பளீர்

அக்டோபர் 16-31

பாராட்டுக்குரிய இஸ்ரேல் சட்டம்

இஸ்ரேல் நாட்டு எழுத்தாளர் யோரம் கானிக் யூத மதத்தைச் சேர்ந்தவர். தான் எந்த மதத்தையும் சாராதவர் என்று குறிப்பிட்டுக் கொள்ள விரும்பினார். உள்துறை அமைச்சகம் இவரது கருத்தினை ஏற்க மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், இஸ்ரேலியர் ஒருவர் தான் எந்த மதத்தையும் சாராதவர் என்று அழைத்துக் கொள்ள இஸ்ரேலியச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது என்று தீர்ப்புக் கூறியுள்ளது.

 


 

இன்னும் மாறாத சவுதி அரேபியா!

ஆண் துணை இல்லாமல் தனியாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டு பல மாதங்களான நிலையில், ஷாய்மா ஜஸ்டானியா என்ற பெண் தனியாக கார் ஓட்டியமைக்காக ஜெட்டா நகர நீதிமன்றம் 10 சவுக்கடி தண்டனையை அளித்துள்ளது.

தண்டனையைக் கேட்ட ஷாய்மா அதிர்ச்சியுற்று, நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று தண்டனை கொடுத்துள்ளார்கள். கார் ஓட்டுவதற்கான சர்வதேச உரிமம் தன்னிடம் உள்ளதால் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பெண்களுக்கு ஓட்டுப்போடும் உரிமையைக் கொடுத்த இரண்டாவது நாளில் இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

 


 

சோமாலியாவின் சோகநிலை

தோல்வியடைந்த நாடு என்ற பொருளில் அழைக்கப்படும் சோமாலிய நாடு போராளிகள், தீவிரவாதிகள், அரசாங்கம் என்ற மூன்று நிலைகளில் சூழப்பட்டுள்ளது.

சோமாலியாவின் தெற்குப் பகுதியில்  உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29,000 பேர் பட்டினியில் உயிரிழந்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் 7,50,000 குழந்தைகள் பசிப்பிணியால் உயிரிழப்பர் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளுள் சத்தான உணவுகளின்றி மக்கள் இறப்பது சோமாலியாவில் மட்டுமே நடைபெற்று வருகிறது. மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் பிற உயிரினங்களின் நிலையினைச் சொல்லவும் வேண்டுமா?

பிஸ்கட், சாக்லேட் என்று எதன் சுவையையும் அறியாத – பார்க்காத குழந்தைகளாக இங்குள்ளவர்கள் இருக்கிறார்கள். அதிகமான வெப்பத்தையும் மிகக் குறைந்த அளவே மழையையும் கொண்டிருப்பதால் எந்தப் பயிரையும் பயிரிடமுடியாத சூழ்நிலை. 100 அடிக்குக் கீழேகூட தண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளதாம்.

ஈழத்து மண்ணில் அனைத்து வளங்களும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். சோமாலியாவிலோ, எந்த வளமும் இன்றி உயிரிழக்கின்றனர் குழந்தைகள்.

அய்.நா. அவையின் வேண்டுகோள் இருப்பினும், உலகின் வளமுள்ள நாடுகள் அனைத்தும் கண்டும் காணாததுபோல் இருக்கின்றன. இச்சூழ்நிலையில், பட்டினியால் வாடும் சோமாலியக் குழந்தைகளுக்கு ஒரு நேரச் சாப்பாடாவது கிடைக்க, நம்மால் முடிந்த உதவியைச் செய்ய தமிழர்களாகிய நாமும், உலகில் பரந்து வாழும் தமிழ் இனமும் முன்வர வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *