கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?

ஜூலை 01-15

 

கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே பேருந்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 50 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கலை, அறிவியல் கல்லூரிகள் 19.6.2018 அன்று திறக்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களும் முதல் முறையாக கல்லூரிக்கு வந்தனர். ராகிங், ஈவ்டீசிங் உள்ளிட்ட சம்பவங்களைத் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் கூடுதலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சென்னையில் மாநிலக் கல்லூரி, நந்தனம், அம்பேத்கர், ராணிமேரி, பச்சையப்பன் உள்பட மொத்தம் 30 அரசு, தனியார் கலைக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. முதல்நாள் என்பதால், மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்தனர். 2, 3ஆம் ஆண்டு மாணவர்கள் பலர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் பேருந்துகளில் வந்து கொண்டிருந்தனர். சிலர் பேருந்துகளின் கூரையில் ஏறி, கத்திகளை சுற்றியபடி ரகளையில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களும், பயணிகளும் அச்சமடைந்தனர்.

மாநிலக் கல்லூரிக்கு 6-_டி பேருந்தில் வந்த மாணவர்கள், கத்தியைக் காட்டி ரகளையில் ஈடுபட்டனர். மெரினா சாலையில் ஆவின் அருகே அந்தப் பேருந்தை காவல் ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் ராஜபாண்டி மற்றும் காவலர்கள் நிறுத்தி கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 5 மாணவர்களைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல, 21_-ஜி பேருந்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 6 மாணவர்களையும் போலீசார் பிடித்தனர்.

நந்தனம் கல்லூரி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 13 பேர், நந்தனம் கல்லூரி மாணவர்கள் 33 பேர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 50 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 15 கத்திகள், ஒரு  சிறிய கோடாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் பட்டாக் கத்திகளை வைத்திருந்ததாக மாநிலக் கல்லூரி மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போலீஸ் சோதனையின்போது பைகளில் கத்தி வைத்திருந்த 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேரை புழல் சிறையிலும், 18 வயது நிரம்பாத 2 பேரை கெல்லீசில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும் போலீசார் அடைத்தனர். (‘தி இந்து’ (தமிழ்), 19.6.2018, பக்கம் 6).

மேலும் கல்லூரி வாயில்களில் காவல்துறையினர் நின்று மாணவர்களை சோதனை செய்த பின்னரே கல்லூரிக்குள் அனுப்புகின்றனர் என்பது செய்தி! இது பெருமையா? சிறுமையா?

இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்

இதனைப் படிக்கும்பொழுது, படியுங்கள் எனக் கூறி, நம்மை வழிநடத்திய தந்தை பெரியார், காமராசர் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை நினைத்தால், உண்மையிலேயே இரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டியுள்ளது.

“எதைக் கொடுத்தாலும் சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே’’ என்று வைக்கப் பட்டிருந்த சமுதாயம் இது. நம் சமுதாயத்தில் இந்த வருணாசிரமக் கட்டமைப்பை உடைத்து பஞ்சம, சூத்திர மக்களின் கல்வி உரிமைக்காக தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

 

போராடிப் போராடிப் பெற்ற உரிமைகள்

ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி வாசனை பெற்று படிப்படியாக உயர்ந்து வருகிறார்கள். மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மறுபடியும் பழைய மனுதர்ம நிலைக்கு பார்ப்பனர்கள் மட்டுமே மேலே எழுந்துவரும் ஏற்பாடுகளை _ சூழ்ச்சி வலைகளைப் பின்னி வருகிறார்கள். இவற்றையெல்லாம் எதிர்த்து சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகள், தலைவர்கள் களத்திற்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.

எதற்காகக் கதறுகிறோம்?

இவ்வளவும் எதற்காக என்பதை நமது பார்ப்பனர் அல்லாத, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா? படிக்கும் காலத்தில் அவர்களின் முதற்கடமை என்பது படிப்பு! படிப்பு!! படிப்பு!!! அதே நேரத்தில் உலக ஞானத்தைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? என்று கேட்கலாம். நன்றாகவே தெரிந்து கொள்ளட்டும் _ அவற்றைச் சேமித்து வைக்கட்டும்!

ஆனால், படிப்பைத் தொலைத்துவிட்டு, வேறு வகையான போதையில் சிக்கி தங்களின் எதிர்காலத்தை தற்கொலை செய்து கொள்ளலாமா?

தந்தை பெரியாரின் அறிவுரை என்ன?

நமது பிள்ளைகளின் கல்வி உரிமைக்காக ஓயாது உழைத்த தந்தை பெரியார் அவர்கள் மாணவர்களுக்குக் கூறும் அறிவுரை என்ன?

“மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் படிக்கும் காலத்தை வீணடிக்கக் கூடாது. அந்தக் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனதை அலைய விடக்கூடாது. குறிப்பாகக் கூறவேண்டுமானால், கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கு கொள்ளக்கூடாது!’’ (‘விடுதலை’, 9.4.1962).

மாணவர்களின் கல்வி உரிமைக்காகப் போராட்டங்கள் நடத்திய தந்தை பெரியார் அவர்கள், மாணவர்களை அந்தக் கிளர்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள அனுமதித்ததில்லை.

அதற்குக் காரணம் அவர்களின் கல்வி நிலை எந்த வகையிலும் சீரழிந்துவிடக் கூடாது என்ற கவலைதான்.

பச்சையப்பன் கல்லூரியின் வரலாறு தெரியுமா?

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் மாணவர்களை சேர்ப்பதில்லை என்ற நிலை 1925ஆம் ஆண்டுவரை இருந்தது. அதனையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்து நீதிமன்றம் வரை சென்று உரிமைகள் பெறப்பட்டது என்ற வரலாறு நமது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

மாநிலக் கல்லூரி என்றால் அது உயர்ஜாதிக்கென்று முற்றிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலமெல்லாம் இருந்தது. இன்றைக்கு 69 சதவிகித அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மாணவர்கள் சேர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்ற நிலையை சட்டரீதியாக உறுதிப்படுத்த பாடுபட்ட ஓர் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நம் மாணவச் செல்வங்களை கருணை உள்ளத்துடன் கேட்டுக் கொள்கிறோம். படியுங்கள் _ படியுங்கள் _ நன்றாகப் படியுங்கள். படிப்பில் சிறப்பான வெற்றியைப் பெறுங்கள். அதன்பின் உங்கள் வாழ்க்கை உத்தியோகமா? பொதுவாழ்வா? அரசியலா? சமூகமா? என்று முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்.

எந்தத் துறையிலும் நீங்கள் பரிணமிக்க வேண்டுமானாலும் இந்தக் காலகட்டத்தில் கல்விதான் உங்களுக்குக் கைகொடுக்கும் என்பதை மறந்துவிடாதீர்!

செல்போன்மூலம் உங்கள் மூளையைச் செல்லரிக்கச் செய்யலாமா?

செல்போனும், ‘வாட்ஸ்அப்’பும் நமக்கான கருவிகள்தான். அவையே உலகம் என்று அருள் கூர்ந்து அதில் மூழ்கி மூளையின் செல்களை சிதிலம் அடையச் செய்யலாமா?

பேருந்தில் பணியாற்றும் நடத்துநரும், ஓட்டுநரும் யார்? நம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவா? இவர்களின் பிள்ளைகள் கல்லூரிகளில் படிக்கவில்லையா? இவர்களோடு தகராறுகள் ஏன்? சண்டைகள் ஏன்? ஏன்?

புத்தகம் இருக்கவேண்டிய கைகளில் கத்திகளா? புத்தியை வளர்க்கவேண்டிய மாணவப் பருவத்தில் புத்தியைப் பல்வேறு போதைகளுக்கு, வன்முறைகளுக்கு ஆட்படுத்தலாமா?

நுகர்வுக் கலாச்சாரம் என்பது உங்கள் கழுத்தில் நுகத்தடியை வைத்து அழுத்துவதாகும். உங்கள் பெற்றோர்கள் கடனை வாங்கி வீட்டை விற்று உங்களைப் படிக்க அனுப்புகிறார்கள் _ நீங்கள் படித்து முடித்து, பொருளீட்டி கடைசிக் காலத்தில் காப்பாற்றுவீர்கள், பட்ட கஷ்டம் போதும் _ நம் பிள்ளைகள் நம்மை நல்ல விதமாகக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

பெற்றோர்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் _ அப்பொழுது புரியும். நாம் செல்லும் பாதை சரிதானா? என்ற கேள்வி உங்களுக்குள்ளேயே எழும்.

பார்ப்பனர்களைப் பாருங்கள்!

பார்ப்பனர்கள் இன்றைக்கு எல்லா நிலைகளிலும் வளர்ந்து மேலே நிற்பதற்கு என்ன காரணம் என்று எண்ணிப்பாருங்கள். எதிரிகள் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் நிலைக்கு ஆளாக்காதீர்கள்.

அருமைப் பெற்றோர்களே!

பெற்றோர்களே, உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வேறு; வெளியில் இருக்கும் நம் பிள்ளைகள் வேறு. சிறு வயது முதற்கொண்டே சிறந்த பழக்கங்களைக் கற்றுக் கொடுங்கள். பொருளாதாரம் வளர்ந்த காரணத்தால் ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற கலாச்சார சகதியில் நீங்கள் மிதந்தால், உங்கள் பிள்ளைகளையும் அது பாதிக்கச் செய்யும்.

ஆசிரியப் பெருமக்களே!

ஆசிரியப் பெருமக்களுக்கும் பெரும் பெறுப்பு இருக்கிறது. உங்களிடம் ஒப்படைத்த பிள்ளைகளை, மாணவர்களை ஒழுங்குப்படுத்தி, செதுக்கி வெளி உலகுக்குக் கொடுப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

நம் அனைவரின் கடமை என்ன?

அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள். மாணவர்களை உங்கள் போராட்டக் களத்திற்கு அழைக்க வேண்டாம். ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டுமானால், மாணவர்கள் _ பெற்றோர்கள் _ ஆசிரியர்கள் _ அரசியல்வாதிகள் _ ஊடகங்கள் ஆகிய அத்தனைப் பேர்களின் கைகளிலும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒழுக்கத்தின் உறைவிடங்களாக ஆசிரியர்கள் திகழ்ந்தால் மட்டுமே மாணவர்கள் பின்பற்றுபவர்களாக மாறுவர்!

பொறுப்புணர்வுடன் கடமையாற்றி, மாணவக் கண்மணிகளின் எதிர்கால ஆரோக்கிய வாழ்வுக்கு அரண் அமைப்போம்! அனைவரின் ஒத்துழைப்பையும் இதில் கோருகிறோம்.

காவல் துறையினரின் அணுகுமுறை கடிதோச்சி மெல்ல எறிவதாக அமைய வேண்டும்!

மாணவச் செல்வங்களே _ நீங்கள் செல்வங்களா? அல்லது சீரழிந்து போகத் தயாராகும் ஜீவன்களா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!                       

_ கி.வீரமணி,

ஆசிரியர்,

 ‘உண்மை’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *