குடிஅரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

நவம்பர் 01-15

தகவல் – மு.நீ. சிவராசன்

(ஒருமுறை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரமனூர் கோவிலுக்கு அடஞ்சூர் மிராசுதாரர் ஒருவர் வழக்கம்போல் கடவுளுக்குக் கோடைக்கால குளிர்ச்சி உண்டாக்கும் பொருட்டு கைநோக இழைத்த சந்தனம் முதற்கொண்டு அபிஷேக சாமான்களில் ஒன்றுகூட குறையாமல் பகல் 12 மணிக்குக் கொண்டுபோய் வைத்தபோது கடவுளாகிய கல் கீழே சாய்ந்து கிடந்தது.  அதன் அடியிலிருந்த அட்சரத் தகட்டைக் களவாடிப்போய்விட்டனர்.  மிராசுதாரர் வெறுப்படைந்து நான் இனி இப்பாழும் தெய்வத்திற்கு யாதொன்றும் செய்வதில்லை என்று கூறி சுயமரியாதையில் திரும்பிவிட்டார்.  இந்நிகழ்ச்சி நகைச்சுவை உணர்வோடு கீழே தரப்படுகிறது.  படித்துப் பாருங்கள்.)

சென்ற மாதம் 15 ஆம் தேதி தஞ்சாவூர் ஜில்லா திருக்காட்டுப்பள்ளிக்கு அருகாமை யிலுள்ள அடஞ்சூருக்கும் வரகூருக்கும் பொதுவாயுள்ள பிரமனூர் (அய்யனூர்) கோவிலுக்கு அடஞ்சூர் பிரபல மிராசுதாரர்களில் ஒருவர் வழக்கம்போல் கடவுளுக்குக் கோடைக்காலக் குளிர்ச்சி உண்டாக்கும் பொருட்டு 2_நாள் முன்னதாக கைநோக சந்தனம் இழைத்து மூன்றாம் நாளாகிய வெள்ளியன்று அபிஷேக சாமான்களில் ஒன்றுகூட குறையாமல் பகல் 12 மணிக்குக் கொண்டுபோய் வைத்து கோவிலில் பார்க்கும்பொழுது கடவுளாகிய கல் கீழே சாய்ந்து கிடந்தது.  இதிலிருந்து அடியில் இருந்த அக்ஷரத்தகட்டை யாரோ திருடிக்கொண்டு போய்விட்டதாகத் தெரிகிறது.

பிறகு, கொண்டு போன சாமான்களை அங்கு வந்திருந்த சுயமரியாதைக்காரர் சொன்னபடி  அங்குள்ள சிறு ஏழைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு நான் இனி இப்பாழும் தெய்வத்திற்கு யாதொன்றும் செய்கிறதில்லை யென்று சொல்லி சுயமரியாதையில் திரும்பிவிட்டார்.  என்னே ஆச்சரியம்! உள்ளிருந்த கடவுள்தான் ஏமாந்துவிட்டார், வெளியில் சுற்றிலும், ஈட்டி, அம்பு, அரிவாள், கத்தி முதலிய உயிர்காக்கும் ஆயுதங்கள் வைத்திருந்த காத்தான் கருப்பன், வீரன், நொண்டி, சங்கிலி முதலிய தெய்வங்களும்கூட ஏமாந்து விட்டதைப்பற்றி மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது என ஒரு மாணவர் அறிவிக்கிறார்.

– குடிஅரசு – 09.08.1931 – பக்கம் : 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *