அய்யாவின் அடிச்சுவட்டில்…….

டிசம்பர் 01-15

நிருபர்களின் கேள்வியும் எனது பதிலும்

– கி. வீரமணி

தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அதிர்ச்சியில் திருச்சி வரகனேரியில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்த கழகத் தோழர் மருதமுத்து (வயது 53) அவர்கள் மரணமடைந்தார்கள். தந்தை பெரியாரிடம் பற்றும் பாசமும் கொண்டவர். இவர் அய்யாவின் இறுதி ஊர்வலத்தைக் காண குடும்பத்துடன் வந்திருந்தார்.

ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டு இருந்துபோது அதிர்ச்சி தாங்காமல் மரணம் அடைந்தார். அவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியிலிருந்து 2,000 ரூபாய் உதவித் தொகை முதல்வர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. அய்யா அவர்களின் மறைவிற்கு பல்வேறு சங்கங்கள் அமைப்புகள் இரங்கல் தெரிவித்து செய்திகள் அறிவித்திருந்தன. அதில், சன்மார்க்கச் சங்கங்கள், தார்மீக இந்து மிஷன், தாழ்த்தப்பட்டோர் நலக்குழு, பர்மா இந்தியர் சங்கம், வியாபாரிகள் சங்கம், கப்பற்படை தொழிலாளர் சங்கம், கரூவூலக் கணக்குத் துறைச் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழாசிரியர் கழகம், காணை வட்டாரம், புதுப்பாளையம், மீன்விற்பனைச் சங்கம் போன்ற பல சங்கங்கள், அமைப்புகள் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தன. அனைத்தையும் முழுமையாகக் குறிப்பிட முடியாத காரணத்தால் ஒருசிலவற்றைக்  குறிப்பிட்டுள்ளேன்.

 

ஏடுகள் சூட்டிய புகழாரங்கள்

அலை ஓசை இதழில் அறிவுச்சுடர் அணைந்தது என்றும், இந்திய நாட்டின் சாக்ரடீசாகவும், அரிஸ்டாட்டிலாகவும் மதிக்கப்பட்டு வந்த மாபெரும் தலைவர். சமுதாயப் புரட்சிக்காக சகலத்தையும் அர்ப்பணித்த புரட்சித் தலைவர் தந்தை யென்றும், அய்யா என்றும் தன்னியக்கத் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஆசான், மூடப்பழக்க வழக்கங்களின் மூல பலத்தை முறிப்பதற்காகப் பேசிய முதுபெரும் தலைவரின் வாய் மூடிவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தது.

சுதேசமித்திரன் இதழ் திரு. ஈ.வெ. இராமசாமிப் பெரியார் காலமானதற்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தின் மாமலைகளில் அவர் ஒருவர் என்பது சிறிதும் மிகையாகாது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலம் பல பெரும் சூறாவளிகளைத் தாங்கியும் எதிர்த்தும் நின்று, சமுதாயப் புரட்சித் தீயைக் கக்கி, இறுதியாக மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார். பழுத்த தேசியவாதியாகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய பெரியார் ஈ.வெ.ரா. தமது இளமைக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, அதன் தமிழ்நாட்டுத் தூண்களில் ஒருவராக  விளங்கினார். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியின் தாயகமாக அவரது இல்லம் திகழ்ந்தது. ஈரோடு நகர சபையின் தலைவராக இருந்தபோது கள் குத்தகைக்கு விடுவதைத் தவிர்க்கும் பொருட்டு தமக்குச் சொந்தமான பத்தாயிரம் பசுந் தென்னைகளை வெட்டி வீழ்த்தும் அளவுக்கு மதுவிலக்கில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். பெரியாரின் சமுதாய சீர்திருத்தப் பிரசாரம் சில நேரங்களில் நமது பண்பாடுகளை மீறியதாகவும் சில வேளையில் நமது தேச பக்திக்குச் சவாலாகவும் இருந்தது. அவர் தமிழக வரலாற்றில் தனிச் சிறப்புடைய இடத்தைப் பெறுவார் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருப்பதாக இல்லை என்று குறிப்பிட்டு இருந்தது.

நவமணி பத்திரிகை, நான்கு கோடித் தமிழர்களின் நாயகனாக விளங்கியவர் பகுத்தறிவுப் பரம்பரையை உருவாக்கியவர். எதிர்ப்பை லட்சியம் செய்யாமல் எதிர் நீச்சல் அடித்து வெற்றி கண்டவர். 95 ஆண்டுகளில் 75 ஆண்டு காலம் தன்னைப் பொதுப் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்று குறிப்பிட்டது.

தி மெயில் பத்திரிகை கடவுள் நம்பிக்கையுடைய பக்தர்களை அவர் பகுத்தறிவு வாதத்தால் அதிர்ச்சியடைய வைத்தவர். அதே வேளையில் அவர் பலரது பாராட்டுதலையும் பெற்றவர். இப்படி அவரைப் பாராட்டியவர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றாலும் இவர்கள் பிரசாரம் செய்த அனைத்தையும் முழுமையாக நடைமுறையில் கடைபிடிக்க முடியாதவர்களாக இருக்கலாம்.

வரலாறு அவரை ஒரு அரசியல்வாதி என்று மதிப்பிடாது போகலாம் என்றாலும், அரசியல்வாதிகள் அவரையும் அவரது இயக்கங்களையும் பயன்படுத்திக் கொள்ளவே செய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

இங்கு எல்லா இதழ்களையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை. அதனால் இதழ்கள் பெயரை மட்டும் குறிப்பிடுகிறேன். கலைமகள், முத்துலகம், மணிமொழி, கல்கி, மஞ்சரி, துக்ளக், விடிவெள்ளி, நவமணி, மாலை முரசு, செய்தி, தமிழ் முரசு, நவஇந்தியா, ஜனசக்தி, தாமரை, ஆனந்த விகடன், தமிழ்நேசன், தமிழ்நாடு, உரிமை வேட்கை, முரசொலி, தி ஹிந்து போன்ற இதழ்கள் அய்யாவின் மறைவை எதிரொலித்தன.

பெரியார் மறைந்து விட்டாலும், அவர் வழியில் திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும் என்று நான்  நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: பெரியார் மறைந்து விட்டாரே, பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்படுமா, அல்லது தி.மு.க.வுடன் இணையுமா?

பதில்: துக்கமான நேரத்தில் நீங்கள் இந்தக் கேள்வியைக்கேட்டிருக்கிறீர்கள். அதற்காகப் பதிலை அளிக்கிறேன்.

அய்யா அவர்களே, அய்யா அவர்களுக்கென்று தமிழகத்தில் அமைத்துக் கொண்ட அமைப்பு திராவிடர் கழகம். இந்த அமைப்பு அய்யாவுக்குப் பின்னாலும் அய்யா வழியிலேயே தொடர்ந்து செயல்படும். திராவிடர் கழகம் கலைக்கப்படப்போவதும் இல்லை. எந்தக் கட்சியுடனும் இணையப் போவதும் இல்லை.

கேள்வி: பெரியார் தன்னுடைய கடைசி ஆசை என்று ஏதாவது தெரிவித்தாரா?
பதில்: அய்யா இறப்பார் என்று நாங்களும் எதிர்பார்க்கவில்லை; அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆகவே, எதுவும் கடைசி ஆசை என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. அவர் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பேச்சு நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

மறுநாள் காலையில் அம்மா அவர்களின்  அறிக்கை விடுதலையில் வெளியானது. அதில், என்றுமே ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு ஆளாகிவிட்டோம். இத்தகையதொரு விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்துவிடும் என்று நினைக்கக்கூட முடியாத அவ்வளவு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

நாம் அனைவருமே நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி தளர்ந்து நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் கூறிட முடியும். ஆறுதலாலும், தேறுதலாலும் நம் உள்ளந்தான் அமைதியடைந்திடுமா? அடையாது! அடையாது! அவர் விட்டுச்சென்ற பணியினை, அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையிலே வழிநடந்து முடிக்கிறவரையிலே மன அமைதி நமக்கேது? அந்தப் பணியினை ஆற்றிட அருமைத் தோழர்களே! அணிவகுத்து நில்லுங்கள். அய்யா அவர்களின் இலட்சியத்தை ஈடேற்றியே தீருவோம் என்ற உறுதியினை, சங்கற்பத்தினை இன்று எடுத்துக் கொள்வோம்.

என்னைப் பொறுத்தவரையில் வினா தெரிந்த காலத்திலே இருந்து என் வாழ்வினையே அவர் தொண்டுக்கென அமைத்துக் கொண்டு விட்டவள். எனது துடிப்பினை இதோ நிறுத்திக் கொள்கிறேன்! இதோ நிறுத்திக் கொள்கிறேன்!! என்று எனது இருதயம் சதா எச்சரித்துக்கொண்டே, படுக்கையிலே என்னைக் கிடத்திவிட்ட போதிலும்கூட அய்யா அவர்களின் தூய தொண்டுக்கென அமைத்துக் கொண்ட என் வாழ்வினை, என் இறுதி மூச்சு அடங்கும் வரையிலே அந்தப் பணிக்கே செலவிடுவேன் என்ற உறுதியினை உங்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்.

இனி, மேலால் நடக்க வேண்டியதை நாம் அனைவரும் விரைவில் ஓர் இடத்தில்கூடி அய்யா அவர்கள் விட்டுச் சென்ற பணியினைத் தொடர முடிவெடுப்போம். கண்கலங்கி நிற்கும் கழகத் தோழர்களே, கட்டுப்பாட்டோடு கழகக் கொடியின் கீழ் அணிவகுத்து ஏற்றுகொண்ட பணியினை நடத்திட,  துணைபுரிந்திட கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர் கே. இராமச்சந்திரா, டாக்டர் பட், டாக்டர் ஜான்சன் ஆகியவர்களுக்கும் அவர்களுடன் பாடுபட்ட இதர பல டாக்டர்களுக்கும் எப்படி நன்றி எழுதுவதோ? தெரியவில்லை.

மதிப்பிற்குரிய அண்ணா அவர்கள் இந்த அமைச்சரவையையே அய்யா அவர்களுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்று சொன்ன மொழிப்படி அவருடைய தம்பி டாக்டர் கலைஞர் அவர்களும் மற்ற அமைச்சர் பெருமக்களும் அய்யா அவர்களிடம் தங்களுக்கிருந்த தேயாத பற்றை, பாசத்தை கொட்டிக் காட்டினார்கள். அரசாங்க மரியாதையுடன் அய்யா அவர்களின் உடலை அடக்கம் செய்து அய்யா அவர்களையும் நம்மையும் பெருமைப்படுத்திய டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கழகத்தின் சார்பில் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

நாடு முழுவதுமிருந்து அய்யா அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நமது துக்கத்தில் பங்கேற்றவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் வழங்கிய பல லட்சம் மக்களுக்கும் கழகத்தின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று எழுதி வெளியிட்டு இருந்தார்கள்.

அய்யாவின் அடிச்சுவட்டில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *