அய்யாவின் அடிச்சுவட்டில்….

பிப்ரவரி 01-15

ஆச்சாரியாரின் ஒப்பாரி

காமராசர்             ராஜ கோபாலாச்சாரியார்      கலைஞர்

தந்தை பெரியார் அவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரம், தமிழ்நாட்டு மக்களின் மூட- நம்பிக்கை உணர்வின் முதுகெலும்பை எந்த அளவுக்கு ஒடித்திருக்கிறது என்பதற்குக் கடந்த பொதுத் தேர்தலே சரியான சான்றாகும். தனித்தமிழர் ஆட்சியான தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற பார்ப்பனருக்கும், இழந்த பதவியை எப்படியாவது, எதிரியிடம் சரணாகதி அடைந்தா-வது பிடித்துவிட வேண்டும் என்ற லட்சியமற்ற பதவி வேட்டை எதிர்க்கட்சி அணியினருக்கும் அத்தேர்தலில் செம்மையான பாடம் புகட்டினர் தமிழ் மக்கள்.  இது குறித்து நான் விடுதலையில் அங்கும் இங்கும் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினேன். அதை அப்படியே தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை அப்படியே தருகிறேன்.

லஞ்சம், ஊழல் -இவை எல்லாம் எடுபடாத நிலையில், கடைசித் துருப்புச் சீட்டாக, இராமனைச் செருப்-பாலடித்தவர்-களுக்கா ஓட்டு? என்று காங்கிரஸ், சுதந்திரா அணியினர் மேடைதோறும் – எழுதிய-தல்லாமல் – பத்திரிகைகளில் இமாலய விளம்பரம் செய்ததல்லாமல் கோயில் கதவு அளவிலான 5லட்சம் லித்தோ வால் போஸ்டர்களை அடித்து, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு, சென்னை முதல் கன்னியாகுமரிவரை, – பட்டிதொட்டி முதல் பட்டணக்கரை வரை அங்கெங்-கெனாதபடி எங்கும் ஒட்டினார்கள்.  தி.மு.க.வை இதற்காக ஆரியத்தலைவர் ஆச்சாரியார் பெருமான், எதிர்த்துப் பிரச்சாரம்  செய்தார்.  முன்பு பெரியார் பிள்ளையார் உடைத்தார்:-  அப்போது பெரியார் உடைத்தது பரங்கி மலை மாதிரி; ஆனால், சேலத்தில் இராமனைச் செருப்பால் அடித்தது இமயமலை மாதிரி; ஒரு நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசினை மக்கள் அது ஒன்றுக்காகவே டிஸ்மிஸ் செய்ய-வேண்டும் என்றெல்லாம் கொக்கரித்தார்கள்.

அரசியல் ரீதியாகத் தெளிவு படைத்தவர்-களானாலும், கடவுள் என்ற போதைப்-பொருளால், புத்தி சுவாதீனமற்று மயக்கம் அடைவர் மக்கள் என்ற பார்ப்பனத் துணிவே – சாணக்கியமே இப்பிரச்சாரத்திற்கு முழு அடிப்படையாகும். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட தெளிவு, அப்பிரச்சார மாயவலையில் அவர்களைச்சிக்கவைத்துவிடவில்லை.

இராமனைச் செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு என்று எதிர்க்கட்சி அணியினர் கேட்ட பிறகுதான், 138ஆக சட்டமன்றத்தில் இருந்த தி.மு.கவினர் 183 ஆக உயர்ந்தனர்! கேட்ட கட்சியினர் 50 ஆக இருந்தவர்கள், 15 ஆக வளர்ந்தார்கள். சம்பளம் வாங்கும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை அதற்குமுன் பெற்றிருந்தவர்கள், அதை இழந்து, சம்பளத்-தையும் இழக்கக் கூடியவர்களானார்கள்!

இதனால்தான் ஆச்சாரியார் மனமொடிந்து இனி, தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக ஆகிவிட்டது என்று ஒப்பாரி வைத்து கல்கி ஏட்டில் எழுதி  அழக்கூடிய அவலத்திற்கு ஆளானார்! எதிர்க்-கட்சி ஆணவத்தின் இடுப்பு ஒடிந்தது! பார்ப்-பனரின் சடகோபம் கிட்டிவிட்டால் எல்லாம் வெற்றியாகிவிடும் என்று பகற்கனவு கண்ட காமராஜர்கள் ஆசை, அற்ப ஆயுளுடன் அன்று மாண்டு மடிந்தது! உள்ளதும் போச்சே என்ற கேவலத்திற்குத்-தான் அவரது கட்சி ஆட்பட்டது!

இதிகாச இராமனை – இராமாயண இராமனை அவ்வளவு புனிதமாகக் கருதுவர் மக்கள் என்று கருதித்தான், இராமனைச் செருப்பாலடித்தவர்களுக்கா ஓட்டு என்று கேட்டனர். மக்கள் ஏமாந்தனரா?  இல்லையே!  தந்தை பெரியார்தம் அறிவுப் பிரச்சாரம் மக்களிடையே அவ்வளவு விழிப்புணர்ச்சியை, குறைந்தபட்சம் இன எதிரிகளைத் தக்க அடையாளம் கண்டு அவர்களிடம் ஏமாறாமல் இருக்கும்படிச் செய்துவிட்டது. அதே நேரத்தில் வட நாட்டில் என்ன நிலை?  இராமலீலா என்ற பெயரால் ஆண்டுதோறும் இராவணன், கும்பகர்ணன் உருவங்களை டில்லியில் கொளுத்துவது;  அதற்கு ஜனாதிபதி, பிரதமர், உபஜனாதிபதி ஆகியோரை அழைத்து அவர்கள் முன்னிலை-யில் நடத்தும் அவல நிலை, சோஷலிச மாதாவின் ஆட்சிக் காலத்திலும் நடைபெறுகிறது. அதைவிட மற்றொரு வேடிக்கை, வடநாட்டில் அண்மையில் பிரபாத் என்ற இந்தித் திரைப்படம் எடுக்கப்பட்டதாம்; அது ஒரு சமூகப்படமாம்! அதில், அப்பாவிப் பெண்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபட வைத்துப் பொருள் ஈட்டும் தரகர்களை  மய்யமாகக் கொண்டு சுழலும் அந்தக் கதையில் வரும் தரகன் ஒரு அப்பாவிப் பெண்ணை மணமுடித்து, திருமணம் முடிந்-தவுடன் அதற்குரிய கமிஷனைப்பெற்று, அவளை விபச்சாரத் தொழிலில் ஈடுபட-வைத்துப் போய் விடுகிறானாம்!  பிறகு, வேறு ஒரு பெண் அவனுக்கு மனம் திருந்தும் அளவுக்கு அறிவுரை கூறிய பின்னர் அவன் திருந்துகிறானாம்!

இந்தக் கதையில் வரும் தரகன் பெயர் இராமன், திருமணமாகிக் கைவிடப்பட்ட அபலைப் பெண்ணின் பெயர் சீதை என்பதற்-காகவும், அதில் வரும் வசனங்கள் இராமாயணத்தில் வரும் இராமன், இராவணனிடம் அனுப்பியது குறித்தும், அவனைவிட இந்த இராமன் மேலான வகையில்தான் சீதையை நடத்துகிறான் என்றும் வருகின்றனவாம்!

இதை எதிர்த்து, இராம பக்தர்கள் ஒரே ஆர்ப்பாட்டங்களில் இறங்கிவிட்டனராம்!  அதிதீவிரமான வகையில், கிளர்ச்சிகள் பெருகி-விடும் என்பதற்கு டில்லி மாநில ஆட்சியினர் அத்திரைப்படத் தயாரிப்-பாளரை அழைத்து, அப்பகுதிகளை நீக்கி-விட்டு, மாற்றிவிட வேண்டும் என்று வற்புறுத்தினராம்!  அப்படத் தயாரிப்-பாளரும், வேறு வழியின்றி அதை-யெல்லாம் மாற்றிவிட்டாராம்!

இது, சில வாரங்களுக்குமுன் செய்தியாக நாளேடுகளில் வந்தது என்றாலும், அண்மையில் வெளிவந்த டில்லி ஏடான கேரவனில் (1-.7.-1973) தோல்வி அடைந்த கடவுள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள தலையங்கக் குறிப்பில் – எழுதியுள்ள கண்டனத் தலையங்கத்தில், வால்மீகி இராமாயணத்தில் உள்ளபடிப் பார்த்தால், இராமனே சீதையைக் கற்புக் கெட்டவள் என்று கூறியிருக்கிறானே!  சீதா, இராவணனை எதிர்த்து நான் போர் புரிந்தது உன்னைக் கருதி அல்ல;  இழந்த என் இராஜ்யத்தை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உனக்காக அல்ல;  நீ கெட்டுப் போனவள்; என்னை மாதிரிப் பெரிய மனிதருக்கு நீ மனைவியாக இருக்க லாயக்கற்றவள்; நீ லட்சுமணனுடனோ, அனுமானுடனோ அல்லது சுக்ரீவனுடனோ வேண்டுமானாலும் போகலாம் என்று ஆத்திரம் கொப்பளிக்கப் பேசியிருப்பதை அவ்வேடு சுட்டிக் காட்டியிருக்கிறது. அவளைத் தீக்குளிக்கச் சொல்கிறான் இராமன் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு, அதற்குப் பிறகும் அவளை, அவள் கர்ப்பமுற்று இருப்பதை வைத்துக் காட்டுக்கு அனுப்பினானா என்-பதைச் சுட்டிக்காட்டுவிட்டு, “How can he be called a mariyada purushotham a man of ideal behaviour and conduct an avatar an antaryani who could book into the very heart and mind of a person?”  என்று எழுதியிருக்கிறது! வடநாட்டுப் பாமர மக்களுக்கு, இவ்வுணர்ச்சி விளங்காமல் இராம பஜனை, இராம பக்தி என்ற ஆழ்ந்த போதையில் அவர்கள் திளைத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, முன்பு ஜெயின்முனிவர் திரு. துளசி எழுதிய அக்னிபரிட்சா என்ற நூலை எதிர்த்து எவ்வளவு ஆர்ப்பாட்டம், எதிர்ப்புகள். இவை இங்கு உண்டா? இல்லாத-தற்குக் காரணம், தந்தை பெரியார்தம் அறுபதாண்டு இடையறாத பகுத்தறிவுப் பிரச்சாரம்-தானே!  இராவண காவியம் இங்குதானே எழுந்தது?  தந்தை பெரியார்தம் இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூல் இதுவரை சுமார் 20 பதிப்புகள்  அச்சிடப்பட்டு, பலலட்சம் பிரதி-கள் விற்பனையாகி இருக்கின்றன! இங்கிலீஷிலும், இந்தியிலும் அது மொழி பெயர்க்கப்பட்டு அதிலும் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றனவே! வடநாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புபோல், தமிழ்நாட்டில் இராமனைச் செருப்பால் அடித்த பிறகும், தமிழ்நாட்டு அரசை அசைக்க முடிந்ததா?
பெரியார் என்ன சாதித்துவிட்டார்? என்று நுனிப்புல் மேயும் பிருகிருதிகளுக்கு இவை புலப்பட வேண்டாமா? வடநாட்டில் ஒரு திரைப்படத்தில் இந்த நிலை!  ஒரு நூலுக்கு இந்த நிலை! இங்கோ இராமனை என்ன செய்தாலும் நாதியற்ற நிலை என்றால், தந்தை பெரியார் செய்த கருத்துப் புரட்சியின் ஆழம் பார்த்தீர்களா?

நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *