அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (271)

ஜுலை 1-15,2021

பெரியார் திடல் மீது தாக்குதல் முறியடிப்பு

கி.வீரமணி

சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி.ஜீவன்ரெட்டி, கே.எஸ்.பரிபூர்ண அய்யங்கார் ஆகியோரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் 23.8.1996 அன்று கழகத் தோழர்களின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 31சி சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பும் பெற்றுள்ளது. 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் அதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. வேலியே பயிரை மேய்வது போல, சட்ட விரோதமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணம். அதனைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.

கழகத் தோழர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து “கொளுத்துவோம்! கொளுத்துவோம்! பார்ப்பன நீதிபதிகளின் பொம்மைகளைக் கொளுத்துவோம்!’’ காப்போம்! காப்போம்! வகுப்புரிமையைக் காப்போம்! ஆகிய முழக்கங்களுடன் தோழர்களை வாழ்த்தி  பெரியார் திடலிலிருந்து புறப்பட்டோம். காவல் துறையினர் தடுத்ததால், ஈ.வெ.கி.சம்பத் சாலையில் அந்த நீதிபதிகளின் கொடும்பாவிகளுக்கு தீ வைக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த தோழர்களுடன் உரையாற்றுகையில், “இன்றைக்கு வைக்கப்பட்ட தீ சமூக அநீதிக்கு வைக்கப்பட்ட தீயாகும். இந்தத் தீ நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியட்டும். பெரியார் சுடர் உங்கள் கையில் உள்ளது. (சமூக நீதியினை பாதுகாக்கவே இது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அல்ல).

நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொள்ளட்டும். 1948இல் நடைபெற்ற தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றும்போது, “நான் இறந்தாலும் ஏனைய திராவிடர் கழகத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது  வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள்’’ எனக் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். சிறை வாசம் நமக்குப் புதியதல்ல. அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினோம். அய்யா ஆணைப்படி 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை புகுந்தோம். 16 உயிர்களை பலி கொடுத்தோம். அதற்கு முன்னம் எத்தனை எத்தனைப் போராட்டங்கள். நன்றியுள்ள தமிழ்ப் பெருமக்களே, ஒத்துழைப்பு நல்குங்கள். நாங்கள் எங்களுக்காக _ எங்கள் பிள்ளை குட்டிகளின் வாழ்வுக்காக அல்ல சிறையேகுவது! உங்களுக்காக உங்களின் சந்ததிக்காக’’ எனக் கூறினேன். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும்  சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டோம். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியோடு நடைபெற்றது. திருவாரூரில் அய்யாயிரம் பேர் பேரணியாகச் சென்று சமூகநீதிப் போராட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். சென்னையில் பட்டாளம் பன்னீர்செல்வம் _ கலைச்செல்வி ஆகியோரும் அவரது 3 வயது பெண் குழந்தை மணியம்மையும் கைது செய்யப்பட்டனர். குடும்பம் குடும்பமாக கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கைது செய்யப்பட்டது. போராட்டத்தின் ஆழத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருந்தது.

நீதிபதிகள் கொடும்பாவி எரிப்பில் கலந்து கொள்ளும் கழகத் தோழர்கள் மற்றும் அவர்களை வழி நடத்தும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

கைது செய்யப்பட்டு கழகத் தோழர்களுடன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருக்கையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு உடனடியாக ஒரு நர்சை அழைத்து வந்து இரத்த அழுத்தம்  பரிசோதிக்கப்பட்டது. பின்பு மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு தேவை எனவும், மருத்துவமனையில் சேர்க்கலாம் என்றும் கூறினார்கள். அப்பொழுது அதனை ஏற்க மறுத்து, “நான் சிறைக்குள் சென்று அங்கு செத்தாலும் சாவேனே தவிர, சிறைக்குப் போகாமல் மருத்துவமனையில் சேரமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டேன்.

சென்னை 14ஆவது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு 14 நாள்கள் (செப்டம்பர் 6 வரை) காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சென்னை மத்திய சிறையில் இடம் இல்லை என்று காரணம் கூறப்பட்டது. பின்பு, காவல்துறை வேனிலே இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு வேலூர் சிறையில் விடியற்காலை அடைக்கப்பட்டோம். (இது கலைஞர் முதல்வராக இருந்த தி.மு.க ஆட்சியில் தான் நடைபெற்றது.)

கொடும்பாவி எரிப்பினைத் தொடர்ந்து கைதாகும் ஆசிரியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதியில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கழகத் தொண்டர்களையும், என்னையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வை.கோபால்சாமி, சிங்கப்பூர் வாழ் சுயமரியாதை இயக்கத்தவர்கள், திருநாவுக்கரசு, தமிழ் உணர்வாளர்கள், அமெரிக்கா வாழ் தமிழ் அமைப்புகள், உலகமெங்கும் வாழும் பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் வாயிலாக எடுத்துக் கூறியிருந்தனர். மாணவர்கள் சில பகுதிகளில் வகுப்புகளைப் புறக்கணித்து கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பதினான்கு நாள்கள் வேலூர் சிறை வாசத்தினைத் தொடர்ந்து 6.9.1996 அன்று பகல் 1:00 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள 14ஆவது பெருநகரக் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டோம். வழி நெடுக சமூகநீதிக்கு ஆதரவாகவும், சமூகநீதிக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டுக் கொண்டே கழகத் தோழர்கள் இருந்தனர். என்னுடன் சேர்ந்து 175 பேர் ஆஜர்படுத்தப்பட்டு அரசுத் தரப்பில் காவலை நீட்டிக்க வற்புறுத்தாத காரணத்தால், அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட்டோம். கழக வழக்கறிஞர் பாளையங்கோட்டை சண்முகம், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, த.வீரசேகரன், அ.அருள்மொழி மற்றும் இரத்தினகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். சென்¬னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இரு தினங்களுக்குப் பிறகு கழகத் தோழர்களின் இல்ல நிகழ்வுகளில் கலந்துகொண்டேன்.

சென்னை பூண்டியைச் சேர்ந்த பி.பொன்னுசாமி, சிந்தாமணி ஆகியோர் களுடைய செல்வன் பி.சண்முகம் அவர்களுக்கும், சென்னை புதுநகரைச் சேர்ந்த ஆர்.முனியாண்டி, மீனா ஆகியோரின் செல்வியும், தஞ்சை சண்முகம் அவர்களுடைய சகோதரியுமான இந்திராணி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை 8.9.1996 அன்று வியாசர்பாடி குரு சந்திரா திருமண மண்டபத்தில் தலைமையேற்று மணமக்களுக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். அங்கு சிறப்புரையாற்றுகையில், பகுத்தறிவுக் கருத்துகளைக் கேட்டு பெண்கள் கைதட்டி வரவேற்றனர். விழாவில் பல கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மண்டபமே நிரம்பி வழியும் அளவுக்கு கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். மாலையில் மற்றொரு மணவிழாவும்  நடைபெற்றது.

வடசென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தே.பெ.ஜெயராமன் _ கண்ணம்மாள் ஆகியோரது செல்வனும் கொடுங்கையூர் நகர தி.க. தலைவருமான தே.செ.கோபால் அவர்களுக்கும், மறைந்த கன்னியப்பன் _ லட்சுமியம்மாள் ஆகியோரின் செல்வியுமான க.நிர்மலா அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை 8.9.1996 அன்று பெரியார் திடலில் தலைமையேற்று நடத்திவைத்தேன். விழாவில் முக்கிய பிரமுகர்களும் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திருச்சிக்கு கழகப் பொருளாளர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள புறப்பட்டேன்.

வாழ்விணையர் தே.செ.கோபால் – க.நிர்மலா ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தி வைக்கும் ஆசிரியர்

இதற்கிடையே ஜூன் மாதம் 23ஆம் தேதி கோபியில் நடைபெற்ற முக்கிய திருமண நிகழ்வை பதிவு செய்கிறேன். நீலகிரி மாவட்டம் கேத்தியைச் சேர்ந்த இரத்தினம் _ மாரியம்மாள் ஆகியோரின் செல்வன் இர.தனராசு, கோபி நகர ப.க. தலைவர் இரா.சீனிவாசன் _ பத்மாவதி ஆகியோரின் செல்வி கவிதாவுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை கோபி சீதா திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்களின் பேத்தியும், டாக்டர் எஸ்.கார்த்திகேயன், மங்கையர்க்கரசி ஆகியோரின் செல்வியுமான கே.மோகனா அவர்களுக்கும், கண்டனூர் ஆர்.எம்.வைரவன், வி.எஸ்.குமாரி ஆகியோரின் செல்வன் வி.ராஜு அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சியை 15.9.1996 அன்று தஞ்சை வல்லத்தில், பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியார் அரங்கத்தில், தலைமையேற்று நடத்திவைத்தேன்.

மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி வரவேற்றுப் பேசினார். பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் நல்.இராமச்சந்திரன், பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எஸ்.ராஜசேகரன், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், கழக பிரச்சார செயலாளர் துரை.சக்ரவர்த்தி ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியாக, மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறச் செய்து, மணவிழாவினை நடத்தி வைத்தேன். இம்மண விழா “ராகு காலத்தில்” நடைபெற்றது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணமாகும். இம்மண விழாவிற்கு எனது துணைவியார் மோகனா அவர்களும் உடன் வந்திருந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழில் நுட்பச் சாதனைகளில் ஒன்றான ‘இண்டர்நெட்’ மூலம் வீட்டில் உட்கார்ந்தபடியே கணினி மூலம் உலகின் எந்த மூலையில் வெளியாகும் செய்திகளையும் படித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை அளிப்பது இன்று எளிய ஒன்றாக உள்ளது. அதனை, அறியாமை இருள் அகல வேண்டும்; அறிவு ஒளி எங்கும் பரவ வேண்டும் என்று சொன்ன அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியாரின் 118ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 17.9.1995 முதல் கணினி மூலம் தந்தை பெரியார் பற்றியும் அவர்தம் கொள்கைகள், தொண்டுகள், அறப்பணிக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பணிகள், பிரச்சார வெளியீடுகள் பற்றி உலகெங்கிலும் உள்ளவர்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், “பெரியார் ஹோம் பேஜ்’’ உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சென்னை பெரியார் திடலில் உள்ள ‘பெரியார் கணினி ஆய்வுக் கல்வியக ஆராய்ச்சி மய்ய’த்தில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி அவர்கள், ‘பெரியார் இன்டர்நெட்’ கணினியின் பொத்தானை அழுத்தி தொடங்கி வைத்தார். (தமிழில் பகுத்தறிவு நாளேடு ஒன்று இந்த சாதனையை நிகழ்த்தியது.)

தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் அவருடைய கருத்துகளைப் பற்றியும் உலகின் மூலை முடுக்குகளில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் செய்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் பணிகளை வெகுவாகப் பாராட்டி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி பேசினார். மேலும் திராவிடர் இயக்க சாதனைக்கு இது ஒரு மைல் கல்! என்றும் குறிப்பிட்டார். அடுத்த நாள்களில் பெரியார் திடலின் மீது சிலர் விரும்பத்தகாத வகையில் செயல்பட்டனர்.

பெரியார் திடலைக் கைப்பற்றத் துரோகிகளின் தொடர் முயற்சிகள் செய்வதைக் கண்டித்து 19.6.1996 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில், பெரியார் திடலைக் கைப்பற்றுவதில் இதுவரை தோல்வி கண்டவர்கள், புதிதாக வெளியேற்றப் பட்டவர்களின் துணை கொண்டு அராஜகம், காலித்தனம் மூலம் என்னைக் கொலை செய்வது என்ற மிரட்டல் மூலம் செய்யத் துவங்கி உள்ளனர்.

பல அநாமதேய மிரட்டல் கடிதங்கள் இம்மாதம் 12ஆம் தேதி வாக்கில் வந்தவைகளை அப்படியே (ஒரிஜினல்களை) போலீஸ் கமிஷனரின் பார்வைக்கும் உரிய நடவடிக்கைக்கும் ஏற்கெனவே அனுப்பியுள்ளோம்.

பொதுவாழ்வில் உள்ள என்னைப் போன்றவர்கள் எந்த நேரத்திலும் இதுபோன்ற நிலையை எதிர்நோக்கி இருப்பவர்கள்தான் என்றாலும், எவ்வளவு கீழ்த்தரமாக இப்போது செயல்கள் _ கழகத்தால் வெளியேற்றப் பட்டவர்களால் நடைபெறுகிறது என்பதற்கு நம் அறிவு ஆசான் 118ஆம் பிறந்த நாள் விழாவில் அவர்கள் துணிந்து, “சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு, சென்னை நகரப் போலீஸ் கமிஷனருக்கே, “பெரியார் திடலுக்கு உள்ளே நிகழ்ச்சிகளை நாங்களே நடத்துவோம்’’ என்று எழுதிக் கொடுத்துள்ளார்கள். “பெரியார் திடலைக் கைப்பற்றுவோம்’’ என்றும், “வீரமணியே உனக்கு முடிவு ஏற்படும்’’ என்றும் எழுதியுள்ள அநாமதேயக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால்தான் அவர்கள் 17ஆம் தேதி பெரியார் திடலுக்குள் காவல் துறையால் அனுமதிக்கப்படவில்லை என்ற நிலையில், மீண்டும் 18.9.1996 காலை 7:30 மணிக்கு ஒரு வெளியூர் வேன் திடீரென பெரியார் திடலுக்கு முன் வந்து நின்றது. அதில் 12 பேர்களை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அவர்கள் உள்ளுக்குள் வந்து கலவரம் செய்த நிலையில், அவர்களை கையோடு பிடித்து ஒப்படைக்க, காவல் துறையினருக்குப் போன் பேசிய நிலையில், அவர்கள் வரும் முன் திமிரி, அவர்கள் கையில் கொண்டு வந்த ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடத் துவங்கிய போதுதான் அவர்கள் தோழர்களையும் தாக்கி ஓட ஆரம்பித்தனர். சிலர் அவர்களை இழுத்துக்கொண்டே வந்து நிறுத்திவிட்டனர்.

வந்தவர்கள் 17ஆம் தேதி காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 18ஆம் தேதி காலை அவர்கள் அத்துமீறி கெட்ட நோக்கத்தோடு உள்ளே நுழைந்து நமது அலுவலகத்தினை நாசம் செய்ய முயன்றனர். எதிர்பாராத வகையில் ஆட்கள் ஓடிவந்தவுடன் ஓடத் துவங்கிவிட்டனர்.

நாமே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறி _ மிகுந்த கட்டுப்பாடு காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்று நான் கழகத் தோழர்களிடம் கூறி, ஆத்திரப்பட்டவர்களை அடக்கி வைத்தேன்.

கழகத் தோழர்களே, ஆத்திரப்படாதீர்கள்! அவசரப்படாதீர்கள்! எக்காரணம் கொண்டும் கட்டுப்பாட்டினை மீறிச் செயலாற்ற முனையாதீர்கள். பொறுமை காட்டுவது கோழைத்தனம் அல்ல. பலவீனமும் ஆகாது என அந்த அறிக்கையில் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொண்டோம்.

காந்தாமணி நடராசன்

பகுத்தறிவாளர் கழக முன்னாள் தலைவர் சி.டி.நடராசன் அவர்களின் துணைவியார் திருமதி காந்தாமணி அம்மையார் அவர்கள் 28.9.1996 அன்று மறைவுற்றார் என்கிற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது இல்லத்திற்குச் சென்று உடலுக்கு மலர்மாலை வைத்தோம். என்னோடு துணைவியார் வீ.மோகனா, திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கலி.பூங்குன்றன், வடசென்னை மாவட்டக் கழக செயலாளர் பா.தட்சிணாமூர்த்தி ஆகியோரும் சென்று இறுதி மரியாதை செலுத்தினோம். சி.டி.நடராசன் அவர்களுக்கும், அவரது மகன்களுக்கும், அவரது மகன்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறித் திரும்பினோம்.

கிருஷ்ணா நதிநீரை சென்னைக்குக் கொண்டு வந்துள்ள திட்டமானது _ திராவிட இயக்க ஆட்சிகள் என்ற மகுடத்தில் பொறிக்கப்பட்ட சாதனை முத்து என்று அறிக்கை ஒன்றை 30.9.1996 அன்று வெளியிட்டோம். அதில், தெலுங்கு கங்கை திட்டம் என்ற இத்திட்டம் அன்று (1983இல்) பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து தொடங்கி வைக்கப்பட்டது என்றாலும், இரு மாநிலக் கட்சிகளின் மகத்தான ஒத்துழைப்பினால் மலர்ந்து பயன் தரும் ஆக்கபூர்வ பாராட்டக் கூடிய திட்டமாகும். மாநிலக் கட்சிகள் என்றால் ஏதோ தேச பக்திக்கு விரோதமானவை _ குறுகிய பார்வை உடையவை _ வளர்க்கப்படக் கூடாதவை என்ற கருத்து என்பதற்கு இந்தத் தெலுங்கு கங்கை திட்டம் _ கிருஷ்ணா ஆற்றுநீர் திட்டம் _ முதல்வர் டாக்டர் கலைஞரால் முன்பு ‘திராவிட கங்கை’ என்று பெயர் சூட்டப்பட்ட திட்டம் ஒரு ஆதாரபூர்வ எடுத்துக்காட்டு ஆகும்! இன்று முதல் சென்னை நகர மக்களுக்கு இதனால் கூடுதலாக தலைக்கு 70 முதல் 80 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு நல்வாய்ப்பு ஆகும்.

அகில இந்திய கட்சிகள்தான் இப்படி ஒரு சாதனை செய்ய முடியும் என்பதல்ல. மாநிலக் கட்சிகளாலும் இந்தப்படி மகத்தான சாதனை செய்ய முடியும் என்று காட்டிய முதல்வர்கள் கலைஞர், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.டி.ராமாராவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகிய அனைவரும் தமிழ் மக்களது பாராட்டுக்குரியவர்கள். திராவிட இயக்கங்களின் ஆட்சி சாதனை மகுடத்தில் ‘திராவிட கங்கை’ ஒரு சாதனை மகுடம் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் மகன் ராம.சுகந்தனுக்கும், எம்.தியாகராஜன் மகள் பிரமிளா செல்விக்கும் திருமண வரவேற்பு 3.10.1996 அன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். இந்த மணவிழாவில் அனைத்து கட்சித் தலைவர்களும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(நினைவுகள் நீளும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *