சாதனை நாயகர் : கலைஞர் ஒரு மானிடப் பற்றாளர்

ஜுலை 1-15,2021

முனைவர்  பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

திராவிட இயக்கமும் சரி, அதன் தளகர்த்தர் தந்தை பெரியாரும் சரி, கைக்கொண்ட கொள்கை மானிடப் பற்றை, மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது. கொள்கை என்று  காண்கையில் ஜாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, ‘வரும் முன் காப்போம் திட்டம்’, பெண் உயர்வு ஆகியன எல்லாமே அந்தக் கோட்பாட்டினதுதான் என்பதை நன்கு ஆராய்ந்து நோக்கினால் உணரலாம்.

அந்த அடிச்சுவட்டில் வந்த அண்ணா குறைந்த காலமே ஆட்சியில் இருந்தாலும் ரூபாய்க்கு ஒரு படி என்று அன்று கனவாய் _ நடத்த இயலாது என்று -_ கருதியபடி அரிசித் திட்டம் அறிவித்ததும் அந்த மானிடப் பற்றே. அதேபோல் சுயமரியாதைத் திருமணச் சட்டம், தீப்பிடிக்கும் குடிசை வீடுகளுக்கு மாற்றாகத் தீப்பிடிக்காத கான்கிரீட் வீடுகள் என்பதையும் சொல்ல வேண்டும். 

அண்ணாவின் வழிவந்த கலைஞர் அய்ந்து முறை ஆட்சிக் கட்டிலில் இருந்த கால வேளையில் மானிடப் பற்றாளர் என்பதை அறியும் வகையில் தந்தை பெரியாரில் தொடங்கி, அறிஞர் அண்ணா வரை அவர்கள் அடிச்சுவட்டைப் பிறழாமல் பின்பற்றினார்.

கலைஞர் என்றால் கைரிக்ஷா ஒழிப்பு, கண் ஒளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வு, கைம்பெண் மறுவாழ்வு, குடிசை மாற்று வாரியம், பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு என்று நிலைத்த நீடித்த திட்டங்கள் என நாடறிந்தவை பலப்பல. முதியோர் ஓய்வு ஊதியம் என்று மேலும் கூடிக்கொண்டே சென்றவற்றில் மேலும் சிலவற்றை எடுத்துக் கூறத் தொடங்கினால் இடமும் போதாது.

அந்தக் கலைஞரின் அடிச்சுவட்டில் வாராது, கிட்டாது என்று ஆரூடம் சொல்லி, அடித்துப் பேசிய அற்பர்கள் வாக்கைப் பொய்யாக்கி முதல் முறையாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி உளமார என்று உறுதிமொழி ஏற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியேற்ற ஒரு மாத காலத்தில் இக்கட்டான கொரோனா காலத்தில் கலைஞரின் அதே மானிடப் பற்றுடன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் மானிடப் பற்றைக் காண்கிறோம்.

அதில் குறிப்பிட்டுச் சொல்வது முதல்வர் அறிவித்த கொரோனா பேரிடரால் பெற்றோரை இழந்த, அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த, திடீரென்று ஆதரவற்றோராய் ஆகிவிட்ட சிறார் வாழ்வில் பெற்றோர் இல்லையே, உற்றார் உறவினர் ஆதரவு இராதே என்று கலங்கிய அந்தச் சிறார்க்குக் கல்வி, வாழ்க்கை வசதி, எதிர்காலத்தில் தலைநிமிர வாய்ப்பு என்று ஏற்படுத்திய திட்டம் இருக்கிறதே… அதைத் தமிழர் தலைவர் கி.வீரமணி முதல் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் _ மக்கள் திரள் பாராட்டுகிறது, வாழ்த்துகிறது.

இதைக் காண்கையில் சிறார்களை எதிர்காலத் தலைமுறையைக் கருத்தில் கொள்வதைக் காண்கையில் கலைஞர் ஆட்சியின் தொடர்ச்சியைப் பத்து ஆண்டுகளுக்குப் பின் கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

நினைவலைகளைப் பின்னோக்கிப் பார்க்கையில் பலரும் அறிந்திடாத மனிதநேயத் திட்டம் ஒன்று நினைவில் நிழலாடுகிறது. அது,

“ஏழை மாணவர் கல்வி வசதிக்கு வளர்ப்புப்  பெற்றோர் திட்டம்’’

அரசுதான் என்றில்லை, பொதுமக்களும் கைகோக்கும் திட்டம் அது. இதை இங்கே சுட்டிக் காட்டுகையில் கலைஞர் என்றும் உயர்ந்துதான் நிற்பார். எல்லோர் உள்ளங்களிலும் மானிடப் பற்றால் என்றும் நிலைத்து நிற்பார்.

இந்தத் திட்டத்தின் முதல் சிறப்பே கி.பி.2000 கடந்து தொடங்கும் புத்தாண்டான 2001ஆம் ஆண்டில் தொடங்கிய திட்டமே.

தலைவர் கலைஞர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வி அளித்திடத் தொடக்கக் கல்வி பேரியக்கம் நடத்திட வேண்டும் என அறிவித்தார்.

அனைவருக்கும் கல்வி வசதி அளித்திட வேண்டும் எனும் அடிப்படையில் ஏழை, எளிய, வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்த 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘வளர்ப்புப் பெற்றோர் திட்டம்’ வாயிலாக அவர்களுக்குக் கூடுதல் கல்வி வசதி ஏற்பாடு செய்தார்.

ஏழை எளியோர்கள் நலவாழ்வில் நாட்டமுள்ளோர்கள் கல்விப் பணியில் உதவும் மனமுடைய சான்றோர்கள் தன்னார்வலர்கள் ஒவ்வோர் ஏழைக் குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கு ரூ.400/_ வழங்கி வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தில் அதிக அளவில் ஏழை, எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் பங்கு கொள்ளத் திட்டம் அளித்தார் கலைஞர்.

வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தில் வழங்கிடும் குறைந்த அளவுத் தொகை ரூ.400 குழந்தையின் பெற்றோர், பள்ளித் தலைமையாசிரியர் பெயரிலாவது, தன்னார்வலர்கள் விரும்பினால் அவர்கள் பெயரிலும் வங்கிகளில் அல்லது அஞ்சலகங்களில் கூட்டுக் கணக்குத் தொடங்கி தொகை வரவு வைக்கப்பெற்றது.

ஏழைக் குழந்தைக்கான கூடுதல் உடைகள், கல்விக்கு வேண்டிய பொருள்கள் வாங்கிட இத்தொகை பயன்படும் வகையில் அமைந்தது இத்திட்டம். வெறும் ஏட்டளவில் அல்லாமல் தஞ்சையில் மூ.ராசாராம் அய்.ஏ.எஸ் ஆட்சியாளராக இருந்தபோது தொடங்கிச் சிறப்புடன் நடைபெற்றிருக்கிறது.

இந்த வேளையில் மானிடப் பற்றோடு எந்த ஏழைக் குழந்தையும் வறுமையின் பிடியில் சிக்கி வாழ்வில் கல்விக் கோட்டைத் தாண்டாமல் விட்டு விடக் கூடாது என்று சிந்தித்துச் செயலாற்றிய கலைஞர் எங்கே, புதிய கல்விக் கொலைக் கொள்கை என்று மூன்றாம் வகுப்பிலும், அய்ந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் பொதுத் தேர்வு என்று ஏழை, எளிய மாணவர்களின் அதிலும் குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களின் கல்விக் கதவை அடைத்துக் குலக் கல்வி கொண்டு வரும் மோடி அரசு எங்கே என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நல்ல வேளை அடிமை அரசு தொடர்ந்து இருந்தால் புதிய கல்விக் கொள்கை கத்தி அண்ணா பெயரில் ஆட்சி நடத்திய ஆட்சியாளர்களால் நடைமுறைக்கு வந்திருக்கும். நாடு கல்வித் தளத்திலும் பிழைத்துக் கலைஞர் அடித்தளத்தில் நடைபோடுகிறார்.

கலைஞரின் ஆட்சியின் மனிதநேயப் பணிகள் மாபெரும் பணிகளாக விளங்கியிருக்கின்றன என்பதை ஒவ்வொரு திட்டமாக நோக்குகையில் வியக்கிறோம். மனிதக் கழிவை மனிதனே தலையில் தூக்கும் கொடுமை நிலை மாறுவதற்குக் கொண்டுவந்த திட்டம் துப்புரவுப் பணியாளர்களுக்கான மீட்பும் மறுவாழ்வும் திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரை அப்போது ஒரு குழுவாக உருவாக்கி அவர்களுக்குச் சுயதொழில் பயிற்சி அளிக்கப் பெற்றது.

குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பிளீச்சிங் பவுடர், பினாயில், சோப்பு, எண்ணெய், பிரஷ், துடைப்பம், நாப்தலின், மிதியடி, கழிவறை கட்டத் தேவைப்படும் செங்கற்கள், மூங்கில் முதலானவற்றைத் தயாரிக்க ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பெற்றது. இதற்குத் தாட்கோ, வங்கிக் கடனும் வழங்கப் பெற்றது.

இவ்வாறு துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவியவர் என்பதை விடத் தொடர்ச்சியாக அருந்ததியருக்கு மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து மருத்துவர்களாகவும், நூறுக்கும் மேற்பட்டவர்களை பொறியாளர்களாகவும் ஆக்கியது கலைஞரின் போற்றுதலுக்குரிய மனிதநேயப் பணி.

கலைஞரின் தந்தை பெரியார் நினைவு போற்றும் சமத்துவபுரத் திட்டமும் மற்றொரு மானிடப் பற்றுக்கான சான்று. (பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன ஆட்சியில் சமத்துவபுரங்கள் பாழ்பட்டுவிட்டதுஎன்பதை வருத்தத்துடன் தெரிவிக்காமல் இருக்க இயலவில்லை.)

தஞ்சையில் தலைவர் கலைஞர், தந்தை பெரியார் சமத்துவபுரத்தைக் குருங்குளம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

ஜாதி மத பேதங்களால் ஏற்படும் தீங்குகள் களையப் பெற்று நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற உன்னத இலட்சிய உணர்வோடு வாழ வேண்டும் எனும் மாபெரும் எதிர்பார்ப்புகளோடு தொடங்கப்பெற்ற அந்த சமத்துவபுரம் அதனைச் சாதித்தது.

பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இச்சமத்துவபுரத்தில் உணர்வால், மனித நேயத்தால், சகோதரத்துவத்தால் வாழ்க்கையால் இணைந்துள்ளனர். அவர்கள் பயன் பெற அவர்களுக்கு அங்கே அழகு இல்லங்கள், தூய குடிநீர் வசதி, வடிகால் வசதி, தாய்சேய் நல மய்யம், நல மேம்பாடு, மருந்தகம், மயான வசதி, மீன் வளர்ப்புப் பண்ணை, அங்காடிகள் என எண்ணிலா வசதிகளைச் செய்து கொடுத்தார் கலைஞர்.

ஒரு தாயின் அரவணைப்புப் போல கலைஞர் அரசின் தொடர்ந்த பணிகள் ஒருபுறம் நிகழும்போதே தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்து நாங்களும் செவிலித் தாய்களாக சமத்துவபுரத்திற்குத் தொண்டு செய்வோம் என்று முன் வந்து நாளும் நாளும் பணிகளைச் செய்து வந்த சமத்துவபுரங்களில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டம் குருங்குளம் பெரியார் நினைவு சமத்துவபுரம்.

தன்னார்வ அமைப்புகள் குருங்குளம் பெரியார் சமத்துவபுரத்தில் நூறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கான இலவச சிறுதொழில் பயிற்சி முகாம் நடத்தியிருக்கிறது. நாம் கலைஞர் அவர்களின் மானிடப் பற்றின் மேன்மைகளாக  எடுத்துக்காட்டுவன எல்லாம் வரலாறு!

அத்தகு சிறுதொழில் பயிற்சியால் அங்கு வாழும் எல்லா எளிய மக்களும், மகளிரும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டனர். வங்கிகளின் உதவியாலும், பிற தொண்டு நிறுவனங்களின் உதவியாலும் பல்வகையான மேம்பாட்டுத் திட்டங்களைச் செயலாக்கினர். கறவை மாடுகளாலும் பயனடைந்தனர்.

வரலாற்று ஏடுகளைப் புரட்டும்போது  மக்களுக்குப் பயன் அளிக்கும் எந்த ஒரு திட்டமும் அதன் தொடர் பராமரிப்புகளால் தான் வெற்றியடைந்துள்ளது.

கலைஞருக்குப் பின் _ தி.மு.கழக ஆட்சிக்குப் பின் வந்த ஜெயலலிதா ஆட்சி கலைஞர் மீது கொண்ட காழ்ப்பு உணர்வினால் மதுரவாயல் சாலைத் திட்டம், உழவர் சந்தை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட பல திட்டங்களைப் பாழ்படுத்தியதுபோல் பெரியார் சமத்துவபுரங்களைக் கவனிப்பார் இல்லாது தந்தை பெரியார் எனும் சூரிய ஒளியை மறைக்க முயன்றது.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதற்கேற்பத் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நாட்டு மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட்ட பிறகு, கலைஞர் நூறு சமத்துவபுரம் கண்டால் இவர் கலைஞரின் மனிதநேயப் பற்றின் அடிச்சுவட்டில் பலநூறு சமத்துவபுரங்களை மனநிறைவோடு உருவாக்கிக் கலைஞரின் பெருமைக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *