“இராமாயணம் – இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )

ஜூன் 01-15

இனியன்

 

சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் “இராமாயணம் -_ இராமன் _ இராமராஜ்ஜியம்’’ என்னும் தலைப்பில் 10.05.2018 அன்று மாலை நேரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுவைமிகு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

மூன்றாம் நாள் சொற்பொழிவு (10.05.2018)

ஏற்கனவே 23, 27.03.2018 ஆகிய இரண்டு நாட்களில் இதே தலைப்பில் ஆசிரியர் அவர்களால் சிறப்புடன் சொற்பொழிவு நிகழ்ந்து முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் சொற்பொழிவை 10.05.2018 அன்று ஆசிரியர் நிகழ்த்தினார்.

தொடக்கவுரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். “நாடு முழுவதும் கார்ப்பரேட், பார்ப்பனிய மயமாகி வருகிறது, நீதிமன்றமும் அதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது. இராஜாஜி இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தார். 1937ஆம் ஆண்டில் ராஜாஜி 2,500 பள்ளிகளை மூட உத்தரவிட்டார். அதன் பிறகு கொல்லைப்புறமாக 1952இல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி 6,000 பள்ளிகளை மூடினார். சூத்திரன் படிக்கக்கூடாது என்பதால் ராஜாஜி பள்ளிகளை மூடினார்’’ என்று வரலாற்றுக் கொடுமையை எடுத்துச் சொல்லி இராமாயணம் என்பதே ஜாதியைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டதுதான் என்பது போன்ற கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆவலோடு ஆசிரியரின் பொழிவைக் கேட்க கூடியிருந்த தோழர்களின் உற்சாகத்தை கண்டு மிகச் சுருக்கமாய் தன் உரையை நிறைவு செய்தார்.

நூல் வெளியீடு

அம்பேத்கர் எழுதிய ‘இராமன்_ இராமாயணம்’, ‘கிருஷ்ணன்_கீதை’, ந.சி.கந்தையாபிள்ளை எழுதிய ‘பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்’, டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய ‘சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்’ போன்ற மூன்று நூல்கள் ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டன.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சொற்பொழிவு

“அசோகர் ஆட்சியில் புத்தம் பரவியது. இழந்துபோன பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கே இராமாயணம் உருவாக்கப்பட்டது.

‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப் பட்டவரும், தந்தை பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான வ.ராமசாமி அய்யங்கார் ‘கோதைத் தீவு’ எனும் புதினத்தை எழுதியுள்ளார். அவர், துரோகம் என்பதே இராமாயணத்தில் விபீஷணனிடமிருந்துதான் தொடங்கியது என்கிறார்.

துளசிதாஸ் என்கிற கோசாமி ஒருவர் வால்மீகி இராமாயணத்தைத் திரித்து வடமொழியில் எழுதினார். கம்பன் என்கிற ஒருவர் நயமாய் திரித்து தமிழ்மொழியில் எழுதினார். இந்த இருவரும் துரோகிகள்.

மேலும், ‘தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் அடி வாங்குவதற்கே படைக்கப்பட்டவர்கள்’ என்று இராமாயணத்தில் சொல்லும் இராமன்தான் அவதார புருஷனா?’’ இவ்வாறு பல்வேறு தகவல்களை சுவைபட ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி சொற்பொழிவாற்றினார்.

குறிப்பாக இராமன் பிறப்பு, புத்திரகாமேஷ்டி, அசுவமேத யாகம், குதிரைகளுடன் மற்றும் பார்ப்பனர்களுடன் தசரதன் பத்தினிகள் மூவர் இருந்தது, இராமாயணத்தில் பாயாசம் என்னும் புதுக்கதையை நுழைத்தது போன்ற தகவல்களை ஆசிரியர் அவர்கள் சொல்லியபொழுது அரங்கமே அதிர்ந்து சிரித்தது.

அடுத்த சொற்பொழிவாக ‘கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ என்ற தலைப்பில் விரைவில் பொழிவு நடைபெறும் என்று சொல்லி ஆசிரியர் அவர்கள் தோழர்களின் ஆரவாரத்துடன் நிறைவு செய்தார்.

நான்காம் நாள் சொற்பொழிவு (16.05.2018)

நான்காம் நாள் சொற்பொழிவில் ‘கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும்’ எனும் தலைப்பில் ஆசிரியர் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்.

தொடக்கவுரை

பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாலை நேரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். இராமாயணத்தில் குரங்குகளாக திராவிடர்களையே குறிப்பிட்டுள்ளதாக பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளையும் அண்ணா எழுதிய ‘கம்பரசம்’ நூலில் கூறப்பட்டவற்றையும் எடுத்துக்காட்டி மேலும் பல்வேறு தகவல்களையும் குறிப்பிட்டு தமது தொடக்க உரையை நிறைவு செய்தார்.

நூல்வெளியீடு

நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய, “நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?’’, மஞ்சைவசந்தன் அவர்கள் எழுதிய, “பக்தர்களே பதில் சொல்வீர்!’’, “சம்பிரதாயங்கள் சரியா?’’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

ஆசிரியரின் ஆய்வுரை:

தந்தை பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவரான பா.வே.மாணிக்க நாயக்கர் 05.02.1931 அன்று ‘கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும்’ என்ற தலைப்பில் மறைமலையடிகள் முன்னிலையில் ஆற்றிய உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஞானமூர்த்தி கருத்துகள், மறைமறையடிகள் எழுதிய “முற்கால, பிற்கால புலவர்கள்’’ எனும் தலைப்பில் 1936இல் பதிப்பிக்கப்பட்ட நூலின் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களையும் முன்வைத்து ஆய்வுரையாற்றினார்.

மேலும், “இரண்டு காரணங்களால் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. ஒன்று அச்சம், மற்றொன்று ஆசை’’ என்று கூறியதோடு இராமாயணத்தில் உள்ள அபத்தங்களையும், அநீதிகளையும் ஆபாசங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து எறிந்தார். மேலும் “கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும் எப்படிப்பட்டது?’’ என்று ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. அடுத்தக் கூட்டத்தில் அதை தெளிவுபடுத்துவோம் என ஆசிரியர் ஆய்வுரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சி நிறைவு

ஆசிரியரின் ஆதாரப்பூர்வ பொழிவைக் கேட்க அரங்கத்தினுள் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது பல்வேறு சமூக அமைப்பினர், அறிஞர் பெருமக்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவுற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *