தகவல்

செப்டம்பர் 1-15,2021

பெண் குழந்தைகளைப் போற்றும் பெருமைமிகு கிராமம்!

அய்தராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இருக்கிறது அரிதாஸ்பூர் கிராமம். 300க்கும் குறைவான மக்களே வசிக்கும் இந்தக் கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் ஒட்டுமொத்த கிராமமும் விழாக் கோலம் பூண்டு விடுகிறது. ஊரே ஒன்று திரண்டு கிராமத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கிறது. பெண் குழந்தை பிறந்துள்ளதை மேளதாளத்துடன் வீடு வீடாகச் சென்று அறிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனர். பிறந்த பெண் குழந்தையின் பெயரில் ‘சுகன்யா சம்ருதி யோஜனா’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கி, கிராம நிருவாகத்தின் சார்பில் 1,000 ரூபாய் வைப்புத் தொகையும் செலுத்துகின்றனர். “பெண் குழந்தைகளின் பிறப்பைச் சோகமான நிகழ்வாகப் பார்க்காமல், அதை ஊர்கூடித் திருவிழா எடுத்து, “சமூகத்தில் பெண் குழந்தைகள் மரியாதைக்குரியவர்களாகவும், மதிக்கப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும்’’ என்கின்றனர் அந்தக் கிராம மக்கள். இந்த ஆண்டு தெலங்கானா 12ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் இந்தக் கிராமத்தைப் பற்றிப் பாடம் இருக்கிறது.

– (‘ஆனந்த விகடன்’ 1.9.2021)


பெரியாரை நாம் கஷ்டப்படுத்தி விட்டோம்!

“நாம் பெரியாரை வெகுவாகக் கஷ்டப்படுத்தி விட்டிருக்கிறோம். அவர் இப்போது ஓய்வெடுத்துக் கொண்டு கட்டளையிட வேண்டிய வயது. அவரது தொண்டினை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனதனாலே நாம் அவருக்குக் காட்ட வேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப் பட்டவராவோம். நன்றியைக் காட்டிக் கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன் என்பதையும் இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.’’

(19.1.1967 அன்று நாகரசம்பட்டியில் புதிதாகக் கட்டப்பெற்ற ‘பெரியார் ராமசாமி கல்வி நிலையத்’தினைத் திறந்து வைத்து அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)


பொருளாதாரமும் வறுமையும்…

நாட்டில் நிலவும் வறுமையினைக் கணக்கிட இரண்டு முறைகள் உள்ளன.

1. பொருள் நுகர்வுக்காகச் செய்யப்படும் செலவு குறித்த சர்வே. பொருள்களை வாங்கவும், மருத்துவம், கல்வி, உணவு, குடியிருப்புக்காக குடும்பங்கள் செய்யும் செலவு. 65% இந்தியர்கள் வாழும் கிராமப் புறங்களில் இது 8% குறைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் 2% மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதற்குப் பொருள் – மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது என்பதே. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு போன்றவற்றின் விளைவுகள் இவை.

2. தொழிலாளர் நிலை குறித்த சர்வே. புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு முறைசாரா, தற்காலிக, சமூகப் பாதுகாப்பு இல்லாத வேலைகளும், ஒப்பந்த அடிப்படை யிலான வேலைகளும் அதிகரித்து விட்டன.

1973லிருந்து 2010 வரை வறுமையின் அளவு ஓரளவு குறைந்தது.

2013க்குப் பின் இது அதிகரித்திருக்கிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்:

1. செல்லாப் பண நடவடிக்கை.

2. சரக்கு மற்றும் கட்டண வரி.

இவை நடுத்தர, சிறு, குறு தொழில்களை முடக்கி நாட்டிலிருக்கும் முறைசாராத் தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. வறுமை கூடியிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இது மேலும் கூடும்.

(ஆதாரம்: 4 ஆகஸ்ட்,

2021 ஆங்கில ‘இந்து’வில்

வெளியான நடுப்பக்கக் கட்டுரை)


கடவுளை வியாபாரியாக்காதே!

கேள்வி: கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா…?

–  வி. மனோகரி, குமாரபாளையம்

பதில்: அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரியாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு. நான் உனக்கு பாலாபிஷேகம் செய்கிறேன், வேல் சாத்துகிறேன், ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல.

கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தரக் கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.

ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி.

அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.

(எழுத்தாளர் ராஜேஷ்குமார் – ‘கல்கி’ 6.11.2011)

 


 

அவாளே கூறுகிறார்கள்!

இராமாயணமும், பாரதமும் கற்பனைக் காப்பியங்கள் என்றால் நம்மீது சினம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட போர் நடந்தது என்று காட்ட எந்த வரலாற்றுத் துறை அறிஞராலும் இயலாது என்று சொன்னால் கோபம் கொள்கிறார்கள். நாம் கொடுக்கும் ஆதாரங்களை வேண்டு-மானால் மறுத்துப் பேசட்டும். ஆரியத்தின் ஏடு ‘ஆனந்த விகடன்’, ஆங்கில ஏடு ‘மெயில்’ இவற்றிலிருந்து எடுத்து வெளியிட்டுள்ள செய்தியின் சுருக்கத்தினை இங்குத் தருகிறோம் – இதன் பின்பாவது குழப்பவாதிகள் தெளிந்தால் சரி.

எவ்வளவு நாள்கள்தான் ஏமாற்றி-னாலும் எதிரிகள் கூட நம் கருத்துக்குத்தான் வந்து தீர வேண்டியிருக்கிறது. இதோ படியுங்கள்:

“பாண்டவர்களுக்கும்  கவுரவர்களுக்கும் இடையே குருக்ஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியத் தொல்-பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருதமுடியாது. அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை.’’

கி.மு.1100-க்கு முன்பு இரும்பு என்றால் என்ன வென்று தெரியாத நிலை. போர்க் கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

“இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்-தானக் கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் ‘புகுத்தி’யிருக்-கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி.4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்-பட்டவையே.’’

ஆதாரம் : 12-10-1975 நாளிட்ட

‘ஆனந்த விகடன்’

உண்மையினைச் சொன்னால் நம்மீது பாய்ந்து சீறும் ‘சீலர்கள்’ அக்கரகார ஆனந்தவிகடனே ஆமாம் போட்ட பிறகு பாவம், என்ன சொல்லப் போகிறார்கள்?

தகவல்: அரசிளங்கோவன், திருக்கோகர்ணம்


ஆண்களின் கட்டுப்பாட்டில் ‘டிவி ரிமோட்’

இந்தியாவில், நகர்ப்புற குடும்பங்களில் டிவி தொலைக்காட்சி இயக்கும் கருவியின் (Remote) கட்டுப்பாடு ஆண்களின் கையில்தான் இருக்கிறது என அண்மையில் ஆய்வு தெரிவித்துள்ளது. ‘ஓர்மக்ஸ் மீடியா’ என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வில், பொதுவாக தொலைக்காட்சிகளில் ‘ப்ரைம் டைம்’ என்று குறிப்பிடப்படும் 7-9:00 மணியளவில், ஆண்களே தொலைக்காட்சியில் எந்த சேனலைப் பார்க்க வேண்டும், எந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் எனத் தீர்மானிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *