ஆரியம் வீழ்த்தி, திராவிடம் காத்த சுயமரியாதைச் சூரியன் -கலைஞர்

ஆகஸ்ட் 15-31 2018

மஞ்சை வசந்தன்

“கலைஞர்’’ _இதன் உள்ளடக்கம் ஏராளம்! தொண்ணூற்று அய்ந்து வயதில் 80 வருடங்கள் அவரது பொதுவாழ்வு!

14 வயதிலே பதாகை எழுதி, ஏந்தி, பகுத்தறிவுப் பிரச்சாரங்களையும், இந்தி எதிர்ப்பையும் மேற்கொண்டார்.

அவர் வாழ்வே போராட்டம் என்பது மட்டுமல்ல; அவர் வாழ்வில் பெற்றதெல்லாமே போராடிப் பெற்ற வெற்றிகளே!

அவர் பெற்ற புகழுக்கு இணையானவை அவர் பெற்ற அவமானங்கள். புகழுக்கு அவர் மட்டுமே காரணம். ஆனால், அவமானத்திற்கு அவரின் மீதான காழ்ப்புணர்வே காரணம்!

அவர் மீது சுமத்தப்பட்ட பழிகள் அனைத்தும் வேண்டுமென்றே எதிர் தரப்பாரால் இட்டுக்கட்டி பரப்பப்பட்டவை!

ஒரு மாநிலத்தின் ஆட்சியைப் பிடிப்பது என்பது எப்படிப்பட்ட சாதனை! அது அரிதினும் அரியது. அப்படி அவர் பெற்ற ஆட்சி, காரணமின்றி இருமுறை கலைக்கப்பட்டது.

அவர் காலத்திலே கட்சி இருமுறை பிளவுபட்டது. என்றாலும் கலைஞர் சளைக்காது நின்றார்! சாதனைகள் புரிந்து வென்றார்!

அவசர நிலை காலத்தில் அவரது அருமை மகன் ஸ்டாலின் சிறைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது தளபதிகள் கொல்லப்பட்டனர். அவரது கட்சி ஏடு முடக்கப்பட்டது. ஆனால், அஞ்சாது எதிர்த்து நின்று இந்தியாவிற்கே துணிவு தந்தார்.

ஆரியத்தின் நேரிடையான எதிரி கலைஞர் என்பதால், ஆரியம் தன் வீரியம் முழுவதையும் பயன்படுத்தி கலைஞரை களத்தைவிட்டு அகற்ற முயற்சித்தது. ஆனால், கலைஞர் தன் கால்களை களத்தில் இன்னும் ஆழப் பதித்தார்.

அவரின் உடலும், உள்ளமும், கட்சியும் எதிர்ப்பிலே, வேதனையிலே, நெருக்கடியிலே வலுப்பெற்றவை!

தமிழகத்தின் அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலையும் தீர்மானித்தவர் அவர். எண்பது ஆண்டுகால தமிழக வரலாற்றில் கலைஞர் பெயர் சொல்லாது நாள் எதுவும் கடந்திருக்காது; நாளேடு வெளிவந்திருக்காது!

வார, மாத இதழ்களின் அட்டைப் படங்களில் அதிகம் இடம்பெற்றவர். எடுத்துக்காட்டாக ‘ஜூனியர் விகடன்’ அட்டையில் மட்டும் இதுவரை 315 முறை கலைஞர் இடம் பெற்றுள்ளார்.

ஆனால், அவையனைத்தும் அவருக்கு ஆதரவானவை அல்ல. ஆதரவும் உண்டு, பாராட்டும் உண்டு, வசவுகளும் உண்டு, பழிகளும் உண்டு, சதிகளும் உண்டு, எதிர்ப்பும் உண்டு.

ஆரியம் அவரைக் கண்டு அஞ்சியது! அவரது அறிவையும், ஆற்றலையும், வியூகத்தையும், ஆளுமையும், பல்துறை படைப்புகளையும் கண்டு வியந்தது!

தமிழ் அவரால் தழைத்தது. தமிழகத்தை மட்டும் அவர் ஆளவில்லை; தமிழையும் சேர்த்தே ஆண்டார். தமிழக ஆட்சியை இழந்தாலும் தமிழ் ஆட்சியை அவர் ஒருபோதும் இழந்ததில்லை.

இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று முத்தமிழ் வித்தகராய் மட்டுமின்றி அறிவியல் தமிழையும் வளர்த்தார்.

தமிழ்ச் சொற்களை சூழலுக்கு ஏற்ப நயப்படக் கையாளும் திறன் கலைஞருக்கே உரியது. எதிரிகள்கூட அதில் மயங்கி மகிழ்வர்!

அவர் தாங்கியதுபோல, சோதனைகளை, வேதனைகளை, வசவுகளை, பழிகளை, தாக்குதல்களை, தோல்விகளை, சரிவுகளை, கீழறுப்புகளை, வஞ்சகங்களை, சதிகளை உலகில் இன்னொருவர் எதிர்கொண்டிருப்பார் என்று காட்டுவது கடினம்.

அது மட்டுமல்ல! எல்லாவற்றையும் இதயம் கலங்காது இன்முகத்தோடு ஏற்கும் உறுதி அவரிடம் இருந்தது. அதைவிடச் சிறப்பு!

எடுத்துக்காட்டாக, எம்.ஜி.ஆர் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் வந்த எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அண்ணா சாலையில் இருந்த கலைஞர் சிலையை கடப்பாரையால் தாக்கி உடைத்தனர். அக்காட்சியை மறுநாள் செய்தித்தாளில் பார்த்த கலைஞர்.

உடன் பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை

நெஞ்சிலே தான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!

என்று கவிதை வரிகள் எழுதி, தன்மீது ஒரு செருப்பு (கடலூரில்) வீசப்பட்டபோது, மறு செருப்பையும் தேடி வாங்கி வைத்த தனது குருகுல ஆசானின் துணிவுமிக்க பாரம்பரியத்திற்கான இலக்கியமாக நடந்துகாட்டி உயர்ந்தார் _ உலகத்தார் முன்!

தன்னைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்கி எழுதிய பத்திரிகையாளரை நேரில் சந்தித்தபோது, “சரி, அது உன் கடமை, நல்லா செய்ப்பா!’’ என்று கூறிய பெருந்தன்மை அவருக்கன்றி எவருக்கு வரும்! இதைவிட எதிரியை வெல்லும் சொல் உண்டா? அவர்தான் கலைஞர்!

அவரது சொல்லாற்றலும், எழுத்தாற்றலுமே அவரையும், அவரது இயக்கத்தையும் காத்தது. அவரது சந்திப்பு என்றால் பத்திரிகையாளர்களுக்கு பாயசம் பருகுவதுபோல்!

கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிநிலை தொண்டர்கள் வரை அனைவரையும் அறிந்து, நினைவு வைத்திருக்கும் ஆற்றல் அவருக்கன்றி எத்தலைவருக்கும் இருந்ததில்லை! அதுபோலவே அடிமட்டத் தொண்டரும் அணுகும் எளிமை கலைஞரின் தனிச்சிறப்பு!

ஒரு மணி நேரம் ஒரு நாள் யோசித்துப் பதில் சொல்ல வேண்டியவற்றிற்குக் கூட உடனடியாகச் சுவையாக, சூடாக, ஆழமாக, அழகாக, இலக்கிய நயத்துடன் சொல்லும் ஆற்றலாளர். நிகழ்ச்சி ஒன்றுக்கு இளம் இயக்குநர் மணிவன்னன் பேட்டிக்கான கேள்விகளைக் கலைஞரிடம் கொடுத்துவிட்டு, ‘நாளை வருகிறேன்’ என்று கூற, ‘இப்போதே கேளப்பா’ என்றார் கலைஞர். எப்போதும் எதற்கும் தயார் என்பதே கலைஞரின் தனித்திறன்!

பூம்புகார் திரைப்படத்தில் வரும், “அன்று கொல்லும் அரசின் ஆணை வென்றுவிட்டது, நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’’ என்ற வரியை பாட கே.பி.சுந்தராம்பாள் மறுத்தார். காரணம், “தெய்வம் எங்கே சென்றுவிட்டது?’’ என்று பாட அவர் விரும்பவில்லை. அதை அறிந்த கலைஞர், உடனே “நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’’ என்று மாற்றினார். கே.பி.சுந்தராம்பாளுக்கு மகிழ்ச்சி! ஆனால், கலைஞர் மிக நுட்பமாக அதை மாற்றினார். “நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது!’’ என்பது கண்ணகியைக் குறிப்பதாய் அமைத்தார்! இதுதான் கலைஞரின் தனித்திறன்!

எல்லோரையும் எழுத்தால், பேச்சால் ஈர்த்தவர், மயக்கியவர், கட்டுண்டுக் கிடக்கச் செய்தவர். எந்தத் தமிழ்ப் பேராசிரியர், முனைவர் பட்டம் பெற்றோர், தமிழறிஞர், பள்ளி இறுதி வகுப்பில்கூடத் தேர்ச்சி பெறாத இவரின் தமிழ்ப் புலமைக்கு ஈடுகொடுக்க முடியும்?

தமிழர்க்காக, தமிழ் நாட்டிற்காக, தமிழுக்காகவே வாழ்ந்தவர் கலைஞர். செம்மொழித் தகுதியை தமிழுக்குப் பெற்றுத் தந்து அவர் பெற்ற இன்பத்திற்கு ஈடேது.

வள்ளுவருக்கு வைக்க வேண்டிய இடத்தில், வைக்க வேண்டிய உயரத்தில் உலகே விரல் வைத்து வியக்க சிலை வைத்தாரே அந்தத் திறன் அதிசயம் அல்லவா?

கடிதம் எழுதியே கட்சியின் கட்டுக்கோப்பு குலையாது காத்தவர்; கட்சித் தொண்டர்களையும் கட்டுக்குள் வைத்து கட்சியைக் காப்பாற்றியவர்.

ஆட்சியில் இல்லாத நிலையிலும் கட்சித் தொண்டர்களை விலகாது வைத்திருப்பது என்பது அரசியல் தலைவர்களுக்கு அரிய செயல். அதை எளிமையாகச் செய்தவர் கலைஞர்.

தனக்கு எந்த வகையிலும் ஈடில்லாதவர்கள் தன்னை எதிர்த்து அரசியல் செய்து தன்னை தரம் தாழ்த்திய போதும்; தன்னை பழிவாங்கி சிறைபடுத்தியபோதும்; தகாத வார்த்தைகளால் கேவலப்படுத்திய போதும், சகிப்புத் தன்மையோடு தன் கடமைகளைச் செய்த கண்ணியத்திற்குரியவர்!

நான்கு தலைமுறையினரை ஈர்த்து வைத்து கட்சியை நடத்தியவர் கலைஞர். ஆனால் அவரிடம், “தலைமுறை இடைவெளி’’ என்பதே இல்லை. அவர் காலத்திற்கு ஏற்ப தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு ஈடுகொடுத்தார்.

இது அரசியல் மட்டுமல்ல, திரைத்துறை, பத்திரிகைத் துறை, இலக்கியத் துறை, மேடைப் பேச்சு, சமூக ஊடகங்கள் என்று எல்லாவற்றிலும் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு சாதனைகள் புரிந்தார்.

அரசியலில் தனக்குக் கிடைத்த ஆட்சிப் பொறுப்பை அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்கும், அய்யா பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும், தமிழ்நாடு தமிழர் உரிமை, தமிழர் மேம்பாடு போன்றவற்றிற்கும் மிகத் திறமையாகப் பயன்படுத்தினர்.

ஆனால், அவரின் அளப்பரிய சாதனைகள் இன்றைய இளைய தலைமுறைக்கு சரியாகத் தெரிவிக்கப்படாமையால், அவரின் அருமை பெருமை அவர்களுக்கு அதிகம் தெரியாமல் போயிற்று. திராவிட ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை போன்ற இன்று பரப்பப்படும் தவறான செய்திகள் இதன் விளைவே!

ஆனால் உண்மையென்ன? கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் எத்தனை? இதோ பட்டியல்:

தி.மு.க. அரசு கட்டிய அணைகள் 20. அவை:  1.தும்பலஹள்ளி அணை, 2.சின்னாறு அணை, 3.குண்டேரிப்பள்ளம் அணை, 4.வறட்டுப்பள்ளம் அணை, 5.பாலாறு பொருந்தலாறு அணை, 6.வரதமாநதி அணை, 7.வட்டமலைக்கரை ஓடை அணை, 8.பரப்பலாறு அணை, 9.பொன்னியாறு அணை, 10.மருதாநதி அணை, 11.பிளவுக்கல் (பெரியாறு) அணை, 12.பிளவுக்கல் (கோவிலாறு) அணை, 13.கடானா அணை, 14.இராமாநதி அணை, 15.கருப்பாநதி அணை, 16.சித்தாறு_1 அணை, 17.சித்தாறு_2 அணை, 18.மேல் நீராறு அணை, 19.கீழ் நீராறு அணை.

13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் 1989ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்றார். அதன் பிறகு, 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கலைஞர் தலைமையில் தி.மு.க. அரசு அமைந்தபோதெல்லாம் துரைமுருகனே பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவருடைய பொறுப்புக் காலத்தில் கலைஞரின் ஆணைப்படி கட்டி முடிக்கப்பட்ட அணைகள் 22. அவை: 1.மோர்தானா அணை, 2.இராஜாதோப்பு அணை, 3.ஆண்டியப்பனூர் ஓடை அணை, 4.ழுக்கநத்தம் அணை, 5.மிருகண்டா நதி அணை, 6.செண்பகத்தோப்பு அணை, 7.புத்தன் அணை, 8.மாம்பழத்துறையார் அணை, 9.பொய்கை அணை, 10.நல்லாறு அணை, 11.வடக்கு பச்சையாறு அணை, 12. கொடுமுடி அணை, 13.அடவிநயினார் அணை, 14.சாஸ்தாகோவில் அணை, 15.இருக்கன்குடி அணை, 16.சென்னம்பட்டி அணை, 17.கிருதமால் அணை, 18.நல்லதங்காள் ஓடை அணை, 19.நங்காஞ்சியார் அணை, 20.வரட்டாறு வள்ளி மதுரை அணை, 21.பச்சைமலை அணை, 22.ஆனைவிழுந்தான் ஓடை அணை.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மொத்த அணைகள் 42. இவை தவிர பாசன வசதிகளுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

“சாராயக் கடையை மீண்டும் கொண்டுவந்தது இவர்தான்’’ என்ற குற்றச்சாட்டும் முழு உண்மையல்ல.

கள்ளச் சாராயமும், பக்கத்து மாநில மது வகைகளும் தமிழ் நாட்டிற்குள் பெருகியதாலும், அரசாங்க வருவாய் பாதிக்கப்பட்டதாலும், வேறு வழியின்றி மதுக்கடைகளை கலைஞர் திறந்தார். ஆனால், அதன் விளைவுகளைக் கண்டு, உடனே மதுக்கடைகளை மூடிவிட்டார். ஆனால், அதை மீண்டும் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், பழி முழுக்க கலைஞர் மிது!

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தார் என்பது எதிர்தரப்பு அரசியல்வாதிகளின் இட்டுக்கட்டிப் பரப்பும் மோசடியான பரப்புரை!

ஈழத் தமிழருக்காக அவர் ஆற்றிய பணியும் செய்த உதவிகளும் ஏராளம். ஈழத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியையே இழந்தார். இலங்கையில் தமிழர்களை அழித்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப் படையை வரவேற்க முடியாது. என் ஆட்சியே போனாலும் வரவேற்க முடியாது என்று உள்ள உறுதியுடன் அறிவித்தவர் கலைஞர்.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது மத்திய அரசிலிருந்து விலகாததால்தான் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பது அசல் பித்தலாட்ட, மோசடிப் பிரச்சாரம்.

இலங்கையில் நடந்த இன அழிப்பு திட்டமிட்டு இராஜபக்சேவால் செய்யப்பட்டது. இந்திய அரசு எதிர்த்திருந்தாலும், சீனா உதவியுடன் அதை இராஜபக்சே செய்திருப்பான்! இந்த உண்மை நிலை புரியாது அரசியல் ஆதாயத்திற்காகவே இதில் கலைஞரைச் சம்பந்தப்படுத்தி தமிழின எதிரியாகக் காட்டி வருகின்றனர். இது அறியாத இளைய தலைமுறையினர் கலைஞரை இன எதிரியாக வெறுத்தனர். ஆனால், விளக்கம் பெறப்பெற இளைஞர்கள் கலைஞரைப் புரிந்து கொண்டனர். என்றாலும் அவதூறு பழிகளுக்கு உண்மை ஆதாரங்களுடன் விளக்கம் தந்தால் கலைஞர் மீது வீசப்பட்ட அனைத்துப் பழிகளும் விலகும். இன்றைய இளைய தலைமுறை ஒரு உண்மையை மனதில் கொள்ளவேண்டும்.

இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் ‘தினமலர்’ என்ற பார்ப்பன ஏடும், பார்ப்பனர்களும், ஜெயலலிதாவும் ஒன்று சேர்ந்து, “இராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது கருணாநிதிதான்’’ என்று அபாண்டமாக ஒரு பழியைப் போட்டு, தமிழகமே கலைஞரை வெறுக்கும்படிச் செய்து, தி.மு.க.வைத் அத்தேர்தலில் தோற்கடித்தனர்.

ஆனால், உண்மை என்ன? அந்தப் படுகொலைக்கும் கலைஞருக்கோ, அல்லது தி.மு.க.விற்கோ ஏதாவது தொடர்பு உண்டா? இல்லையென்பது விசாரணையில் உறுதியாயிற்றே! இப்படித்தான் இன எதிரிகளும், அரசியல் எதிரிகளும் கலைஞர் மீது வீண்பழி சுமத்தி மக்கள் வெறுக்கும்படிச் செய்தனரேயன்றி உண்மையில் அவர் தமிழ் இனத்திற்கும், தமிழ்நாட்ற்கும் தமிழ் மக்களுக்கும் செய்தவை ஏராளம்! ஏராளம்!

அதை அவரே ஒருமுறை சொல்லியுள்ளார்! இதோ அப்பகுதி:

பெரியார் எண்ணங்களை செயல்படுத்தும் திராவிட முன்னேற்றக் கழக  ஆட்சி

அண்ணா அவர்களைத் தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்களின் எண்ணங்கள்  ஏழை எளிய நலிந்த சாமானிய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், 1969ஆம் ஆண்டுக்குப்பின் இந்த அரசினால் இன்றளவும் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்தப் படுகின்றன,

¨                          சாதிகளை ஒழிக்கும் நோக்கில் 20,000 ரூபாய் நிதியுதவி தந்து அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமணத் திட்டம்;

¨                          விதவை மகளிர் நல்வாழ்வு பெற 20,000 ரூபாய் நிதியுதவி தந்து டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம்;

¨                          பெண் கல்வியை ஊக்கப்படுத்திட ஈ.வெ.ரா

நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்; பட்டமேற்படிப்பு வரை நீட்டிப்பு;

¨                          கிராமப்புற ஏழைப்பெண்கள் குறைந்தது 10ஆம் வகுப்பு வரையேனும் படித்திட வேண்டும் என்னும் உணர்வோடு ஏழைப் பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்;

¨                          பெண்களுக்கு தனிச் சொத்துரிமை வழங்கும் சட்டம்;

¨                          அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு;

¨                          உள்ளாட்சி நிறுவனங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு;

¨                          தாழ்த்தப்பட்டோர்க்கு 18 சதவிகிதம்  இதில் அருந்ததியர்க்கு 3 சதவிகிதம்; மலைவாழ் மக்களுக்கு 1 சதவிகிதம்; மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டோர்க்கு 30 சதவிகிதம் – இதில் இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகிதம் என மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடுகள்;

¨                          பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு;

¨                          அனைத்துச் சாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் சட்டம்;

¨                          ‘இனமுரசு’ சத்யராஜ் பெரியாராகத் தோன்றி நடித்த ‘தந்தை பெரியார்’ திரைப்படத் தயாரிப்புக்கு 95 இலட்ச ரூபாய் அரசின் நிதியுதவி;

¨                          இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி 1997ஆம் ஆண்டில் அறிவித்தபடி, அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் 2006 க்குப்பின் மேலும்  95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் உருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம்;

¨                          ஈரோடு நகராட்சிமன்றத் தலைவராகத் தந்தை பெரியார் பொறுப்பேற்றிருந்த போது அந்நகராட்சி எல்லையை விரிவுபடுத்திடக் கருதி,

என 19.11.1917 அன்று அந்நாளில் ஆங்கிலத்தில் பதிவுசெய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய சென்னை மாகாண அரசால் 23.10.1919 அன்று அரசாணை வெளியிடப்பட்டும், நிறைவேற்றப்படாமலிருந்த அந்தத் தீர்மானத்தை, 90 ஆண்டுகளுக்குப்பின், 15.09.2007 அன்று  ஈரோட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந்த அரசு நிறைவேற்றும் என அறிவித்து, 17.11.2007 அன்று அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்து, 01.01.2008 முதல் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக நிலை உயர்த்திப் பெருமிதம் கொண்டார்.

கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டால், பழிபோடுபவர்கள் காணாமல் பதுங்குவர்!

ஆட்சியாளராய் சாதனை, இலக்கியவாதியாய் சாதனை, திரைத்துறையில் சாதனை, இயக்கத்தின் வழி சமுதாயத் தொண்டுகள், பெண்ணுரிமை, சாதியொழிப்பு, ஏழ்மை ஒழிப்பு, நலிவுற்றோர்க்கு நல்வுதவி, அடித்தட்டு மக்கள் கல்வி வாய்ப்பு, சமூக நீதி, உரிமை மீட்பு என்று அவர் சாதனை புரிந்த துறைகளின் பட்டியலும் நீளும்.

அவர் சில நேரங்களில் நீறுபூத்த நெருப்பாய் இருந்திருப்பார்! ஆனால் அவர் தீக்கங்காய் கனன்று கொண்டுதானிருந்தார்.

விடாமுயற்சியின், உள்ள உறுதியின் அடையாளம் அவர். “முடியுமா நம்மால்’’ என்று தோல்விக்கு முன் வரும் தயக்கம்! “முடித்தே தீருவோம்’’ என்பது வெற்றியின் தொடக்கம் என்பதே அவர் கொள்கை.

“உன் சுவடுகள் சேர்ந்தால்

ஒரு பாதையே உருவாகும்

உன் சொற்கள் சேர்ந்தால்

ஒரு மொழியே உருவாகும்

உன் வெற்றிகள் சேர்ந்தால்

ஒரு வரலாறு உருவாகும்

 

அரசியலைக் கழித்தாலும்

நீ தமிழாக மிஞ்சுவாய்

தமிழைக் கழித்தாலும்

நீ தலைவனாக எஞ்சுவாய்

உன்னை

வாழும் தலைமுறை இசைபாடும்

ஏழு தலைமுறை அசைபோடும்

என்று கவிஞர் வைரமுத்து கூறியது போலவும்,

வரலாறுகள் தலைவர்களை

சுமக்குமென்பார்கள் – நீயோ

வரலாறுகளையெல்லாம்

மூச்சு முட்ட முட்ட முதுகினில்

தூக்கித் திரிந்தவன்

 

ஜனங்களுக்காக

நீ பட்ட ரணங்களை

கணக்கெடுத்தால்

காலத்தின் உடம்பெல்லாம்

காயங்கள் தெரியவரும்

 

சூறைக்காற்றில்

சிறகு விரித்த சோசலிசமே

நீ கையிலெடுத்த சமூக நீதியால்

உன் கால் பட்ட இடமெல்லாம்

கௌரவம் வந்ததே

என்று யுகபாரதி கூறியது போலவும், அவரால் தமிழரும், தமிழ்நாடும், தமிழும் பெற்றவை ஏராளம்! ஏராளம்!

கலைஞரை கணித்தால்,

பெரியார், அண்ணா,

தமிழர், தமிழ், தமிழ்நாடு

என்ற அய்ந்தின் அடக்கம்.

கலைஞர் வரலாற்றில்

வாழ்பவரல்லர், வரலாறாய்

வாழக் கூடியவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *