தொண்டர்களுக்கு ஊக்கம்

டிசம்பர் 01-15

– கோ. ஒளிவண்ணன்

1999ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தபோது, எனது வாழ்வே ஒரு பெரிய வெற்றிடமாக எனக்குத் தோன்றியது.  எனது வாழ்நாள் முழுவதிலும் என்னை வடிவமைத்து வழிநடத்தி வந்த ஒருவர் என்னுள் ஒரு வெறுமையை ஏற்படுத்தி விட்டுச் சென்றார் என்பதை என்னால் எளிதில் நம்பவே முடியவில்லை. எனது தத்துவ ஆசானாக, வழிகாட்டியாக மட்டுமே எனது தந்தை விளங்கவில்லை. எனக்குத் துயரங்கள் நேர்ந்த சமயங்களில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கியவர் அவர்.

புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலராக நான் பொறுப்பேற்றுக் கொண்டு சில மாதங்கள் கழிந்த பிறகு, நான் மேற்கொள்ள விரும்பிய  முதல் செயல், எங்கள் அலுவலகத்திற்கான ஒரு சொந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதுதான்.  சில மாதங்கள் கடுமையாகத் தேடிய பிறகு, எழும்பூர் காஜா மேஜர் சாலையில் ஓரிடத்தைக் கண்டுபிடித்த நாங்கள் அந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிக்கொண்டோம். இந்த நிகழ்ச்சியை எளிமையாகக் கொண்டாட விரும்பிய நான், ஒரு சில நண்பர்களையும், உறவினர்களையும் மட்டுமே அதற்கு அழைத்திருந்தேன்.  நமது அன்புக்குரிய தமிழர் தலைவர் அவர்களை அழைக்க நான் பெரியார் திடலுக்குச் சென்றிருந்தேன். தமிழர் தலைவர் அங்கு இல்லாததால்,  திரு. சீதாராமன் அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுத்து விட்டு வந்துவிட்டேன்.

நிகழ்ச்சியன்று அழைத்தவர்கள் வந்திருந்தனர். ஒருவரை ஒருவர் சந்தித்த மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாங்கள் பின்னர் உணவருந்தினோம். பின்னர் பெரும்பாலானோர் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டனர். எஞ்சிய ஒரு சிலர் மட்டும் அன்றைய நிகழ்ச்சி பற்றியும், அதற்கு வந்திருந்தவர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென்று, நீண்ட காலமாக எங்களிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவர் கீழேயிருந்து மாடிக்கு வந்து, தலைவர் வருகிறார் என்று கத்தினார். நாங்கள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற அவர் முதன்மை விருந்தினராக அல்லாத ஒரு நிகழ்ச்சிக்கு தலைவர் வருவார் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவுமில்லாமல் அழைப்பிதழை அவரிடம் நேரில் கூட கொடுக்கவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் நாங்கள் அனைவரும் வியப்புடன் திணறினோம். தலைவர் என்னை ஊமையாக்கி விட்ட நிலையில் என்னால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை.

எங்கள் புதியஅலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிப் பார்த்த அவர் எங்களைப் பாராட்டினார்.

ஏற்பாடு செய்திருந்த உணவு அனைத்தும் அப்போது காலியாகிவிட்டிருந்தது. மிகச் சொற்ப உணவு வகைகள்தாம், அவையும் சிறிதளவே எஞ்சியிருந்தன. எங்களுடன் உணவருந்துவீர்களா என்று தயங்கிக் கொண்டே அவரைக் கேட்டோம். எங்கள் அழைப்பை ஒப்புக் கொண்டு அவர் தலையசைத்தார். எஞ்சியிருந்த சில உணவு வகைகளை அவருக்குப் பரிமாறினோம். ஒரு வார்த்தையும் பேசாமல், அந்த எளிய உணவைப் பெருந்தன்மையுடனும் மகிழ்ச்சியுடனும் அவர் உட் கொண்டதுடன், அதன் சுவை பற்றியும் பாராட்டினார். அவரது பண்பைக் கண்டு நாங்கள் மனம் நெகிழ்ந்தோம்.

சொந்தமாக ஓரிடத்தை வாங்கிக் கொண்டதற்காக எங்களை அவர் பாராட்டி வாழ்த்தினார். அவ்வாறு செய்வதுதான் சரியான, அறிவார்ந்த செயலாகும் என்று  கூறினார். அவரது சொற்கள்  ஊக்கம் அளிப்பவையாகவும், செயலாக்கத்தைத் தூண்டுபவை யாகவும் இருப்பதாக நான் உணர்ந்தேன். எனது தந்தையின் மறைவினால் என்னுள் ஏற்பட்டிருந்த வெற்றிடம் தலைவர் அவர்களின் வருகையால் திடீரென்று நிரப்பப்பட்டது போன்று நான் உணர்ந்தேன். அந்தக் கணத்தில்தான் எனது குடும்பத்திற்காகவும், வியாபாரத்துக்காகவும் மட்டுமே  வேலை செய்பவனாக நான் இருக்கக்கூடாது என்றும், ஆசிரியருக்காகவும் கட்சிக்காகவும் வேலை செய்பவனாக இருக்க வேண்டும் என்றும்  முடிவு செய்தேன். எனது இரண்டு மகன்களும் இந்த நோக்கத்தில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டு,  எனது செயல்பாடுகளுக்கு உதவி செய்து ஆதரித்து வருவது  குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

எனது அழைப்பை ஏற்றுக் கொண்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தலைவர் அவர்களது சாதாரணமான ஒரு செயலே என்னுள் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அவருக்கு இருக்கும் பணிச்சுமையில், எங்கள் நிகழ்ச்சிக்கு ஒரு பாராட்டுக் கடிதம் மட்டுமே அனுப்பியிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், தான் ஒரு தனிப்பட்ட மனிதர் என்பதை அவர் மெய்ப்பித்துவிட்டார். நமது மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி நான் படித்தவை அனைத்தையும் நமது தலைவர் அவர்களிடம் காண என்னால் முடிந்தது. அவரது எளிமையும், அடக்கமும் அவரை ஒரு மாபெரும் மனிதராக்குகின்றன.

விஷயங்கள் அத்துடன் முடிந்து போகவில்லை. எழும்பூரில் இருக்கும் எங்களது புதிய வீட்டிற்குக் குடி போகும்போதும் நாங்கள் அவரை அழைத்தோம். அவரும் வந்திருந்து எங்களைப் பெருமைப்படுத்தினார்.

தனது ஒவ்வொரு சிறு செயலாலும் தனது தொண்டர்களைக் கவர்ந்து, ஊக்கம் அளிக்கும் ஒரு உண்மையான தலைவராக நமது தமிழர் தலைவர் விளங்குகிறார்.

வாழ்க பெரியார்!  வாழ்க நமது தமிழர் தலைவர்!! அவரது பிறந்த நாளுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

– (தமிழில்: த.க.பா.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *