கடவுள் வாழும்(?) கோவிலிலே….

டிசம்பர் 01-15
  • சிறீபெரும்புதூர் டி.எம்.ஏ. தெருவில் வசிக்கும் அப்பாதுரையின் மகன் குமார் என்ற விஜயராஜ் அங்குள்ள இராமானுஜர் கோவிலுக்குச் செல்லுமுன் கோவில் குளத்தில் இறங்கி கால்களைக் கழுவியபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
  • புதுவை, சாரம் பூங்குணம் தெருவில் வசிக்கும் சரவணன் மகன் தினேசுடன் புதுவையை அடுத்துள்ள புத்துப்பட்டு அய்யனார் கோவிலுக்குச் சென்று சபரிமலை செல்ல மாலை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தபோது தனியார் பேருந்தில் மோதி உயிரிழந்தனர்.
  • உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தின் கலசம் உடைந்து விழுந்தது.
  • காரைக்கால், மதகடி என்னுமிடத்தில் பாரதியார் வீதி ஆற்றங்கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை எண்ணூர் காமராஜ் நகரில் வசிக்கும் சோமசுந்தரம் தனது மனைவியுடன் தங்கள் திருமண நாள் என்று அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று திரும்பும்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைக் கீழே தள்ளிவிட்டு, சோமசுந்தரத்தின் மனைவி கமலஜோதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
  • சென்னை – அண்ணா நகரை அடுத்த திருமங்கலம் என்.வி.என்.நகர் 14ஆவது தெருவில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 2 உண்டியல்களின் பணத்தினை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
  • ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நாதெள்ளா மண்டலம் அருகே சாத்தனூரு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 9 பேர் சபரிமலைக்கு மாலை அணிந்து வேனில் சென்றனர். பெங்களூர்-_சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கோவையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது மோதியதில் அருகிலிருந்த பள்ளத்தில் வேன் விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • விழுப்புரம் மாவட்டம் சாலமேடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (29) என்பவர் திருவண்ணாமலையில் கிரிவலமாக சிங்கமுகத் தீர்த்தமருகில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்மீது மோதி கீழே விழச் செய்துள்ளனர். சித்ராவின் வாயைப் பொத்தி மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்றபோது தடுக்க முயன்றதால் கத்தியால் குத்தி அவர் கழுத்திலிருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.

திருச்சி லால்குடி வட்டம் ஊட்டத்தூர் கிராமத்தில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோவிலின் அர்ச்சகர் காலையில் கோவிலைத் திறந்து மூலஸ்தானம் சென்றுள்ளார். அங்கிந்த உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப் பட்டதுடன் உள்பிரகாரத்தில் இருந்த ரூபாய் 1 கோடி மதிப்பிலான அய்ம்பொன்னாலான சாமி சிலைகளும் மர்ம நபர்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *