கவிதை : வாழ்வின் ஒளி!

செப்டம்பர் 1-15,2021

இறையரசன்

இழிவெலாம் ஒழித்தாய்; நாட்டின்

               ஏற்றமே எண்ணி வாழ்ந்தாய்!

பழியெலாம் களைந்தாய்; எம்மைப்

               பாரிலே உயர்த்தி வைத்தாய்!

விழியெலாம் அன்பைத் தேக்கி

               விளித்தனை தம்பி என்றே!

வழியெலாம் காட்டி எங்கள்

               வாழ்வொளி விளக்கம் ஆனாய்!

 

கோடியாய் இன்னல் ஏற்றுக்

               குலைந்தநம் அன்னை நாட்டை

நாடியே நலிவு நீக்கி

               நலம்பெறு வழிகள் கண்டாய்!

பாடியே புலவர் ஏத்தப்

               பாரினில் உயர்ந்தாய்! ஆய்ந்தே

தேடிய அறிவைப் போலெம்

               தென்னவர் நெஞ்சில் வாழ்வாய்!

 

அண்ணனே பிறந்தாய் இந்த

               அருந்தமிழ் இனத்தைக் காக்க

புண்ணெனும் புராண வேதப்

               புழுக்குடம் புதைத்தாய்! இன்பப்

பண்ணெனத் தமிழர் வாழ்வில்

               பாய்ச்சினாய் கருத்து வெள்ளம்

கண்ணெனக் கருதி மூத்த

               கவின்தமிழ் மாண்பு காத்தாய்!

 

அறிஞருள் அறிஞர் ஆனாய்

               அகிலமே வியந்த துன்னை!

வறிஞரே உயரத் திட்டம்

               வகுத்தனை ஆண்ட நாளில்!

செறிந்தன நலன்கள் எல்லாம்!

               செழித்தது தமிழர் வாழ்வு!

முறிந்தன பழைமைக் கோட்டை

               முகிழ்த்தன புதுமை நாட்டில்!

 

வல்லாண்மைக் கூட்டம் எல்லாம்

               வாழ்விழந் தடங்கும் வண்ணம்

பொல்லாங்கை ஒழித்தாய்! நீதான்

               புகழ்மிகு “தமிழ்நா டென்று!”

எல்லோரும் வாழ்த்தும் பேரை

               இட்டனை நம்நாட் டிற்கே!

நல்லாரின் பக்கம் சார்ந்து

               நன்மைகள் மிகையாய்ச் செய்தாய்!

 

வாயிலாத் தமிழர் வாழும்

               வகையெலாம் ஆய்ந்து சொன்னாய்

நீயிலாக் குறையை இங்கே

               நிரப்பிட யாரே உள்ளார்?

தாயிலாக் குழந்தை தாங்கும்

               தகைமையில் எம்மைக் காத்தாய்!

நோயிலா நெறிகள் தந்தாய்

               நும்வழி வாழ்கின் றோமே! ஸீ

 

(20.10.1971 – ‘சிந்தனை ஊற்று’ கவிதைத் தொகுப்பிலிருந்து…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *