அம்மாவின் அடிச்சுவட்டில் ஆசிரியர், தமிழர் தலைவர்

டிசம்பர் 01-15

அய்யாவின் அடிச்சுவட்டில் என்று ஆசிரியர் தமிழர் தலைவரின் எழுத்தோவியங்களைக் கண்டு படித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால், அம்மாவின் அருமைப் புதல்வனாக ஆசிரியர் அம்மாவின் வாழ்நாள் முழுவதும் விளங்கி வந்திருக்கிறார்.

அய்யா இருந்தவரை அய்யாவின் அடிச்சுவட்டில், அய்யா மறைந்தபின் அம்மாவின் அடிச்சுவட்டில். இங்கே ஒன்றைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். அம்மாவின் அடிச்சுவடு வேறு அல்ல, அய்யாவின் அடிச்சுவடு வேறு அல்ல. அம்மாவின் வழி அய்யாவின் வழி.

 

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 10ஆம் நாள் வந்தால் ஆசிரியரின் நெஞ்சம் கனத்து சோகச்சுமை நிரம்பி விடுவதை அருகில் இருந்து காண்பவர்கள் மட்டுமே அறிவர். ஆசிரியரே அதைச் சுட்டிக்காட்டுவது உண்டு இவ்வாறு. என்னதான் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், அம்மா மறைந்த மார்ச் 10ஆம் நாளன்று உணர்ச்சிப் பிழம்பாகிவிடுகிறேன். அம்மாவை இழந்து நிற்கும் துயரத்திலிருந்து விடுபட முடிவதில்லை.

கொடுத்து வைத்தவர் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர் அவர். ஏனென்றால், மிக இளம் பிராயத்திலேயே தாயார் மீனாட்சி அம்மையாரை இழந்தவர். தந்தை கிருஷ்ணசாமி இரண்டாவது திருமணம் செய்த அம்மையாரைத் தன்னைப் பெற்ற தாயென்று பலநாட்கள் கருதியதும் உண்டு. அப்படிப்பட்ட தாயன்பை இழந்தவருக்குத் தாயாக விளங்கியவர் மணியம்மையார்.

அம்மாவைப் பற்றிய செய்திகளில் அவரின் எளிமை, துணிவு, பெரியார் கொள்கையின் ஈடுபாடு குறித்த அத்தனை தகவல்களின் களஞ்சியமாகத் திகழும் ஒருவர் உள்ளார் எனில் அவர் ஆசிரியர் ஒருவர் மட்டுமே.

என்னைக் கவர்ந்த தியாக தீபம் அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போந்தபோது, முதல் பாராட்டு, செய்யவேண்டிய சிறப்புப்பணி என்று போற்றி முதன்முதலில் ஊக்கமளித்தவர் ஆசிரியர் என்று சொன்னால் அது வெறும் புகழ்ச்சி வார்த்தையல்ல. தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூல் ஆசிரியருடய அடியெடுத்துக் கொடுத்தல், துணை இல்லையெனில் இத்தனைச் சிறப்புடன் வெளியாகியிருக்க இயலாது.

அம்மாவின் உறவினர் திருமதி சுந்தரி வெள்ளையன் திரு. வெள்ளையனின் துணைவியார் அமெரிக்காவிலிருந்து வந்தபோது அவரை அறிமுகம் செய்வித்து அரிய தகவல்கள் அளிக்கச் செய்த அந்தப் பெருமையை என்ன சொல்வது.

ஆசிரியர் வாழ்க்கைக்கு – மண வாழ்க்கைக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் அம்மா.

1958இல் தந்தை பெரியார் அவர்களைத் திருச்சி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை என்று தண்டித்து ஏககாலத்தில அனுபவிக்க ஆணையிட்டபோது நீதி மன்றத்திற்கு அய்யா அவர்களுடன் அன்றைய சட்டக் கல்லூரி மாணவரான வீரமணி அவர்கள் ஒவ்வொரு முறையும் சென்று கொண்டிருந்தார். அந்நிலையில் அய்யா அவர்கள், இவரை அழைத்து இயக்கப் பணிகளை அம்மா அவர்கள் செய்யும்போது நீங்கள் அருகில்  உடன் இருந்து அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள் என்று ஆணையிட்ட நாள்முதல் _ 1958 முதல் அம்மா மறைந்த 1978 வரை _ 20 ஆண்டுகள் அதுவரை ஓர் இயக்கப் பேச்சாளர் என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்த அம்மா, எவ்வளவு கொள்கை உறுதியும் உழைப்பும் உடையவர் என்பதை மாணவப் பருவத்திலேயே கண்டதினாலன்றோ ஆசிரியரைப் பெறாத பிள்ளையாகக் கருதி அள்ளக் குறையாத அன்பையும் பாசத்தையும் சிலர் பொறாமை கொள்ளும் அளவுக்குக்கூடக் கொட்டினார். இவரும் அய்யாவின் சொற்களை, வார்த்தைகளைப் போல் அம்மாவின் சொற்களை, வார்த்தைகளை, அன்புமொழிகளை ஆணையாகவே கருதிப் பணியாற்றினார்.

அய்யா தந்தை பெரியார் கூடச் சிற்சில நேரங்களில் உரிமை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி பொங்க வீரமணி என்னைவிட அம்மா சொன்னால்தான் தட்டாமல் கேட்பான் என்பார் எனில் அம்மாவின் அடிச்சுவட்டில் ஆசிரியர் என்பது எவ்வளவு பொருத்தம்.

எனவே ஆசிரியர், அம்மாவினால் இயக்கத் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட வரலாறு, முறையான வரலாறு.

அம்மாவின் மீது ஆசிரியர் கொண்ட மரியாதைக்கு, உறுதியான பின்பற்றலுக்கு எடுத்துக்காட்டு. இதை ஆசிரியரின் பிறந்த நாளின்போது எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

கழகத் தலைமை ஏற்றது முதல் அய்யாவின் கோட்பாடு, வழிமுறை குன்றாமல் இயக்கத்தை நடத்தி வந்த அம்மா, அடிக்கடி உடல்நலம் குன்றி மருத்துவமனை செல்ல நேரிட்டது. 22-.12.1979இல் திடீர் நெஞ்சு வலிக்கு ஆளாகி, சென்னை மருத்துவமனையில் இதய நோய்த் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்த அம்மா, மருத்துவர்களின் ஒப்புதலோடும் மருத்துவர்கள் உடன்வர 25.12.1977இல் நடைபெற்ற நிருவாகக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்தார்.

சிறிது நேரம் உணர்ச்சி வடிவமாய் உரையாற்றிய அம்மா, உடல்நலக் குறைவைக் காரணம் காட்டித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் ஆசிரியர்  வீரமணி அவர்கள் அந்தப் பொறுப்புகளையும் ஏற்றுக் கழகத்தை நடத்த வேண்டும் என்று மருத்துவமனையிலேயே தாம் எழுதி எடுத்துவந்த கடிதக் குறிப்பினை எவரும் எதிர்பாராத நிலையில் படித்தார்.

அதனை விரும்பாத, எதிர்பார்த்திராத ஆசிரியர் அவர்கள் அம்மாவின் கடிதத்தை வாங்கி நிருவாகக் குழுவினர் முன்னிலையில் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். தலைமையிலிருந்து அம்மா விலகல் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதி பொங்க எடுத்துரைத்து உரையாற்றினார். அம்மா, விலகல் எனும் தம் முடிவை மாற்றிக் கொண்டார். கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளராக ஆசிரியர் வீரமணி அவர்களே நீடிக்க வேண்டும் எனும் பொதுக்குழுவின் தீர்மானத்திற்குப் பெருமகிழ்வோடு ஒப்புதல் அளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தந்தார்.

அம்மாவின் வாரிசாக, இயக்கத் தலைமைப் பொறுப்பை அம்மா மறைந்தபின், அம்மாவின் கடிதம் அளித்தது, அம்மாவின் அடிச்சுவட்டில் ஆசிரியர் என மெய்ப்பிக்கும்.

அம்மா மறைந்தபின் 18-.03.1978 அன்று பெரியார் திடலில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிருவாகக் குழு உறுப்பினர்களும், மாவட்டக் கழக முதன்மைப் பெருமக்களும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

02.01.1978 அன்று, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன ஆயுள் செயலாளர் அன்னை மணியம்மையார் அவர்களால் எழுதப்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் டெபாசிட் செய்யப்பட்டு, தம் மறைவுக்குப் பிறகு தஞ்சாவூர் திரு. கா.மா. குப்புசாமி அவர்களிடம் ஒப்படைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு முத்திரையிட்ட உறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து தஞ்சாவூர் திரு. கா.மா. குப்புசாமி அவர்களால் பெறப்பட்டு அவ்வுறையில் இருந்த அம்மா அவர்களால் எழுதப்பட்ட கடிதம் இது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிலையம்
துவக்கம் 1956 பதிவு (ரிஜிஸ்டர்) 1953
செயலாளர்     செயலகம்
ஈ.வெ.ரா.மணியம்மை   திருச்சிராப்பள்ளி – 17,    02/01/1978

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன சட்டதிட்ட விதிகளின் கீழ் 21வது பிரிவின்படி எனக்கு இருக்கும் அதிகாரத்தின் கீழ் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிருவாகக் கமிட்டியில் ஆயுள் செயலாளராகிய நான் என்னுடைய செயலாளர் பதவியை என்னுடைய ஆயுளுக்குப் பின்னும் தற்போது இதில் ஆயுள் உறுப்பினராக உள்ள திரு. கி.வீரமணி S/o C.S. கிருஷ்ணசாமி 12, முதல் மெயின் ரோடு, கஸ்தூரிபாய் நகர், சென்னை- 20 அவர்களை அந்தப் பதவியை (செயலாளராக) நிருவகித்து வர நியமனம் (Nominate) செய்கிறேன்.

– ஈ.வெ.ரா.மணியம்மை,
ஆயுள் செயலாளர்,
02.01.1978-

சாட்சிகள்

1. N.S. சம்பந்தம்
2. ஆர்.சண்முகம்
3. கா.மா. குப்புசாமி
4. கே.வி.பி.சிதம்பரம்
5. கோ. இமயவரம்பன்
6. து.ஜெகதீசன்
7. ஏ.சிவசங்கரன்

ஒரு நாள் திடீரென்று ஆசிரியரிடமிருந்து தொலைப்பேசியில் அழைப்பு. அம்மாவின் நூல்கள் எல்லாம் விற்றுவிட்டதா? ஆசிரியரின் கேள்வி. இல்லை அய்யா, இன்னும் அறுநூறு படிகள் இருக்கின்றன எனது பதில்.

அம்மாவைப் பற்றி நம் கழகத் தோழர்கள் அறிய வேண்டும். அம்மாவின் தூய தொண்டுள்ளம் பரவ வேண்டும் என்னும் ஆசிரியரின் உள்ளக்கிடக்கை செயல் வடிவம் பெற்றது.

ஈரோட்டில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூல் அறிமுக விழா நடத்துவது என்னும் முடிவு மின்னலைப்போல் மேற்கொள்ளப்பட்டு, விரைந்து செயல்வடிவம் பெற்றது.

விடுதலையில் விழா நிகழ்ச்சிகள் பல நாள்கள் முழுப் பக்கங்களை நிறைத்தன. அதன்பின் ஆசிரியர் எப்போது சந்தித்தாலும் முதலில் கேட்கும் கேள்வி அம்மாவின் நூல், நம் இயக்கத்தவரைச் சென்றடைந்து விட்டதா? என்பது என்றால் இது போன்ற தலைவரின் அறிமுகம் பெற்றதை என் வாழ்வின் பெருமையாகக் கருதுகிறேன்.

8.11.2011 அன்று என்னுடைய திருமண நாள் வாழ்த்துப் பெறும் பேறு பெற்றேன். விமான நிலையத்திலிருந்து விமானம் ஏறப்போகும் முன் உளமாற வாழ்த்திய அந்தத் தலைவர் அப்போதும் கேட்ட கேள்வி, புத்தகங்கள் எல்லாம் விற்றுவிட்டனவா, பிழைகள் இருப்பின் திருத்தி உடனடியாக அடுத்த பதிப்பு வரவேண்டும் என்று அன்புக் கட்டளை.

அது இந்தச் சாதாரண எழுத்தாளன், பேராசிரியனுக்குக் கிடைத்த பெருமையானாலும், தாயை மறக்காத, கொள்கை வீராங்கனையை மறக்காத அன்புத் தனயனின் பேருள்ளம், பெருமுயற்சி என்றுதான் கூறவேண்டும்.

– முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *