சிறுகதை : காசி யாத்திரை

ஜுலை 16-31,2021

துறையூர் க. முருகேசன்

சீனிவாச சாஸ்திரி என்ன சாதாரண மானிடப் பிறவியா? பிர்மாவின் நெற்றியில் உதித்த குலமாயிற்றே! சிவனின் வம்சா வழியல்லவா! அவர் சொன்னால் சொன்னது நடக்கும் என்பது ஆன்மிக பக்தர்களின் நம்பிக்கை.

கோயில் குருக்களாக இருக்கின்ற வரையில் உண்டியல் காசைவிட, இவர் அர்ச்சனைத் தட்டின் காசுதான் கனமாக இருக்கும். வயது ஏற ஏற தொந்தி பெருத்துவிட்டது. குனிந்து நிமிர்ந்து ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பணிவிடை செய்ய முடியாது, தம்பி மகனை அதிகாரபூர்வமான அர்ச்சகர் ஆக்கிவிட்டு, வீட்டோடு அய்க்கியமாகிவிட்டார்.

அவர் சாதாரண மானிடப் பிறவியா, ஊருக்கு உழைத்துப்போட! குருக்கள்! ஜோதிடர்! அவரிடம் ஜோதிடம் பார்ப்பது அமைச்சர்கள், அதிகார வர்க்கங்கள். அவரிடம் தங்கள் ஜாதகத்தை கணித்துத்தானே தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை ஆன்மிக சிகாமணிகள் முடிவு செய்வார்கள்!

சீனிவாச சாஸ்திரி சம்பாதிக்கும் காசும் பணமும் எதற்காக? இல்லாதவன் வயிற்றுப் பசியைப் போக்கவா அள்ளித் தரப் போகிறார்? அல்லது பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கு முதலீடு செய்து பத்து ஜனங்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கப் போறாரா? மளிகைக்கடை, ஜவுளிக்கடை திறக்கப் போறாரா! அவர் அந்த வர்க்கம் இல்லையே! ஆட்டிப் படைக்கும் அதிகார வர்க்கமாயிற்றே!

மகனும், மகளும் அமெரிக்கா பிரஜை. இவர் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை. தம்பி, தம்பி மகன் அவர்களுக்கும் சீனிவாச சாஸ்திரியின் ஏகபோக சொத்து தேவையில்லை. நாளை கோயில் குருக்களான தம்பி மகனே சாஸ்திரியாரை மிஞ்சினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

சாப்பாடு, தூக்கம், காலையும் மாலையும் தோத்திரம் பாராயணம், மதியம் ஊஞ்சல் படுக்கை, ஆண்டுக்கு மூன்று நான்கு தடவை யாத்திரை! தினம் மதியம் வாழை இலை சாப்பாடு! சாப்பாட்டு நெய் வாழை இலை முழுவதும் பரவி, பளபளப்பாக இருக்க வேண்டும். ஒரு பருக்கை கூட ஒட்டியிருக்கக் கூடாது. அந்த இலையை புழக்கடையில்கூட வீசக் கூடாது. நாலு பேர் நடக்கும் நடுவீதியில்தான் வீச வேண்டும். அப்பத்தானே ஏழை எளியோர் சாஸ்திரி சாப்பாட்டின் நெய் வாசனையை நினைத்து ஆச்சரியத்தோடு செல்வார்கள். குருக்கள் இல்லையா! குபேர வாழ்க்கை பிறர் பார்க்கத்தானே!

அன்று தெரு நாய்கள் இரண்டு வாழை இலையை அங்குமிங்கும் இழுக்கின்றன. கணேசமூர்த்தி சாஸ்திரி வீட்டு வாசல்படி ஏறுகிறார். நாய்கள் ‘லொள் லொள்’ என்று அவரை விரட்டுகிறது. கல்லை எடுத்து நாயை விரட்டிவிட்டு காலிங்பெல்லை கணேசமூர்த்தி அழுத்துகிறார். சாஸ்திரி கதவைத் திறக்கிறார்.

நமஸ்காரம் சாஸ்திரி சார்! இந்த வருடம் காசி யாத்திரை டூர் போட்டு இருக்குறோம். ஸ்பெஷல் கும்பமேளா ஸ்நானம். ஆளுக்கு பதினைந்து ஆயிரம். காசி, பிரயாகை, அலகாபாத் அப்படியே டெல்லி செங்கோட்டை, கல்கத்தா காளிகோயில், பூரி ஜெகந்நாதர், கடைசியா ஏழுமலையானைத் தரிசித்து விட்டு ஆத்துக்கு வந்துடலாம். போஜனம், தங்குமிடம் எல்லாம் பஸ் கட்டணத்துடன் சேர்த்து, எக்ஸ்ட்ரா ஷாப்பிங் செலவுக்கு மட்டும் பார்த்துக்கிட்டா போதும்.

நமஸ்காரம் கணேசமூர்த்தி! யாரை மறந்தாலும் நம்மப் பேமிலியை மட்டும் மறக்க மாட்டாய் போல். ஆமாம், யாரெல்லாம் புக் ஆகி இருக்கிறார்கள்?

ஆலந்தூர் ஜவுளிக்கடை முதலாளி அருணாசலம் பிள்ளைதான் புது ஆள். மற்றபடி உங்கள் பால்ய நண்பர் ரிட்டையர்டு கலெக்டர் புருஷோத்தமன், அவர் சினேகிதர் தாசில்தார் தாமோதரன், ரிட்டையர்டு அய்.பி.எஸ். அண்ணாமலை, முன்னாள் மாஜிஸ்திரேட் முகுந்தன், காரைக்குடி காமாட்சி சாஸ்திரி.

அம்புஜம், யார் வந்திருக்குறார் பார்!

வாங்க கணேசமூர்த்தி! உங்கள் ஆத்தில் எல்லாம் ஷேமமா! கொஞ்சம் உட்காருங்கோ, காபி கொண்டு வந்துடுறேன். அம்புஜம் உள்ளே போகிறாள்.

பாருங்க கணேசமூர்த்தி, நம்மக்கூட டூர் வாரவாள் எல்லாம் ஒரு காலத்தில் கவர்மெண்டையே ஆட்டி வச்சவா! அன்னைக்கு இருந்த நிருவாக சீர்திருத்தம் இன்னைக்கு இருக்குதா? எல்லாம் கலிகாலம்.

ராஜாக்கள் காலத்தில் இருந்து, வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்துட்டுப் போற வரைக்கும் பொம்மை மாதிரி அவன்களை உட்கார வெச்சுட்டு நாமதான் ஆண்டோம். முஸ்லிம் மன்னர்கள் காலத்திலேயேகூட அரசர்கள் அவாளா இருந்தாலும் ஆளுகை நம்மளுடையதுதான்.

அந்தக் காலத்திலேயே ஒரு சனாதன ஆட்சி அமைய நம்மவாள் எப்படிச் சூழ்ச்சி பண்ணினா!

பீஜப்பூர் அரசனின் தளபதி வீராதி வீரன் அப்சல்கான், அங்க அமைச்சர் நம்ம கோபிநாத் பண்டிட். நம்ம சிவா-ஜியின் ஆலோசகரும் கிருஷ்ணாஜி பாஸ்கர். அப்சல்கானை புலி நகத்தை மாட்டிக் கொன்றான் சிவாஜி என்கிறது வரலாறு. கொல்ல வழியமைத்துக் கொடுத்தவர்கள் நம்ம கோபிநாத் பண்டிட்டும், பாஸ்கரஜியும்தானே. ஏன் தஞ்சை ரகுநாத நாயக்கனுக்கு படைத் தளபதியே நம்ம கோவிந்த தீட்சிதர்தானே!

இந்தக் காலத்தில் ராமர் கோயில் கட்ட பாபர் மசூதியை எப்படியெல்லாம் அடித்து நொறுக்கி வசத்துக்கு கொண்டு வந்தா! நம்ம ஆள் ஆட்சிக்கு வந்து ஏக இந்து தேசம் அமைக்க எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு ஆர்ப்பாட்டம்! அவ்வளவையும் சமாளிச்சுட்டு, புதுப்புது சட்டமாப் போடுறா. ஏற்கெனவே எழுதி வச்ச சட்டத்திலிருந்து ஒவ்வொன்னா நீக்குறா! ராமராஜ்ஜியத்தை இந்த தேசத்துல அமைக்காம விடமாட்டா. பகவான் கீதையில் சொன்ன நால்வருணமும் தேசநலன் காக்கும் என்ற கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டா!

நமக்கு அடிமையா! ஆண்டாண்டு காலம் பண்ணைவேலை செய்தவாளோட மகனெல்லாம் டாக்டர், எஞ்சினியர், கலெக்டர், ஆட்சி அதிகாரப் பீடத்தில் கூட அமர்ந்து இருக்குறா. சமஸ்கிருதம் படிச்சவாதான் டாக்டர் ஆக முடியும் என்ற சட்டம் நம்மவா போட்டிருந்தா. அதையெல்லாம் உடைத்து அம்பேத்கர் எழுதி வச்ச சட்டத்தின் மூலம் முன்னேறிட்டா. அதற்கெல்லாம் பட்டாசை நம்ம ஊர் ராமசாமி நாய்க்கர்தான் கொளுத்திப் போட்டா. நம்மாள் இப்போ ஆட்சிக்கு வந்து ‘நீட்’டுன்னு கொண்டு வந்து அவாள் கனவுல மண்ணை அள்ளிப் போட்டுட்டா, இனி தகுதிக்கும் திறமைக்கும்தான் வேலைன்னு என்னன்ன சட்டம் கொண்டு வாராளோ! பாருங்க புதுசா முற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு பத்து சதவிகிதம்னு வச்சு அதுக்கு பொருளாதார அளவீடு எட்டு லட்சம்னு வச்சுட்டா, பி.சி. (BC), எஸ்ஸிக்கெல்லாம் (SC), அறுபதாயிரம், அம்பதாயிரமோ! உலகத்திலேயே நாமதான் உயர்ந்த குலம் என்று காட்ட நம்மவாள் அரசாங்கம் எப்படியெல்லாம் முயற்சி செய்றா பாரும்!

இதுல வேறு புதிய கல்விக் கொள்கைன்னு கொண்டு வந்து, மறுபடியும் குலத்தொழிலுக்கு வழிகாணப் போறாள்.

சாஸ்திரி சார், அரசியலை நோண்டாதீங்க! குப்பை குப்பையா வரும். அம்புஜம் அம்மா, நான் போயிட்டு வாரேனுங்க, அப்ப ஓகேதானே டூர்.

போங்கோ! நாம டூர் போறப்ப விரிவா பேசலாம்.

யாத்திரைக் கூட்டம் ஒவ்வொன்றாக பஸ்ஸில் ஏறுகிறது. ஆலந்தூர் அருணாசலம், ஜவுளிக்கடை ஓனர் அவர் சார்பாக ஆளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட், குளிர்பான பாட்டிலைக் கொடுத்து நமஸ்கரித்து விட்டு சீனிவாசன் சாஸ்திரி பக்கத்தில் உட்காருகிறார்.

வாங்க பிள்ளைவாள், ஷேமமா இருக்குறேளா? ஆத்துல எல்லாம் ஷேமமா? ஏது திடீர்னு காசி யாத்திரைக்கு வந்துருக்கேள்? நல்ல ஞானம்.

ஞானமாவது, கீனமாவது! கடைக்கு சரக்கு கொள்முதல் செய்த வகையில் அய்ம்பது லட்சம் பாக்கி இருக்கு, வெளிக்கடன் பத்து லட்சம், நமக்கு வரவேண்டிய வசூல் இருபது லட்சம், வருஷா வருஷம் லாபத்தில் ஒரு பங்கை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக்கிடுவேன், கொரோனா காலம் என்பதால் மக்கள் கையில் காசு இல்லை, ஸ்டாக்கும் பழைய மாடலாப் போச்சு, புதுசரக்கு வந்தால்தான் வியாபாரத்தை ஓட்ட முடியும்.

நம்ம கடை வாடிக்கையாளர்தான் கணேசமூர்த்தி. காசி யாத்திரைக்கு ஏற்பாடு பண்ணி இருக்குறோம். நீங்களும் கலந்துக்கங்க, கும்பமேளாவுல, சாதுகளும், ரிஷிகளும் நிறைய பேர் கங்கா ஸ்நானம் பண்ணுவாங்க, அந்த வைபோகத்த உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது. அவர்கள் எல்லாம் ஞானிகள். அவர்களின் தரிசனமும் அருள்வாக்கும் கிடைத்தாலே போதும், பிறகு கங்கா ஸ்நானத்தால் நம்ம முற்பாட்டன் தலைமுறை பாபம் போய்டும். பிறகு வந்து கடையில் அமர்ந்து வியாபாரம் பண்ணிப் பாருங்கள். லட்சுமி கடாட்சத்தால் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் என்றார்.

கணேசமூர்த்தி சொல்வது உண்மைதான் பிள்ளைவாள். இது எனக்கு மூன்றாவது கும்பமேளா£ யாத்திரை. பகவான் ஆசீர்வாதம் பரிபூரணமா எங்க குடும்பத்துக்கு கிடைக்குது! கங்கா தேவி சிவன் தலையில் அமர்ந்து கொண்டு நீராகப் பெருகுறாள் என்பது முன்னோர்கள் நம்பிக்கை! அதில் மூழ்கினால் புண்ணியம் ஷேமம் கிடைக்காமலா போகும்!

அயோக்கிய நாய் அடிக்கணும் செருப்பால!

அய்யோ, என்ன பிள்ளைவாள் ஆங்காரப் பேச்சு?

அட, உங்கள இல்ல சாஸ்திரி, நாத்திகன் எங்க அக்காப் புருஷன்! அவன் ஒரு தமாஷ் பேர்வழி, வீட்டுக்கு வந்தான். கங்கை யாத்திரையைப் பற்றி சொன்னேன். ஹி ஹினு சிரிச்சுக்கிட்டே, “அந்தக் காலத்துல காசிக்குப் போறேன்னு போனவங்களை எல்லாம், கங்கா தேவி அழைக்கிறத காட்டுறேன்னு அங்க உள்ள புரோகிதர்களும் புரோக்கர்களும் கங்கையில மூழ்க வைத்து காலப்புடுச்சு ஒரு மைலுக்கு அப்பால இழுத்துச் சென்று நகை நட்ட எல்லாம் கழட்டிக்கிட்டு ஆத்தோட விட்டாங்களாம். உலகத்துலேயே ரொம்ப அசுத்தமானது கங்கை நீருதான்னு விஞ்ஞானப் பூர்வமா நிரூபித்து இருக்குறாங்களாம். போ! போ நீ கங்கையில் குளிச்சு புண்ணியத்த தேடப் போறது இல்ல, நோயைக் கொண்டு வரப் போறேன்னு சொல்லுறான்.

சாஸ்திரி அய்யா… இப்படியெல்லாம் உண்மைக்கு மாறானத உளறிக் கொட்டுறானே அவன சொன்னேன்.’’

“விடுங்கோ! நாளாக, நாளாக அவாளும் உண்மைய உணர்ந்து ஆத்திகத்துக்கு வந்துடுவா.’’

“ஆமாம் சாஸ்திரி! சிவன் இன்னமும் கைலாய மலையில் இருக்குறாரா? கங்காதேவி அவர் தலையில் அமர்ந்துதான் நீரை கீழே விடுறாளா!’’

பிள்ளைவாள் கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்! இந்த கலியுகத்தத் தவிர மூன்று யுகங்களிலும் கடவுளர்களும், ரிஷி, சாதுக்களுடன் இந்த பூமியில் வாழ்ந்திருக்கா. கலியுகத்தில் தான் சுயரூபத்தில் இருந்து அரூபமா மாறிட்டா. அதாவது கல்லாகவும், மண்ணாகவும், மரக் கட்டையாகவும், நாம வணங்கும் அத்தனையும் கடவுளின் அரூபங்களே! இன்னும் ஒரு சில சாதுக்களுக்கும் ஞானிகளுக்கும் சுயரூபத்தில் காட்சிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்குறா. கலியுகம் முடிந்து கிருதாயுகம் பிறந்தவுடனேயே நாமும் பகவான் கூட அய்க்கியமாகிடுவோம். அதற்கு அச்சாரம்தான் நாம புண்யத்த தேடிப் போறது.

அப்படீன்னா! நாம கங்கையில குளிக்குற பலன இப்ப கொடுக்க மாட்டாரா பகவான்?

கிடைக்கும்! கிடைக்கும்! கங்கா ஸ்நானத்திற்குப் பிறகு அதன் பலனைப் பற்றி நீர் சொல்லத்தான் போறேள்.

பிள்ளைவாள் கங்கா ஸ்நானம் என்பது பனிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் வரும். அதாவது கும்ப ராசியில் குரு அமரும்பொழுது. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சாதுக்களும் ரிஷிகளும் இந்த கும்பமேளாவில் கலந்துகொண்டு கங்கா ஸ்நானம் செய்வா. அவர்களோடு பெரிய பெரிய வேத விற்பன்னர்களும், சாஸ்திரிகளும், ஆன்மிக அறிஞர்களும், அவர்கள் கூட அமைச்சர்களும், ஆளுநர்களும், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜுகளும்கூட ஸ்நானம் பண்ணுவா! நாம சாதாரண மனுசாள்தானே! கங்கா தேவி கடாட்சம் இல்லாமலா இவ்வளவு பேரும் கலந்துகொள்வா! அந்த நாத்திக தம்பியை என்னிடம் கூட்டி வாரும், ஒரே கேள்வியில் அவனை பகவான் காலடியில் விழ வைக்குறேன்.

அந்த அயோக்கியப் பயல் கெடக்குறான் சாஸ்திரி, அவன் வயதில் என்னைவிட மூத்தவன், என் அக்கா புருஷன், அந்த கருப்புச் சட்டைக்காரன் விஞ்ஞான பூர்வமா, அறிவியல் பூர்வமான்னு என்கிட்ட கதையளப்பான்! நான் என்ன அவன் மாதிரி வசதி வாய்ப்பு இல்லாதவனா? கவர்மெண்ட் வேலைக் காரனாம்! வெங்காய வேலை! அவன் மகன்களையும் படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்துட்டானாம், அந்தத் திமிர் புடிச்சவன். நாலு எழுத்து படிச்சுட்டா ஞானியாட்டம் பேசுறதா! நீங்கள் சொல்வதைப் பார்த்தா ஞானிகளும், சாஸ்திரிகளும் அமைச்சர்களும் ஆன்மிக அறிஞர்களும் கங்கா ஸ்நானம் பண்ணுறாங்க என்றால் பாப புண்யம் அறிஞ்சுதானே பண்ணுறாங்க. முட்டாள் பயலுக்கு, ஊருக்குப் போயி நாடகத்தை வச்சுக்கிறேன்.

விடுங்கோ பிள்ளைவாள்!

சாஸ்திரி அய்யா, நாளை காலை நல்ல நேரம் பார்த்துதானே ஸ்நானம் பண்ணணும்?

பிள்ளைவாள்!… அலகாபாத், காசி, பிரயாகைன்னு மூன்று நான்கு இடங்கள் இருக்கு. நாம காசிக்குப் போவோம். இரவு விடுதியில் தங்கிட்டு, காலையில் ஸ்நானத்தை முடித்து விஸ்வநாதரை தரிசித்துவிட்டு, போஜனம் முடிச்ச பிறகு கொஞ்ச நேரம் ஓய்வு… அப்படியே கல்கத்தா!

அதோடு நம்ம கணேசமூர்த்திக்கிட்ட சொல்லி வீட்டுக்கு ஒரு குடம் கங்கா ஜலம் கிடைக்குற மாதிரி ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க சாஸ்திரியாரே!

அவ்வளவு ஜலம் எதற்கு பிள்ளைவாள்? சும்மா ஆளுக்கு ஒரு பாட்டில் நாமளே எடுத்துண்டு போகலாம். நமக்கு வேண்டியவாளுக்கும், உறவுகளுக்கும் சும்மா ஒரு கரண்டி ஜலத்தக் கொடுத்து, சாப்பிடச் சொல்லி தலையில் தேய்க்கச் சொல்லலாம். அவாளப்  புடிச்ச பாபமெல்லாம் போய்டும். உங்க மைத்துனன் தலையிலும் தடவி விடுங்கோ!

புண்ணிய நதியோட ஜலத்தை அவன் தலையில் ஏன் தெளிக்கணும்? விடுங்க சாஸ்திரி, அவன் நரகத்துக்குப் போகட்டும்.

பிள்ளைவாள்… எட்டில் இருந்து பத்தரை வரை ராகு காலம், அதற்கு முன்பே ஸ்நானத்தை முடிச்சுடலாம். எல்லாம் ரெடியா நிக்குறா.

அய்யய்யோ, என்ன சாஸ்திரி! சாதுக்கள், சாமியார்கள் எல்லாம் நிர்வாணமாப் போறாங்க, ஆண்களும், பெண்களும் அவுங்க காலடியில் விழுறாங்க. நம்ம ஊருல இதுமாதிரிப் போனா கல்ல எடுத்து அடிப்பாங்களே!

அபசாரம்! அபசாரம்! அவுங்க எல்லாம் முற்றும் துறந்த முனிவர்கள். அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது, கடவுளிடம் வாங்குவதற்குச் சமம்.

அட, என்னங்க சாஸ்திரி, பெண்கள் கூட சடாமுடியுடன் போறாங்க!

அதெல்லாம் ஆண்டவன் அவர்களுக்கு கொடுத்த கிருபை.

அட, என்னங்க சாஸ்திரி, பெண் சாமிகளிடமிருந்து கஞ்சாப் புகை மூக்கைத் துளைக்குது!

அவாளெல்லாம் மெய் மறந்து ஆண்டவனை தரிசிக்க! அதெல்லாம் தேவை.

சாஸ்திரி அய்யா, இவர்கள் எல்லாம் குளித்து எவ்வளவு நாள் ஆகுதோ! ஒரே துர்நாற்றம் வீசுதே!

ஊஹூம்… இதற்குமேல் உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது. அதோ பாருங்க, ஒரு மாநில முதல்வர் அந்த நிருவாண சாமி பாதத்தில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.

சாஸ்திரி அய்யா, எல்லாம் ஸ்நானம் பண்ணட்டும்! கடைசியா நாம பண்ணலாம்.

பிள்ளைவாள், ஆயிரக்கணக்கில் இல்ல! பல லட்சம் பேர் ஸ்நானம் பண்ணுவா. நாம எப்படி தனியாப் பண்ண முடியும்?

சாஸ்திரி அய்யா எனக்கு ஒரு விளக்கம் தேவை. நாம குளிக்க தலையில் ஜலம் ஊற்றினாலும், ஜலத்தில் மூழ்கினாலும் யூரின் வருது; வருகிற மாதிரி உணர்வு ஏற்படுது. லட்சக்கணக்கானவங்க ஒரே நேரத்தில் கங்கையில் இறங்கும்போது அத்தனைப் பேர் யூரினும் கங்கையில்தானே கலக்கும்.

சும்மா வாங்கோ பிள்ளைவாள். நாம என்ன தூசு! எத்தனையோ அமைச்சர், கவர்னர், ஜட்ஜுகள், அரசு அதிகாரிகள் என அத்தனைப் பேரும் புண்ணியம் வேண்டித்தானே கங்கா ஸ்நானம் பண்ணுறா!

நான் அதற்குச் சொல்லல சாஸ்திரி. இப்போது சாதுக்கள், சாமியார்கள், சாமியாரிணிகள், நிருவாண சாமிகள் இவர்கள் எல்லாம் குளித்து எத்தனை மாதங்கள் ஆகுதோ! இவர்களுடைய அழுக்கும், அதோ, நெரிசலில் வயதானவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் மலமும், ஜலமும் கங்கா ஜலத்துடன் சேரும்பொழுது அதிக அசுத்தம் ஏற்படுமே! நாம மூழ்கும்போது அதுதானே நம்ம மூக்கு வாயில் ஏறும். அதே ஒரு புது வியாதியைக் கொண்டு வரும் என்றுதான் சொன்னேன்.

நீங்களும் உங்கள் அக்கா ஆத்துக்காரனோடு சேர்ந்துட்டேள் போல்! அதுதான் நாத்திகம் பேசுறேள், விடுங்கோ எல்லாம் அந்த சிவன் பார்த்துக்குவார்.

* * *

என்னா மாப்பிள்ள, கங்கா ஸ்நானம் எப்படி இருந்தது?

மாமா, உண்மையிலேயே உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும். அந்த கணேசமூர்த்தி பேச்சக் கேட்டு கங்கைக்குப் போனா… ஒரே கருமம் மாமா! சாதுக்கள், சாமியார்கள் என சொல்லிக்கொண்டு அம்மணமா வாராணுக!  பொம்பள சாமியார்கூட சடாமுடியோட வாராளுக! குளித்து எத்தனை நாள் ஆச்சோ! ஒரே கவுச்சி, கஞ்சா புகை! ஒரே குமட்டல்!

அவனுங்க கூட அமைச்சர், அய்.ஏ.எஸ். அதிகாரிங்க, கவர்னர் எனக் குளிக்கிறாங்க. அந்த அம்மண சாமி காலுலேயே அவனுங்களும் விழுறானுங்க! “லொக்! லொக்! லொக்!’’

மாப்பிள்ள, கொஞ்சம் எட்டி நின்னு பேசு! நீ மட்டும்தான் மூழ்குனியா! உன் கூட வந்த சாஸ்திரி, கணேசமூர்த்தி எல்லாம் மூழ்குனாங்களா?

என்னை மூழ்கச் சொன்னாரு மூழ்கினேன். அவங்க எல்லாம் தலையில தண்ணியைத் தெளிச்சு கிட்டு கங்கை நீர் தலையில் பட்டாலே புண்ணியம், கங்காதேவியை தரிசித்தாலே பாவம் போய்டும்னு வந்துட்டாங்க.

மாப்பிள்ளே! வாந்தி, தலைசுற்றல், இருமல் வந்தா, உடனே ஆஸ்பத்தரிக்குப் போங்க, பட்டால்தான் புத்தி வரும்.

* * *

ஆஸ்பத்திரி

“என்ன அபூபக்கர் பாய், உங்களுக்கு கொரோனாவா?’’

ஆமாம் அருணாசலம். டெல்லியில இருக்குற மருமகப் பிள்ளை வீட்டுக்குப் போய்ட்டு ரயிலில் வந்தேன். நான் வந்த பெட்டியில பத்துப் பதினைந்து பேர் காசி யாத்திரைக்குப் போயி கங்கா ஸ்நானம் பண்ணிட்டு வந்தாங்களாம். ரயிலை விட்டு இறங்கிய உடனேயே அந்தப் பெட்டியில் உள்ள அத்தனை பேரையும், செக் பண்ணி கொரோனா அட்டாக்குன்னு இங்கு கொண்டுவந்து சேர்த்துட்டாங்க!’’

“ஆமாம்! உங்களுக்கு எப்படி கொரோனா அட்டாக் ஆனது?’’

“நம்ம டூரிஸ்ட் கம்பெனிகாரன் கணேசமூர்த்தி கங்கா ஸ்நானம் பண்ணினா லட்சுமி கடாட்சத்துல காசும் பணமும் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்னு  சொல்லி டூர் அழைச்சுகிட்டுப் போனான். இப்போ கொரோனான்னு சொல்லி காட்டுப் பக்கம் உள்ள குடோனுல தூக்கிப் போட்டுட்டானுங்க!’’

“கவலைய விடுங்கோ அருணாசலம். எல்லாம் அல்லா பார்த்துக்குவான்.’’

“நான் என்ன கங்கையிலா குளித்தேன்? ரெயிலில்தானே வந்தேன்? என்னையக் கொண்டு வந்து இந்த காட்டுல போட்டுட்டாங்க.’’

லொக்! லொக்!

என்ன பாய், செருமல் நிக்க மாட்டேங்குது, மூச்சுத் திணறுது.

அல்லா! நீங்க வெளியே சொல்லுறீங்க. நான் மனசுக்குள்ளேயே வெதும்புறேன். சரி சரி, படுங்கோ அருணாசலம்.

ஏங்க! நீங்க இரண்டு பேரும் முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலனா நோய்த் தொற்று அதிகமாகி ஸ்பெஷல் வார்டில்தான் சேர்க்கப் போறோம் (டாக்டர் மிரட்டவும்…).

அருணாசலம் கொஞ்சம் காலம் பல்லக் கடிச்சுக்கிட்டு அமைதி காப்போம். எல்லாம் சரியாப் போய்டும். உங்க இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கங்க.

(இரண்டு பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் ஏறிக்கொண்டு இருக்கிறது.)

திடீர் மாரடைப்பு… அருணாசலம் முன்னால் சாகிறார். பின்னால் அபூபக்கர் சாகிறார்.

பத்திரிகை செய்தி! காசி யாத்திரைக்குச் சென்ற அறுபது பேர் தலைமறைவு! அவர்கள் மூலம் கொரோனா தொற்றுப் பரவும் அபாயம்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *