திராவிடத்தை இகழும் தீயப் பேதையர்!

ஜூன் 01-15

 

கற்காலம் மறுபடியும் கண்முன் தோன்றக்

                        கனவுலகில் மிதக்கின்றார்; பலரும் இங்கே

தற்குறிகள் ஆகிவிட்டார்; நடப்பை ஏனோ

                        தவறாகப் புரிந்துகொண்டு தவிக்கின்றார்கள்;

நெற்பதர்கள் நெல்மணியாய் ஆவ தில்லை

                        நிழலோடு போராட்டம் தேவை தானா?

வெற்றுரைகள் விளம்பிடுவோர் அறிஞர் போலும்

                        வேடமிட்டே நடிப்பதற்குக் கற்றுக் கொண்டார்!

 

யாவர்க்கும் வாழ்வியலில் நாட்டம் இல்லை

                        யாப்பறியாப் புலவரெலாம் பல்கிப் போனார்;

ஏவலராய் எடுபிடியாய் இருப்ப தற்கே

                        எல்லாரும் விரும்புகிறார் பொருளைச் சேர்க்க;

தாவிவரும் பகைவெல்லத் தயங்கி வெற்றுத்

                        தக்கைகளாய் இந்நாளில் மாறி விட்டார்:

பாவிகளாய்ப் பழிவரினும் பதட்டம் இன்றிப்

                        பகுத்தறிவைக் குழிதோண்டிப் புதைக்கலானார்!

 

தெளிவாகச் சிந்திக்க மறந்தே போனார்;

                        தேய்பிறையாய் நலவாழ்வு மாறக்கண்டும்

களிப்புற்றே கயவர்தம் கரவில் வீழ்ந்து

                        கண்மூடிப் பழக்கத்தில் மூழ்கலானார்!

துளியேனும் மொழிப்பற்றோ நாட்டுப் பற்றோ

                        துலங்கும்நல் லினப்பற்றோ இல்லாராகி

எளிமைக்கும் நேர்மைக்கும் விடைகொடுத்தார்;

                        எல்லாமும் பறிகொடுத்தே இளைத்துப் போனார்!

 

பெரியாரை அண்ணாவைப் பழிக்கும் தீய

                        பேதையரோ திராவிடப்பே ரியக்கத் தாலே

சரிந்துவே தமிழ்நாடும் என்று சாற்றிச்

                        சழக்கர்க்கே பாவாடை விரிக்கின்றார்கள்;

நரியனைய பார்ப்பனரின் கொட்டம் வீழ்த்தி

                        நாட்டுக்கே ‘தமிழ்நாடு’ பெயரைச் சூட்டி

அரியபல திட்டங்கள் கொணர்ந்த தெல்லாம்

                        அறியாமல் உளறுவதில் பொருளும் உண்டோ?

                                                          – முனைவர் கடவூர் மணிமாறன்

 ———

 பெண்ணின் பெருமை?

கல்விக் கடவுள்
கலை மகளானால்
ஆண்மகன் அல்லவா
அடுப்பூத வேண்டும்?

வீரக் கடவுள்
துர்க்கை என்றால்
ஓரம் ஒதுங்குவானா
ஆண் பிள்ளை?

சொத்துக் கடவுள்
இலட்சுமி யென்றால்
பத்திரம் செய்வானா
பெண் பெயர்க்கு?

ஏட்டில் மட்டும்
ஏற்றம் தந்து
நாட்டில் நடப்பில்
நசுக்கும் கயவரை

மாட்டி விலங்கை
பூட்டி யிழுத்து
ஓட்டிட வேண்டும்
சிறைக் குள்ளே!
– மஞ்சை வசந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *