ஆசிரியர் பதில்கள் :இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை தருக!

செப்டம்பர் 1-15,2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

கே1:     ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எல்லா மாநிலங்களும் வலியுறுத்த ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினால் என்ன?

— சங்கமித்திரன், மதுரை

ப1:        இயல்பாகவே சூழ்நிலை அதனை நாளும் வலுவாக்கிக் கொண்டே வருகிறது. கொரோனா போன்ற பல காரணங்-களால் சாத்தியமில்லா-விட்டாலும் அது காலத்தின் கட்டாயமாகிறது! தமிழ்-நாட்டில் ஒருங்கிணைந்த முயற்சிகளை தாராளமாகச் செய்ய நம்மால் முடியும்.

கே2:     பா.ஜ.கவின் ஆசீர்வாத யாத்திரை எதற்கு?

– மகிழ், சைதை

ப2:        கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு திரைப்படத்தில் கூறுவார்: ‘ஆசி’ எனக்கு ‘வாதம்’ உனக்கு என்று நகைச்சுவையாக! நாளும் மக்கள் வதைபடுவதற்கும், மக்களின் சொத்துகள் விற்கப்படுவதற்கும், 40 ஆண்டுகால திட்டத்தை குத்தகை விடுவதற்கும் ஆசியா? வாதமா?

               நல்ல நகைச்சுவை!

கே3:     உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முதல் சட்டமன்ற உரை அவரது கொள்கைத் தெளிவைக் காட்டுவதாகக் கொள்ளலாமா?

– குமரகுருபரன், சேலம்

ப3:        அதில் என்ன அய்யம்? ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதல் பேச்சுக்கான திராவிட மாடல் _ சிறப்புக்குரிய தயாரிப்புடன் கூடிய கருத்துப் பொழிவுகள்.

கே4:     இலங்கைத் தமிழ் அகதிகளின் இன்னல் தீர என்ன செய்ய வேண்டும்?

– செந்தில்நாதன், பூண்டி

ப4:        அவர்களுக்கு நம் குடியுரிமை வழங்க முழு முயற்சி செய்யவேண்டும்.

கே5:     அரசு விழாக்களில் மதச் சடங்குகளைச் செய்வது தொடர்கிறதே! தடுக்க வேண்டாமா?

– ——- பெரியார் செல்வம், திருப்பூர்

ப5:        தி.மு.க ஆட்சியையும் அ.தி.மு.க ஆட்சியையும் ஒன்றாக்கும் அருவருப்-பான கொள்கை நழுவல். உடனே நிறுத்திவிட வேண்டும். மதச் சார்பின்மையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு காப்பாற்ற விழிப்போடு செயல்பட வேண்டும்.

கே6:     ஆகம விதிப்படி (காடிகாகாமம், காரணாகமம்) “ஸ்மார்த்த பிராமணர்-கள்’’ சிவன் கோயிலில் பூஜை செய்ய உரிமையில்லாதபோது, சிதம்பரம், இராமேஸ்வரம் போன்ற கோயில்களில் அவர்கள் பூஜை செய்வது ஆகமத்திற்கு எதிரானது என்று வழக்குத் தொடர முடியுமா?

– நாகராசன், நங்கநல்லூர்

ப6:        நிச்சயம் தொடர முடியும் _ தொடர வேண்டும். உண்மையான பக்தர்களின் உடனடி வேலையாக அது அமைய வேண்டும். ஆகமம் காப்பாற்றப்பட பொய் அழுகை அழும் ஆகமப் பூச்சாண்டிகளின் முகமூடி அதன்மூலமே அகற்றப்படக் கூடும்.

கே7:     பெரியார் தங்களுக்கு உந்துசக்தி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ‘ட்விட்’ செய்துள்ளது பற்றித் தங்கள் கருத்தென்ன?

– தனராசு, வேலூர்

ப7:        உண்மையை உள்ளத்திலிருந்து உரைத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

கே8:     முதலமைச்சரின் ஆணைக்குப் பின்னும் அலங்கார வரவேற்பு, உயிரிழப்பு -சரியா?

– ஜெயராமன், தஞ்சை

ப8:        சட்டமன்றத்திலும் கண்டித்துள்ளார் நமது முதலமைச்சர். இனியாவது கண்டிப்பான நடைமுறைகளுடன், காலில் விழுவது தவிர்க்கப்பட்டது போல தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம்.

கே9:     ‘நீட்’ ஒழிப்பில் அடுத்தகட்ட முயற்சி என்ன?

– முத்துராமன், பரமக்குடி

ப9:        1.            தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய தீர்மான வடிவிலான சட்டம் இயற்றும் முயற்சி.

               2.            மக்கள் இயக்கமாக அதனைக் கட்டமைப்புச் செய்தால் நாடு தழுவிய அளவில்  தமிழ்நாடே எழுச்சி பெறும் வகையில் பெரும் மக்கள் திரளை _- செயல்திறனை உருவாக்-குதல்.

               3.            இனத் துரோகிகளை அடையாளம் காட்டுதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *