ஆசிரியர் பதில்கள்

ஜூன் 01-15

 

பா.ஜ.க பாசிசத்தை வீழ்த்த

மதசார்பற்ற முற்போக்கு சக்திகள் ஒன்றுபட வேண்டும்

 

 

கே:              அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். படிப்பில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு திணிக்க முயல்வது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல் அல்லவா?

                        – சீ. லட்சுமிபதி, தாம்பரம்

ப:                   அதிலென்ன அய்யம்? நூற்றுக்கு நூறு உங்கள் கருத்து சரியானது!

கே:              கர்நாடக தேர்தல் உணர்த்தும் பாடம் என்ன?

                        – கா.வெண்ணிலா, புதுக்கோட்டை

ப:                   பா.ஜ.க.வின் பாசிசத்தினை தோற்கடிக்க மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகள் _ கட்சிகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கே:              பிரதமர் மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித்ஷாவும் வீழ்த்தவே முடியாத தலைவர்களா?

                        – வே.முனியசாமி, வேலூர்

ப:                   உலகில் வீழ்த்தவே முடியாத தலைவர்கள் என்பது இயற்கை விதிக்கே முரணானது. வல்லவர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள்தான் என்பது வரலாறு!

கே:              பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது அரசியல் பின்புலமா?

– தா.வேலாயுதம், திருத்தணி

ப:                   ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் பாடகர் கோவனுக்கு ஒரு நீதி! பூணூலுக்கு மற்றொரு நீதி! மனுதர்ம ஆட்சிதான் நடைபெறுகிறது!

கே:              நாட்டில் கோயில் சிலைகள் திருட்டு அதிகமாகி வருவதால் மக்களிடையே கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கருதலாமா?

                        – சோ.கன்னியப்பன், பொற்பந்தல்

ப:                   கடவுள் நம்பிக்கை _ உண்மையாகவே இருப்பவர்கள் மிக மிகக் குறைவே!

கே:              தூத்துக்குடியில் நடந்த கொடுமையான துப்பாக்கிச் சூடு, ஆரியப் பார்ப்பன ஆணைப்படி அ.தி.மு.க. அடிமையரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

                        – தீ.வீரபத்திரன்,திண்டிவனம்

ப:                   யாருடைய ஆணை என்று நாம் உறுதிப்படுத்த முடியாது; நிச்சயம் இது மக்கள் விரோதப் போக்கு! தமிழக அரசின் தவறான ஆளுமையின் தவிர்க்க முடியாதது. நுண்ணறிவுப் பிரிவுமூலம் முன்கூட்டியே இவ்வளவு பெருங்கூட்டம் திரளுவார்கள் என்பதைக்கூட அறியவோ, தடுக்கவோ அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா? ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

கே:              அன்னை மணியம்மையாரைப் போல் அனைத்துப் பெண்களும் இருந்துவிட்டால், நகைநாட்டம் உட்பட பல பெண்ணடிமைக் காரணங்கள் ஒழியுமல்லவா?

                        – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:                   அதிலென்ன சந்தேகம்? முன்பெல்லாம்  கேரளப் பெண்கள் குறைந்த அளவே உடம்பில் நகை அணிவார்கள். ஆனால், அவர்கள்கூட ‘கெட்டு’விட்டார்கள் நகை அணிதலில்!

கே:              கர்நாடகத்தை கவ்வ நினைத்த காவிப் பாம்பின் தலைமேல் சித்தராமையா (காங்கிரஸ்) சம்மட்டி அடிகொடுத்ததுபோல், நாடு முழுவதும் வலிமையுள்ள மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைந்தால் ஆரிய ஆதிக்கம் அகலுமல்லவா?

                        – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:                   நிச்சயம் வலிமை வாய்ந்த பா.ஜ.க._ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக் கூட்டணி உதயமாகும் _ ஆகவேண்டும் என்பது முக்கியமாகும்!

கே:              உலகப் பற்றைத் துறந்ததாய் கூறும் பெரிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகான், மகரிஷிகள் புற்றுநோய், ஜூரம், மாரடைப்பால் செத்தாலும் முக்தி அடைந்தார் என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?

                        – க.அரவிந்த், தெற்கிருப்பு

ப:                   இதற்குப் பெயர்தான் பார்ப்பனரின் பிரச்சார உத்தி _ தந்திரம் என்பது! கொலை, பித்தலாட்டம், ஜெயில், பெண்களிடம் சரச சல்லாபம் செய்தாலும் ‘அவாள்’ மகான்கள்தானே! ‘அவாளது’ அகராதிப்படி! இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *