நூல் மதிப்புரை

ஆகஸ்ட் 15-31 2018

 

நூல்:    ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

ஆசிரியர் : ப.திருமாவேலன்

வெளியீடு : நற்றினை பதிப்பகம்,6/84, மல்லன்           

பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னனை – 600005.

பக்கம் :  382      

விலை:  ரூ.300/-

கிடைக்குமிடம் :

                                  பெரியார் புத்தக நிலையம்

                                  சென்னை – 600007.

போன் :      044 – 2661 8163

“தீண்டாதாரின் முன்னேற்றம்தான் பிராமணரல்லாதார் முன்னேற்றம், தீண்டாதாரின் துன்பம்தான் பிராமணரல்லாதாரின் துன்பம்’’ என்று 1925ஆம் ஆண்டே  காங்கிரசில் இருந்தபோதே பிரகடனப்படுத்தியவர் அறிவாசான் தந்தை பெரியார்.

அதன்பின் சுயமரியாதை இயக்கம் கண்டு ஜாதி ஒழிப்பிற்கே இறுதிவரை இயக்கம் நடத்திய அவரைப் பற்றி அவதூறாக, “அவர் தாழ்த்தப்பட்டோருக்கு துரோகம் செய்தவர், ஆதிக்க ஜாதியினருக்கு மட்டுமே பாடுபட்டார்’’ என்று கொஞ்சமும் அறிவு நாணயமற்று அவதூறு பேசித் திரியும் கூட்டத்தினருக்கு பதிலடியாக புரியாதோருக்கு புரியவைக்கும் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளதுதான் இந்நூல்.

இந்நூல் தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துணையாக அவரது செயல் பாடுகளை, சிந்தனைகளைப் பட்டியலிட்டு அவர் மனித குலத்தின் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதை விளக்குகிறது.

நூலாசிரியர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன், பெரியாரின் பாசறையில் பயின்றவர், வளர்ந்தவர். எதையும் ஆதாரங்களோடு தருபவர். வரலாறு, அரசியல், சமூகம், சட்டம் தொடர்பான நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி உள்ளவர் எழுதி வருபவர்.

தலித் ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் எனப்படும் சில எழுத்தாளர்கள் தலித் மக்களை ஒடுக்கிய மனுதர்ம இந்து மதத் தத்துவம், தலித் மக்களை ஏமாற்றி வதைத்து இத்தகைய இழிநிலையை சுமக்கச் செய்த ஆரியம், அவற்றை செயல்படுத்தியோர், இன்றும் அதனை நிலைநிறுத்தத் துடிப்போர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல், தன் இறுதிநாள்வரை ஒடுக்கப்பட்டவர்கள் குரலாய் ஒலித்த தந்தை பெரியாரை தலித் விரோதியாய், காட்டுவதிலேயே தங்களது முழு சக்திகளையும் செயல்படுத்தி வருகின்றனர். அத்தகைய குற்றச்சாட்டுகளின் சாரங்களை முழுமையாகப் பதிவு செய்து, அவற்றிற்கு ஆணித்தரமான பதிலடியை வழங்குகிறார் நூலாசிரியர்.

குறிப்பாக  FFC[Frequently Framed Charges] எனப்படும் அடிக்கடி பெரியார் மீது அவரது  எதிர்ப்பாளர்களால் கூறப்படும் குற்றச்சாட்டுகளான,

1.                           தாழ்த்தப்பட்ட பெண்கள் ஜாக்கட் போடுவதை பெரியார் எதிர்த்தார் கிண்டலடித்தார்.

2.                           தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சையாகப் பேசினார்.

3.                           கீழ்வெண்மணிக் கொடுமையை கண்டிக்கவில்லை.

4.                           தமிழ்நாட்டு தலித் தலைவர்களை மதிக்கவில்லை; இருட்டடிப்பு செய்தார்.

5.                           இடைநிலை ஜாதியினரின் ஜாதி வெறியை பெரியார் கண்டிக்கவில்லை.

6.                           முதுகுளத்தூர் கலவரத்தின்போது காங்கிரஸ் கட்சியை பெரியார் ஆதரித்து வந்ததால் முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்தாரே தவிர, அவரது ஜாதி வெறியை எதிர்க்கவில்லை.

போன்றவற்றை பதிவு செய்து பதிலளித்துள்ளார் நூலாசிரியர்.

இவற்றில், “தாழ்த்தப்பட்ட பெண்கள் ஜாக்கெட் போட்டதால்தான் துணி விலை ஏறிவிட்டது’’ என்று தந்தை பெரியார் கொச்சைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டினை வலுவான ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்.

1962ஆம் ஆண்டு தேர்தலுக்காக தந்தை பெரியார் சொல்லாததைச் சொன்னதாகவும், திரித்தும் படம் போடப்பட்டுள்ளதை விளக்கி இதுகுறித்து தந்தை பெரியார் கூறியதை பக்கம் 22இல் குறிப்பிடுகிறார்.

“11.12.1968 அன்று வேலூர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய பெரியார், “எந்தச் சூழ்நிலையில் எந்தப் பொருளில் இது சொல்லப்பட்டது’’ என்று விளக்கம் அளித்தார்.

‘ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள்’ என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து இப்படி எப்படிச்  சொல்லலாம் என்று கேட்டார்கள். நான் சொன்னது உண்மைதான். ‘நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது. போட்டால் துணியே போடக் கூடாது. அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை’ என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும் நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.  (‘விடுதலை’ – 15.12.1968)

தந்தை பெரியாரை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானவராக சித்தரிக்க, விமர்சகர்கள் காட்டுவது கீழ்வெண்மணி சம்பவமாகும். இதுகுறித்து தம் நூலில் விரிவான தகவல்களைத் தருகிறார். மேலும், ஆளும் அரசுகளுக்கு ஆதரவாகவே தந்தை பெரியார் எப்போதும் ஆதரவாக இருந்தார் என்னும் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

அவரது நூலில் இருந்து…

“பெரியாரைக் கொச்சைப்படுத்துவதற்குச் சொல்லப்படும் காரணங்களில் ஒன்று கீழ்வெண்மணி.

“44 உயிர்கள் துடிதுடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பெரியார் கண்டிக்கவில்லை. ஏனென்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, அதனால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்பதற்காக பெரியார் அதில் மவுனமாக நடந்து கொண்டார்’’ என்று ஒரு சாராரும், “44 உயிர்களைக் கொன்றது கோபாலகிருஷ்ண நாயுடு, பெரியாரும் நாயுடு. அதனால் அவர் மவுனமாக நடந்து கொண்டார்’’ என்று இன்னொரு சாராரும் சொல்கிறார்கள்.

இரண்டு காரணத்துக்கும் அறிவு நாணயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் கீழ்வெண்மணி கொடூரம் நடந்தது. 90 வயதான பெரியார் அன்றைய தேதியில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பொதுமருத்துவமனையில் இருந்தார். 30ஆம் தேதிதான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதும், மருத்துவமனையில் இருப்பதும், 30ஆம் தேதி திரும்பியதும் ‘விடுதலை’ நாளிதழுக்கு அவரே தலையங்கம் எழுதுகிறார். 

‘இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை! ஜனநாயகத்தால் ஏற்பட்ட பெருங்கேடு’ என்ற தலையங்கம் 28.12.1968 நாளிட்ட ‘விடுதலை’யில் வந்துள்ளது. பெரியாரின் கையெழுத்துடன் இந்தத் தலையங்கம் வெளியானது. நாளிதழின் ஒரு பக்கத்துக்கு இந்தத் தலையங்கம் உள்ளது. நாளிதழின் ஒரு பக்கத்துக்கு இந்தத் தலையங்கம் உள்ளது. இப்படி ஒரு தலையங்கம் நாளை வெளியாகப் போகிறது என்று முதல் நாளே அதாவது, 27ஆம் தேதியிட்ட ‘விடுதலை’ இதழின் முன்பக்கத்திலேயே விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் 26ஆம் தேதியே அவர் எழுதிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மிக நீண்ட அறிக்கையாக இருந்தால் மறுநாள் வெளியிடுவது பத்திரிக்கை நடைமுறையில் வழக்கமானதுதான். இப்போது எரிந்து கொண்டிருக்கும்போதே கண்டித்து அறிக்கை வெளியிடும் ‘வாட்ஸ் அப்’ காலம் இல்லை அது.

கீழ்வெண்மணி சம்பவத்தை இந்தக் கையாலாகாத அரசாங்கத்தின், சட்டத்தின், ஜனநாயகத்தின் தோல்வியாக பெரியார் பார்த்தார். வன்முறையும் அரசியலும் பின்னிப் பிணைந்ததாகப் பார்த்தார். சட்டவிரோ காரியங்கள்தான் இன்று சமூகத்தில் அங்கீகரிக்கப்படும் விஷயமாக ஆகிவிட்டதாகக் கோபப்பட்டார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து சட்டமீறுதல் நடக்கிறது. அதுதான் இன்னும் தொடர்கிறது என்றார். பெரியார் எந்தக் காலகட்டத்திலும் வன்முறை பாணியைப் பின்பற்ற விரும்பாதவர் என்ற அடிப்படைப் புரிதலோடு இந்த அறிக்கையைப் பார்க்க வேண்டும்.

“(கடந்த) இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்கப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்…

1.                           காந்தியார் கொல்லப்பட்டார்.

2.                           தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன.

3.                           போலீஸ் அதிகாரிகள் கட்டிப்போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தன்பட்டனர்.

4.                           நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் அறுவடை செய்துகொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

5.                           கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம் தற்காப்புக்காக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண் குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டு கொளுத்தி 42 பேர் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு அரசியல், கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான நாச வேலைகளான காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே அவற்றி பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவற்றை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை. சட்டம் செய்வது லோதாக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது. சட்டத்திற்கும் நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதி ஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்யதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்… என்று போகிறது பெரியாரின் நீண்ட அறிக்கை. (‘விடுதலை’ 28.12.1968)

வெள்ளையர்கள் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. அதுதான் இத்தகைய வன்முறைகளுக்கு காரணம், இன்றைய சட்டத்தால் இதைத் தடுக்க முடியாது, இன்றைய நீதித்துறையதால் இதைத் தடுக்க முடியாது, இன்றைய ஆட்சியாளர்களுக்கு இதைத் தடுக்கும் பலம் இல்லை, ஜனநாயகத் தன்மையால் இதைத் தடுக்க முடியாது, ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு அரச நாயகம் வந்தால்தான் இந்த வன்முறைகளைத் தடுக்க முடியும், ரஷ்யாவோ அமெரிக்காவோ பிரிட்டனோ ஆண்டால்தான் இந்த வன்முறைகளைத் தடுக்க முடியும், அல்லது தமிழ்நாடு தனியானால்தான் தடுக்க முடியும் என்று அடுக்கினார்.’’ என்று நோய்முதல் நாடும் மருத்துவராக தந்தை பெரியாரின் நிலைப்பாட்டை சரியான தெளிவான பார்வையில் விளக்குகிறார்.

  மேலும் அரசின் நிலைப்பாட்டை விளக்கும்போது,

“அன்று ஆட்சியில் தி.மு.க. இருந்தது. முதலமைச்சராக அண்ணா இருந்தார். அவரது வாழ்க்கையின் இறுதிக்காலம் அது.

புற்றுநோய் பாதிப்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய நேரம் அது. 1968 டிசம்பர் 25 கீழ்வெண்மணி சம்பவம். 1969 பிப்ரவரி 3 அண்ணா மறைந்தார். அதாவது, கீழ்வெண்மணி சம்பவம் நடந்த 35 நாட்களில் அண்ணா மறைந்தார். அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லிய நிலையில் அண்ணா ஓய்வில் இருந்தார். அவருக்கு இந்நிகழ்வு பெரும் வருத்தம் ஏற்படுத்தியது. அவரசமாகச் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அண்ணா,

(கீவளூருக்கு அருகிலுள்ள வெண்மணி நிகழ்ச்சி குறித்து சட்டம் தன் பணியினைச் செய்திடும். இந்த நிகழ்ச்சிகளுக்குக் காரணமானவர்கள் அனைவரையும் அடக்கியே தீர்வதென்றும் அரசு உறுதி கொண்டிருக்கிறது.’ (‘விடுதலை’ 27.12.1968) என்று பேட்டி அளித்தார்.

“இந்தக் கோரமான நிகழ்ச்சிகள் குறித்து தஞ்சை மாவட்டம் கீவளூரிலிருந்து எனக்குக் கிடைத்துள்ள செய்திகள் என்னை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன. உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இந்த நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார். தஞ்சை மாவட்ட கலெக்டருடனும் அந்த மாவட்ட போலீசு தலைமை அதிகாரியுடனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் உயிரிழந்தோர் அனைவரது குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றும் தெரிவித்தார்.

அங்கு திரு.கோபாலகிருஷ்ணர் என்ற மிராசு கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது. மேலும் பலர் கைது ஆகக்கூடும். இந்த நிகழ்ச்சிகள் குறித்து எனது துயத்தையும் மன வேதனையையும் வெளியிட எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஏனெனில், நடந்துள்ள நிகழ்ச்சிகள் அத்தனை கோரமானவை. மிருகத்தனமானவை’’ என்றார் முதல்வர் அண்ணா.     (‘விடுதலை’ 28.12.1968) 

உடனடியாக பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதி, சட்டத்துறை அமைச்சர் செ.மாதவன் ஆகிய இருவரையும் கீழ்வெண்மணிக்கு போகச் சொன்னார் அண்ணா. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 28ஆம் தேதி இவர்கள் சென்றார்கள். “நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமை நடந்து விட்டது’’ என்று அமைச்சர் மு.கருணாநிதி பேட்டி அளித்தார். அன்று இரவு 12 மணிக்கு சென்னைக்கு அவர்கள் வந்தார்கள். அதுவரை தூங்காமல் விழித்திருந்தார் முதல்வர் அண்ணா. அவர்களிடம் விபரங்களைத் தெரிந்துகொண்ட அண்ணா நள்ளிரவு 1.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

விபரங்களைக் கூறினார். சட்ட வல்லுநர்களிடம் பேசி நாளை முடிவு சொல்வதாகவும் சொன்னார். மறுநாள் காலையிலேயே, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கணபதியாப் பிள்ளை தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அதாவது அன்றைய தி.மு.க. அரசே அதனை மறைக்கவில்லை. பகிரங்கமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்தபோது ஆளும் தி.மு.க.வைக் காப்பாற்ற பெரியார் ஏன் முயற்சிக்க வேண்டும்?’’ என்று வினா எழுப்பிவிட்டு, அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் காமராசரை ஆதரித்து எழுதிய ஒரு தலையங்கத்தை பதிவு செய்து,  தந்தை பெரியார் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு காரணமாக கீழ்வெண்மணி விவகாரத்தில் மவுனமாக இருந்தார் என்பது அபத்தம் என்பதை நிறுவுவதுடன், காமராசை ஆதரித்த பல்வேறு காலகட்டங்களில் அவரது அரசை எதிர்த்துப் போராடியுள்ளதை நிறுவுகிறார்.

மேலும்,“கீழ்வெண்மணி விவகாரத்தில் பெரியாரின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள வேண்டுமானால் தொழிலாளர், விவசாயிகளின் பிரச்னையை பெரியார் எப்படிப் பார்த்தார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சி செய்த வேலைகள் பெரியாருக்கு உடன்பாடில்லை. வன்முறைப் பாதைக்கு விவசாயத் தொழிலாளிகளைத் திருப்புவது அவர்களது எதிர்காலத்தை இருளாக்கி விடும் என்று பெரியார் நினைத்தார். சமூக, அரசியல் போராட்டங்களில் அமைதி வழியை எப்படி பின்பற்றினாரோ, அதே போலத்தான் விவசாயிகளின் பிரச்னையையும் அமைதி வழியில் தீர்க்க முடியும் என்று நம்பினார். இதைத் தெரிந்து கொள்ளாமல் கீழ்வெண்மணி விவகாரத்தை புரிந்துகொள்ள முடியாது’’ என்று எழுதிவிட்டு திராவிட விவசாயத் தொழிலாளர் கழகத்தைப் பற்றியும், அதன் நோக்கம், செயல்பாடுகள் பற்றியும் விளக்குகிறார்.

தமிழக தலித் தலைவர்களை இருட்டடிப்பு செய்தார் என்றும், அவர்களது புகழை மறைப்பதற்காகவே டாக்டர் அம்பேத்கர் அவர்களை பெரியார் பெரிதும் போற்றினார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை மறுத்து விரிவான பதிலலித்து, இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சகஜானந்தா போன்றவர்களைப் போற்றிய பதிவுகளைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

குறிப்பாக இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கருத்துகளை ஆதரித்து ‘குடிஅரசு’ தொடர்ந்து எழுதியுள்ளதை விளக்குகிறார். எம்.சி.இராசா அவர்கள் பற்றிய பெரியாரின் ‘குடிஅரசு’ பதிவுகளை சுட்டிக்காட்டி அவரது மறைவின்போது பெரியார் எழுதிய இரங்கலையும் விளக்குகிறார்.

தந்தை பெரியாரின் உரைகள், தலையங்கங்கள், அறிக்கைகள், மாநாட்டுத் தீர்மானங்கள் ஆகியவற்றின் வழியே தந்தை பெரியாரின் தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு சிந்தனைகளை, செயல்பாடுகளை விளக்கி,  குற்றச்சாட்டுகளை தூள் தூளாக்குகிறது இந்நூல்.

இன்றைய சமூகச் சூழலில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையை முன்னெடுக்கும் ஒவ்வொருவரும், உண்மையை உரத்துச் சொல்ல நினைக்கும் ஊடகவியலாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஏன் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

இதுபோன்ற உண்மை விளக்க நூல்கள் வெளிவருவது, இளைய தலைமுறையை பொய்மை மயக்கத்திலிருந்து விடுவித்து, விழிப்பும் தெளிவும் கொடுக்க, கட்டாயத் தேவையாகும்!

– வை.கலையரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *