நிலவின் மீது நிலத்தின் நிழல் வீழலும் விலகலும் விளக்கிய நிகழ்ச்சி!

ஆகஸ்ட் 15-31 2018

தமிழோவியன்

சந்திரகிரகணம்’’ பற்றிய அறிவியல் விளக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்த புரிந்துணர்வு நிகழ்வு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு 27.7.2018 அன்று மாலை, சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில், “பூமி_நிலா சுற்றுவதைப் பார்க்கலாம் வாங்க’’ என்னும் தலைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கும்பகோணம் மாணவர் கழக மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் கும்பகோணத்திலிருந்து காணொலி மூலமாக கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் “சூரியன், பூமி, நிலவு அறிவியல் விளையாட்டுகள்’’ நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் தலைமையில் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அ.தா.சண்முகசுந்தரம் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

பாராட்டரங்கம்

ப.முத்தையன், அம்பேத்கர் ரவி, தாமோதரன், மா-.குணசேகரன், சு.மோகன்ராசு, மாலா பாண்டியன், ஆனந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டி, நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசுகையில்,

“கிரகணம் என்று சொல்லி மிகப் பெரிய அளவிலே மூடநம்பிக்கையைப் பரப்புதல், கருத்தை உருவாக்குதல் அத்தனையும் எத்தகைய முட்டாள்தனம் என்பதை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் பல பொதுக் கூட்டங்களில் மட்டுமல்ல பள்ளிக் கூடங்களிலும்கூட நாளும் இதைத்தான் பேசுவார். விஞ்ஞானம் சொல்லித் தரும் ஆசிரியர் சந்திரகிரகணம் என்பது சந்திரன், சூரியன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவு மீது விழுவதே சந்திரகிரகணம் என்று சொல்லித் தந்துவிட்டு, வீடு சென்றதும் நிலவை ராகு கேது என்ற பாம்பு விழுங்குகிறது. அதனால் தீட்டு வருகிறது, ஆபத்து நேரிடுகிறது. அதனால், கிரகணத்துக்கு முன்பே சாப்பிடவேண்டும், குளித்துவிட வேண்டும் என்று அவரே முழுக்கு போடுகிறார் என்றால் இதைவிட மோசமான நிலை இல்லை.

ஆசிரியர்களுக்கு முதலில் தெளிவு வரவேண்டும். நல்ல அறிவியல் சிந்தனை வரவேண்டும். ஆசிரியர்கள் அறிவியலை சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. நடைமுறையிலும் அறிவியல் மனப்பான்மையோடு இருக்க வேண்டும். மூடநம்பிக்கை என்பது அறிவியலுக்கு நேர் எதிரானது. மூடநம்பிக்கை ஒழிந்ததால்தான் அறிவியலே உருவானது. ஆனால் நம் நாட்டில் ஒரு விசித்திரம் என்னவென்றால் அறிவியல் கருவியைக் கொண்டே மூடநம்பிக்கையைப் பரப்புகின்றனர். நம் நாட்டில் இரவு 10மணிக்கு மேல் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேய் பிடிக்கும் நேரம். பேய்க் கதைகளை கிராஃபிக்ஸ் உதவி கொண்டு மூடத்தனத்திற்கும் முட்டாள் தனத்திற்கும் பயன்படுத்துகின்றனர். அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி அறியாமையை போக்குவதற்குப் பதிலாக அறியாமையைப் பரப்புவதற்கு பயன்படுத்துகின்றனர். திராவிடர் கழகம்தான் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அவ்வப்போது முறியடித்து வருகிறது. 1969 ஜூலை 21இல் அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது இடதுகாலை முதலில் நிலவில் வைத்தார். ஆனால், நம் ஊரில் “வலது காலை வைத்து வா வா’’ என்று பாட்டு பாடிக் கொண்டு இருக்கிறான். வளர்பிறை தேய்பிறை பற்றி புராணத்தில் புளுகியிருக்கின்றனர். “சந்திரனுக்கு 27 மனைவிகள் உள்ளனர். இதோடு மட்டுமல்ல நிலவை ஒரு மாணவனாக உருவகப்படுத்தி அவனுக்கு ஒழுக்கக் கேட்டை உண்டாக்கி தன் குரு மனைவியைப் புணர்ந்து புதன் என்ற பிள்ளை பெற்றான் என்றும் அதன் சாபம்தான் தேய்பிறை என்றும் பின் மன்னிப்புக் கேட்டதால் ஏற்படுவதே வளர்பிறை என்றும் கதை எழுதி வைத்திருக்கின்றனர்.

மேலும், ராகு கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரகிரகணம் உருவாகிறது என்று முட்டாள்தனமாக மூடக் கருத்துகளை கதைகளாக எழுதி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். புராணங்களும், இதிகாசங்களும் அறிவியலுக்கு நேர் விரோதமானவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற புரிந்துணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மனிதன் நிலவில் அடிஎடுத்து வைத்து இப்பொழுது 50 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் நிலவையும் தாண்டி செவ்வாய் கிரகத்திற்கே சென்று செவ்வாய் தோஷமெல்லாம் ஒரு பித்தலாட்டம், அறியாமை என்று சொல்லி நிரூபித்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆகவே, அறிவியல் மனப்பான்மை என்பது பெரியாருக்காகவோ, பகுத்தறிவுக் கழகத்தாருக்காகவோ, திராவிடர் கழகத்திற்காகவோ வேண்டியது இல்லை. ஒவ்வொருவரின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நம் சுய அறிவு சிந்தனைக்கும், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு சிந்திப்பதற்கும் இது ஒரு அடிப்படையான ஒரு வாய்ப்பு’’

இது போன்ற பல்வேறு தகவல்களை சுவைபட எடுத்துக்கூறி சிறப்புடன் தனது உரையை நிறைவு செய்தார்.

அறிவியலாளர்கள் படத்திறப்பு

அறிவியல் விஞ்ஞானி டைகோ பிராகே, நிக்கோலஸ் கோபர்நிகஸ், புரூனோ, அய்சக் நியூட்டன், எரடோஸ்தனில், கலிலியோ ஆகிய அறிவியலாளர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டு, அறிவியலாளர்களின் அரும்பெரும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.

விண்வெளி அறிவியல் திரைப்படம் திரையிடல்

1969ஆம் ஆண்டில் மனிதர்கள் நிலவில் இறங்கிய காட்சிகள் மற்றும் விண்வெளி சம்பந்தப்பட்ட பயணக் காட்சிகள் திரையிடப்பட்டது.

இசையரங்கம்

‘காதல் பூமி’ என்னும் தலைப்பில் பாவலர் கீர்த்தி இசைக்குழுவினர், விஜய்பிரபு மற்றும் பல பாடகர்கள் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

நிலாச் சோறு

சந்திரகிரகண நேரத்தில் உணவு உண்ணக் கூடாது என்னும் மூடப்பழக்கத்தைப் பொய்யாக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அனைவரும் சந்திரகிரகண நேரத்தில் உணவு உண்டனர்.

தொலைநோக்கி

தொலைநோக்கி மூலம் பூமியின் நிழல் நிலவில் படர்ந்து விலகுவதையும் மற்றும் செவ்வாய், சனி, வியாழன் கோள்களைக் காணுதல் நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

ராசிபலன், மூடநம்பிக்கை ஒழிப்புக் கருத்தரங்கம்

ராசிபலன், மூடநம்பிக்கை ஒழிப்புக் கருத்தரங்கத்தைப் பகத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், திதிகள், நேரம், காலம், ஏழரைச் சனி, மண்டலம், 108 தேங்காய், 16ஆம் நாள் காரியம் ஆகியவை குறித்த அறிவியல் விளக்க ஒலி_ஒளிக் காட்சிகளை திரையிட்டு, ‘பூமி, நிலா சுழற்சிப் பெயர்ச்சிப் பேரவை அமைப்பாளர் பெ.செந்தமிழ்ச்செல்வன் விளக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சி நிறைவு

மிகுந்த தெளிவுடனும், நேர்த்தியுடனும், உற்சாகத்துடனும் நடைபெற்ற இந்நிகழ்வில் குடும்பத்துடன் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள், அறிவியல் ஆர்வலர்கள் நடந்துகொண்டு தெளிவுபெற்றனர். மாலை 6 மணிக்கு உற்சாகத்தோடு தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவைக் கடந்து அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. நிறைவாய் பூமி நிலா சுழற்றி, பெயர்ச்சிப் பேரவை அமைப்பாளர் பெ.செந்தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *