புலிவாயிலிருந்து மகளை மீட்ட புறநாநூற்று வீரத்தாய்!

ஜூலை 01-15

பண்பாளன்

முறத்தால் அடித்து புலியை விரட்டிய தமிழச்சியை புறநானூறில் படித்திருப்போம். இன்று விறகால் அடித்து புலியை விரட்டியிருக்கிறார் ஒரு வீரத் தமிழச்சி.

வால்பாறையில் தனது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி சத்தியாவை காட்டுப் புலி ஒன்று கழுத்தை கவ்வி இழுத்துக்கொண்டு செல்ல… மகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு பதறி ஓடிவந்த சத்தியாவின் அம்மா முத்துமாரி விறகால் அடித்தே புலியை விரட்டி மகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

முத்துமாரிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. 25 வருடங்களுக்கு முன்பு கணவருடன் சேர்ந்து தேயிலை பறிக்கும் வேலைக்கு வால்பாறைக்கு வந்திருக்கிறார். இவர்களுக்கு பத்தாவது படிக்கும் மகன் ஒருவனும், ஆறாம் வகுப்பு படிக்கும் சத்தியா என இரண்டு குழந்தைகள். சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் கணவர் இவர்களை விட்டுப் பிரிந்து திருப்பூர் சென்றுவிட, தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முத்துமாரி.

2018 ஜூன் 7ஆம் தேதி மாலை மிதமாக மழை தூறிக்கொண்டிருக்க, முத்துமாரி சமையலுக்கு விறகு வெட்டிக்கொண்டு இருந்திருக்கிறார். திடீரென ‘அய்யோ…! அம்மா…! என்னை காப்பாத்துங்க’ன்னு சத்தியாவின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. விறகு வெட்டுவதை போட்டுவிட்டு வீட்டின் பின்புறம் போய் முத்துமாரி பார்க்க அவர் ஈரக்குலையே நடுங்கியிருக்கிறது.

பெரிய புலி ஒன்று தன் பெண்ணை கவ்விக்கொண்டு புதருக்குள் கொண்டுபோய்க் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பயந்து ஒதுங்காமல் வெட்டிக் கொண்டிருந்த விறகை எடுத்துக்கொண்டு கத்திக் கொண்டே ஓடியிருக்கிறார். விறகை புலிமேல் போட்டுவிட்டு தன் பெண் குழந்தையின் காலைப்பிடித்து இழுத்திருக்கிறார். ஆனாலும் தன் பிடியை புலி விடவே இல்லை. சம்பவத்தை நேரில் பார்த்த பக்கத்து வீட்டு அம்மா ஓடிவந்து பெரிய கம்பைக் கொடுக்க அதை வாங்கி புலி தலையில் முத்துமாரி ஓங்கி அடித்திருக்கிறார். வலி தாங்காமல் தனது பிடியை விட்டுவிட்டு புலி மின்னல் வேகத்தில் காட்டுக்குள் ஓடி மறைந்திருக்கிறது. உடனே தன் மகளை மீட்டு பொள்ளாச்சி மருத்துவமனையில் சேர்க்க, ஏழு தையல்கள் போட்ட நிலையில் சத்தியா இப்போது நலமாக உள்ளார்.

இவர்கள் தங்கியிருப்பது மலைப்பகுதி என்பதால் இங்கு காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இதற்கு முன் புலி தாக்கியும், காட்டு யானை தாக்கியும் இப்பகுதியில் நிறைய பேர்கள் காயம் பட்டும் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.

தன்னைவிட வலிமையுள்ள பருந்து தன் குஞ்சுகளை தூக்கிக்கொண்டு உயரத்தில் பறக்கையில் ஆக்ரோஷமாய் அதனை துரத்திக்கொண்டு செல்லும் தாய்க்கோழி. பறவைக்கே அத்தனை வீரம் என்றால் மனிதனுக்கு கேட்கவா வேண்டும்? வீரம் என்பது ஆணுக்கு மட்டும் உரியது அல்ல. அது பெண்ணுக்கும் சொந்தம் என்று நிரூபித்து இருக்கிறார் முத்துமாரி. புறநானூறு காலத்தில் மட்டுமல்ல, இன்றுகூட இம்மண்ணில் வீரத் தமிழச்சிகள் நிறைய உள்ளனர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது இந்நிகழ்வு.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *