பெரியாரின் குரல்

டிசம்பர் 01-15

றிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தமது பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப 1929இல்  முதல் அயல்நாட்டுப் பயணமாக மலாயா வந்தபோது டிசம்பர் 25 அன்று முதன்முறையாக சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தார்.

பெரியாரின் குரலாக பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நம் ஆசிரியர் அவர்களும் டிசம்பர் 25 அன்றுதான் (1967) சிங்கப்பூர் வந்தார்கள்.

கொள்கைப் பொருத்தம், அறிவுப் பொருத்தம் என்று பல்வேறு பொருத்தங்களை ஒப்பிட்டுப் பார்த்துச் சிந்திக்கும் வேளையில் இந்த இருபெரும் தலைவர்கள் எங்கள் சிங்கப்பூருக்கு வந்த நாள் பொருத்தத்தையும் எண்ணிப் பார்த்து வியக்கின்றோம், மகிழ்கின்றோம் நாங்கள்.

தமிழர் தலைவரின் பெயரை உச்சரித்தால் சட்டென்று சமூக நீதிதான் நினைவுக்கு வரும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு, தமிழ்மொழி, தமிழினப் பாதுகாப்பு, மனித உரிமை, மூடநம்பிக்கைக்கு எதிராகப் போர்க்குரல் சுருக்கமாகக் கூறுவதென்றால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே லட்சியமாகக் கொண்டு தந்தை பெரியார் காட்டிய வழியில் சளைக்காமல் பீடுநடை போட்டுத் தொண்டாற்றி, தொண்டறத்திற்கு இலக்கணமாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். பெரியாருடைய பெயரை,  புகழை தமிழகத்தில் மட்டுமன்றி உலக அளவில் நிலைநிறுத்திய பெருமைக்குரியவராக தமிழர் தலைவர் அவர்கள் திகழ்கின்றார்.

சிங்கப்பூரைப் பற்றி நம் ஆசிரியர் அறிந்திருக்கும் அளவிற்கு வேறு எந்த இந்தியத் தலைவரும் அறிந்திருக்க மாட்டார் என்பது எனது ஆணித்தரமான கருத்து.

திறமையானவர்களைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவதில் ஆசிரியருக்கு நிகர் ஆசிரியரே. பெரியார், அண்ணா, கலைஞர் என்று அத்தனை பெரிய தலைவர்களிடமும் பழகிய பண்பட்ட சிந்தனையாளர் அல்லவா அவர். ஆற்றல் வாய்ந்த ஆசிரியர் அவர்கள் கல்லாதது உலக அளவு என்பதற்கொப்ப அறிவுப் பசியோடு வாசிப்பை நேசிப்பவராக இருப்பதைக் கண்டு வியக்கின்றேன்.

– எம். இலியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *