திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநில மாநாடு

ஜூலை 01-15

 மஞ்சை வசந்தன்

 

 

இம்மாநாடு தமிழர் உரிமை மீட்கும், காக்கும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடு என்பதை எல்லோரும் கருத்தில் கொண்டு கட்டாயம் பங்குபெற வேண்டும்.

தவமணிராசன், கருணானந்தம் என்ற இரண்டு மாணவர்களின் நட்புறவு, குடந்தைக் கல்லூரியில் நடைபெற்ற தீண்டாமைத் தீயை எரியவிட்ட ஒரு நிகழ்வினால் கொள்கை உறவாக மேலும் வலிமை அடைந்து வளர்ந்தது. தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு இறுதியில் தோற்றுவித்த ‘சுயமரியாதை இயக்கம்’ இவர்களை அதற்குத் தயார்படுத்தியிருந்தது.

அந்த அரசுக் கல்லூரியில், ஆரிய இனத்தவரான பார்ப்பன மாணவர்களுக்கும் திராவிட இனத்தவரான பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கும் குடிநீர் பருகுவதற்குத் தனித்தனியே தண்ணீர்ப் பானைகள் வைக்கப்பட்டு இருந்தன. கல்லூரியோடு இணைந்த மாணவர் தங்கும் விடுதியிலும் அவ்வாறே குடிநீர்ப் பானைகளும்  குவளைகளும் தனித்தனியே வைக்கப்பட்டன.

குடந்தைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இடைநிலை வகுப்பில் (இன்டர்மீடியேட் கிளாஸ்) படித்து வந்த சம்பந்தம் என்னும் திராவிடத் தமிழ் மாணவர், பார்ப்பனருக்கு என வைத்திருந்த பானையின் குடிநீரை குவளையால் எடுத்துப் பருகிவிட்டார். அவரது செயலைப் பார்த்துவிட்ட பார்ப்பன மாணவர்கள் கடுமையாகத் திட்டிக் கண்டித்ததுடன், கல்லூரி முதல்வரிடம், புகார் கூறவும் விரைந்தனர். அன்று கல்லூரி முதல்வர் டாக்டர் கே.சி.சாக்கோ என்பவர் விடுமுறையில் வெளியூர் சென்றுவிட்டார். அதனால் விடுதிக் காப்பாளர் பொறுப்பை ஏற்றிருந்த திரு.கணேச அய்யர் என்பவரிடம் புகார் கூறப்பட்டது. அவர் உடனே சம்பந்தம் புரிந்த செயல் குற்றமே என்று சொல்லித் தண்டம் (அபராதம்) விதித்து விட்டார்.

அந்தச் செய்தியை அறிந்ததும் தோழர் தவமணிராசன் உள்ளம் குமுறிக் கொதித்தது. தந்தை பெரியார் தோற்றுவித்த ‘சுயமரியாதை இயக்கம்’ வலியுறுத்திய திராவிட இனமானக் கொள்கையில் உறுதி கொண்டிருந்த அவரால் அடங்கிக் கிடக்க முடியவில்லை. திராவிட மாணவர் சம்பந்தம் மீது தண்டம் விதித்த ஆரிய விடுதிக் காப்பாளரைக் கண்டித்துக் கல்லூரித் திராவிட மாணவர்களைத் திரட்டி ஓர் அறப் போராட்டத்தையே தொடங்கிவிட்டார்.

அந்தப் போராட்டத்தின்போது,

தவமணிராசனுக்கு மிகவும் உறுதுணையாகத் தோள் கொடுத்து, முதன்மை வீரராக நின்று எழுச்சி ஊட்டிய பெருமை கவிஞர் கருணானந்தம் அவர்களையே சேரும்.

இந்த இரண்டு நண்பர்களும் இணைந்து நின்று, பார்ப்பனர் பானையில் குடிநீர் அருந்திய சம்பந்தம் தண்டம் கட்டக் கூடாது என்று அறிவுறுத்தினர். அவரும் தண்டத் தொகையைக் கட்டாமலே இருந்தார்.

குடந்தை நகரில் இருந்த ‘சுயமரியாதை இயக்க’த் தோழர்கள் பலரும் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, கிளர்ச்சிகள் நடத்த முனைந்து விட்டனர்.

கல்லூரி முதல்வர் வந்ததும், பார்ப்பன  விடுதிக் காப்பாளர் விதித்த தண்டத் தொகையைத் திராவிட மாணவர் சம்பந்தம் கட்டத் தேவை இல்லை என்று கூறியதோடு, பார்ப்பனருக்கு என இனிமேல் தனியே தண்ணீர்ப் பானை வைக்கக் கூடாது எனவும் ஆணை பிறப்பித்து விட்டார்.

தோழர் தவமணிராசனும் கவிஞர் கருணானந்தமும் தொடங்கிய அறப் போராட்டம், இந்து மதத்தின் தீண்டாமைச் சாதிக் கொடுமையை ஒழிக்கும் மாபெரும் திராவிட மாணவர் புரட்சியாகவே அமைந்து வெற்றி விளைவை ஈட்டித் தந்தது. அதனால், இந்த இருவரையும், ஆரியர் அல்லாத குடந்தை நகரப் பொதுமக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திராவிட மாணவர் கழகம் – தோற்றம்

குடந்தைக் கல்லூரி மாணவர்கள் இடையே தோன்றிய திராவிட இனமான எழுச்சியைத் தக்க முறையில் பயன்படுத்த தவமணிராசனும் கருணானந்தமும் எண்ணி, குடந்தை நகரில் உள்ள காங்கேயன் பூங்காவில் மாணவர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டினர். பார்ப்பனர் அல்லாதார் ஆகிய திராவிட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு என்று ஒரு புதிய அமைப்பு ஏன் தேவை என்பதைக் காரணங்களுடன் அவர்கள் விளக்கிக் கூறினர்.

அவர்களுக்கு அத்தகைய சிந்தனை வந்தமைக்கு, பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரே காரணம்.

1925ஆம் ஆண்டு ‘சுயமரியாதை இயக்கம்’ என்னும் திராவிட இன விழிப்புப் பாசறையைத் தோற்றுவித்த பெரியார் அவர்கள், முதலில் ‘குடிஅரசு’ என்னும் வார இதழையும், அடுத்து ‘விடுதலை’ என்னும் நாளிதழையும் ஈரோடு நகரிலிருந்து வெளியிட்டார்.

அவருடைய இந்தி எதிர்ப்பு மொழிப் போரின் முதல் தளபதியான திரு.சி.என்.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) 1942ஆம் ஆண்டில் ‘திராவிட நாடு’ என்னும் வார இதழைத் தாம் பிறந்த காஞ்சிபுரம் நகரிலிருந்து வெளியிட்டார்.

பெரியாரும், அண்ணாவும் பரப்பிய ஏடுகளும், அவர்களுடைய மேடைச் சொற்பொழிவுகளுமே, தமிழ்நாடு எங்கணும் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் திராவிட இனத்தைச் சேர்ந்த மாணவ மணிகளின் உள்ளத்தில் தன்மான உணர்வையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் பதியம் போட்டன.

அவை ஏற்படுத்திய விழிப்புணர்வு விளைச்சலுக்கு முதன்முதல் செயல் வடிவம் தருகின்ற முனைப்போடுதான் குடந்தைக் கல்லூரி மாணவர்களான தவமணிராசன், கருணானந்தம் ஆகிய இருவரும் புதிய மாணவர் அமைப்பை உருவாக்கி ‘திராவிட மாணவர் கழகம்’ என்னும் பெயரை அதற்குச் சூட்டினர்.

தலைவர் – தவமணிராசன்; துணைத் தலைவர் – கருணானந்தம்; செயலாளர் பழநிவேல்; பொருளாளர் – சொக்கப்பா.  இவ்வகையில் திராவிட மாணவர் கழகம் முதலில் தொடங்கப்பட்ட பெருமையைக் குடந்தைக் கல்லூரி பெற்றது.

அந்தக் கழகத்தை 01.12.1943இல் தொடங்கி  வைத்து சிறப்புரை ஆற்றியவர் பேரறிஞர் அண்ணா அவர்களே!

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியாரை, தமிழ் மன்றத்தில் உரையாற்ற அழைத்ததை பார்ப்பனர்கள் எதிர்த்தனர். என்றாலும் அந்த எதிர்ப்பு முறியடிக்கப்பட்டு, ஆர்.சானகிராமன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. அதிலே டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் சிறப்புரை ஆற்றினார்.

அந்தத் தமிழ் மன்ற நிகழ்ச்சி, தவமணிராசன், கருணானந்தம் ஆகிய இரட்டையரின் திராவிட இன உணர்ச்சிக்குக் கிட்டிய இரண்டாவது பெரு வெற்றி ஆகும்.

திராவிட மாணவர் மாகாண மாநாடு

1946ஆம் ஆண்டு பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் திராவிட நாடு திராவிட மாணவர்கள் மாநாடு நீடாமங்கலத்தில் நடைபெற்றது.

திராவிட மாணவர் மாகாண மாநாடு இதுவே முதல் மாநாடு எனலாம். மாநாட்டுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் சுமார் 5000 பேர்களுக்கு மேலிருந்தாலும் காலேஜ் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்கள் தொகை 2000 பேர்களுக்குக் குறையாது என்றே சொல்லலாம். மொத்தத்தில் கருப்புச் சட்டையுடன் வந்தவர்கள் எண்ணிக்கை 1500 இளைஞர்களுக்கு மேலேயே இருக்கும், இதில் மாணவிகளும் வந்து கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத் தகுந்ததாகும்.

மாநாட்டுத் தலைவர் பேசும்போது இனி நடைபெறும் நாடு,மொழி கிளர்ச்சிகளில் மக்கள் சிறைசெல்ல நேருமானால் பெரியாரைச் சிறை செல்ல விடக்கூடாது என்றும்,  அது ஆசிரியர் மாணவர் உலகத்திற்கு இழிவு என்றும், நாமே சாதாரண மக்களுக்கும் முன்னதாகச் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நாடு, இனம், மொழி இவைகளைக் காப்பாற்றுவதற்கு சிறை செல்லவும், உயிர் கொடுக்கவும், வாய்க்கும் வாய்ப்பே மக்களுக்கு ஏற்படும் எல்லா நல்வாய்ப்புகளையும் விட மேலானது என்றனர்.

பிறகு பெரியார் அவர்கள் அங்கிருந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டிப் பேசியபோது, “இங்குள்ள ஆசிரியர்களின் உணர்ச்சி போலும், ஊக்கம் போலும், வெளியில் உள்ள மற்ற ஆசிரியர்களது உணர்ச்சியும் பெற்றோர்களது உணர்ச்சியும் இருக்குமானால், நான் மாணவர்களை இந்த முயற்சியில் சிறிதும் கலந்துகொள்ள இடம் கொடுக்க மாட்டேன்’’ என்றார்.

பெரியாரும், பிற தோழர்களும் நீடாமங்கலம் நோக்கிப் புறப்பட்டதிலிருந்து வழிநெடுக நீடாமங்கலம் வரும் வரை இடைவிடாது தோழர்கள் இயக்க வாழ்த்தொலிகளைச் செய்து வந்தனர். 23.2.1946 காலை நீடாமங்கலம் இரயிலடியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கறுப்புச் சட்டை தொண்டர்களும், இயக்கத் தோழர்களும், புடைசூழ, பெரியார் ஈ.வெ.ரா. நகர் முழுதும் இயக்கக் கருத்துகளும், வரவேற்பு வாக்கியங்களும் தீட்டப்பட்ட விளம்பர வளைவுகளாலும், கொடி, தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வழி நெடுக பல இயக்க அன்பர்களின் இல்லங்களண்டை பெரியாருக்கும், மற்ற தலைவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிகள் திலகம் தோழியர் லாரன்ஸ் கொடியின் தத்துவத்தை விளக்கி மத்தியில் செந்நிறம் கொண்ட கறுப்புக்கொடியை ஏற்றிவித்தார்கள்.

தோழர் எஸ்.தவமணிராசன் திராவிட மாணவர் இயக்கத்தின் வரலாற்றை திருவாரூர், கும்பகோணம் தொடக்கத்திலிருந்து விளக்கமாகக் கூறி எதிர்காலப் பொறுப்பையும் எடுத்துக்காட்டி தலைவர்களையும், மாணவப் பிரதிநிதிகளையும், தோழர்களையும் வரவேற்று, சேலம் கல்லூரித் தலைவர் தோழர் எ.இராமசாமி எம்.ஏ., அவர்களை மாநாட்டிற்குத் தலைமை வகித்து நடத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். தலைவரின் சீரிய இயக்கப்பற்றையும், திராவிட மாணவருலகிற்கு ஆற்றிவரும் தொண்டையும் பாராட்டிப் பெரியாரும் மற்றும் பல அறிஞர்களும் பேசி வழி மொழிந்தனர். பெருங் கைதட்டலுக்கிடையே எழுந்து தோழர் எ.இராமசாமி அவர்கள் தலைமை வகித்து முன்னுரையாக அரிய சொற்பொழி வாற்றினார்கள்.

பின்னர், பெரியார் அவர்கள் மக்களின் பெருத்த ஆரவாரத்துக்கிடையே எழுந்து திராவிட மாணவர் இயக்கத்தின் அவசியத்தை விளக்கியும், இயக்கத்தின் எதிர்காலப் போராட்டங்களை திராவிட மாணவர்கள் முன்னணியில் இருந்து நடத்தவேண்டுமென்றும், மாணவப் பருவமே தன்னலமற்ற சேவைக்கும், துணிந்து பணியாற்றவும் ஏற்ற பருவமென்றும் கூறி சுமார் இரண்டு மணி நேரம் அரிய சொற்பொழிவாற்றினார்கள்.

பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடிய மாநாட்டில், தோழர் சேலம் கல்லூரி ஆசிரியர் சொக்கப்பா பி.ஏ., எல்.டி., அவர்கள் மாணவர் கடமை என்பது குறித்தும் தோழர் எம்.ஏ. ஜனார்த்தனம் எம்.ஏ., திராவிட மாணவர்களின் கொள்கை, திட்டங்களை விளக்கியும், குடந்தை தோழியர் பி.சம்பந்தம் அம்மையார் மலையாள மொழிக்கும், தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், திராவிட நாட்டு கூட்டாட்சியில் மலையாளம் சேர்ந்திருக்க வேண்டுமென்றும் ஆங்கிலத்தில் பேசினார்கள். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளி ஆசிரியர் எ.சி.பாலசுந்தரம் அவர்கள் தற்கால திராவிடத்தைக் குறித்துப் பேசினார். பின்னர் குடந்தை அரசினர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் அரசன் கண்ணனார் தமிழின் முன்னேற்றத்தைக் குறித்துப் பேசினார்.

தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடரின் தற்கால சமுதாய நிலையை விளக்கி திராவிட நாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தி அரிய வீரவுரை ஆற்றினார். தோழர் சம்பத் அவர்கள் திராவிட மாணவர்களும் இளைஞர்களும், சமுதாய இழிவை இனி ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்களென்றும், துணிந்து போரில் இறங்கி இரத்தம் சிந்தியேனும் திராவிடரின் மானத்தைக் காப்பாற்றுவார்களென்றும் மிக்க ஆவேசமாகப் பேசினார். பின்னர் பெரியார் அவர்கள் காங்கிரசின் பித்தலாட்டத்தை விளக்கியும், முஸ்லிம், கிறிஸ்துவர், ஆதிதிராவிடர் ஆகியோரின் தற்கால அரசியல் நிலையை விளக்கியும், திராவிடர் தன்மானம் பெறவேண்டியதைக் குறித்தும் மிக விளக்கமாகப் பேசினார்கள்.

அவர்களை வரவேற்று 24.02.1946 இரண்டாம் நாள் மாநாட்டிற்கு தளபதி அண்ணா அவர்கள் தலைமை வகித்து,  இந்தியாவிலுள்ள மாணவரியக்கங்களை விளக்கியும், திராவிட மாணவர்களின் எழுச்சியைப் பற்றியும், எதிர்காலத்தில் ஏற்கவேண்டிய பொறுப்பைக் குறித்தும், திராவிட நாட்டு விடுதலையின் அவசியத்தைக் கோரியும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார்.

பின்னர் தோழர்கள் எஸ்.கே.சாமி, புலவர் அரங்கசாமி, தொழிலாளர் மித்திரன் ஆசிரியர் காஞ்சி கலியாணசுந்தரம், ஈரோடு அப்பாவு, ஆசிரியர் கி.வீரமணி, கலைஞர் மு.கருணாநிதி, மூவலூர் இராமாமிர்த்தம்மாள், ஆ.திராவிட மணி ஆகியோர் இயக்கக் கொள்கைகளையும், திட்டங்களையும் விளக்கி, உணர்ச்சிமிக்க சொற்பொழிவாற்றினர்.

பிற்பகல் 2 மணிக்கு மாநாட்டு உணவு விடுதி மேல் மாடியில் மாகாண மாணவப் பிரதிநிதிகளின் கூட்டம் நிகழ்ந்தது. திராவிட மாணவர் கழகத்திற்கு செயற்குழு அமைக்கப்பட்டது. 3.30 மணிக்கு மாநாடு மீண்டும் தொடங்கிப் பல தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. (தீர்மானங்கள் பின்னர் வரும்). 5.30 மணிக்கு குடந்தை தோழர் வி.சின்னத்தம்பி அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. பெரியார் அவர்கள் சுமார் 3 மணி நேரம் திராவிடர் இயக்கத்தின் கொள்கை, திட்டங்களை விளக்கியும், இயக்கத் தோழர்களின் கட்டுப்பாடு, ஒழுங்கு இவைகளின் அவசியத்தை வலியுறுத்தியும் மிகத் தெளிவாகப் பேசினார்கள். அண்ணா அவர்கள் பெரியார் சொற்பொழிவில் குறிப்பிட்ட விஷயங்களை மேலும் விளக்கி மாணவர்களை வரும் போராட்டங்களுக்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டார்.

திராவிட நடிக மணி தோழர் டி.வி.நாராயணசாமி அவர்களின் இன்னிசைக்குப் பின் தலைவர் முடிவுரை கூறினார். நீடாமங்கலம் தோழர் ஆறுமுகம் அவர்கள் நன்றி கூற இரவு 10.30 மணிக்கு கூட்டம் இனிது முடிந்தது.

மாகாண திராவிடர் மாணவர் மாநாட்டுத் தீர்மானங்கள் (23.02.1946 & 24.02.1946)

1. தமிழ்க் கலைஞர்களாம் என். எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராச பாகவதர் ஆகியவர்களைக் கருணை காட்டி விடுதலை செய்யுமாறு சென்னை கவர்னரை இம்மாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.

2. இந்தி மீண்டும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டால் தக்கதொரு போராட்டம் மாணவர்களே நடத்துவதென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

3. வடநாட்டுப் பிடியிலிருந்து திராவிட நாட்டைப் பிரித்து சகல துறைகளிலும் திராவிடம் தனியாய் இயங்க வேண்டும் என்ற கொள்கையை உடைய திராவிடர் கழகத்துடன் ஒத்துழைப்பது.

4. பாடத்திட்டங்களிலுள்ள பகுத்தறிவுக் கொவ்வாத மத நூல்களைப் போதிப்பதை உடனே மாற்றிவிட்டு அறிவு வளர்ச்சிக்கான முறையில் அமைக்க வேண்டுமென்று அரசியலாளரைக் கேட்டுக்கொள்ளுகின்றது.

5. படிப்பவர் தொகை அதிகரித்தும் பள்ளிகளை அதிகரிக்காததால், அநேக மாணவர்கள் படிக்க வசதியின்றியிருப்பதால் உடனே பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டுமென்று அரசியலாரைக் கேட்டுக்கொள்ளுகிறது.

6. உலகில் இனபேதம் என்பதே ஒரு கொடுமையான கொள்கை என அறிஞர்களெல்லாம் சொல்லி வருகின்றபோது, இந்தத் திராவிட நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு சிறு கூட்டம் இந்த நாட்டிலுள்ள திராவிட இனத்தின்மேல் பேத உணர்ச்சி கொண்டு கொடுமையான ஆதிக்கம் செலுத்திவரும் நிலையை மாற்றி இன விடுதலையைப் பெற ஒரு பெரியதொரு போராட்டத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமென்று, இன விடுதலை உணர்ச்சியை இந்நாட்டில் பரப்பிவரும் பெரியார் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. மாணவர்களாகிய நாங்கள் முன்னணியில் நிற்போம் என உறுதி கூறுகின்றோம்.

7. சென்ற 2 ஆண்டுகள் கோடையில் சுற்றுப்பிரயாணம் செய்து கட்சிக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தது போலவே இந்த ஆண்டிலும் இனி எந்த ஆண்டுகளிலும் பிரச்சாரம் செய்கிறோம்; கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்க உதவுகிறோம் என்று உறுதி கூறுகின்றோம்.

1943இல் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா ஆண்டில், குடந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திராவிட மாணவர் கழக மாநில மாநாடு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரிய செயல் திட்டத்தின்படி நடக்கவுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவும் இதற்கு பொதுமக்களும் வணிகப் பெருமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் பெருமளவில் ஆதரவு நல்கி வருவதை அவர்கள் இம்மாநாட்டிற்கு நண்கொடைகளை விரும்பி மகிழ்வுடன் வழங்குவதன் மூலம் அறிய முடிகிறது.

தமிழகமெங்கும் சுவர் எழுத்து விளம்பரங்களும், துண்டறிக்கைகளும், இணையதள வழி மாநாட்டிச் செய்திப் பகிர்வும் முனைப்புடன் நடைபெறுவது திராவிட மாணவர் எழுச்சியை தெளிவாகக் காட்டுகிறது.

காலத்தின் கட்டாயம்

எந்தக் காலத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதை மிகச் சரியாகத் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், வழக்கமும் கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், ஆரிய ஆதிக்கம் அதிகாரப் பலத்தோடு அத்துமீறி, அறம் மீறி, அனைத்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக, பாஸிசப் போக்கில், கொடுமையின் உச்சமாய் கோலோச்சும் நிலையில், அதைத் தகர்த்து மனித உரிமை, சமூகநீதி காக்கும் நோக்குடன், இந்த இனத்தின் எதிர்கால தளகர்த்தர்களான திராவிட மாணவர்களைத் திரட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி, தீவிரமாய் அவற்றைச் செயல்படுத்தும் வேகத்துடன் இம்மாநாடு நடைபெறவுள்ளது. எனவே, இம்மாநாடு தமிழர் உரிமை மீட்கும், காக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடு என்பதை எல்லோரும் கருத்தில் கொண்டு கட்டாயம் பங்கு பெற வேண்டும்.

8.7.2018 ஞாயிறு அன்று கும்பகோணத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செங்காங்கன்னி சாலையிலுள்ள காஞ்சி சங்கரா திருமண மண்டபத்திலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கடலங்குடி சாலையிலுள்ள திறந்தவெளி அரங்கத்திலும் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

காலை 9 மணிக்கு ‘இசை நிகழ்ச்சி’யும், காலை 10 மணிக்கு ‘திராவிட மாணவர்களின் கல்வி உரிமையும் _ கடமையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும், முற்பகல் 11 மணிக்கு ‘இனமான ஏடுகளின் நோக்கமும் _ தாக்கமும்’ பற்றிய கருத்துரையும், முற்பகல் 11.45 மணிக்கு கவியரங்கமும், மாலை 5.05 மணிக்கு ‘ஈரோட்டு பூகம்பம்’ கலை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு  மாநாட்டுத் துவக்கமும், இரவு 7 மணிக்கு உரைக்களமும் அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றலும், நிறைவாக இரவு 8 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் எழுச்சிமிகு நிறைவுரை நடைபெறும்.

குடந்தையில் கூடுவோம்!

குறிக்கோளை எட்டுவோம்!

ஆரிய ஆதிக்கம் தகர்த்து

சீரிய தமிழர் உரிமை மீட்போம்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *