சாயும்? கல்லெறிந்தா கடலைக் காயப்படுத்த முடியும்?

எதிர்வினை என்னும் எரிமலை வெடித்தால் என்னாகும் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது!

1971இல் இராமனைக் காட்டி, பெரியாரைத் தூற்றிய பார்ப்பனர்களே, மறந்து விட்டீர்களா? 1967இல் சட்டப் பேரவையில் 138 இடங்களைப் பெற்ற தி.மு.க. 1971இல் 184 இடங்களைப் பெற்று உங்களை உலுக்கி எடுத்தது.

“இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது. மகா புருஷர்கள் எல்லாம் நாட்டை விட்டே போக முடிவு செய்து விட்டார்கள்’’ என்று உங்களின் குலதர்மக் குரு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரே கையொப்பமிட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணனை மூலதனமாக்கி, திராவிடர் கழகத் தலைவரை இழித்தும் பழித்தும் பேசினீர்களே… முடிவு என்னாயிற்று?

தமிழ்நாட்டின் மொத்த இடங்கள் 39இல் தி.மு.க. அணி 38 இடங்களை வென்று, உங்களுக்குத் தண்ணி காட்டி மூச்சுத் திணற வைத்தது.

2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க.வை இனத்துவேஷ கட்சி, தி.மு.க.வின் பயணத்தை பெரியார் திடல்தான் முடிவு செய்கிறது என்று தி.மு.க. தலைவர் பிரகடனப்படுத்தி விட்டார் என்று கூறி, ஏடுகளை எல்லாம் அம்பறாத் தூணியாக்கி ஆட்டம் போட்டார்கள். முடிவு என்ன? 234 சட்டப் பேரவை உறுப்பினர்களில் மருந்துக்குக் கூட பெயர் சொல்லக் கூட ஒரே ஒரு பார்ப்பனர் இல்லை.

இன்னுமா துள்ளுகிறீர்கள்? மேலும் பொதி சுமப்பது என்று முடிவு செய்து விட்டால் நாங்கள் என்ன செய்ய?ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *